Published : 27 Feb 2018 09:17 AM
Last Updated : 27 Feb 2018 09:17 AM

நாகாலாந்து, மேகாலயம்: மாநிலக் கட்சிகளே புதிய அரசுகளைத் தீர்மானிக்கும்!

நா

காலாந்து, மேகாலய மாநிலங்களுக்கான சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. திரிபுராவில் வாக்குப் பதிவு நடந்த 9-வது நாளில், இவ்விரு வடகிழக்கு மாநிலங்களும் தேர்தலைச் சந்திக்கின்றன. திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பெரிய போட்டியாளராக பாஜக உருவெடுத்தது. இன்று தேர்தல் நடக்கும் இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸுக்குக் கடுமையான சவால் ஏற்பட்டிருந்தாலும், இறுதியாக ஆட்சி யாருக்கு என்பதைத் தீர்மானிக்கப்போவது மாநிலக் கட்சிகள்தான்.

நாகாலாந்தில் முன்னாள் முதலமைச்சர் நெய்பியு ரியோ கொஹிமா மாவட்டத் தொகுதியிலிருந்து போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளும் ‘நாகா மக்கள் முன்னணி’யிலிருந்து விலகியிருக்கும் அவர், ‘தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சி’ (என்டிபிபி)யில் சேர்ந்திருக்கிறார். என்டிபிபி, மொத்தம் உள்ள 60 தொகுதியில் 20-ஐ பாஜகவுக்கு விட்டுக்கொடுத்துள்ளது. கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளிலிருந்தும் உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் ஈர்த்த நாகா மக்கள் முன்னணி, எதிர்க்கட்சியே இல்லாத விநோத சூழ் நிலையைப் பேரவையில் ஏற்படுத்தியது. முதலமைச்சர் பதவி யிலிருந்து டி.ஆர்.ஜெலியாங் 2017 பிப்ரவரியில் விலகினார். ஷுரோசெலி லீசெட்சு முதல்வரானார். மீண்டும் 2017 ஜூலை யிலேயே ஜெலியாங் முதலமைச்சராகிவிட்டார். இந்தக் கருத்து வேறுபாடுகளாலும், நெய்பியு ரியோ விலகலாலும், நாகா மக்கள் முன்னணி வலுவிழந்தது. நாகா மக்கள் முன்னணியுடன் தனது உறவு நீடிக்கிறது என்று பாஜக அறிவித்துள்ளது. மாநிலத்தில் எந்த அணி வெற்றிபெற்றாலும் ஆட்சியில் சேர பாஜக தயார் என்பதையே இது உணர்த்துகிறது. மக்களுக்கான திட்டம் எது என்ற அடிப்படையில் அல்லாமல், யார் அடுத்த முதல்வர் என்ற அடிப்படையிலேயே காய்கள் நகர்த்தப்படுகின்றன.

மேகாலயத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் ஓயவில்லை. பிப்ரவரி 18-ல் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோன தான் சங்மா படுகொலை செய்யப்பட்டார். மக்களவை முன்னாள் தலைவர் பி.ஏ.சங்மாவின் ‘தேசிய மக்கள் கட்சி’, காங்கிரஸ் கட்சிக்கு இடையேதான் போட்டி. தேசிய மக்கள் கட்சிக்கு, சங்மாவின் மகன் கான்ராட் சங்மா இப்போது தலைவர். காசி - ஜெயந்தியா குன்றுகள் பகுதியின் வெவ்வேறு இன மக்களின் கூட்டணி வெற்றிதான் அடுத்த ஆளும் கட்சியைத் தீர்மானிக்கும். பாஜக அங்கு சிறிய கட்சிதான். ஆனால், தேசிய மக்கள் கூட்டணியுடன் கூட்டு வைத்திருக்கிறது. நீண்ட காலமாகப் பதவியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சியை இழந்தால், பாஜக முக்கியத்துவம் பெறும். வேலையில்லாத் திண்டாட்டமும் மந்தமான பொருளாதாரமும் தான் இங்கு முக்கியப் பிரச்சினைகள். மாநிலத்தில் அமைதியைக் கொண்டுவந்தது நாங்கள்தான், தொடர்ந்து ஆதரியுங்கள் என்று கேட்கிறது காங்கிரஸ்.

நாகாலாந்து, மேகாலயம் ஆகிய இரு மாநிலங்களிலும் இப்போதுள்ள கூட்டணிகள் எப்படியிருந்தாலும், தேர்தலுக்குப் பிறகு கிடைக்கும் இடங்களைப் பொருத்து அணிகள் மாறும். முடிவுகள் வெளியான பிறகுதான் ஆட்சியாளர்கள் யாரென்று தெளிவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x