Published : 10 Jul 2014 10:09 AM
Last Updated : 10 Jul 2014 10:09 AM

தங்கச் சுரங்கத்தின் மீதமர்ந்து முக்காடு போடுவானேன்!

ரயில்வே துறையின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்பதும், உறுதியான நடவடிக்கைகள் மூலமே அதைச் சரிசெய்ய முடியும் என்பதும் ரயில்வே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரே நமக்குத் தெரிந்த விஷயங்கள்தான். இந்த நிலையில், இந்திய ரயில்வேயை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்குத் தேவையான, உறுதியான திட்டங்களும் பார்வையும் புதிய அரசின் நிதிநிலை அறிக்கையில் இருக்கும் என்றுதானே மக்கள் எதிர்பார்ப்பார்கள். இந்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் விதத்தில் இந்த நிதிநிலை அறிக்கை இருக்கிறதா என்ற கேள்விக்கு, ஒரு பெரிய கேள்விக்குறிதான் பதிலாகக் கிடைத்திருக்கிறது. ஆம், ரயில்வே துறைக்கான நிதிநிலை அறிக்கை முழுவதும் வெறும் யோசனைகளும் கொள்கை உருவாக்கங்களுமாகவே காணப்படுகின்றன. சொல்லிக்கொள்ளும்படியான அம்சங்கள் மிகக் குறைவு.

ரயில்வே துறைக்குக் கிடைக்கும் வருவாயில் ரூபாய் ஒன்றுக்கு 94 பைசா செலவழிக்கப்படுகிறது. 6 பைசாதான் மிஞ்சுகிறது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளை முடிக்கவே பெரிய அளவிலான முதலீடுகள் தேவை என்று திணறிக்கொண்டிருக்கும் நிலையில், புதிய திட்டங்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். நிலுவையில் இருக்கும் பணிகளை வரும் பத்தாண்டுகளுக்குள் முடிக்கவே ரயில்வே துறைக்கு ரூ. 5 லட்சம் கோடி தேவைப்படுவதாக ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா குறிப்பிடுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில்தான், நிறைவேற்றுவதற்கு நீண்ட காலம் தேவைப்படும், மும்பை - அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் திட்டத்தைக் கனவுத் திட்டம்போல அறிவிக்கிறார். இந்தத் திட்டத்துக்கு மட்டும் ரூ. 54 ஆயிரம் கோடி தேவைப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பல மூலைகளை ரயில் வசதி இன்னும் சென்றடையாத நிலையில், இவ்வளவு செலவில் புல்லட் ரயில் தேவைதானா என்ற கேள்வியும் முக்கியமானது.

நல்ல விஷயங்கள் என்றால், ரயில் பயணிகளின் வசதி, சுகாதாரம், பாதுகாப்பு போன்றவைகுறித்து இந்த நிதிநிலை அறிக்கை கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கிறது. இணையத்தில் முன்பதிவு செய்யும் வசதியை எளிதாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை. புதிய ரயில்களை அறிமுகப்படுத்தும் வழக்கத்தைப் பின்பற்றி, 5 ஜனசாதாரண ரயில்கள், 6 குளிர்சாதன வசதி கொண்ட ரயில்கள், 27 அதிவிரைவு ரயில்கள், 8 பயணிகள் ரயில்கள் போன்றவற்றை அமைச்சர் அறிவித்துள்ளார். இதில், தமிழ்நாட்டுக்கு 5 ரயில்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது ஏமாற்றமே.

மிக அபாயகரமான அம்சம் என்றால், ரயில்வே துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக, மத்திய அமைச்சரவையின் அனுமதியைக் கேட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்திருப்பது. தங்கச் சுரங்கத்தின் மீது உட்கார்ந்துகொண்டு “யாராவது உதவுவார்களா என்று காத்திருக்கிறோம்” என்று சொல்வதைப் போல இருக்கிறது அமைச்சரின் இந்த அறிவிப்பு. என்ன சொல்ல வருகிறீர்கள்... கொஞ்சம்கொஞ்சமாக ரயில்வேயைத் தனியாருக்குத் தாரைவார்க்கப்போகிறோமோ, அமைச்சரே?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x