Last Updated : 25 Feb, 2018 10:13 AM

 

Published : 25 Feb 2018 10:13 AM
Last Updated : 25 Feb 2018 10:13 AM

நீர் மேலாண்மையில் தமிழகத்துக்கு வழிகாட்டும் தண்ணீர் மனிதர்!

கா

விரி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்கியிருக்கும் உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் தமிழகத்துக்காக ஒதுக்கீடுசெய்த நீரின் அளவில் 14.75 டி.எம்.சி. குறைத்துவிட்டது. இந்தத் தீர்ப்பால் தமிழக விவசாயிகள் ஏமாற்றமடைந்திருக்கும் நிலையில், கிடைக்கும் தண்ணீரைச் சரியாகப் பயன்படுத்துவது தொடர்பாக ஆக்கபூர்வமான யோசனைகளைத் தெரிவித்திருக்கிறார் ‘இந்தியாவின் தண்ணீர் மனிதர்’ ராஜேந்திர சிங். ஒரு வார காலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயணித்து விவசாயிகளுக்கு நம்பிக்கை அளித்துச் சென்றிருக்கிறார்.

ராஜேந்திர சிங் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். உயிர் காக்கும் நீர் தரும் பணிக்காக ராஜஸ்தானின் பாலைவனப் பூமியிலிருந்து கிளம்பியவர். தண்ணீர் இல்லாமல் தவித்துக்கொண்டிருந்த அல்வர் மாவட்டத் தின் கோபாலபுரம் கிராமத்தில் வேலையை ஆரம்பித்த போது கிராமத்து மக்கள் வியப்பாகப் பார்த்தனர், கேலி செய்தனர். ஆனால், இவரோ தொடர்ந்து சிறுசிறு நீர் நிலைகளைச் செப்பனிட்டார். மண்ணை வெட்டியும் மண்மேடுகளை உருவாக்கியும் சரிவு நிலங்களில் கல் தடுப்பு அமைப்புகளை ஏற்படுத்தியும் ஒரு சாமானிய மனிதனால் எவ்வாறெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் புதிய நீர் நிலைகளை உருவாக்கினார். பலன் கிடைத்தது.

ஒரே ஆண்டில் 36 கிராமங்களில் குளங்கள் புத்துயிர் பெற்றன. 60 ஆண்டுகளாக வறண்டு கிடந்த அர்வரி நதி புத்துயிர் பெற்று ஓடத் தொடங்கியது. அழிவின் விளிம்பில் நின்ற சரிஸ்கா தேசியப் பூங்கா புத்துயிர் பெற்றது. ஆற்றின் நீர் வளத்தால் மக்களே புதிய பைரோன்தேவ் சரணாலயத்தை உருவாக்கினர். 11 ஆறுகள் புத்துயிர் பெற்றன. 11 மாவட்டங்களின் 850 கிராமங்களில் 4,500 தடுப்பணைகள் மரபு சார்ந்த மக்கள் தொழில்நுட்பத்துடன் கம்பி, சிமெண்ட், கான்கிரீட் இன்றிக் கட்டப்பட்டன. இரண்டு லட்சம் வறண்ட கிணறுகளில் நீர் ஊறியது. இவரது செயல்பாட்டைக் கண்டு வியந்த மகாராஷ்டிர அரசு, இவரது நீர் மேலாண்மையைப் பாடத்திட்டமாக்கியது. 2015-ல் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், தேம்ஸ் நதியின் கிளை ஆறு ஒன்றை மீட்பதற்கு அழைப்பு விடுக்கும் அளவுக்குப் புகழ்பெற்றவர். ‘மகசேசே விருது’, ‘இந்திரா காந்தி இயற்கை விருது’, ‘ஸ்டாக்ஹோம்ஸ் நீர் விருது’ என விருதுகள் குவிந்தன. அவரோ எளிய மனிதராகப் பயணத்தைத் தொடர்கிறார். அப்படியான பயணம் தான் இப்போது தமிழகத்திலும் நிகழ்ந்தது.

தமிழகத்தில் செய்ய முடியாதா?

தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் ராஜேந்திர சிங் முன்வைத்த கருத்துகள் முக்கியமானவை. 360 மி.மீ. மழைப் பொழிவு மட்டுமே கொண்ட ராஜஸ்தானில் செய்யப்பட்ட சாதனையை 960 மி.மீ. மழைப் பொழிவு கொண்ட தமிழகத்தில் செய்ய முடியாதா என்று கேட்கிறார் ராஜேந்திர சிங். பவானி, மோயாறு போன்ற வற்றுக்கு நீர் வள ஆதாரமான தமிழகத்தின் நீர்த் தொட்டி எனப்படும் நீலகிரி உயிர்ச்சூழல் காப்பகத்தின் 52 சிற்றாறு கள் இன்று வறண்டு கிடப்பதைச் சுட்டிக்காட்டினார். தமிழ்நாட்டின் 48,000 ஏரி, குளங்கள் என்ன ஆகின என்று கேள்வி எழுப்புகிறார்.

நியாயவிலைக் கடைகளில் அரசு மானிய விலைக்கு அரிசி, கோதுமை, வெள்ளைச் சர்க்கரை தருவதுபோல மானாவாரி தானியங்களையும், கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரையையும் தந்தால் புன்செய் விவசாயிகள் பயன் பெறுவதுடன் மக்களும் சத்தான, நஞ்சற்ற உணவைப் பெற முடியுமல்லவா என்கிறார். இந்தக் கேள்விகளை முன்வைத்த அவர் வெறும் ஆவேசப் பேச்சு, போராட்டம், மோதல்களால் தீர்வு காண முயல்வதற்கு மாற்றாக, அரசைத் தவிர்த்து விவசாயிகளும் பொதுமக்களும் கூடி விவாதித்து, தமக்கான தீர்வைத் தாமே கிராம அளவில் காண முயல்வது அவசியம் என்கிறார்.

முக்கிய யோசனைகள்

நீர் உணர்வுக் கல்வி பள்ளியிலேயே தொடங்கப்பட வேண்டும். ஒவ்வொரு துளி நீரின் மகத்துவம், சிக்கனப் பயன்பாடு, சேமிப்பு நுட்பம் ஆகியவற்றை இளைய தலைமுறையினருக்குப் பயிற்றுவிக்கும் கல்வி அவசியம். ஒவ்வொரு குக்கிராமத்துக்கும் நீர் நாடாளுமன்றம் அவசியம். விவசாயிகள் யாவரும் இதில் பங்கேற்க வேண்டும். கிராமத்தின் மழை அளவு, கிடைக்கும் நீர் வளம், என்ன பயிரை எந்தக் காலத்தில் பயிரிடுவது, நீர்ப் பகிர்வு ஆகியவற்றை விவாதித்துச் செயல்படுத்த வேண்டும். குளங்களைத் தூர்வாருதல், மழைநீர் சேமிப்பு, சமத்துவமான நீர்ப் பகிர்வு ஆகியவற்றை அரசு குறுக்கீடின்றி மக்களே முடிவுசெய்ய வேண்டும். மலையில் உருவாகி வேகமாகப் பாய்ந்துவரும் நீரை குவியாடி, குழியாடி போன்ற சிறிய தடுப்பணைகள் மூலம் தடுத்துத் தேக்கிக் கீழிறக்க வேண்டும். சமவெளி அடைந்த ஆற்றின் நீரை நேரான தடுப்பணை கொண்டு நிறுத்தி வைக்க வேண்டும். நீர் சேமிப்பு முறைகளை ஒவ்வொருவரும் அறிய வேண்டும். பெரிய அணைகள் உருவாக்கம், நிர்வாகம் ஆகியவற்றுக்கான செலவின் அளவுக்குப் பயன் தருவதில்லை. மண் உவர்ப்பாகி தரிசாகிப் போகும் நிலத்தின் அளவு, பாசனம் பெறும் நிலத்தின் அளவைவிட அதிகமாக உள்ளது. எனவே, நதிகளை இணைப்பதல்ல; மக்களின் மனங்களை இணைப்பதே நிரந்தரமான தீர்வாகும்.

எளிதில் கிடைக்கும் கற்கள் கொண்டு தடுப்பணைகள் உருவாக்கும் மரபு சார்ந்த நுட்பத்தை மக்களிடமிருந்தே கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார் ராஜேந்திர சிங். “ஓடும் ஆற்றை நடக்கச் செய், நடக்கும் ஆற்றை நிற்கச் செய், நிற்கும் நீரை மண்ணுள் இறக்கு” என்று அவர் சொல்லித் தரும் நீர் சேமிப்பு மந்திரத்தைக் கேட்டபோது, நம்மாழ்வார் நினைவுக்குவந்தார். ஒவ்வொரு கிராமமும் தமது நிலப்பரப்பில் விழும் மழைநீர் வெளியே ஓடிவிடாதவகையில், தமது பகுதியிலேயே சேமித்துப் பாதுகாக்க வேண்டும். நீர் மேலாண்மையில் மரங்களின் பங்கு மிக முக்கியமானது. நீர் ஆவியாகி விடாமல் தடுப்பதுடன், தமது வேர்கள் மூலம் அதை மண்ணுக்குள் இறக்கிப் பத்திரமாகச் சேமித்து மண்ணரிப்பைத் தடுக்கும் அற்புதமான பணிகளைச் செய்கின்றன மரங்கள்.

தேவை வாழ்வு முறை மாற்றம்

ஒரு கிலோ அரிசியை விளைவிக்க 2,000 லிட்டர் தண்ணீர் தேவை. ஒரு கிலோ சர்க்கரைக்கு 3,000 லிட்டர் தண்ணீர் தேவை. ஆனால், இதில் ஐந்தில் ஒரு பங்கு தண்ணீரைக் கொண்டு கம்பு, ராகி, திணை, கீரை, காய் கனிகளை உற்பத்திசெய்துவிட முடியும். நீர் இருப்புக்கேற்ற பயிர் வகைகளைத் திட்டமிட்டுப் பயிரிடக் கற்பது காலத்தின் தேவை. நமது வாழ்வு முறை மாற்றம், உணவு முறை மாற்றம் ஆகியன நமது தண்ணீர்ப் பிரச்சினையுடன் இணைந்தவை என்பதை உணர்த்தும் கல்வி தேவை.

கடைசியாக ஒரு கல்லூரியில் பேசிமுடித்துத் திரும்பிய அவர், அந்தக் கல்லூரி விடுதியின் உணவுக்கூடத்தின் கை கழுவும் குழாயைப் பார்த்தார். அதில் தேவைக்கு மேல் பல மடங்கு தண்ணீர் அதிகமாகக் கொட்டியது. கல்லூரி வளாகம் முழுவதும் அழகு ‘கொரியன் க்ராஸ்’ புல்வெளி களுக்காக ஏகப்பட்ட தண்ணீர் பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்தார்கள். நாம் எப்போது நீர் சிக்கனத்துக்கான பாடத் தைக் கற்கப்போகிறோம் என்று கேட்டார். மெளனத்தைத் தவிர, எங்களிடம் வேறு பதிலேதும் இல்லை!

- வெ.ஜீவானந்தம், மருத்துவர் , சூழலியலாளர்,

தொடர்புக்கு: greenjeeva@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x