Published : 20 Feb 2018 09:44 am

Updated : 20 Feb 2018 09:44 am

 

Published : 20 Feb 2018 09:44 AM
Last Updated : 20 Feb 2018 09:44 AM

எதிர்காலத்துக்கான சமூகநீதி விதைகளை கடந்த அறுவடையிலிருந்து பெறுவோம்!

செ

ன்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் பணிகளின்போது, ஒரு காலத்தில் இங்கு ஓடிய ட்ராம் ரயில்களின் இருப்புப் பாதைகளின் இரும்புத் துண்டுகள் கிடைத்ததாகச் செய்திகள் வெளியாகின. இருப்புப் பாதைத் துண்டுகள் மட்டுமல்ல; துயரம் தோய்ந்த பல சம்பவங்களின் சுவடுகளும் அந்தச் சாலையில் புதைந்துதானிருக்கின்றன. நூறாண்டுகளுக்கு முன் அந்தச் சாலையில் சென்ற பேருந்துகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் ஏறுவதற்கு அனுமதியில்லை. வால்டாக்ஸ் சாலையிலிருந்த திரையரங்கின் வாசலில் ‘தாழ்த்தப்பட்டவர்களும் தொழுநோயாளிகளும் உள்ளே வரக் கூடாது’ என அறிவிப்புப் பலகை இருந்தது. இப்படிப் பல கசப்பான நிஜங்கள் உண்டு. ஆனால், அதே சென்னை மாநகரத்தில் தொடங்கப்பட்ட சமூக நீதிக்கான இயக்கம்தான் இந்திய அரசியலமைப்பின் வழியாக கிடைத்திருக்கும் பல உரிமைகளுக்குக் காரணமாக அமைந்தது.


உலகளவில் சமூக நீதிக்காக ஓங்கி ஒலித்த முன்னோடிகளில் ஒருவர், அமெரிக்காவைச் சேர்ந்த கறுப்பினப் பெண்மணி ரோசா பார்க்ஸ். 1955 டிசம்பர் 1-ல் அலபாமா நகரத்தில் பேருந்து ஒன்றில் அமர்ந்திருந்தார் ரோசா பார்க்ஸ். அந்தப் பேருந்தில் நின்றுகொண்டிருந்த வெள்ளையர் ஒருவருக்கு எழுந்து இடமளிக்குமாறு அவரிடம் கூறப்பட்டது. அவர் மறுத்ததால், கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் அபராதம் கட்ட நேர்ந்தது. ஆப்பிரிக்க அமெரிக்க சமூகத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் அமெரிக்காவின் குடிமக்கள் உரிமை இயக்கத்துக்கு வித்திட்டது. ரோசா பார்க்ஸ் தன் இருக்கையிலிருந்து எழவில்லை. ஆனால், கறுப்பின மக்களுக்கான உரிமைக்குரல் எழுந்தது, மார்டின் லூதர் கிங் தலைமையில்.

சத்தியாக்கிரகத்தின் பாதையில்...

இதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்னால், 1924-ல் கேரளத்தின் வைக்கத்தில் சமூகநீதிக்கான ஒரு போராட்டம் நடந்தது. தலித் சமுதாயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மாதவன் நீதிமன்றம் செல்வதற்காகக் கோயிலை ஒட்டிய வீதியில் சென்றபோது உயர் சாதியினரால் தாக்கப்பட்டார். போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்தில் பெரியார், காந்தி ஆகியோர் முக்கியப் பங்கு வகித்தனர். இறுதியில் வைக்கம் வீதிகள் அனைவருக்கும் பொதுவானவையாகத் திறக்கப்பட்டன. 1927-ல், மகாராஷ்டிரத்தில் உள்ள மஹாத் என்கிற இடத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் குளத்தைப் பயன்படுத்தக் கூடாது என்ற தடையை மீறி, போராடினார் அம்பேத்கர். வெற்றி கிடைத்தது. வைக்கத்திலும் மஹாத்திலும் நடந்த சத்தியாக்கிரக போராட்டங்களுக்கான விதை தென்னாப்பிரிக்காவில் விதைக்கப்பட்டது. 1893-ல் தென்னாப்பிரிக்காவில் பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் 24 வயது வழக்கறிஞரான காந்தி, ரயில் பெட்டியிலிருந்து வெள்ளையினத்தவர்களால் கீழே தள்ளப்பட்டார். வீழ்ந்தது காந்தி ஆனால், எழுந்தது சமூகநீதிக்கான குரல்.

காந்தி தலைமையில் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த அதே காலக்கட்டத்தில் தமிழகத்தில் சமூக விடுதலைக்கான பேராட்டங்களும் தீவிரமடைந்தன. 19-ம் நூற்றாண்டில் பண்டித அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் போன்றவர்களின் போராட்டங்களை பின்னொற்றி 20-ம் நூற்றாண்டில் பெரும் வீச்சுடன் தொடர்ந்தது சமூக விடுதலைக்கான போராட்டம். 1916-ல் தியாகராய செட்டியார், நடேச முதலியார், டி. எம். நாயர் போன்றவர்களால் தொடங்கப்பட்ட தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் 1920-ல் சென்னை மாகாண ஆட்சியைக் கைப்பற்றியது. ‘ஜஸ்டிஸ்’ எனும் ஆங்கில நாளிதழை நடத்திவந்ததால் ‘ஜஸ்டிஸ்’ (நீதி) கட்சி என்றே தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் அழைக்கப்பட்டது. அதன் ஆட்சியில் பல நலத்திட்டங்களும் சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

முன்னோடித் திட்டங்கள்

உயர் கல்வி, அரசுப் பதவிகளில் அனைத்து சாதியினருக்கும் சமமான வாய்ப்பளிக்க வகுப்புவாரிப் பிரதிநிதித்துவச் சட்டம், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பொது இடங்களைப் பயன்படுத்துவதற்கான உரிமை வழங்கும் சட்டம், கட்டாயத் தொடக்கக் கல்வி, தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவக் கல்லூரியில் சேர அனுமதி என்ற நிலையில் மாற்றம், இந்தியாவிலேயே முதன்முதலாக மதிய உணவுத் திட்டம், பெண்களுக்கு வாக்குரிமை என்று பல்வேறு திட்டங்கள் மூலம் சமூகநீதிக்கான விதைகள் விதைக்கப்பட்டன.

நீதிக்கட்சி தோற்கடிக்கப்பட்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது “நீதிக்கட்சி 500 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டது” என்றார் சத்தியமூர்த்தி. 1967-ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் “நீதிக்கட்சி புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டது. இன்று மீண்டும் எழுந்திருக்கிறது” என்று குறிப்பிட்டார் அண்ணா. மாநில உரிமைகள், இந்தி மொழி திணிப்புக்கு எதிர்ப்பு, சுயமரியாதை திருமணச் சட்டம், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்கு நாட்டிலேயே முதன் முதலாக உயர் நீதிமன்ற நீதிபதி பதவி, இடஒதுக்கீட்டினை விரிவுபடுத்துதல், மிகவும் பிற்படுத்தப்பட்டவருக்கும் அருந்ததியினருக்கும் உள்ஒதுக்கீடு, பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை, மாவட்டங்கள் தோறும் அரசு மருத்துவக் கல்லூரிகள், மாநிலம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு என்று எண்ணற்ற சமூகநீதிச் செயல்பாடுகள் தொடர்ந்தன. பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டுக்கு வகைசெய்யும் மண்டல் குழு அறிக்கை அமல்படுத்தப்பட்டதில் திராவிட இயக்கங்களின் பங்கு உண்டு. 1990-களில் வட இந்தியாவில் சமூகநீதிக்கான போராட்டங்கள் எழுச்சி பெற்றதிலும் தமிழகத்தின் தாக்கம் முக்கியப் பங்கு வகித்தது எனலாம்.

முதல் பெண் மருத்துவர்

1848-ல் எலிசபெத் ப்ளாக்வெல் எனும் பெண்மணி அமெரிக்காவிலுள்ள தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் இடம் கேட்டு விண்ணப்பித்தார். தகுதியான மதிப்பெண்கள் இருந்தும் நிராகரிக்கப்பட்டார். பெண்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடையாது என்பதுதான் அதற்குக் காரணம். பெண்களுக்குக் கல்வி கூடாது என்று அன்றைய காலகட்டத்தில் நிலவிய பிற்போக்கான மதிப்பீடுகளைத் தாண்டி, பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு உலகின் முதல் பெண் மருத்துவரானார் எலிசபெத்.

நம் மண்ணில் முத்துலட்சுமி ரெட்டியும் இதேபோன்ற சவாலை எதிர்கொண்டு வெற்றிபெற்றது பெருமைக்குரிய வரலாறு. புதுக்கோட்டையில் உயர்நிலைப் பள்ளியில் சேர அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், புதுக்கோட்டை மன்னரே சிபாரிசு செய்ததைத் தொடர்ந்து அந்தப் பள்ளியில் அவர் சேர்க்கப்பட்டார், சில விதிகளுக்கு உட்பட்டு! ஆம், ஆண்கள் நிறைந்த வகுப்பறைக்குள் அவருக்கு அனுமதியில்லை.

வகுப்பறையையொட்டி உள்ள ஜன்னல் அருகில் முழுவதும் மூடப்பட்ட கூடு வண்டியில் அமர்ந்து பாடம் கேட்க வேண்டும்.சவால்கள் இருந்தபோதும், படித்து மாவட்டத்திலேயே முதல் மாணவராகத் தேறி மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து தமிழகத்தின் முதல் பெண் மருத்துவரானார் முத்துலட்சுமி ரெட்டி.

சமூகநீதி என்பது சமூகத்தில் உள்ள அனைத்து மக்களும், அவர்களுக்கான சுயமரியாதை, வாய்ப்புகள், வளங்கள், உரிமைகளைப் பெறுவது. சாதி, மதம், இனம், நாடு, மொழி ஆகியவற்றையெல்லாம் கடந்து ஒட்டுமொத்த மனித இனம் என்கிற உணர்வை உருவாக்குவதே உயர்ந்த லட்சியமாக இருக்க வேண்டும். சமூகநீதிதான் அதற்கான முதல்படி! உலகம் முழுவதும் சமூக நீதி நாள் அனுசரிக்கப்படுகையில், நம் மண்ணில் நிகழ்ந்த சமூகநீதிக்கான போராட்டங்களையும் நினைவில்கொள்வோம்.

- கோ. ஒளிவண்ணன், பதிப்பாளர்,

தொடர்புக்கு: olivannang@gmail.com

பிப்ரவரி 20, உலக சமூகநீதி நாள்Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x