Published : 04 Jan 2018 10:12 AM
Last Updated : 04 Jan 2018 10:12 AM

‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ தமிழ் இலக்கிய விழா: இந்த ஞாயிறு… இலக்கிய ஞாயிறு!

‘தி

இந்து லிட் ஃபார் லைஃப்’ நிகழ்வு வரும் ஞாயிறு (07.01.2018) அன்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் நடைபெறுவது குறித்த அறிவிப்பை நேற்றைய ‘தி இந்து’ நாளிதழின் நடுப்பக்கத்தில் வெளியிட்டிருந்தோம் அல்லவா! அதைப் பார்த்துவிட்டு என்னென்ன நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன, எந்தெந்த எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் உரையாற்றுகிறார்கள் என்றெல்லாம் வாசகர்கள் கேட்டு எங்களைத் திக்குமுக்காடச் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக, ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ தமிழ் இலக்கிய விழாவில் இடம்பெறும் அமர்வுகள் குறித்தும், எந்தெந்தத் தலைப்புகளில் எந்தெந்த ஆளுமைகள் உரையாற்றுகிறார்கள் என்பது குறித்தும் இங்கே தகவல்களைத் தருகிறோம்.

இந்த இலக்கிய விழாவின் முதலாம் ஆண்டு நிகழ்வானது தமிழ்ச் சிறுகதையின் நூற்றாண்டைக் கொண்டாடுவதால், தமிழ்ச் சிறுகதைச் சாதனையாளர்களுள் ஒருவர் இந்த நிகழ்வைத் தொடங்கிவைப்பது பொருத்தமாக இருக்கும் அல்லவா! ஆம்! ஜனவரி 7-ம் தேதி, காலை 9.30 மணிக்கு இந்நிகழ்வை சிறுகதைச் சாதனையாளரும் நாடக ஆளுமையுமான ந.முத்துசாமி தொடங்கிவைத்து உரையாற்றவிருக்கிறார். அதைத் தொடர்ந்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியர் கே.அசோகன் இந்த நிகழ்வை அறிமுகப்படுத்தி உரையாற்றுவார்.

காலை 10.00 மணி முதல் 10.55 வரையிலான ‘நூற்றாண்டு தமிழ்ச் சிறுகதைகள்: தருணங்கள், சாதனைகள், எதிர்காலம்’ என்ற முதல் அமர்வில் பிரபஞ்சனும் எஸ்.ராமகிருஷ்ணனும் தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டின் வெவ்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக அலசுகிறார்கள். அடுத்ததாக, காலை 11.00 மணி முதல் 11.45 மணி வரை ‘வெகுசன இதழ்களில் சிறுகதை இலக்கியம்’ என்ற தலைப்பில் பாஸ்கர் சக்தியும் பட்டுக்கோட்டை பிரபாகரும் சுவாரசியமான கோணத்தில் அணுகுகிறார்கள். நண்பகல் 12 மணி முதல் 12.45 வரை ‘தமிழ்ச் சிறுகதைகளின் அரசியல் முகங்கள்: முற்போக்கு இலக்கியமும் திராவிட இயக்க இலக்கியமும்’ என்ற தலைப்பில் நடைபெறும் அமர்வில் பா.செயப்பிரகாசமும் இமையமும் உரையாற்றுகிறார்கள். நண்பகல் 12.50 முதல் 1.35 வரை நடைபெறும் அமர்வில் ‘தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகங்கள்: வட்டார இலக்கியம், விளிம்புநிலையினர் எழுத்துகள்’ என்ற தலைப்பில் சு.வேணுகோபால், அழகிய பெரியவன், களந்தை பீர்முகம்மது ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.

உணவு இடைவேளைக்குப் பிறகு, மதியம் 2.15 முதல் 3 மணி வரை நடைபெறவிருக்கும் அமர்வில் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட குறும்படம் திரையிடப்படுகிறது. திரையிடலைத் தொடங்கி வைத்து இயக்குநர் வெற்றி மாறன் உரையாற்றுகிறார். 3.00 மணி முதல் 3.40 வரை நடைபெறும் அமர்வில் ‘தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் பெண் எழுத்தாளர்கள்’ என்ற தலைப்பில் அ.வெண்ணிலாவும் சந்திராவும் உரையாற்றுகிறார்கள். இந்த அமர்வில் கருத்தாளராக ப்ரசன்னா ராமஸ்வாமி பங்குகொள்கிறார்.

4.00 மணி முதல் 4.45 வரை நடைபெறவிருக்கும் அமர்வு இந்த நிகழ்வின் முக்கியமான ஒரு பகுதி. இந்த ‘லிட் ஃபார் லைஃப்’ தமிழ் இலக்கிய விழாவின் சிறப்பம்சமாக, தமிழ் இலக்கியத்தில் சாதனை புரிந்த 5 படைப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன. இந்த விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கிச் சிறப்பிக்கவிருக்கிறார் மூத்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி. விருது வழங்கும் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் உரையாற்றுகிறார். (விருதுகள் குறித்த விரிவான தகவல்களுக்கு சனிக்கிழமை வரை காத்திருங்கள்!)

‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ தமிழ் இலக்கிய விழாவின் இறுதிப் பகுதியில் முத்தாய்ப்பாக இரண்டு அமர்வுகள் இடம்பெறுகின்றன. மாலை 4.50 மணி முதல் 5.30 மணி வரையிலான அமர்வில் ‘சிறுகதைகளும் தமிழ்த் திரைப்படங்களும்’ என்ற தலைப்பில் இயக்குநர்கள் சசி, சுசீந்திரன் ஆகியோர் சிறுகதைகளைத் திரைப்படமாக்கிய தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். இறுதி நிகழ்வாக 5.35 மணி முதல் 6.15 மணி வரையிலான அமர்வில் ‘தமிழ்ச் சிறுகதைகள் மீது உலக இலக்கியத்தின் தாக்கம்’ என்ற தலைப்பில் சி.மோகனும் ஜி.குப்புசாமியும் உரையாற்றுகிறார்கள்.

வாசகர்களின் கேள்விகளுக்காக ஒவ்வொரு அமர்விலும் நேரம் ஒதுக்கப்பட்டிருப்பது இந்த நிகழ்வின் மற்றுமொரு சிறப்பம்சம்.

உங்கள் வரவேற்பாலும் பங்கேற்பாலும்தான் உயரம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது ‘தி இந்து’ நாளிதழ். ஆகவே, உங்கள் குடும்ப நிகழ்வான இந்த விழாவில் நீங்கள் இல்லாமல் எப்படி! இந்த ஞாயிற்றுக்கிழமை உங்கள் அனைவரையும் ‘தி இந்து லிட் ஃபார் லைஃப்’ தமிழ் இலக்கிய விழாவில் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்!

உங்கள் பங்கேற்பை உறுதிசெய்ய: www.thehindulfl.com என்ற இணையதளத்துக்குச் செல்லவும்!

(நாளை)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x