Published : 28 Feb 2018 10:04 AM
Last Updated : 28 Feb 2018 10:04 AM

இப்படிக்கு இவர்கள்: தமிழகத்தின் தண்ணீர்த் தேவைக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்?

தமிழகத்தின் தண்ணீர்த் தேவைக்கு

என்ன தீர்வு வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம்?

கா

ந்தி சொன்னார், ‘தேசத்தின் ஆன்மா கிராமங்களில் இருக்கிறது’ என்று. இன்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், தேசத்தின் ஆன்மா நகர்ப்புறங்களில்தான் இருக்கிறது என்பதான தோற்றத்தைத் தனது தீர்ப்பின் மூலம் ஏற்படுத்தியுள்ளது. ஆளும் வர்க்கங்களும் இந்தப் பின்னணியிலேயே திட்டமிடப்படாத நகர்மயமாக்கலை உருவாக்கிவருகின்றன. ‘ஸ்மார்ட் சிட்டி’யில் கவனம் செலுத்தும் அரசு, தேசத்தின் வாழ்வாதாரமாகத் திகழும் விவசாயத்தில் கவனம் செலுத்துவதில்லை. மேலும், நிலத்தடி நீர்மட்டம் விரைவாகக் குறைந்துபோனதற்கு பெங்களூரு போன்ற நகரங்கள் ஏரிகளை, குளங்களை ஆக்கிரமித்து விரிவாக்கம் செய்யப்பட்டதும் ஒரு காரணி. 1 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் குறைந்தால், எவ்வளவு விவசாய உற்பத்தியிழப்பு ஏற்படும் என்பதைக் கணக்கில்கொள்ளாமல் வழங்கப்பட்ட தீர்ப்பு இது. நிலத்தடிநீரைத் தங்கள் நாடுகளில் சேமிக்கும் பொருட்டு, மறைநீர் கொள்கையின் பின்னணியில் கார், மின்னணுச் சாதன உற்பத்தியாளர்கள் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கின்றனர். தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர் மறைநீர் குறித்த பார்வையையும் உச்ச நீதிமன்றம் உள்வாங்கியிருக்க வேண்டும். மறைநீர் குறித்த புரிதல் உலகம் முழுவதும் உருவாகிவரும் நிலையில், இந்திய ஆளும் வர்க்கங்கள் இதுகுறித்து எந்தப் புரிதலுமின்றி, பன்னாட்டு நிறுவனங்கள் பின்னால் போகின்றன. பன்னாட்டு நிறுவனங்களினூடான இந்திய வளர்ச்சி, மேலும் நிலத்தடிநீரைச் சுரண்டவே செய்யும். 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்போது, பெங்களூருவின் தேவை இன்னும் கூடுதலாகியிருக்கும். அப்போது உச்ச நீதிமன்றம் என்ன செய்யும்? மீண்டும் தமிழகத்தின் தேவை மீது கைவைக்குமா? பெங்களூருவின் தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு தமிழகத்தின் தண்ணீரில் கைவைக்கும் உச்ச நீதிமன்றம், தமிழகத்தின் தண்ணீர்த் தேவைக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறது?

- சே.செல்வராஜ், தஞ்சாவூர்.

தேர்தலைச் சீர்திருத்துவோம்!

பி

ப். 26 அன்று வெளியான ‘நேர்மையான தேர்தலுக்கு வழி பிறக்குமா?’ - கட்டுரை படித்தேன். அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் நேர்மை, நியாயத்தைக் கடைப் பிடிக்காமல் செய்யப்படும் எந்தச் செயலும் கறைபடிந்த தாகவே இருக்கும். எல்லா அரசியல் கட்சிகளுமே தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள விரும்புவதில் தவறில்லை. ஆனால், அதற்கான செயல்களில் ஈடுபடும்போது, அவை அறம்சார்ந்ததாக இருக்க வேண்டாமா? அப்படி இருந்தால்தானே உண்மையான ஜனநாயகம் தழைத்தோங்கும். முறையற்ற தேர்தலை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வெற்றிபெற்று, தங்களையும் தங்களைச் சார்ந்தவர்களையும் வளப்படுத்திக்கொள்ளத் துடிப்பவர்கள், தேர்தல் சீர்திருத்தம் பற்றி எப்படி யோசிப்பார்கள்? நேர்மையான தேர்தல், நேர்மையான ஆட்சி, நேர்மையான மக்கள் எல்லாம் ஒருங்கிணையும்போதுதான் நேர்மையான கட்சி பிறக்கும்.

- கூத்தப்பாடி மா.பழனி, தருமபுரி.

அரசியல் அசிங்கம்

பி

ப். 25 அன்று வெளியான ‘கை நீட்டும் கலாச்சாரத்துக்கு முடிவுகட்டுங்கள்’ என்கிற தலையங்கம், வெறும் செய்தி மட்டும் அல்ல; இந்திய ஆட்சிப் பணியிலிருக்கும் அலுவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அரசியல் அசிங்கம். அரசியல்வாதியாவதற்கு எந்த அடிப்படைத் தகுதியும் இல்லாத இந்த ஜனநாயக நாட்டில், பணியின்போது அரசியல்வாதிகளுக்கு அடிபணியாத ஊழியர்கள் மிரட்டப்படுவதும், சில சமயங்களில் கொல்லப்படுவதும் நடக்கிறது. மிரட்டப்பட்டவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொள்வதையும் இந்நாடு பார்த்திருக்கிறது.

இவற்றுக்கெல்லாம் முடிவு எப்போது?

- சு.பாலகணேஷ் மாதவன்குறிச்சி, திருச்செந்தூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x