Last Updated : 11 Feb, 2018 09:29 AM

 

Published : 11 Feb 2018 09:29 AM
Last Updated : 11 Feb 2018 09:29 AM

சிறைக் கம்பிகளுக்குப் பின்னே நளபாகம்!

சி

றைகள் தண்டனைக் கூடங்களாக இல்லாமல் குற்றவாளிகளைச் சீர்திருத்தும் மையங்களாக இருக்க வேண்டும் என்பதுதான் அடிப்படை நோக்கம். திருவனந்தபுரம் மத்திய சிறைக்கு அந்தப் புரிதல் இருக்கிறது என்பது, அந்தச் சிறையில் தொடங்கப்பட்ட ‘ஃபுட் ஃபார் ஃப்ரீடம்’ திட்டத்தின் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. இந்தத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இன்றைக்குக் கேரளத்தின் மற்ற சிறைகளில் உள்ள கைதிகளும் இந்தத் திட்டத்தில் பங்கேற்று உற்சாகமாக உணவு சமைத்துவருகிறார்கள்.

2016-ல் முன்னாள் டிஜிபி லோக்நாத் பெஹெராவின் முயற்சியால், ரூ. 30 லட்சம் செலவில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட திட்டம் இது. கேரளத்தின் அப்போதைய உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா, திருவனந்தபுரம் மத்திய சிறையில் இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் திட்டம், விரைவிலேயே மற்ற நகரங்களின் சிறைகளுக்கும் பரவியது. இன்றைக்கு கேரளச் சிறைவாசிகளின் உணவு விற்பனை மூலமாக கேரள அரசுக் கருவூலத்துக்கு ரூ.3 கோடி வருமானம் கிடைக்கிறது என்பது சாதாரண விஷயமல்ல. அத்துடன், தண்டனைக் காலத்துக்குப் பிறகு தொழில்முறை சமையல் பணி அனுபவம் கைதிகளுக்கு வெளியில் வேலை தேடுவதற்கும் உதவியாக உள்ளது.

கைதிகள் தயாரிக்கும் உணவுகளும் பேக்கரி உணவுப் பண்டங்களும் சிறை வளாகத்திலேயே உள்ள கவுண்டர்களிலும் வேன்களிலும் விற்கப்படுகின்றன. கைதிகள் தயாரித்த சுவையான உணவை வெளியிலுள்ள மக்களும் வாங்கிச் சுவைக்கிறார்கள்.

குறைந்த வருவாய்ப் பிரிவினரை மனதில்கொண்டே உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. ‘ரெடிமேட்’ சப்பாத்திகள் அழகான பேக்கிங்கில் சாப்பிடக் கிடைக்கின்றன. பிரியாணியும், சிக்கன் கறியும் ரூ.20-க்கு விற்கப்படுகின்றன. ஒரு சப்பாத்தி இரண்டு ரூபாய்க்குக் கிடைக்கிறது. மிக முக்கியமாக, இந்த உணவு வகைகளில் தேவையற்ற வேதிப்பொருட்கள் எதுவும் பயன்படுத்தப்படுவது இல்லை.

திருவனந்தபுரம் மத்திய சிறை வளாக உணவகம் குளிர்சாதன வசதியும், அகலமான பார்க்கிங் வசதி யுடனும் உணவுப் பிரியர்களைக் கவர்கிறது. ‘வை-ஃபை’ வசதியும் உண்டு. மொபைல் சார்ஜர்களும் வைத்திருக்கிறார்கள். கன்னூர் சிறை வளாக உணவகம் நவீனமாக்கப்பட்டுவருகிறது. மாறிவரும் தேவைகளுக்கேற்பத் தொடர்ந்து இந்தச் சமையலறைகள் நவீனப்படுத்தப் படுகின்றன. சமையல் கலைஞர்கள் செயல்திறன், உடல்திறன் அடிப்படையிலேயே தேர்வுசெய்யப்படுகின்றனர். அத்துடன் இத்திட்டத்தில் பணிபுரியும் அனைவருக்கும் சம்பளமும் தரப்படுகிறது. அதை அவர்கள் விரும்பினால் தங்கள் வீட்டுக்கும் அனுப்பலாம்!

©: ‘தி இந்து’ ஆங்கிலம்,

தமிழில்: ஷங்கர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x