Published : 05 Jan 2018 05:38 PM
Last Updated : 05 Jan 2018 05:38 PM

2017: மறக்க முடியுமா? - தேசிய நிகழ்வுகள்

ஜனவரி

ஜன. 1: மத்திய அரசின் ‘குரூப்-பி’ பணிகளுக்கான வயது வரம்பு 27-லிருந்து 30 ஆக உயர்த்தப்பட்டது.

ஜன. 2: ஜல்லிக்கட்டைப் பாதுகாக்கவும் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தியும் புதுச்சேரியைச் சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரியான இளம்பெண் மகேஸ்வரி, தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு ‘புல்லட்’ மோட்டார் சைக்கிளில் பயணிக்கத் தொடங்கினார்.

ஜன. 3: மூளைச்சாவு அடைந்த பொறியியல் பட்டதாரி விக்னேஸ்வரனின் உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.

ஜன. 4: சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுவில் தி.மு.க. செயல்தலைவராக மு.க. ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

ஜன. 6: ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி தாக்கல்செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜன. 8: மத்திய அரசின் பணமதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பிறகு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் 28-வது தேசிய மாநாடு சென்னையில் தொடங்கியது.

ஜன. 15:தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உடல்நலக் குறைவால் சண்டி காரில் மரணமடைந்தார்.

ஜன. 24: நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனுக்கான ரூ.665 கோடி வட் டியை மத்திய அரசு தள்ளுபடி செய்தது.

2jpg

ஜன. 28: சென்னை அருகே எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாயின. இதனால், மும்பை கப்பலிலிருந்து 251.46 டன் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. எண்ணூரில் இருந்து திருவான்மியூர் வரை கச்சா எண்ணெய் பரவியது. கடலில் எண்ணெய் கலந்ததால் கடல் நீர் மாசடைந்தது, பல கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன.

ஜன. 31: தென்னிந்தியாவில் முதல் முறையாக லேப்ராஸ்கோபி முறையில் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்து கோயம்புத்தூர் ஜெம் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

பிப்ரவரி

பிப்.1: பவானி ஆற்றில் தடுப்பணை கட்டும் கேரள அரசின் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

பிப். 3: தமிழக அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் பதவி விலகினார்.

எழுத்தாளர் க.சீ.சிவகுமார் 46 வயதில் ஒரு விபத்தில் காலமானார். பத்திரிகையாளராக ஆனந்த விகடன், தினமலர் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

பிப். 9: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 130 பேர் சென்னைக்கு வெளியே கூவத்தூர்சொகுசு விடுதியில் சிறைவைக்கப்பட்டனர்.

பிப். 15: கடந்த ஆண்டு ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அகில இந்திய அளவில் சுகாதாரமான ரயில் நிலையங்களின் பட்டியலில் இந்திய அளவில் 5-வது இடத்தையும் தென்னக ரயில்வே அளவில் முதலிடத்தையும் பெற்ற கும்பகோணம் ரயில் நிலையம் 141-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது.

# ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இஸ்ரோ உலக சாதனை படைத்தது.

பிப். 18: நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அமளியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட தி.மு.க எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் நடந்த வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு 122 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றது.

கோவையில் சென்சார் குப்பைத் தொட்டிகளைத் தொடர்ந்து, சென்சார் கட்டணக் கழிப்பிடங்கள் அமைக்கப்படுகின்றன. இதுபோன்ற தொழில்நுட்பங்கள் மூலம் சுகாதாரப் பணிகள் துல்லியமாக இருக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.

அஞ்சல்துறை சார்பில் தேசிய அளவில் நடைபெற்ற அஞ்சல்தலை ஓவியப் போட்டியில் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவர் முதலிடம் பெற்றார். இந்தியாவின் தேசிய விலங்கான புலி, தேசியப் பறவை மயில், தேசிய மலர் தாமரை ஆகியவற்றை ஒரு சேர இயற்கைச் சூழலோடு காட்சிப்படுத்திய இவரின் ஓவியத்துக்கு முதலிடம் கிடைத்தது.

பிப். 22: சிறந்த தமிழ் படைப்புக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் வண்ணதாசனுக்கு டெல்லியில் வழங்கப்பட்டது.

பிப். 24: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த, எண்ணெய்க் கசிவால் பாதிப்புக்குள்ளான 30,000 மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 வீதம் இடைக்கால நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

மார்ச்

மார்ச் 2: தாமிரபரணி ஆற்றில் பெப்சி, கோகோ கோலா குளிர்பானங்கள் தயாரிப்பதற்காகத் தண்ணீர் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

கும்பகோணம் பள்ளித் தீ விபத்துச் சம்பவத்தில் பலியான மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு இழப்பீட்டுத் தொகை முறையாக வழங்கப்படவில்லை எனக் கூறி, தமிழக அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

2jpg

மார். 13: ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. ஆய்வு மாணவர் ஜே. முத்துகிருஷ்ணன் டெல்லியில் தன் நண்பரின் வீட்டில் சந்தேகத்துக்கிடமான வகையில் மரணமடைந்தார். சேலத்தைச் சேர்ந்த தலித் மாணவரான இவரது மரணம் பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது.

மார்ச் 16: சென்னையில் புதிதாக 3 மெட்ரோ ரயில் தடங்கள் அமைக்கப்படும் எனத் தமிழகப் பட்ஜெட்டில் நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்தார்.

மார்ச் 24: சர்வதேச அளவில் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் உடல் நலக் குறைவால் 85 வயதில் மரணமடைந்தார். தியாகராஜன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் சிறுகதை, நாவல், கட்டுரைகளில் தனித்துவமான சாதனைகளை நிகழ்த்தியவர்.

மார்ச் 31: இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பாகக் கொழும்பில் நடத்தத் திட்டமிடப்பட்ட மீனவர் பேச்சுவார்த்தையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 30 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஏப்ரல்

ஏப். 1 : சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது பெண் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி நியமிக்கப்பட்டார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதி.

ஏப். 4: சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

3jpgright

ஏப். 5: ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு, உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக மதுபானக் கடைகளே இல்லாத சுற்றுலாத் தலம் என்ற சிறப்பைப் பெற்றது.

விருத்தாசலம் தாலுகா தர்மநல்லூரில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய பானை ஓடு கண்டெடுக்கப்பட்டது.

ஏப். 14: தேனி மாவட்டம், மேகமலையில் ‘இம்பேஸியன்ஸ் மேகமலையானா’ என்ற புதிய வகைத் தாவரத்தை காந்திகிராம பல்கலைக்கழகப் பேராசிரியரும் மாணவர்களும் கண்டுபிடித்தனர். இவர்களது கண்டுபிடிப்புக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது.

தமிழகத்தில் 81 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை அறிவித்தது.

ஏப். 18: மருத்துவப் பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரதம், தூங்குதல், தெருக்கூத்து, ரத்தம் சிந்துதல் போன்ற போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் பெண் உதவி ஆய்வாளர்கள் 104 பேருக்கு ஆய்வாளராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

ஏப். 20: தமிழகம் முழுவதும் உள்ள அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை மே 4-ம் தேதிவரை பத்திரப்பதிவு செய்ய மீண்டும் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏப்.27: குணச்சித்திர நடிகர், கதாசிரியர் வினு சக்ரவர்த்தி 74 வயதில் மறைந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் இவர்.

ஏப்ரல் 28: ஒகேனக்கல் அருவி முற்றிலும் வறண்டுள்ளதால் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகச் சிறப்புச் சுற்றுலா பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற விளையாட்டு வீரர் மாரியப்பனின் வாழ்க்கை வரலாறு சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுத் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

திருச்சி மத்திய சிறைக் கைதி எழுதிய ‘மண்ணும், மழை நீரும்’ என்ற நூலுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட 71 லட்சம் குழந்தைகளுக்கான இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

மே

மே 01: இரட்டை இலை சின்னம் பெறுவது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டு டிடிவி தினகரன் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

மே 05: சட்ட விரோதமாகப் பணப் பரிமாற்றம் செய்த வழக்கில் கைதான சேகர் ரெட்டியின் ரூ.33 கோடி சொத்துகளை முடக்க அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்தது.

மே 09: உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

மே 25: தேசத் துரோக வழக்கில் 52 நாட்கள் புழல் சிறையில் இருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

2jpgright

மே 23: இந்தியாவில் பசு, காளை, எருமை, ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்பனை செய்யவும் கொல்லவும் மத்திய அரசு தடைவிதித்தது.

மே 27: புதுக்கவிதை இயக்க முன்னோடியும் பாடலாசிரியருமான நா. காமராசன் 75 வயதில் காலமானார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை சென்றவர் இவர்.

மே 30: இறைச்சிக்காக மாடுகளை விற்கக் கூடாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் செல்வகோமதி இடைக்காலத் தடை உத்தரவு பெற்றார்.

மே 31: சட்டப் பேரவை செயலாளராக க.பூபதி நியமிக்கப்பட்டார்.

ஜூன்

ஜூன் 01: இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்ததாகக் கைது செய்யப்பட்ட டிடிவி தினகரனுக்கும் அவருடைய நண்பர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜூன் 2: வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கவிஞர் அப்துல் ரகுமான் 80 வயதில் காலமானார்.

ஜூன் 03: தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள், ட்விட்டரில் டிரெண்டாகி இந்திய அளவில் முதலிடம் பிடித்தது.

ஜூன் 04: தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜூன் 6: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. செழியன் 95 வயதில் காலமானார். நாவலர் நெடுஞ்செழியனின் சகோதரரான இவர் நெருக்கடி நிலைக்கால அத்துமீறல்கள் பற்றி விசாரித்த ஷா கமிஷனின் அறிக்கையை மீட்டெடுத்து புத்தகமாக வெளியிட்டார்.

ஜூன் 16: தமிழகத்தில் பத்து இடங்களில் அம்மா பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

ஜூன் 20: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தலைமறைவான நீதிபதி கர்ணன் கோவையில் கைதுசெய்யப்பட்டார்.

ஜூன் 26: கீழடி மண்ணைப் பாதுகாக்கவும் இந்தித் திணிப்பை எதிர்க்கவும் ’தமிழர் உரிமை மீட்பு மாநாடு’ சென்னையில் நடைபெற்றது.

ஜூன் 27: தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனையைச் சென்னையில் அனுமதிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் பெற்றது வருமான வரித் துறை சோதனையில் அம்பலமானது.

ஜூலை

ஜூலை 15: சென்னை கொடுங்கையூர் உணவகத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது சிலிண்டர் வெடித்ததில் தீயணைப்பு வீரர் உயிரிழந்தார்.

ஜூலை 18: உடல்நலக் குறைவு காரணமாக சட்டப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதில் இருந்து திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு விலக்கு அளிக்கும் தீர்மானம் சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.

ஜூலை 19: தமிழக எம்.எல்.ஏ.க்களின் மாதச் சம்பளம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.

1jpg

ஜூலை 27: ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் நினைவு மணி மண்டபத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி, மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஜூலை 27: சேலம் மாவட்டம் கச்சராயன்குட்டை ஏரியைப் பார்வையிட சென்ற மு.க.ஸ்டாலினை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஜூலை 29: குட்கா விற்பனைக்கு டிஜிபி லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு தொடர்பாகத் தனி விஜிலென்ஸ் ஆணையரை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.

சட்டவிரோத தொலைபேசி இணைப் பக வழக்குக்காக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் நேரில் ஆஜ ரானார்.

ஜூலை 30: கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் இனி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கைவிடுத்தார்.

3jpgright

ஆகஸ்ட்

ஆக. 10: ‘முரசொலி’ நாளிதழின் பவளவிழா கொண்டாடப்பட்டது. அதையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் காட்சி அரங்கம் திறக்கப்பட்டது.

ஆக. 11: கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட தாளாளர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆக. 15: ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் இளையராஜாவின் உடல் அவரது சொந்த ஊர் சிவகங்கையில் 42 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

ஆக. 21: சென்னை ஆளுநர் மாளிகையில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.

ஆக. 22: 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆக. 24: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளனை 30 நாள் பரோலில் விடுவிக்கத் தமிழக அரசு உத்தரவிட்டது.

ஆக. 27: தமிழகக் காவல் துறையில் இரண்டாவது திருநங்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நஸ்ரியா தேர்வு செய்யப்பட்டார்.

ஆக. 31: தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமிக்கப்பட்டார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே மொட்டமலையைச் சேர்ந்த விக்னேஷ் (19) என்ற கல்லூரி மாணவர் புளூவேல் எனப்படும் நீலத்திமிங்கில ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்துகொண்டார்.

செப்டம்பர்

செப். 2: நாடு முழுவதும் சமையல் காஸ் சிலிண்டர் விலையில் ரூ.7 உயர்த்தப்பட்டது. இதையடுத்து மானிய விலை சிலிண்டரின் விலை ரூ.487.18 ஆக உயர்ந்தது. பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் மண்ணெண்ணெய் விலையும் ஒரு லிட்டருக்கு 25 பைசா உயர்த்தப்பட்டது.

செப். 5: செப்டம்பர் 1 முதல் மோட்டார் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்ற தமிழகக் காவல்துறையின் உத்தரவுக்கு நிரந்தரத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதை அடுத்து செப்டம்பர் 5 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது.

2jpg

# சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இதழியல் மாணவி வளர்மதி மீது சுமத்தப்பட்ட குண்டர் தடுப்புச் சட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். மத்திய அரசின் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராகத் துண்டு பிரசுரம் விநியோகித்ததற்காக குண்டர் சட்டத்தின்கீழ் வழக்கு போட்டு அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

செப். 7: அனிதாவின் தற்கொலைக்குப் பிறகு தமிழகமெங்கும் நீட் எதிர்ப்புப் போராட்டம் வலுத்த நிலையில் விழுப்புரத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை சபரிமாலா நீட் தேர்வை எதிர்த்துத் தனது பணியை ராஜினாமா செய்தார்.

செப். 15: உயர் நீதிமன்றத்தின் எச்சரிக்கையை அடுத்து செப்டம்பர் 7 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் கூட்டு செயல் குழு (ஜாக்டோ ஜியோ) உறுப்பினர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொண்டனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராடிவந்தனர்.

செப். 18: முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் மனு கொடுத்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

செப். 25: முன்னாள் முதல்வர் ஜெ.ஜெய லலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துத் தமிழக முதல் வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

செப். 30: தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். இவர் மேகாலயாவின் ஆளுநராக இருந்தவர். முன்னாள் ஆளுநர் ரோசையா பதவிக் காலம் முடிந்தவுடன் ஓராண்டு காலம் பொறுப்பு ஆளுநராக இருந்துவந்தார் வித்யாசாகர் ராவ்.

அக்டோபர்

அக். 2: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் நாட்டிலேயே மிகத் தூய்மையான கோயிலாக மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு புது டெல்லியில் நடந்த விழாவில் கவுரவிக்கப்பட்டது.

அக். 8: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினி, தன்னுடைய மகளின் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க ஆறு மாதங்கள் பரோலுக்கு விண்ணப்பித்த கோரிக்கையைத் தமிழக அரசு நிராகரித்துவிட்டது.

அக். 9: சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்தார் இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ. ப்ரித்திகா யாஷினி.

அக். 20: திமுக தலைவர் மு.கருணாநிதி கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்துக்கு வந்தார்.

4jpgright

அக். 22: மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், தேசிய நதிநீர் இணைப்புத் திட்டத்தை எதிர்த்து புத்தகம் எழுதியதற்காக மயிலாடுதுறையில் கைது செய்யப்பட்டு தேச துரோக வழக்கின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

அக். 27: அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்குத் தனி இருக்கை அமைக்கத் தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டது.

அக். 30: சாகித்ய அகாதமி விருது பெற்ற சிறுகதை எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி 66 வயதில் உயிர்நீத்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவர் இவர்.

2jpg100

நவம்பர்

நவ. 1: தமிழகத்தின் நியாய விலைக் கடைகளில் விற்கப்படும் சர்க்கரையின் விலை ரூ.25 ஆக உயர்த்தப்பட்டது. இந்த விலையேற்றம் அந்த்யோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டைகளை வைத்திருப்பவர்களுக்குப் பொருந்தாது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் புராதனச் சிறப்பைப் பாதுகாத்தமைக்கான யுனெஸ்கோவின் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது.

நவ. 5: நெல்லை கந்துவட்டி தற்கொலை தொடர்பாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சியர் சந்தீப் நந்துரி ஆகியோரை விமர்சித்து கார்ட்டூன் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலா சென்னையில் கைதுசெய்யப்பட்டார்.

நவ. 6: ‘தினத்தந்தி’ நாளிதழின் பவளவிழா கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்க சென்னைக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதியைச் சந்தித்தார்.

தென்னிந்தியாவின் தொன்மையான தாளவாத்தியமான கடம் உருவாக்குபவரும் சங்கீத நாடக அகாடமி விருது பெற்றவருமான கே. மீனாட்சி 75 வயதில் காலமானார்.

1jpg

நவ. 7: தமிழ் பேராசிரியர் மா. நன்னன் 94 வயதில் காலமானார். பாடநூல் புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதிய இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாக தமிழ் இலக்கணத்தைக் கற்பித்தவர்.

நவ. 8: சென்னை நகரம் அதன் வளம் மிக்க இசைப் பாரம்பரியத்துக்காக யுனெஸ்கோ அமைப்பின் படைப்பாக்க நகரங்கள் தொடரமைப்பில் இடம்பிடித்தது.

நவ. 13: சென்னையைச் சேர்ந்த பொறியாளர் இந்துஜா, காதல் என்ற பெயரில் பின்தொடர்ந்த ஆகாஷ் என்பவரால் தீவைத்துக் கொல்லப்பட்டார்.

நவ. 15: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இரண்டு நாள் பயணமாக கோயம்புத்தூருக்குச் சென்று மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார். மாநில அரசுப் பணிகளை ஆளுநர் ஆய்வு செய்வது மாநில உரிமையை மீறும் செயல் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

நவ. 23: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அணிக்கு ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.

டிசம்பர்

டிச. 1: சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. இதன் மூலம் நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகளைக் கொண்ட உயர் நீதிமன்றம் என்ற புகழைப் பெற்றது.

2jpgright

டிச. 7: பிரபல நகைச்சுவை எழுத்தாளர் ஜ. ரா. சுந்தரேசன் 85 வயதில் மறைந்தார். பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் இவர் எழுதிய நகைச்சுவைக் கதைகளும் அவர் உருவாக்கிய அப்புசாமி, சீதாபாட்டி கதாபாத்திரங்களும் புகழ்பெற்றவை.

டிச. 8: சிறுமி ஹாசினியை எரித்துக் கொன்ற வழக்கில் கைதாகி பிணையில் வெளியேறிய தஷ்வந்த், தன் தாயையும் கொன்றுவிட்டு மும்பைக்குத் தப்பிச் சென்று மீண்டும் பிடிபட்டார்.

டிச. 13: சென்னையில் நகைகளைக் கொள்ளையடித்து தப்பித்த குற்றவாளிகளைப் பிடிக்க ராஜஸ்தானுக்குச் சென்ற மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

டிச. 19: ஒக்கி புயல் பாதிப்பைப் பார்வையிட கன்னியாகுமரிக்கு வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

டிச. 20: உயிருடன் இருப்பவர்களின் ஒளிப்படங்களுடன் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை உள்ளடக்கிய அமர்வு அதை ரத்து செய்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைக்காகத் தங்கியிருந்தபோது, படம்பிடிக்கப்பட்ட 20 விநாடி ஓடும் வீடியோவை வெளியிட்டார் டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்.

டிச. 21: மறைந்த கவிஞர் இன்குலாப்புக்கு அறிவிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை அவருடைய குடும்பம் மறுத்துவிட்டது. அகாடமியின் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான விருது எழுத்தாளர் யூமா வாசுகியின் ‘கசாக்கின் இதிகாசம்’ என்ற நூலுக்காக அறிவிக்கப்பட்டது.

டிச. 27: நெல்லை மாவட்டம் தென்காசியில் நில அதிர்வு உணரப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x