Published : 24 Feb 2018 08:41 AM
Last Updated : 24 Feb 2018 08:41 AM

மாணவர்களிடம் வாசிப்பை வளர்க்கட்டும் நடமாடும் புத்தகக் காட்சி

னைத்து அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும், பொது அறிவுத்திறனை வளர்க்கவும், உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த தகவல்களைப் பெறுவதற்கும் பள்ளிகளில் புத்தகக் காட்சி நடத்துவது அவசியம் என்று கூறியிருக்கிறார் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன். இதற்காக, புத்தக வெளியீட்டாளர் களுடன் இணைந்து, சுழற்சிமுறையில் பள்ளிகளுக்கே சென்று நடமாடும் புத்தகக் காட்சிகள் நடத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். குழந்தைகளிடம் புத்தக வாசிப்பைப் பள்ளிச் சூழலிலேயே தூண்டு வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கல்வி யாளர்கள் தொடர்ந்து வலியுறுத்திவரும் சூழலில் வரவேற்கத்தக்க நடவடிக்கை இது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 15-ல் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பதிப்பகச் செம்மல் க.கணபதி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இந்த நடமாடும் புத்தகக் காட்சியைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தொடங்கிவைத்தார். இந்தப் புத்தகக் காட்சி யில் இடம்பெற்ற அறிவியல், கலை - இலக்கியம், வாழ்க்கைத் திறன், சுய முன்னேற்றம், நாட்டுப்பற்று, பொது அறிவு ஆகிய தலைப்பிலான நூல்களைப் பள்ளிக் குழந்தைகள் ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர்.

குழந்தைகளின் அறிவுத்தளத்தில் நல்ல பல மாற்றங்களை நிகழ்த்தவிருக்கிற இந்த நடமாடும் புத்தகக் காட்சிக்கான ஏற்பாடுகளைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களோடு பதிப்பாளர்களும் கலந்துபேசி ஒருங்கிணைக்க வேண்டிய தேவையுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது புத்தகக் காட்சி நடைபெறு வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். பள்ளி விடுமுறை நாட்களில் குழந்தைகளின் பெற்றோரும் பொதுமக்களும் புத்தகக் காட்சிக்கு வருகைதரும் வகையில் வழிமுறைகளைச் செய்வது அவசியம். இது தொடர்பான செய்திகளை மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்ல வேண்டும். மாணவர்களிடம் புத்தகம் வாசிப்பதன் அவசியத்தை ஆசிரியர்கள் முன்கூட்டியே விளக்கிச் சொல்வதோடு, மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த ஏதாவதொரு நூலை வாங்கிச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளலாம்.

இந்தப் புத்தகக் காட்சியில் பங்கேற்க 57 பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மட்டுமே விண்ணப்பித்திருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் தலைமுறைக்கான அறிவுத் தூண்டலுக்கான இந்த நல்முயற்சியில் அனைத்துப் பதிப்பகங்களும் பங்கேற்க முன்வர வேண்டும். மேலும், இந்தப் புத்தகக் காட்சி அரசுப் பள்ளிகளில் மட்டுமே நடைபெறாமல், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளிலும் நடைபெற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதற்கான முன்னெடுப்பு களையும் செய்ய வேண்டும்.

வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல் தொடக்க விழாவையும் கண்டிருக்கும் இந்த நடமாடும் புத்தகக் காட்சி, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ - மாணவிகள் மத்தியில் புத்தக வாசிப்பைத் தூண்டுவதற்கான ஆரம்ப முயற்சியாக அமையட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x