Last Updated : 15 Feb, 2018 08:57 AM

 

Published : 15 Feb 2018 08:57 AM
Last Updated : 15 Feb 2018 08:57 AM

ஜெயலலிதா புன்னகைக்கிறார்... இந்திய ஜனநாயகத்துக்கு நல்லதுதான்!

ருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். ஜெயலலிதாவை எப்போதுமே முக்கியமானவராகக் கருதிவந்திருக்கிறேன். வாழ்ந்த காலம் நெடுகிலும் இந்நாட்டின் அமைப்பு எவ்வளவு ஓட்டைகள் நிரம்பியது என்பதை நமக்குத் தொடர்ந்து உணர்த்திவந்தவர் அவர். முக்கியமாக, நம்முடைய நீதி பரிபாலனத்தின் முன் எல்லோரும் சமம் என்கிற மாயையைப் பகிரங்கமாக உடைத்துக் காட்டியவர்.

வழக்குகள் இடையே வாழ்ந்தவர் ஜெயலலிதா. வருமானத்துக்கு மீறிய சொத்துக்குவிப்பு வழக்கு மட்டுமே நெடுங்காலம் அவரால் கடக்க முடியாததாக இருந்தது. அதையும் மரணத்தால் ஜெயித்தார். 18 ஆண்டுகள். 14 நீதிபதிகள். வாய்தாக்களால் நீதிமன்றத்துக்கு அவர் தண்ணீர் காட்டியபோது ஒருகட்டத்தில் நீதிபதி பச்சாபுரே வெறுத்துப்போய் கதறியது இன்னும் நினைவில் இருக்கிறது, “ஆறு மாத காலமாக விசாரணையே நடக்கவில்லை. விசாரணைக்கு ஜெயலலிதா தரப்பு ஒத்துழைப்பு தருவதே இல்லை. ஒவ்வொரு நாளும் நான் தனியாக வந்து நீதிமன்றத்தில் உட்கார்ந்து செல்கிறேன். தனிமைச் சிறையில் இருப்பதுபோல உணர்கிறேன்!’’

பின்னர் அந்த வழக்கில் தீர்ப்பு வந்தது. தண்டனையும் வந்தது. அவர் மேல்முறையீட்டுக்குச் சென்றது, அவர் மரணத்துக்குப் பின் வந்த இறுதி தீர்ப்பானது அவரைக் குற்றவாளி என்றது எல்லாம் எல்லோருக்கும் தெரியும். ஜெயலலிதாவின் மரணத்தோடு சேர்த்து, ஒரு மாபெரும் வரலாற்று அபத்தத்தை இந்தியா வசதியாக மறக்க முற்பட்டது. சட்டத்தின் முன் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டிருந்த நாட்களிலேயே, சட்டங்கள் இயற்றுபவராகவும் ஜெயலலிதா செயல்பட்டுக்கொண்டிருந்தார்.

ஜெயலலிதா உயிரோடு இருந்திருக்க வேண்டும். அவர் நல்ல உடல்நிலையோடு இருந்திருந்து, முதல்வராக நீடித்து, அப்போதும் நீதிமன்றம் ‘அவர் குற்றவாளி’ என்ற தீர்ப்பைக் கொடுத்திருந்தால், இந்திய ஜனநாயகம் அதை எப்படி எதிர்கொண்டிருக்கும் என்ற கேள்வி எனக்குண்டு. வசதியான ஒரு விபத்துபோல நிகழ்ந்துவிட்ட ஜெயலலிதாவின் மரணத்தின் மூலம் தன்னுடைய ஓட்டைகளை மக்களின் மறதிகளின் இடுக்குகளில் மறைத்துவிட இந்திய அமைப்பு முற்பட்டது. ஜெயலலிதாவின் வழிவந்தவர்களோ அதை மீண்டும் அம்பலத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள்!

இந்திய நாடாளுமன்றத்திலும் ஏனைய சட்டமன்றங்களிலும் இதுவரை திறக்கப்பட்ட எந்தத் தலைவரின் படத்தைக் காட்டிலும் நிச்சயமாக ஜெயலலிதாவின் படம் வேறுபடுகிறது. ஏனைய தலைவர்களின் படங்கள் அனைத்தும் இந்த நவீன அரசின் ஓட்டைகளை மறைக்கும் ஒட்டுத்துணிபோல ஒட்டிக்கொண்டு, அதன் போலி புனிதம் தொடர துணை நிற்கின்றன. மாறாக, ஜெயலலிதாவின் படம் அதைப் பார்த்துப் பரிகசிக்கிறது. ‘சட்டம் இயற்றும் மன்றத்தில் ஒரு குற்றவாளியின் படம்’ என்கிற உருவகம் காலா காலத்துக்கும் புனிதத்தைத் துரத்தும். இந்நாட்டில் அரசியலுக்கும் குற்றத்துக்கும் இருக்கிற தொடர்பை அது சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கும். தண்டனை அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்கிற இடத்திலிருந்து தண்டிக்கப்படாத குற்றவாளிகளைப் பொதுவெளியில் விவாதத்துக்கு அழைக்கும். தூய்மைவாத மதிப்பீடுகளைக் கதறடிக்கும்!

பொதுவெளியில் இன்று, “சட்ட மன்றத்தில் ஜெயலலிதா படம் கூடாது; அவர் ஒரு குற்றவாளி” என்று கூறுவோர் கட்டக்கடைசியாக அவர் மீது சுமத்தக்கூடிய குற்றச்சாட்டு என்ன? “அவர் ஊழல் செய்தார்!”

ஜெயலலிதாவின் படத்தைத் தாண்டி, இந்திய அரசியலில் இன்று ஏனைய எல்லா அரசியல் குற்றங்களையும் பின்னுக்குத் தள்ளவும் மூடி மறைக்கவும் ‘ஊழல்’ எனும் சொல் ஒரு ஆயுதமாகக் கையாளப்படும் சூழலில், ‘ஊழல்’ தொடர்பாக விவாதிக்க இந்தத் தருணம் ஒரு வாய்ப்பைத் தருகிறது என்று கருதுகிறேன். நாம் அது நோக்கி கொஞ்சம் நகர்வோம்.

நமக்குள் சில கேள்விகள். அரசு ஒப்பந்தங்களின் ஊடாக நடத்தப்படும் பேரமும், பேரத்தின்போது புழங்கும் தரகுத்தொகையும் மட்டும்தான் ஊழலா? சரி, அது மட்டுமே ஊழல் என்று வரையறுத்துக்கொண்டால், இந்தியாவில் மட்டும் அல்ல; உலகத்தில் தரகுக்கு அப்பாற்பட்ட ஜனநாயக அரசியல் கட்சி என்று ஒன்று இன்று இருக்கிறதா? போகட்டும், நாளை தரகை அதிகாரப்பூர்வமாக்கிவிட்டால் அன்றைக்கு இந்த வாதங்கள் என்னவாகும்? இந்தக் கேள்விகளை அபச்சாரமாகக் கருத ஏதும் இல்லை. ஏற்கெனவே மோடி அரசு, அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் விவகாரத்தை அது நோக்கித் திருப்பியாயிற்று!

ஒரு அரசியல் நண்பர் எனக்கு இன்றைய கள யதார்த்தத்தை இப்படி விளக்கினார்: “நீங்கள் ஒரு கோடி ஒப்பந்தத்துக்காக 20% தரகைப் பணமாக வாங்கிக்கொண்டால் அது ஊழல்; ஒப்பந்தத்தைத் தனியாகப் போட்டுக்கொண்டுவிட்டு, 30% தரகை கட்சியின் பெயரில் வங்கிக் கணக்கின் வழி வாங்கிக்கொண்டால் அது நன்கொடை! இவ்வளவுதான் புதிய இந்தியா!”

ஊழல்தான் இந்தியாவின் தலையாய பிரச்சினை என்பதே பெரிய ஊழல்தான் - சாதியப் பாகுபாட்டை பின்னுக்குத் தள்ளும் ஊழல். தரகுத்தொகையை மட்டுமே ஊழலாகச் சுருக்குவது அதைக் காட்டிலும் நுட்பமான ஊழல்! அந்த ஊழல் வழக்குகளிலும்கூட மாநிலக் கட்சிகளின் தலைவர்களையும், அடித்தட்டு சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களையும் மட்டுமே தண்டிக்க முடியும் என்பதே இந்திய யதார்த்தம். மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த சுக்ராம் ஊழல் வழக்கில் சிக்கியபோது அவருடைய படுக்கையின் கீழ் கட்டுக்கட்டாகப் பதுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளோடு சிக்கினார். காங்கிரஸிலிருந்தவர் பாஜகவுக்குப் போனார். இன்று ராஜாபோல இருக்கிறார். மகன் அனில் சர்மா இமாச்சல பிரதேச அமைச்சரவையில் மந்திரியாக இருக்கிறார். கேமரா முன்பு கையும் களவுமாகப் பிடிபட்டாலும், திலீப் சிங் ஜுதேவுக்கு ஒரு நியாயம், பங்காரு லட்சுமணனுக்கு ஒரு நியாயம்தான்!

தமிழ்நாட்டின் சட்ட மன்றத்தில் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்ட அதே நாளில் வெளியான ஒரு ஆய்வறிக்கை நம் கவனத்தைக் கோருகிறது. இந்தியாவின் சமகால முதல்வர்களின் வருமானம், அவர்கள் எதிர்கொள்ளும் வழக்குகள் தொடர்பான புள்ளிவிவரங்களைக் கொண்டது அது. நாட்டின் முதல்வர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மீது தீவிரமான குற்ற வழக்குகள் இருப்பதையும் வெறுப்பரசியலில் சிலருக்குள்ள தொடர்பையும் அது சொல்கிறது. பொருளாதார வழக்குகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஏன் இங்கு குற்ற வழக்குகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை?

ஏனைய மாநிலங்களிலிருந்து வந்து இங்கு பணியாற்றிச் சென்ற பல அதிகாரிகள் இதைச் சொல்லக் கேட்டிருக்கிறேன், “தமிழ்நாட்டின் தலைவர்களிடம் எங்களுக்கு இருக்கும் பெரிய மதிப்பு, ஓட்டுக்காக அவர்கள் ஒருபோதும் சாதி - மதக் கலவரங்களைத் தூண்டிவிட்டதில்லை. கருணாநிதியும் சரி, ஜெயலலிதாவும் சரி; ஒருநாளும் தங்களுடைய ஆட்சி அதிகாரத்துக்காக கலவரங்களின் பின்னிருந்தது கிடையாது.

ஒரு சாதிக் கலவரமோ, மதக் கலவரமோ வெடிக்கையில் கடுமையான நடவடிக்கை எடுக்கவே உத்தரவிடுவார்கள்! ஏனைய பல மாநிலங்களில் கலவரங்களையே அரசியல்வாதிகள்தான் உருவாக்குவார்கள். கைகளைக் கட்டிக்கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை! ஏனென்றால் அது எல்லோர் நினைவிலிருந்தும் அழிக்கப்பட்டுவிடும்.”

சுதந்திர இந்தியாவில் இந்த 70 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான சாதி, மதக் கலவரங்கள் நடந்திருக்கின்றன. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்; சிசுக்கள் வெட்டி வீசப்பட்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் தம் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கலவரங்கள் யாவும் அரசியல் தொடர்பற்றவை என்று சொல்ல முடியுமா? அப்பட்டமாக ஆட்சி அதிகாரத்துக்காக நடத்தப்பட்ட கலவரங்களில் தொடர்புடைய எத்தனை அரசியல் தலைவர்களை இந்நாட்டின் நீதி அமைப்புகளால் 70 ஆண்டுகளில், தொட முடிந்திருக்கிறது?

ஊழல் என்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வெறுப்பரசியலின் தொடர்ச்சியாக நடக்கும் கலவரங்கள், கொலைகள் – கொள்ளைகள் - சூறையாடல்கள் முன்னதைக் காட்டிலும் கொடுங்குற்றம். நாம் ஏன் அதைப் பேச மறுக்கிறோம்?

ஜெயலலிதாவின் படம் மூன்று முக்கியமான கேள்விகளை இந்திய ஜனநாயகத்தின் முன் தூக்கி வீசுகிறது. கருத்தியல் தளத்தில் இருப்பவர்கள் திரும்பத் திரும்ப ஊழலை மிகப் பெரிய குற்றமாகச் சித்திரிக்க முயன்றுகொண்டே இருக்கிறார்கள். ஆனால், வெகுமக்கள் திரும்பத் திரும்ப ஏன் அதை அடித்து நொறுக்குகிறார்கள்? ஏனைய குற்றங்களை மக்கள் பெரிதெனக் கருதும் சூழலில் கருத்தியல் தளத்தில் இருப்பவர்கள் மீண்டும் மீண்டும் ஊழலைப் பிரதானமாக கட்டமைப்பதன் அரசியல் என்ன? எல்லாவற்றுக்கும் மேலாகப் படங்கள் இல்லாவிட்டால் நடந்த வரலாறு எல்லாம் இல்லையென்று ஆகிவிடுமா?

சட்டமன்றத்தில் தொங்கும் படத்தைப் பார்த்தேன். ஜெயலலிதா மந்தகாசமாகப் புன்னகைக்கிறார். இந்திய ஜனநாயகத்துக்கு இந்த விவாதம் நல்லதுதான்!

சமஸ்,

தொடர்புக்கு:

samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x