Last Updated : 20 Aug, 2014 09:50 AM

 

Published : 20 Aug 2014 09:50 AM
Last Updated : 20 Aug 2014 09:50 AM

அப்பா, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை போர் வருமா?

முழங்கும் பீரங்கிகளின் சத்தம், போர் விமானங்களின் உறுமல், ராக்கெட் குண்டு களால் சிதறும் கட்டிடங்களிலிருந்து வெளிவரும் அலறல், அபயக் குரல். இதுவே குழந்தைகளின் அன்றாட வாழ்வாகிப்போவது உலகின் பெரும் துயரம். அதிலும் பாலஸ்தீனத்தில் இப்போது கோடை விடுமுறை. ஆனால், குழந்தைகளுக்குக் கொண்டாட்டமில்லை. உயிரிழந் தவர்கள், அடைக்கலம் தேடி வெளியேறிவர்கள் தவிர, அனைவரும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். வீடுகளுக்குள் தொலைக்காட்சியில் எந்நேரமும் தாக்குதல் காட்சிகள். பாலஸ்தீனத்துக் குழந்தைகளும் பெண்களும் ஆண்களும் சிதைக்கப்படும் காட்சிகளையும் நார்நாராகக் கிழிக்கப்படும் காட்சிகளையும் மனம் உறுத்தாமல் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகள் உமிழ்ந்துகொண்டிருக்கின்றன. மறந்துவிட வேண்டாம். அனைத்து வீடுகளிலும் குழந்தைகள் இருக்கிறார்கள். இதுதான் அன்றாட வாழ்வு என அவர்கள் நினைக்கிறார்கள். இவர்களின் எதிர்காலம் என்னாகும்? இவர்களின் மனநிலையைத் தேற்றுவது எப்படி? கிட்டத்தட்ட இரண்டு தலை முறைகள் அங்கு பீரங்கி முழக்கங்களுக்கு மத்தியிலேயே பிறந்து, வளர்ந்து மடிந்துள்ளது.

தொலைவில் தற்போது, முன் எப்போதையும்விட மிகக் கொடூரமாக காஸாவைத் தாக்கிவருகிறது இஸ்ரேல் ராணுவம். தரை வழியாகவும் தாக்கி, சுற்றிவளைத்துக் கடைசி பாலஸ்தீனர் வரை அழித்தொழிப்போம் என அங்குள்ள வலதுசாரிகள் கொக்கரிக்கிறார்கள்.

என் தம்பியைக் காப்பாற்றுங்கள்!

பள்ளிகள், மைதானங்கள், மருத்துவமனைகள், விடுதிகள் எனக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 600 குழந்தைகள் கொல்லப்பட்டனர். ஆயிரக் கணக்கான சிறார்கள் உடல் சிதைந்து, சின்னாபின்னப்பட்டு மருத்துவ சிகிச்சையின்றி அவதிப்படுகின்றனர். காஸாவிலிருந்து ராமி அல்மிகாரி என்ற செய்தியாளர் இப்படிக் கூறுகிறார்: “என் மகன் முகமது வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறான். அவனுக்குத் தொலைக்காட்சிதான் ஒரே பொழுதுபோக்கு. தொலைக்காட்சியோ யுத்தக் காட்சிகளையே அள்ளித் தெளித்துக்கொண்டு இருக் கிறது. ‘என் தம்பியைக் காப்பாற்றுங்கள்’என்று ஒரு செய்தி.

அதில் குண்டுகளால் சிதைக்கப்பட்ட நிலையில் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்படும் ஒரு சிறுவனின் புகைப்படம் காண்பிக்கப்படுகிறது. குண்டுவெடிப்பால் சிதைந்த கட்டிட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன் அவன். நினைவு திரும்பியவுடன் அவன் கூறிய வார்த்தை ‘தம்பி’ என்பதுதான். ஆனால், மீட்கப்பட்ட சிறுவர்களில் அவனுடைய தம்பி இல்லை. ஆனால், அவனுடைய தம்பிதான் அதிகமாகக் காய மடைந்து இடுபாடுகளில் சிக்கியிருப்பதாகவும், அவனைக் காப்பாற்றும்படியும் மருத்துவர்களிடம் அந்தச் சிறுவன் கூறியதாக அந்தச் செய்தி முடிகிறது. இந்தச் செய்திகளின் நடுவிலும், போர் விமானங்களின் உறுமல்களுடனும் சத்தங் களுடனும்தான் சிறார்கள் வாழ வேண்டியுள்ளது.”

இந்தப் போர், குழந்தைகளின் மனதை வெகுவாகப் பாதித் துள்ளது என்கிறார். அவர் மேலும் எழுதுகிறார்: “ என் மகன் முகமதுவுக்கு எட்டு வயதுதான் ஆகிறது. ஆனால், அவன் காலை உணவின்போது, ‘பாலஸ்தீனத்துக்கு 11 மில்லியன் டாலர்கள் உதவி செய்ய ஜெர்மனி முன்வந்துள்ளது நல்ல விஷயம்’ என்று கூறியபோது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.’’ மேலும் சொல்கிறார்: “ஒருமுறை மசூதியிலிருந்து திரும்பும் வழியில் ‘இப்போது 2014. போர் நடக்கிறது. முன்பு 2012-லும் போர் நடந்தது. இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை போர் நடக்கிறது, இல்லையா அப்பா?’ என்று அவன் கேட்டான். 2008-ல் போரின்போது அவன் சிறு குழந்தையாக இருந்தான்.”

“ஒருநாள் ரேடியோவுக்கான பேட்டரிகளை மாட்டிக் கொண்டிருந்தபோது, திடீரென நினைவு வந்தவனாக ‘இரண்டு ஆண்டுகளுக்கு முன் போர் நடந்தபோது மின்சாரம் நன்றாக இருந்தது. இப்போதெல்லாம் தினமும் மூன்று மணி நேரம், ஆறு மணி நேரம்தான் மின்சாரம் இருக்கிறது’ என்றான்.”

“அந்நிய நாடுகள் நிதியுதவி, ஐ.நா. தீர்மானம், செஞ்சிலுவைச் சங்கம், போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை, மீண்டும் தாக்குதல் ஆரம்பம் போன்ற செய்திகள் குழந்தைகளின் மனநிலையை ஆழமாகப் பாதிக்கின்றன. இத்தகைய பிஞ்சுகள் நாளை என்ன மாதிரியான மனிதர்களாக உருவாவார்கள்? இஸ்ரேல் தாக்குதல்கள் இன்றைய சிறார்களை என்ன மாதிரியாக வளர்த் தெடுக்கும்?” என்ற ஐயங்களை எழுப்புகிறார் ராமி அல்மிகாரி.

எதிர்காலம்!

போர் தொடங்கிய காலம் பள்ளிகளுக்குக் கோடை விடு முறை. செப்டம்பரில் மீண்டும் பள்ளிகள் திறக்க வேண்டும். போர் நீடித்தால் டிசம்பர் வரை பள்ளிகளைத் திறப்பது கடினம். காஸாவில் குழந்தைகளின் எதிர்காலம் நிச்சயமற்று இருக்கிறது.

மக்கள் வசிக்கும் பகுதிகளில் எந்த விதிகளுக்கும் கட்டுப் படாமல், தற்போது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்போல நவீன கால வரலாறு எங்கும் காண முடியவில்லை என்று மத்தியக் கிழக்குப் பார்வையாளர்கள் கூறுகின்றனர். பாதிக்கப் பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் குழந்தைகள். ஆனால், அவர்களுக்குத் தேவையான அளவுக்கு சர்வதேச சமுதாயத்தின் உதவிகள், முக்கியமாக மருத்துவ உதவிகள், கிடைப்பதேயில்லை. தற்போதைய சூழ்நிலையில் இஸ்ரேல் முற்றுகையைத் தகர்க்கும் வகையில், கடல் வழியாக மருத்துவக் கப்பல்கள் மூலம் மருத்துவ உதவிகளை அளிப்பது ஒன்றுதான் காஸாவுக்குள் முடக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்குச் சாத்தியமான வழி என்கிறார்கள். குறிப்பாக, பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு உளவியல்ரீதியான சிகிச்சை அளிக்க வேண்டியது மிக அவசரம், அவசியம் என வலியுறுத்துகிறார்கள்.

தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அனைத்து வசதிகளும் கொண்ட பிரம்மாண்டமான மருத்துவக் கப்பல்கள் உள்ளன. ஆனால், உதவுவதற்கான மனமும் துணிவும் சர்வ தேசச் சமுதாயத்துக்கு இருக்கின்றனவா என்பதுதான் சந்தேகம்!

- அப்பணசாமி, எழுத்தாளர், பத்திரிகையாளர், தொடர்புக்கு: jeon08@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x