Published : 28 Aug 2014 08:26 AM
Last Updated : 28 Aug 2014 08:26 AM

தண்ணீரைத் தொலைப்பவர்களா நாம்?

தமிழ்நாட்டில் இப்போது பெரும்பாலான அணைகள் கிட்டத்தட்ட முழுக்க நிரம்பியிருக்கின்றன. குறிப்பாக, மேட்டூர் அணை கிட்டத்தட்ட 110 அடியாக இருக்கிறது.

டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் முழு மூச்சாகத் தொடங்கியிருக்கும் இந்த நிலையில், பாசன ஏரிகளில் பெரும்பாலானவை தூர்வாரப்படாமல் இருக்கின்றன என்பது தெரியவந்திருக்கிறது. அது மட்டுமல்ல, டெல்டாவிலேயே கடைமடைப் பகுதியில் வாய்க்கால்கள் தூர்ந்தும், கரைகள் சரிந்தும் இருக்கின்றன. தண்ணீருக்காகத் தொடர்ந்து கூக்குரல் எழுப்பிக்கொண்டிருக்கும் நாம், தண்ணீர் மேல் காட்டும் அக்கறையின் லட்சணம் இதுதான்.

தமிழ்நாட்டில் உள்ள பெரிய ஏரிகள் 13,779-ல், சுமார் 3,350 மட்டுமே கடந்த மூன்று ஆண்டுகளில் தூர் வாரப்பட்டுள்ளன, அதுவும் உலக வங்கி அளித்த கடனில். 2008-ம் ஆண்டு ரூ.2,820 கோடியை உலக வங்கி தமிழ்நாட்டுக்கு ஒதுக்கியது. ஆனாலும், 54% ஏரிகள் இன்னமும் தூர் வாரப்படாமல் இருக்கின்றனவாம். அதுமட்டுமா, மேட்டூர் அணையைத் தூர் வாரி 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அணையில் நீர்மட்டம் 20 அடியாகக் குறையும்போது, இந்தத் தண்ணீரைப் பாசனத்துக்கும் திறந்துவிட முடியாது, மின்சாரமும் தயாரிக்கப் பயன்படுத்த முடியாது; முழுக்க வண்டலாகத்தான் இருக்கும்.

நான்கு வழிப்பாதை, ஆறு வழிப்பாதை என்று சாலைகள் விரிவாக்கப்படும்போதும், புதிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தொடங்கப்படும்போதும், குடிசை மாற்று வாரியமும் வீட்டு வசதி வாரியமும் வீடுகளைக் கட்டும்போதும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மருத்துவமனை போன்ற பெரிய கட்டிடங்கள் கட்டப்படும்போதும் ஆட்சியாளர்கள் கண்ணில் முதலில் படுவது ஏரிகள்தான்.

பாசனத்துக்கும், சூழலுக்கும் ஏரிகள் எவ்வளவு முக்கியமானவை என்பதை அறியாமல், அவையெல்லாம் பாழாகக் கிடக்கின்றன என்றே பலரும் நினைக்கிறார்கள். ஒரு பக்கம் ஏரிகள், குளங்கள், குட்டைகள் தூர் வாரப்படாமல் குப்பைகளைக் கொட்டி மண்மேடாக்கிக் கட்டிடங்களைக் கட்ட ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். மறுபுறம், கட்டுமான வேலைக்காக ஆற்று மணலை இயந்திரங்கள் கொண்டு, அடியோடு கொள்ளையடிக்கின்றனர். நீர்ப்பாசனத்தில் நிகரற்று விளங்கிய ஒரு பண்பாட்டின் இன்றைய நிலை இதுதான்!

மழைக் காலம் நெருங்கிய பிறகே, பொதுப்பணித் துறையினர் விழித்துக்கொண்டு ஒப்புக்குச் சில நீர்த்தேக்கங்களில் மதகுகளுக்கு கிரீஸ் போடுவார்கள், வண்ணம் பூசுவார்கள், கரைகளை உயர்த்திக் கட்டி சீரமைத்ததாக அரசுக்கு அறிக்கை அனுப்பிவிடுவார்கள்.

மழை என்பது இயற்கை தரும் கொடை. அந்த நீரைக் காப்பாற்ற வேண்டும் என்று அந்தக் காலத்தில் வெட்டிவைத்த குளங்கள், குட்டைகள், ஏரிகளுக்குக் கூடுதலாக கடந்த 50 ஆண்டுகளில் எத்தனை நீர்நிலைகள் ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று பார்க்க வேண்டும். புதிதாக ஏற்படுத்துவது இருக்கட்டும், இருப்பதையாவது பாதுகாக்க வேண்டுமல்லவா?

ஏரிகள் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும். குடிநீர்ப் பிரச்சினையைப் போக்கும். பாசனத்துக்குத் தண்ணீர் வழங்கும். சுற்றுவட்டாரப் பகுதியின் வெப்பத்தைக் குறைத்துக் குளிர்ச்சியை ஊட்டும். பறவையினங்கள் பெருக உதவும். மழைப்பொழிவை அதிகப்படுத்தும். ஏரிக்கரை மீது மரங்களை நடலாம். இப்படியாக, சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதற்கு ஏரிகள் பெரிதும் உதவும். அது மட்டுமல்லாமல், மீன்பிடி மூலமாக உள்ளூர் பொருளாதரத்துக்கும் ஏரிகள் உதவும். ஏரிகளெல்லாம் முறையாகப் பராமரிக்கப்பட்டால் பல விதங்களிலும் பயன் அளிக்கக்கூடியவை.

காலங்காலமாக விவசாயிகளிடம் இருந்த குடிமராமத்துக் கலாச்சாரமும் உரிமையும் இப்போது காணாமல் போய்விட்டது. இந்தச் சூழலில் நீர்நிலைகளை மீட்டெடுக்க அரசாங்கம் பெரும் முனைப்பு காட்ட வேண்டும். வீடுதோறும் மழைநீரைச் சேமிப்பதற்கான நல்ல திட்டத்தைக் கொண்டுவந்த முதல்வர் ஜெயலலிதா, இப்போது நீர்நிலைகளைக் காப்பதற்கான மக்கள் இயக்கத்தையும் முன்னெடுக்க வேண்டும். தமிழக நீர்நிலைகளைக் காப்பதற்கான பெரும் பயணத்தின் முதல் அடியாக அது அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x