Published : 08 Jan 2018 12:22 PM
Last Updated : 08 Jan 2018 12:22 PM

தமிழ் நிலைத்து நிற்கும்! - தி இந்து லிட் ஃபார் லைஃப் தமிழ் விருது வழங்கி எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி பேச்சு

‘ “தமிழ் தாத்தா உ.வே.சா. கூறியதுபோல் தமிழ் என்றும் நிலைத்து நிற்கும்” என்று ‘தி இந்து’ லிட் பார் லைப் தமிழ் விருதுகளை வழங்கிய மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி கூறினார்.

‘தி இந்து’ லிட் ஃபார் லைப் தமிழ் முதலாம் ஆண்டு விழா சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. எழுத்தாளர் நா.முத்துசாமி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கிவைத்தார். அவரைத் தொடர்ந்து ‘தி இந்து‘ இயக்குநர் நிர்மலா லக்ஷ்மண், விஜயா அருண், ‘தி இந்து தமிழ்’ ஆசிரியர் கே.அசோகன் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.

ஐந்து விருதுகள்

‘தி இந்து’ லிட் ஃபார் லைப் ‘சமகால சாதனையாளருக்கான ஜெயகாந்தன் விருது’ எழுத்தாளர் இமையத்துக்கும், ‘பெண் படைப்புக் குரலுக்கான பாரதி விருது’ தமயந்திக்கும், ‘விளம்பின் முழக்கத்துக்கான இன்குலாப் விருது’ கீரனூர் ஜாகிர்ராஜாவுக்கும், ‘அபுனைவுக்கான ஏ.கே.செட்டியார் விருது’ ராமாநுஜத்துக்கும், ‘இளம் படைப்பாளருக்கான பிரமிள் விருது’ சயந்தனுக்கும் மாலையில் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி வழங்கினார். ஒவ்வொரு விருதும் தலா ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரத்தைக் கொண்டது.

விருதும் பெயரும் புதுமை

விருதுகளை வழங்கி இந்திரா பார்த்தசாரதி பேசியது:-

தமிழ் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் உண்மையான முயற்சியை ‘தி இந்து’ மேற்கொண்டிருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. அகில இந்திய அளவில் தமிழுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. டெல்லியில் பல காலம் இருந்தவன் என்ற காரணத்தால் அது எனக்கு நன்றாக தெரியும். இந்த விருதை வழங்குவதன் மூலம் தமிழ் மொழியும் தமிழ் இலக்கியமும் தேசிய அளவில் அறியப்படும். இதற்காக இந்து குழுமத்தைப் பாராட்டுகிறேன்.

யாருக்கு விருது வழங்கப்படுகிறது என்பது மட்டுமல்ல, யார் பெயரில் விருது வழங்கப்படுகிறது என்பதும் இதில் புதுமையாக இருக்கிறது. இன்குலாப், பிரமிள் பெயர்களில் விருது அறிவித்திருப்பது சிறப்பு. இலக்கியம் அறிந்தவர்களுக்கே பிரமிளைத் தெரியும். தற்போது அவரை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தியதற்காக ‘தி இந்து’ தமிழ் நாளிதழைப் பாராட்டுகிறேன். அதேபோல் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கும் விருது கொடுத்திருப்பது புதுமையான முயற்சி.

இவ்வாறு தமிழை உயர்த்துவதன் மூலம் நம்மையே உயர்த்திக்கொள்கிறோம். எனவே, உ.வே.சா. கூறியதுபோல் தமிழ் என்றும் நிலைத்து நிற்கும் என்றார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது

‘தி இந்து’ லிட் ஃபார் லைப் தமிழ் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இந்த விருது ரூ. 5 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரத்தைக் கொண்டது. அவருக்கு அடுத்த வாரம் நடைபெறும் ‘தி இந்து’ லிட் பார் லைப் ஆங்கிலம் விழாவில் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக, ‘தி இந்து’ லிட் பார் லைப் தமிழ் குறித்து ‘தி இந்து’ ஆசிரியர் கே.அசோகன் அறிமுகப்படுத்தினார். ‘தி இந்து’ தமிழ் நடுப்பக்க ஒருங்கிணைப்பாளர் ஆசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

விருதுத் தேர்வின் முக்கியத்துவம்

லிட் ஃபார் லைஃப் தமிழ் விருதுத் தேர்வு குறித்து ‘தி இந்து’ தமிழ் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் பேசும்போது, "பத்திரிகை தொடங்கப்பட்ட நாள் முதலாகவே இலக்கிய உலகத்தோடு நெருக்கமான சொந்தத்தை உருவாக்கிக்கொண்ட பத்திரிகை ‘தி இந்து’ தமிழ். தமிழ் படைப்பாளிகளை, ஆளுமைகளை உயரத்தில் வைத்து உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பதை எங்களுடைய அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகவே கருதினோம். இன்றைக்கு இலக்கிய உலகம் தன் சொந்த வீடாகக் கருதும் பத்திரிகை ‘தி இந்து’ தமிழ் நாளிதழ்தான்.

அந்த உறவின் தொடர்ச்சியாகவே இந்த விருதுகளையும் உருவாக்கி இருக்கிறோம். விருதுக்கான தேர்வு தமிழ் இலக்கியத்தின் எல்லா வகைமைகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிப்பதாக அமைய வேண்டும். எல்லா சமூகங்களின் குரல்களும் பிரதிபலிக்க வேண்டும். இதுவரை தம் படைப்புகள்வழி அரசியலை உரக்க பேசுபவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லாத சூழலில், அதையும் மாற்ற வேண்டும் என்று ‘தி இந்து’ ஆசிரியர் குழு கருதியது. இவை எல்லாவற்றையும் பிரதிபலிப்பதாகவே விருதுத் தேர்வு அமைந்திருக்கிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x