Published : 02 Feb 2018 09:47 AM
Last Updated : 02 Feb 2018 09:47 AM

ஜீன் ஷார்ப்: அகிம்சையின் வலிமையைப் பேசியவர்!

வன்முறையற்ற போராட்ட முறை குறித்துத் தன் வாழ்நாள் முழுவதும் ஆய்வுகள் செய்த அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஜீன் ஷார்ப், தனது 90-வது வயதில், ஜனவரி 28, ஞாயிற்றுக்கிழமை அன்று மறைந்தார். காந்தியின் மீது பெருமதிப்பு கொண்டவர், காந்தியைப் புதிய கோணத்தில் அணுகியவர் அவர். வன்முறையற்ற போராட்ட முறையின் மீது நம்பிக்கை கொண்ட தனது நெடுநாள் நண்பரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பேரில் ஓர் அமைப்பை 1983-ல் தொடங்கினார். அவ்வமைப்பின் இணையப் பக்கத்தில் அவருடைய பெரும்பாலான முக்கிய ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள் இலவசமாக வாசிக்கக் கிடைக்கின்றன.

‘போரும் அரசியல் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்படும் வழமையான சூழல்களை ஆராய்ந்து, அதன் பின்புலத்தைக் கண்டறிந்து அதற்கு மாற்றாக நடைமுறை சார்ந்த அகிம்சை முறை போராட்ட வழி களை வளர்த்தெடுப்பது காந்தியின் மிக முக்கியமான பங்களிப்பு. இத்திசையில் அவரது பணி முழுமையானதில்லை என்றாலும், அவர் ஓர் முன்னோடி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை’ என்றவர் ஷார்ப். காந்தியின் மீது கவிந்த ஆன்மிக ஒளிவட்டத் தைக் கழித்து, அவரை ‘வன்முறையற்ற போர்’ எனும் போராட்ட முறையை அறிவியல்பூர்வமாக வளர்த்தெடுத்த வல்லுநர் என்று குறிப்பிட்டார்.

ஆயுதப் பிரயோகத்தின் ஆபத்து

பர்மாவில் வெளியிடப்பட்ட அவரது மற்றுமொரு முக்கியமான புத்தகம் ‘ஃப்ரம் டிக்டேட்டர்ஷிப் டு டெமாக் ரஸி’. சர்வாதிகாரத்தை எப்படி எதிர்கொள்வது, பேச்சுவார்த்தையின் நன்மை தீமைகள் என்று ஓர் அகிம்சைப் போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதை விரிவாக விளக்கும் ஒரு கையேடு அப்புத்தகம். சர்வாதிகாரத்தை எதிர்க்கும் ஒவ்வொரு முறைமையையும் அப்புத்தகத்தில் பரிசீலிக்கிறார். ராணுவ சதி மூலம் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றும்போது, ஒரு சர்வாதி காரி மறைந்து மற்றொருவர் அந்த இடத்தை நிரப்புவதே வரலாறு. மிக உயர்ந்த நோக்கத்துடனும் தீரத்துடனும் ஆயுதம் ஏந்திப் போராட்டம் நடத்திய பல மனிதர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்தான். எனினும் வன்முறை விடுதலை பெற்றுத் தருவதில்லை என்கிறார் ஷார்ப். ஆயுதமேந்திய போராட்டம் என்பது எல்லையற்ற வன்முறையைப் பிரயோகிப்பதற்குத் தேவையான தார்மீக உரிமையை ஆளும் தரப்புக்கு அளித்துவிடுகிறது என்கிறார்.

முற்றதிகார அரசின் முழு பலம் அதன் ராணுவமும் ஆயுதங்களும்தான், வன்முறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் எதிர்த்தரப்பின் பலவீனத்துடன் மோதாமல் பலத்துடன்தான் மோதுகிறோம். கெரில்லா முறை போர்கள் மூலம் அரசை மாற்றுவது சுலபமல்ல, அப்படியே அது நிகழ்ந்தாலும் முந்தைய ஆட்சியைக் காட்டிலும் அதிக அடக்குமுறையையே புதிய ஆட்சியாளர்கள் கையாள்வார்கள் என்கிறார் அவர். ஷார்ப் இதற்குச் சுட்டும் காரணம் முக்கியமானது. ஷார்ப்புக்குப் பின்பான ‘எரிக்கா செனோவேத்’ போன்ற ஆய்வாளர்கள் ஷார்ப்பின் கூற்றுகளில் உள்ள உண்மை யைக் கள ஆய்வுகளின் மூலம் நிறுவியிருக்கிறார்கள். அந்தோனியோ கிராம்ஷியின் நிலை யுத்தம் போன்ற கருத்தாக்கங்களின் செயல்படு விதம் குறித்து ஷார்ப்பின் ஆய்வுகள் பல புதிய திறப்புகளை அளிக்கின்றன.

சர்வாதிகார அரசுகள் அரசு சார்பில்லாத எந்த அமைப்புகளையும் வளர விடுவதில்லை. அவை மத அமைப்புகளாக இருந்தாலும் சரி, எளிய சமூக சேவை அமைப்புகளாக இருந்தாலும் சரி, மனிதர்கள் தனித்துவிடப்படுகின்றனர். அநீதிகளுக்கு எதிராக மெல்லிய முனகல்கூட எழுப்ப முடியாத அளவுக்குப் பலவீனர் களாகிவிடுகின்றனர். நெருங்கிய உறவினர்களுடன், நண்பர்களுடன்கூட தங்கள் விடுதலை வேட்கையை அவர்களால் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை. ஆனால், மக்களாட்சியை நோக்கிய பயணத்துக்கும் மக்களாட்சி நீடிப்பதற்கும் அரசு சாரா அமைப்புகளின் வளர்ச்சி இன்றியமையாதது.

பேச்சுவார்த்தையின் மற்றொரு முகம்

பேச்சுவார்த்தை மற்றும் உடன்படிக்கைகளின் பங்களிப்புகளைப் பற்றி ஷார்ப் கூறும் கருத்துக்கள் நம் கவனத்துக்குரியவை. கொள்கை அளவில் அடிப்படை முரண்பாடுகள் இல்லாதபோது, சமரசப் பேச்சுவார்த்தைகள் உதவக்கூடும். சில சலுகைகளைக் கேட்டுப் பெறவும் உரிமைகளை நிலைநாட்டவும் உதவலாம். மனித உரிமை, சுதந்திரம், வழிபாட்டு உரிமை போன்ற அடிப்படைச் சிக்கல்கள் நம் முன் நிற்கும்போது, பேச்சுவார்த்தைகள் பயனளிக்காது என்கிறார் ஷார்ப். தம் தரப்பின் ஆதரவைப் பெருக்கி அதிகாரக் குவிப்பைத் தகர்த்து அரசைத் தம் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்க வைப்பதே சரியான வழிமுறையாக இருக்கும் என்கிறார் அவர். விரும்பினால் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்ற நிலையில், ஒரு சர்வாதிகார அரசு தன் எதிர்த்தரப்பைச் சரணடையச் செய்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் அதைச் சந்தேகத்துடன்தான் அணுக வேண்டும். அதில் ஏதோ ஆபத்து பொதிந்திருக்கிறது. ஒரு சர்வாதிகாரியின் மொழியில் அமைதி என்பது - ஒன்று சிறைச்சாலையின் அமைதி அல்லது கல்லறையின் அமைதியாகவே இருக்க முடியும் என்கிறார் ஷார்ப்.

சர்வதேச அமைப்புகள் மற்றும் வெளிநாட்டுத் தலையீடுகளை நம்பி எப்போராட்டங்களிலும் ஈடுபடக் கூடாது என்று சொன்னவர் அவர். அப்படி ஒரு அந்நிய தேசம் ஏதோ ஒரு வகையில் உதவ முன்வந்தால், அதை ஐயத்துடன் அணுக வேண்டும். உள்ளிருந்து வலுவான எதிர்ப்பு அலைகள் எழாதபோது வெறும் சர்வதேசக் குறுக்கீடுகள் எதையும் சாதித்திட முடியாது. உள்ளிருந்து எழும் போராட்டங்களுக்குப் பக்கபலமாக வேண்டுமானால் அவர்கள் இருக்கக்கூடும்.

ஏறத்தாழ இருநூறு வகையான அகிம்சைப் போராட்ட முறைகள் சாத்தியம் என்கிறார் ஷார்ப். அவற்றை மூன்றாக வகுக்கிறார் - எதிர்ப்பு, ஒத்துழையாமை, அகிம்சை ரீதியிலான குறுக்கீடுகள். இவை ஒவ்வொன்றிலும் உட்பிரிவுகள் மற்றும் பல்வேறு வகைப்பாடுகள் உள்ளன. அகிம்சைப் போராட்டங்களுக்கு ரகசியத்தன்மை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே, எவ்வித மறைமுக நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல், நேரடியாக ஒருங்கிணைந்துச் செயல்படுவதே உத்தமம். மேலும், பூடகத்தன்மை பெருந்திரள் மக்கள் பங்களிப்பாற்றுவதைத் தடுப்பதாக அமையும். அதேபோல் போராட்டத்தின் இறுதி இலக்கை எட்டும் வரை அபாரமான கட்டுப்பாட்டுடன் இருந்தாக வேண்டும். எந்தத் தூண்டுதலுக்கும் செவிசாய்க்காமல் இறுதிவரை அகிம்சையைப் பின்பற்றினால் - போராட்டத்தின் தார்மீக ஆதரவு கூடும் என்கிறார்.

உலகெங்கும் நிகழ்ந்த எத்தனையோ அகிம்சைப் போராட்டங்களுக்கு அவரது எழுத்துக்கள் உதவியுள்ளன. அன்றைய பர்மிய அரசால் அமெரிக்கக் கிளர்ச்சியாளர் என அவர் குற்றம்சாட்டப்பட்டார். அரேபிய வசந்தத்தின் சமயத்தில் கிளர்ச்சியாளர்கள் அவரது ‘ஃப்ரம் டிக்டேட்டர்ஷிப் டு டெமாக்ரஸி’ புத்தகத்தை அச்சடித்துப் பரவலாக விநியோகித்தனர். செர்பியா, ஜார்ஜியா, உக்ரைன் தொடங்கி அரேபிய வசந்தம் வரை பல்வேறு போராட்டங்கள் ஷார்ப்பின் எழுத்துக்கள் முன்வைக்கும் வழிமுறைகளைக் கையாண்டுள்ளதாக நம்பப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக, நவீன காலகட்டத்து அரசியல் வெளியில் காந்திய முறையை உலகெங்கிலும் கொண்டுசேர்த்தது, மக்களாட்சிக்கான போராட்டத்தை வளர்த்தெடுத்தது, அகிம்சையின் வெற்றியைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவியது போன்றவை ஜீன் ஷார்ப்பின் மிக முக்கியமான பங்களிப்புகள். அதற்காக அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார்!

-சுனில் கிருஷ்ணன், எழுத்தாளர்,

‘காந்தி இன்று’ தளத்தின் ஆசிரியர். தொடர்புக்கு: drsuneelkrishnan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x