Last Updated : 29 Jan, 2018 10:13 AM

 

Published : 29 Jan 2018 10:13 AM
Last Updated : 29 Jan 2018 10:13 AM

ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்புமா?

ப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சனிக்கிழமை அன்று நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 90-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். நகரின் மையப்பகுதியில் வெடிகுண்டு நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்து, தாலிபான்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். கடந்த வாரம் காபூல் நகர ஹோட்டல் ஒன்றில், துப்பாக்கி ஏந்திய தாலிபான்கள் புகுந்து 14 வெளிநாட்டவர்கள் உட்பட 22 பேரைச் சுட்டுக்கொன்ற சம்பவத்துக்குப் பின்னர் நடந்திருக்கும் கொடூரத் தாக்குதல் இது. ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புச் சூழல் எந்த அளவுக்குச் சீர்கெட்டிருக்கிறது என்பதை இச்சம்பவங்கள் காட்டுகின்றன. சமீபத்தில் சிபிஎஸ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்த ஆப்கன் அதிபர் அஷ்ரஃப் கனி, தன்னுடைய நாடு 21 சர்வதேச பயங்கரவாதக் குழுக்களின் முற்றுகைக்குள்ளாகியிருப்பதாகக் கூறியிருந்தார். அமெரிக்காவின் ஆதரவு மட்டும் இல்லாவிட்டால், தங்களுடைய ராணுவத்தால் பயங்கரவாதிகளை எதிர்க்க முடியாமல் ஆறு மாதங்களுக்குள் ராணுவமே காலியாகிவிடும் என்றும் அரசும் கவிழ்ந்துவிடும் என்றும் மனம்திறந்து கூறினார்.

ஆப்கனில் கடந்த 16 ஆண்டுகளில் இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை 31,000. இப்போது ஆண்டுக்கு 4,000 என்று சராசரியாக உயர்ந்துவருகிறது. ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புப் படை, ஆண்டுக்கு 7,000 பேரை இழக்கிறது. 2001 முதல் 2014 வரையிலான காலத்தில் பன்னாட்டுப் படைகளுக்கு ஏற்பட்ட இழப்பைப் போல இது இரண்டு மடங்கு. அதன் பிறகு, பன்னாட்டுப் படையினர் நேரடியாகப் போரிடுவதை நிறுத்திக்கொண்டு பயிற்சியளிப்பது, ஆலோசனை கூறுவது, உதவிசெய்வது என்று தங்களுடைய நடவடிக்கைகளை மாற்றிக்கொண்டனர்.

அமெரிக்க அரசு ஒரு லட்சம் கோடி டாலர்களைச் செலவிட்டிருக்கிறது. 2,400 வீரர்கள் இறந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் மறு சீரமைப்புக்கு 12,000 கோடி டாலர்கள் செலவுசெய்யப்பட்டிருக்கிறது. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மறு கட்டமைப்புக்குச் செலவுசெய்ததைவிட இது அதிகம். இந்திய அரசு மனிதாபிமான உதவிகளாக 200 கோடி டாலருக்கும் மேல் செலவிட்டிருக்கிறது. அடித்தளக் கட்டமைப்புகளை உருவாக்கவும் மனிதவள ஆற்றலை வளர்க்கவும் உதவியிருக்கிறது. மேலும் 100 கோடி டாலர்களைத் தரவும் ஒப்புக்கொண்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தான் தொடர்பான அமெரிக்கக் கொள்கையை மாற்ற வேண்டுமென அதிபர் டிரம்ப் உறுதியாக இருக்கிறார். மேலும் 4,000 அமெரிக்கத் துருப்புகளை மட்டும் அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளார். பாகிஸ்தானின் செயலைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். ஆப்கானிஸ்தானில் தங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளில் 3,300 கோடி டாலர்களைக் கொடுத்தும் பதிலுக்குத் தங்களுக்கு உதவவில்லை. அமெரிக்கத் தலைவர்களை முட்டாள்கள் என்றே பாகிஸ்தான் நினைக்கிறது. பயங்கரவாதிகள் பத்திரமாகத் தங்கியிருக்கவும் தப்பித்துச் செல்லவும் உதவுகிறது. இனி, அந்நாட்டுக்கு உதவிகள் கிடையாது என்று அறிவித்தார் டிரம்ப்.

சட்டப்படி சரியா?

இப்போதைய ‘தேசிய ஐக்கிய அரசு’ (என்.யு.ஜி.) சட்டபூர்வமானதுதானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதிபராக அஷ்ரஃப் கனியும் தலைமை நிர்வாகியாக அப்துல்லா அப்துல்லாவும் பதவிவகிக்கின்றனர். 2014 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, இந்தக் கூட்டணி ஏற்பட்டது. அந்தத் தேர்தலே முறையாக நடந்ததா என்ற சந்தேகமும் உண்டு. ‘தலைமை நிர்வாகி’ என்ற பதவி, ‘பிரதமர்’ என்று சட்டபூர்வமாக மாற்றப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. இருவருக்கும் இடையிலான பொறுப்புகளும் அதிகாரங்களும் தெளிவாக வரையறுக்கப்படாததால் உறவும் நெருடலாகவே தொடர்கிறது. அடுத்த ஆண்டு அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவிருப்பதால் இந்த சோதனை முயற்சி முடிந்துவிடும் என்று தெரிகிறது.

2015-ல் நடந்திருக்க வேண்டிய நாடாளுமன்றத் தேர்தல் இன்னமும் நடைபெறவில்லை. நிர்வாகத்தை வெளிப்படையாக்கும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை. விரல்ரேகைப் பதிவுடனான வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் திட்டம் காகிதத்திலேயே உள்ளது. ஏழு உறுப்பினர்களைக் கொண்ட சுயேச்சையான தேர்தல் ஆணையம், ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் புகார் ஆணையம் ஆகியவை 2016 நவம்பரில் உருவாக்கப்பட்டன. ஒவேசி ஜிர்கா என்று அழைக்கப்படும் மக்களவை பொதுத் தேர்தல் ஜூலை 7 நடைபெறும் என்று கூறப்பட்டாலும் நடப்பது சந்தேகமே.

தேர்தல் செலவுக்குக்கூட சர்வதேச சமூகம்தான் செலவிடுகிறது என்பதால், 2019 மத்தியில் அதிபர் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் சேர்த்தே நடத்தப்படலாம். நாட்டின் பாதுகாப்பு நிலைமையோ தேர்தல் நடக்குமா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது. தாலிபானின் கட்டுப்பாட்டில் 50 பிரதேசங்கள் உள்ளன. 200-க்கும் மேற்பட்டவை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. 120-ல் யாருக்குச் செல்வாக்கு என்று மோதல்கள் நடக்கின்றன. இப்போதுள்ள நிலையே தொடர்ந்தால், 45% பகுதிகளில் வாக்குப்பதிவுக்கு வாய்ப்பே இல்லை. அமெரிக்கத் துருப்புகள் இருக்கும்வரை தாலிபானால் ராணுவரீதியாக வெற்றிபெற முடியாது. அதே சமயம், அவர்களால் திடீர் திடீரெனத் தாக்க முடியும், அமைதியைக் குலைக்க முடியும், மறு கட்டுமானம் நடைபெறாமல் தடுக்க முடியும், தேர்தல்களையும் நடத்தவிடாமல் செய்ய முடியும்.

தலைக்கட்டுகள் ஆதிக்கம்

பால்க் பிரதேச கவர்னர் அட்டா முகம்மத் நூரின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டுவிட்டதாக அதிபர் கனி கடந்த டிசம்பரில் அறிவித்தார். பதவி விலக மறுத்த அட்டா முகம்மத், புதிய கவர்னர் இன்ஜினீயர் தாவூத் தனது மாகாண எல்லையில் காலடி எடுத்துவைத்தால் கைதுசெய்வேன் என்று எச்சரித்துள்ளார். ஜமாத்-இ-இஸ்லமி என்ற அமைப்பின் செல்வாக்கு மிக்க தலைவரான அட்டா, கடந்த 13 ஆண்டுகளாகப் பதவிவகிக்கிறார். முன்னர் அப்துல்லாவை ஆதரித்த அட்டா, அவரை இப்போது ‘பாம்பு’ என்று வர்ணிக்கிறார். அட்டாவின் கையெழுத்து செல்லாது, அவர் பதவியில் இருந்தால் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் கிடையாது என்று காபூல் அறிவித்தது. பரவாயில்லை, உஸ்பெக் நில எல்லையில் சுங்கம் வசூலித்துக் கொள்கிறேன் என்று பதில் அளித்துவிட்டார் அட்டா. காபூல் அரசு செல்லத்தக்கதல்ல என்று பொதுக்கூட்டங்களில் பேசிவருகிறார் அட்டா.

இதை உஸ்பெக் சமூகத் தலைவரும் ஆப்கானிஸ்தானின் துணை அதிபருமான அப்துல் ரஷீத் தோஸ்தும் ஆதரிக்கிறார். கடந்த மே முதல் அவர் துருக்கி நாட்டில் அரசியல் தஞ்சம் புகுந்திருக்கிறார். கர்ஸாய் அரசில் அமைச்சராக இருந்தவரும் ஹேரட் மாகாண கவர்னருமான இஸ்மயீல் கான், ஈரானுடனான வர்த்தகத்தைத் தன் விருப்பப்படி செய்கிறார். காந்தஹாரில் காவல் துறைத் தலைவர் அப்துல் ரஸிக் 2011 முதல் பதவிவகிக்கிறார். தனக்கு வழங்கப்பட்ட மாற்றல் ஆணையை ஏற்க மறுத்துவிட்டார். காந்தஹாரில் முழு அமைதி நிலவ அவரே காரணம். பலுசிஸ்தானுக்குச் செல்லும் முக்கிய கூட்டுச் சாலையை அவர் பாதுகாக்கிறார். இதில் அவருக்கு விசுவாசமான அசாக்ஜாய் போராளிகள் உதவுகின்றனர்.

தவிர்க்க இயலாதது

கடந்த இரு ஆண்டுகளில் ரஷ்யாவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தாலிபான்களுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்று மறுக்கும் ரஷ்யா, அவர்களுடன் தொடர்பில் இருப்பதை உறுதிசெய்திருக்கிறது. சமாதானப் பேச்சுக்கான இடத்தை ஏற்பாடுசெய்து பேச்சுக்கு உதவுவதாகக் கூறுகிறது.

அங்கு ‘இஸ்லாமிய அரசு’ அமைவது ஆப்கானிஸ்தானுக்கு மட்டுமல்ல.. பிற நாடுகளுக்கும் ஆபத்து என்று சமீபத்தில் டெல்லி வந்திருந்த ரஷ்ய வெளியுறவுத் துறை துணையமைச்சர் இகோர் மோர்குலோவ் கூறியிருக்கிறார். வான் பரப்பு முழுக்க அமெரிக்காவின் கண்காணிப்பில் இருக்கும்போது, ரகசிய ஹெலிகாப்டர்களில் எப்படித் தங்களால் ரஷ்யத் துருப்புகளை அங்கே இறக்க முடியும் என்றும் கேட்கிறார். இதை ஏற்க மறுக்கும் அமெரிக்கா, ரஷ்யாவும் ஈரானும் காபூல் அரசைப் பலவீனப்படுத்த தாலிபான்களுக்கு அங்கீகாரம் அளிக்கின்றன என்று குற்றம்சாட்டுகிறது.

2001-ல் தாலிபான்கள் வீழ்ந்தவுடன் ஆப்கானிஸ்தானை மறு கட்டமைப்பு செய்ய வேண்டும் என்று சர்வதேச அளவில் கருத்தொற்றுமை ஏற்பட்டது. கடந்த 16 ஆண்டுகளில் அந்தக் கருத்தொற்றுமை கரைந்துவிட்டது. நாட்டுக்குப் பெரும் எண்ணிக்கையில் மீண்டும் திரும்பிய ஆப்கானியர்கள், பாதுகாப்பும் நிர்வாகமும் சீர்குலைந்து வருவது கண்டு மனம் வெதும்புகின்றனர். உலக நாடுகளின் நிதியுதவி, ராணுவ உதவி இல்லாமல் ஆப்கன் அரசால் செயல்பட முடியவில்லை. நாடு மீண்டும் பற்றி எரியவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, 2019 முக்கியமான ஆண்டாக இருக்கப்போகிறது.

- ராகேஷ் சூட்,

ஆப்கானிஸ்தானுக்கான தூதராகப் பணியாற்றியவர்.

தமிழில்: சாரி, © ‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x