

சில அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களின் ஐபோன்களில் அரசு சார்ந்த தாக்குதலாளர்கள் ஊடுருவல் நிகழ்த்தியதாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கைத் தகவல் அனுப்பிய நிகழ்வு, இந்திய அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சசி தரூர் (காங்கிரஸ்), மஹுவா மொய்த்ரா (திரிணமூல் காங்கிரஸ்), பிரியங்கா சதுர்வேதி (சிவசேனா) உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரின் ஐபோன்களுக்கு அக்டோபர் 31 அன்று இந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக, அவர்களில் பலர் எக்ஸ் தளத்தில் பதிவுசெய்தனர். ராகுல் காந்தி உள்ளிட்டோர் செய்தியாளர் சந்திப்பில் இது குறித்துப் பேசினர். இந்தியா மட்டுமல்லாமல், 150 நாடுகளைச் சேர்ந்த ஐபோன் பயனாளர்களுக்கு இப்படியான எச்சரிக்கைத் தகவல் அனுப்பப்பட்டது பின்னர் தெரியவந்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அறிவித்துவிட்டது. இது தொடர்பான விசாரணையில் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்திய நிலையில், ஆப்பிள் நிறுவனமும் விசாரணையில் இணைந்திருக்கிறது.
2016ஆம் ஆண்டிலேயே இதேபோல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் ஐபோன்களில் வேவு மென்பொருள் ஊடுருவல் நிகழ்ந்ததாகச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, ஊடுருவலைத் தடுக்கும் வகையிலான உயர் தொழில்நுட்பப் பாதுகாப்பு வசதிகளைப் பயனாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் வழங்கியது. இந்த முறை குறிப்பிட்ட சிலருக்கு இப்படியான எச்சரிக்கைத் தகவல் வந்ததுதான் பேசுபொருளாகியிருக்கிறது.
இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் தயாரிப்பான ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ எனும் வேவு மென்பொருளானது, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள், செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்களின் திறன்பேசிகளில் ஊடுருவியதாக, 2021 ஜூலை மாதம் செய்திகள் வெளியாகின. அரசுகளுக்கு மட்டுமே பெகாசஸ் மென்பொருள் விற்கப்படும் என்றும், அதன் மூலம் ஒருவரின் அன்றாடச் செயல்பாடுகளை முழுமையாகக் கண்காணிக்க முடியும் என்றும் தெரியவந்தது. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தையே முடக்கின.
சர்ச்சைகள் தொடர்ந்த நிலையில், உச்ச நீதிமன்றமே இது குறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்தது. இக்குழு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 29 திறன்பேசிகளில் உளவுச் செயலி இருப்பதற்கான காத்திரமான சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை. அதே வேளையில், இந்தக் குழுவின் பணிகளில் மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என உச்ச நீதிமன்றமே சுட்டிக்காட்டியது. இந்த முறையும் எதிர்க்கட்சிகள் விமர்சனக் குரலை எழுப்ப இதுவும் ஒரு காரணம்.
ஒருவேளை எச்சரிக்கைத் தகவல் வழக்கமான நடைமுறையாகவே அனுப்பப்பட்டிருக்கிறது என்றே வைத்துக்கொண்டாலும், அரசு சார்ந்த நிறுவனம்தான் உளவு வேலையில் ஈடுபடுகிறது என ஆப்பிள் நிறுவனமே கூறியிருக்கும் நிலையில், இதற்கு முறையான பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. தேர்தல் காலம் என்பதால், அரசியல் கட்சிகள் இதை வைத்து ஆதாயம் தேடவே வாய்ப்பு இருக்கிறது. எனவே, இது குறித்து முழுமையாக விசாரிக்க, சுதந்திரமான விசாரணை அமைப்பு அமைக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகளில் அரசு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். எதிர்க்கட்சிகளும் இதுபோன்ற விவகாரங்களை அரசியலாக்குவதற்கு முன்னர், தொழில்நுட்ப ரீதியிலான சர்வதேச நடைமுறைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இப்படிப்பட்ட விவகாரங்கள் அரசு, நீதிமன்றம் ஆகியவற்றின் நேரத்தை வீணடிப்பது முடிவுக்கு வரும்.