மொழிபெயர்ப்பின் கோட்பாடு ஆசிரியரின் கருத்தை நிலைநிறுத்துவதுதான்! - மொழிபெயர்ப்பாளர் ஜனனி கண்ணன் நேர்காணல்

மொழிபெயர்ப்பின் கோட்பாடு ஆசிரியரின் கருத்தை நிலைநிறுத்துவதுதான்! - மொழிபெயர்ப்பாளர் ஜனனி கண்ணன் நேர்காணல்
Updated on
2 min read

எழுத்தாளர் பெருமாள்முருகனின் ‘ஆளண்டாப் பட்சி’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Firebird’, 2023ஆம் ஆண்டுக்கான ஜேசிபி இலக்கிய விருதை (JCB Literary Prize) வென்றது. இந்நாவலின் மொழிபெயர்ப்பாளரான ஜனனி கண்ணன், அமெரிக்காவில் வசிக்கும் கட்டிடக் கலைஞர். பாட்டு, மாரத்தான் ஓட்டம் உள்ளிட்ட ஈடுபாடுகளையும் கொண்டிருக்கும் ஜனனிகண்ணனுடனான உரையாடலின் பகுதிகள்:

மொழிபெயர்ப்பு சார்ந்த ஈடுபாடு உங்களுக்கு எப்படி, எப்போது தோன்றியது? - நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். என்றாலும், கட்டிடக்கலை படிப்பதற்காக குஜராத்தின் அகமதாபாத்தில் தங்கியிருந்த காலகட்டத்தில்தான் தமிழ் மீது எனக்கு ஈடுபாடு அதிகரித்தது; மேற்படிப்புக்காக அமெரிக்காவின் நியூ யார்க் நகருக்குச் சென்றபோது தமிழ் ஆர்வம் தீவிரமடைந்தது. பல நூல்களைப் படித்துவந்ததன் விளைவு, சில சிறுகதைகளை மொழிபெயர்க்கும் அளவுக்குத் தூண்டியது.

இப்படித்தான் மொழிபெயர்க்கத் தொடங்கினேன்.முதலில் என்னுடைய ஆத்ம திருப்திக்காக மொழிபெயர்ப்பில் ஈடுபட்டுவந்தேன். பிறகு, சில நண்பர்கள்-உறவினர்களுக்காக உதவும் வகையில் மொழிபெயர்க்கத் தொடங்கினேன்.

பெருமாள்முருகனின் நூல்களை மொழிபெயர்க்கும் வாய்ப்பு உங்களுக்கு எப்படி வந்தது? அவரது முதல் நாவல் ‘ஏறுவெயில்’ 1991இல் வெளியானது; ‘ஆளண்டாப் பட்சி’ 2012இல் வெளியானது. ஏறக்குறைய 20 ஆண்டுகள் இடைவெளியில் வெளியான இந்த இரண்டு நாவல்களையும் மொழிபெயர்த்த அனுபவங்களைப் பகிர இயலுமா?

பெருமாள்முருகனின் படைப்புகள் சிலவற்றை மொழிபெயர்க்கும் வாய்ப்பு ‘காலச்சுவடு’ பதிப்பாளர் கண்ணன் சுந்தரம் மூலமாகக் கிடைத்தது. நான் மொழிபெயர்த்த பெருமாள்முருகனின் இரண்டு நாவல்களும் காலத்தால் பல ஆண்டுகள் இடைவெளியில் நிகழ்ந்தாலும், அவை இரண்டும் ஆசிரியரின் சுயசரிதையைப் பின்பற்றியதாக உணர்கிறேன்.

முதலில் நான் மொழிபெயர்த்த பெருமாள்முருகனின் படைப்பான ‘ஏறுவெயில்’ மூலக் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நுணுக்கங்கள் குறைவாக அமைந்துள்ளது. இப்போது நான் மொழிபெயர்த்திருக்கும் ‘ஆளண்டாப் பட்சி’, மொழி நன்கு கூடியும் சொற்பிரயோகம் நன்கு அமைக்கப்பட்டும் நுணுக்கங்கள் பல உள்ளதாகவும் அமைந்துள்ளது. இந்த விதத்தில் இரண்டு மொழிபெயர்ப்புகளிலும் வெவ்வேறு சவால்களை எதிர்கொண்டேன்.

மொழிபெயர்ப்பு சார்ந்து என்ன விதமான கொள்கைகள்/ வழிமுறைகளைப் பின்பற்றுகிறீர்கள்?

மொழிபெயர்ப்பில் பல வழிமுறைகள் தேவைப்பட்டன. முதலாவதாக, மனதில் படியும் வகையில் ஒரு புத்தகத்தைப் பல முறை படிப்பேன். கதையும் கதாபாத்திரமும் கதையின் நுணுக்கங்களும் மனதில் நன்கு படிய வேண்டும். இந்த அடிப்படைத் தெளிவு என் புரிதலுக்கு வந்ததா என்று ஆசிரியரைப் பல முறை தொடர்புகொண்டு கேட்டுக்கொள்வேன். இவ்வாறு ஒருமுறை எழுதி முடித்த பிறகு, கதையும் இலக்கணமும் மொழிபெயர்ப்பில் துல்லியமாக அமைவதற்கு என் கணவரிடமும் நண்பர்களிடமும் கலந்தாலோசிப்பேன். ஓரளவுக்குத் திருப்தியடைந்த பின், பதிப்பாளரிடம் எனது அணுகுமுறையை விவாதிக்க முடிவு செய்வேன்.

மொழிபெயர்ப்புச் செயல்பாட்டில் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய விதி என எதைச் சொல்வீர்கள்?

மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பாளரின் கருத்தை முன்வைக்காமல் ஆசிரியரின் கருத்தை நிலைநிறுத்துவது முக்கியமாக இருக்க வேண்டும். மேலும், ஆங்கிலத்தில் படிப்பவர்களுக்கு முரண்பாடு ஏற்படாத வகையில், மொழிபெயர்ப்பு அமைய முயற்சி எடுத்துக்கொள்வேன்.

பாட்டு, மாரத்தான் ஓட்டம் போன்ற பிற ஈடுபாடுகள் மொழிபெயர்ப்புச் செயல்பாட்டுக்கு எப்படிப் பங்களிக்கின்றன?

நான் மாரத்தான் பயிற்சியில் ஈடுபடும்போது, கவனச் சிதறல் இல்லாமல் மனத்தை முற்றிலும் ஒருங்கிணைத்துச் சிந்திக்க நேரம் கிடைக்கும். அப்போது நான் ஏற்றுக்கொள்ளும் மொழிபெயர்ப்புப் பணியை ஆழ்ந்து சிந்திக்கவும் சரியான சொற்றொடர்களைப் பிரயோகிக்கவும் அந்தப் பயிற்சி உதவுகிறது. அதே போல் பாட்டுப் பயிற்சியும் பாடல் கேட்டு அனுபவிப்பதும் எனக்கு மிகவும் விருப்பமான செயல்பாடுகள் என்பதால் மனச்சோர்வு இல்லாமல் மொழிபெயர்ப்பில் ஆக்கபூர்வமாக ஈடுபட முடிகிறது.

- தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in