Published : 09 Jan 2018 08:50 am

Updated : 09 Jan 2018 09:03 am

 

Published : 09 Jan 2018 08:50 AM
Last Updated : 09 Jan 2018 09:03 AM

இப்படிக்கு இவர்கள்: பெருமிதம் கலந்த பாராட்டு!

பெருமிதம் கலந்த பாராட்டு!


மிழ் இலக்கியப் பரப்பில் ஓர் அற்புதமான தொடக்கத்தை ஜனவரி - 7 நிகழ்வின் மூலம் ‘தி இந்து’ செய்திருக்கிறது. பெருமிதம் கலந்த பாராட்டுதல்கள்! வாசகர் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில், போராடும் பகுதியினரின் அவதியைப் பேசாமல், ஊடகங்களும் மக்கள் அவதியையே முதன்மைப்படுத்துவது குறித்த சுய விமர்சனப் பார்வையோடு பேசிய நடுப்பக்க ஆசிரியர், போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டத்தில் இறங்கிய பிறகுதானே அவர்களது பிரச்சினைகளை, நியாயங்களை மெதுவாக மக்கள் கவனிக்கத் தொடங்குகின்றனர். அப்படியான உரையாடலை ஊடகங்கள் பொதுவாகவே தொடங்க வேண்டாமா என்று எழுப்பிய கேள்வி முக்கியமானது. மேலும், மீனவர் பிரச்சினைகளை நெஞ்சைப் பிழியும் வண்ணம் சுட்டிக்காட்டிப் பேசிய விதமும் அசாத்தியமானது. புதுமைப்பித்தன் முதல் இளைய எழுத்தாளர் வரை அடையாளப்படுத்த வேண்டிய தேவையை பிரபஞ்சன் குறிப்பிட்டதும், வயலின் எப்படி ஒரு மேற்கத்திய இசைக் கருவியாக இருப்பினும் கர்நாடக இசைக்கு ஏற்ற வகையில் இங்கே திறமையாகக் கையாளப்படுகிறதோ, அப்படியே சிறுகதை என்பது வெளியேயிருந்து பெறப்பட்ட இலக்கிய வடிவமாக இருந்தாலும், அது நமது வாழ்க்கையை, அதன் பல அம்சங்களை, பண்பாடுகளைப் பேசும் வண்ணம் எழுதப்படுகிறது என்று எஸ்.ராமகிருஷ்ணன் உருவாக்கப்படுத்தியதும் சிறப்பு. எல்லாவற்றையும்விட, முந்தைய நாளின் நிகழ்வுத் துளிகளை அபாரமான முறையில் ஜனவரி-8 நாளேட்டின் நடுப்பக்கத்தில் கவித்துவமாக வழங்கியிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.

- எஸ்.வி.வேணுகோபாலன், சென்னை.

திசையெட்டும் பரவட்டும் தமிழிலக்கியம்

ன.8-ல் வெளியான ‘தமிழ் இலக்கியத்தைக் கொண்டாடிய நிகழ்வு’ தலையங்கமும், தமிழ் விருது பெற்ற எழுத்தாளர்களின் பகிர்வையும் படித்தேன். சென்னையில் நடந்த இலக்கிய விழாவில் நானும் கலந்துகொண்டேன். எழுத்தாளர்களைச் சந்திக்கவும், அவர்களது பேச்சைக் கேட்கவும், உரையாடவும், புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவும் நல்ல வாய்ப்பாக அமைந்தது. ஒவ்வொருவரின் பேச்சிலும் அவர்களது எழுத்துலக அனுபவம், கடின உழைப்பு, வலி, கனவுகள், ஆசைகள் அனைத்தும் வெளிப்பட்டன. ஒரு எழுத்தாளர், தன்னைச் சுற்றி நடக்கிற நிகழ்வுகளை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. அவற்றைக் கூர்ந்து நோக்கி, அலசி, ஆராய்ந்து தன்னுடைய கருத்துகளையும் விமர்சனங்களையும் பதிவுசெய்கிறார். அதுதான் நல்ல இலக்கியப் பதிவாகவும் மாறுகிறது. சமூக மாற்றத்துக்கான நல்ல அதிர்வுகளையும் உருவாக்குகிறது. அயல் மொழிகளில் உள்ள நல்ல படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதுபோல, தமிழின் சிறந்த படைப்புகளைத் தோ்ந்தெடுத்து, அயல் மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும். அது தமிழ் இலக்கியத்தையும், எழுத்தாளர்களையும் பரந்த உலகத்துக்கு எடுத்துச் செல்லும். இந்தப் பணியையும் ‘தி இந்து’ நாளிதழ் செய்ய வேண்டும்.

- அ.இருதயராஜ், மதுரை.

வெளிச்சம் பாய்ச்சும் கட்டுரை

தே

சிய மருத்துவ ஆணையம் ஏற்படுத்த ஏன் மத்திய அரசு தீவிரமாக உள்ளது என்பது பற்றி ஜி.ஆர். இரவீந்திரநாத் எழுதிய கட்டுரை (ஜன.4 ) வெளிச்சம் பாய்ச்சுவதாக இருந்தது. மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்குவதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்த வேண்டியது முக்கியமாகும். மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரிகளை அதிக எண்ணிக்கையில் திறக்க மத்திய அரசு முன்வர வேண்டும். இவற்றைச் செய்யாமல் மருத்துவ கவுன்சிலுக்கு மாற்று என்ற பெயரில், தனது அதிகாரங்களை அதிகரித்துக்கொள்வதிலேயே குறியாக இருப்பார்களேயானால், அரசியல் சட்டத்தில் உள்ள மத்தியப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் போன்றவற்றுக்கெல்லாம் நாளடைவில் பொருள் இல்லாமல் போய்விடும்.

- நா.புகழேந்தி, பழனி.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x