Last Updated : 16 Jan, 2018 08:48 AM

 

Published : 16 Jan 2018 08:48 AM
Last Updated : 16 Jan 2018 08:48 AM

நம்பிக்கையை விதைத்த நாடகக்காரன்!

மிழ் நவீன நாடகப் போக்கு இரண்டு புள்ளிகளிலிருந்து தொடங்குவதாக முன்வைக்க முடியும். ஒன்று, காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் பன்ஸி கெளல் நடத்திய நாடகப் பட்டறை. மற்றொன்று, சென்னையில் பாதல் சர்க்கார் நடத்திய நாடகப் பட்டறை. ஞாநி இரண்டாவது போக்கைத் தொடங்கியவர்.

பாதல் சர்க்காரின் நாடகப் பாணி, இங்கு தமிழில் ஒருவித வீதி நாடகமாக உருக்கொண்டது. ஞாநி தொடங்கிய ‘பரீக்ஷா’ அவ்வப்போதைய அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள் குறித்து ஒரு மாற்றுப் பார்வையை அல்லது விமர்சனத்தை முன்வைக்கும் ஒரு வடிவமாக அதனை முன்வைத்தது. எனக்கு ஞாநியோடு தொடர்பு ஏற்பட்டபோது ‘பரீக்ஷா’வின் முதல் கட்டம் முடிவுற்றிருந்தது என்று சொல்லலாம். அவருடன் பங்காற்றிய அனுபவத்திலிருந்து சொல்வதென்றால், ஒரு பத்திரிகையாளராக அவர், அதன் நீட்சியாகவே நாடகத்தைப் பார்த்தார் என்றே நான் புரிந்துகொள்கிறேன். இந்தப் பார்வை எனக்கு ஏற்புடையது அல்ல என்றாலும், அவருடன் இணைந்து பணியாற்றுவதில் எத்தகைய சிக்கல்களும் தோன்றியதில்லை.

ஞாநி எழுதிய ‘பலூன்’ நாடகம் மற்றும் பாதல் சர்க்காரின் நாடகத்தைத் தழுவிய ‘பாலு ஏன் தற்கொலை செய்துகொண்டான்?’ நாடகத்திலும் நடித்த அனுபவம் எனக்கு உண்டு. சில ஆண்டுகளுக்கு முன் நான்கு நாடகக் குழுக்களை இணைத்து ‘கோலம்’ அமைப்பைத் தொடங்கினார். ஒவ்வொரு வாரமும் வியாழனன்று ஒரு வருடத்துக்கு நாடகம் நடத்துவது என்று திட்டத்தை முன்வைத்தார். ‘பரீக்ஷா’, ‘ஆடுகளம்’, ‘ஐக்யா’, ‘யவனிகா’ ஆகியவை நான்கு நாடகக் குழுக்கள். சுழற்சியில் நான்கு வாரங்களுக்கு ஒரு புது நாடகத்தை நிகழ்த்த வேண்டும். ஆனால், முதல் சுற்றுக்குப் பின் ‘பரீக்ஷா’வைத் தவிர பிற மூன்று நாடகக் குழுக்களால் அதில் தொடர்ந்து பங்காற்ற முடியவில்லை. ஆனாலும், ஞாநி திட்டமிட்டதுபோல் ஒரு வருடம் நடத்திக் காட்டினார்.

நாடகம் நடத்துவதில் அவருக்கு இருந்த அக்கறையை, ஆர்வத்தை நாம் ஒதுக்கித் தள்ளவே முடியாது. என்னையும் என்னுடைய ‘ஆடுகளம்’ நாடகக் குழு நண்பர்களையும் அவர் அடையாளம் கண்டு ஊக்குவித்தது அவரது அடிப்படையான பலம். அவரைச் சுற்றியிருந்த இளைஞர்களுக்கு எப்போதும் பெருத்த நம்பிக்கையைக் கொடுத்துக்கொண்டே இருந்தார். அந்த நம்பிக்கையை நாங்களும் பெற்றோம்.

ஒவ்வொரு நிகழ்விலும் ‘நாங்கள் வெல்லுவோம்’ பாடலை ஞாநி பாடுவார். நான் அதைப் பல முறை ரொமான்டிக் சிந்தனை என்று நினைத்தது உண்டு. ஆனால், இந்த நம்பிக்கைதான் ஞாநி. இதைத்தான் அவர் மறைந்த அன்று அவரைச் சூழ்ந்து நின்றிருந்த இளைஞர்கள் கூட்டம் எனக்குச் சொன்ன செய்தியாக இருந்தது.

- எஸ்.ராமாநுஜம், தொடர்புக்கு: manuvibu.ram@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x