Published : 05 Jan 2018 09:31 AM
Last Updated : 05 Jan 2018 09:31 AM

இப்படிக்கு இவர்கள்: இந்திய மருத்துவ முறைகளை அழிக்க நினைக்கிறதா மத்திய அரசு?

இந்திய மருத்துவ முறைகளை அழிக்க நினைக்கிறதா மத்திய அரசு?

னவரி 4-ல் வெளியான ‘மருத்துவ கவுன்சிலுக்கு மாற்று: மத்திய அரசின் நோக்கம் என்ன?’ என்ற கட்டுரையைப் படித்ததுமே மத்திய அரசின் நோக்கம் புரிந்துவிட்டது. சுதந்திர இந்தியாவில் சில ஆண்டுகளாகத் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளின் சில செயல்பாடுகள் மற்றும் அதன் முடிவுகள், பெயரில் மட்டும்தான் இருக்கிறது. ஆனால், தன்னாட்சி அமைப்புகளை ஆட்டுவிக்கும் மந்திரக் கோல் மத்திய அரசின் கையில் இருக்கிறது. ஏற்கெனவே பொதுப்பட்டியலில் உள்ள கல்வியில் மாநில அரசின் செயல்பாடுகள் மீது மத்திய அரசின் தலையீடு இருக்கும்போது, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக மருத்துவ ஆணையத்தைக் கொண்டுவரும் நிலையில், இருக்கும் கொஞ்சநஞ்ச மாநில உரிமைகளும் பறிபோகும் என்பதே உண்மை நிலை.

தற்போது அலோபதியில் இணைப்புப் படிப்பு முடித்த பின், இந்திய மருத்துவ முறையின் அனைத்துப் பிரிவு மருத்துவர்களும் அலோபதி மருத்துவம் பார்க்கலாம் என்ற சட்டத் திருத்தம், இந்திய மருத்துவப் பிரிவு மருத்துவத்துக்கான தனித்தன்மை குறையும். அலோபதி மருத்துவம் மட்டுமே நடைமுறையில் இருக்கும். மற்ற இந்திய மருத்துவ முறைகளை அழிப்பதற்கான ஒரு முயற்சியாகவும் அலோபதி மருத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கும் செயலாகவுமே இது தோன்றுகிறது. மேலும், இதன் பின்னுள்ள மருந்து வணிகமும் நம்மைப் பெரிய அளவில் பயமுறுத்துகிறது. நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட இந்த மசோதாவை எதிர்க்க வேண்டிய பொறுப்பு மருத்துவர்களுக்கு மட்டுமல்ல; ஆயுர்வேதம், யுனானி, யோகா, சித்தா மற்றும் ஓமியோபதி ஆகிய மருத்துவப் பிரிவுகளைக் காப்பாற்ற நினைக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் இருக்கிறது.

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

தேர்தல் படிப்பினைகள்!

ஆர்

.கே.நகர் தேர்தல் படிப்பினைகள், கடந்த காலங்களிலும் ஏற்பட்டவைதான். 1980 நாடாளுமன்றத் தேர்தல், 1986 உள்ளாட்சித் தேர்தல் ஆகிய இரண்டிலுமே எம்.ஜி.ஆர். காலத்திலேயே இரட்டை இலை இருந்தும் அதிமுக தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. 2001 சட்ட மன்றத் தேர்தலில், திமுக அனைத்து சாதிக் கட்சிகளையும் ஒன்றிணைத்துக் களம் கண்டபோதும் அது தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் தொடர்ந்து பிரச்சினைகளைச் சந்திக்கும்போது மதவாத அரசியல், சாதி அரசியல், ஏன் கவர்ச்சி அரசியல்கூடத் தோற்றுப்போகும். இதுதான் வரலாறு. ஆக, காலம் தொடர்ந்து படிப்பினைகளைக் கொடுத்துக் கொண்டேவருகிறது. பாடங்களைக் கற்க வேண்டியது அரசியல் கட்சிகள்தான்.

- சே.செல்வராஜ், தஞ்சாவூர்.

மனதை நெகிழ வைத்தவை

னவரி 4 அன்று சிறப்புப் பக்கத்தில் வெளியான இரண்டு கட்டுரைகளும் மனதை நெகிழ வைத்தவை. முதல் கட்டுரை, மருத்துவர் மாரியப்பன் குறித்தது. தனது மனிதநேய மருத்துவச் சேவையின் மூலம், சிக்கலான 600 அறுவை சிகிச்சையினை அரசு மருத்துவமனையில் செய்து, 97% நோயாளிகளைக் காப்பாற்றிய மருத்துவர் மாரியப்பன். அவர் மருத்துவத் துறைக்குக் கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதம். அடுத்து முருகேஸ்வரி. மயானத்திலேயே தங்கி வாழ்க்கை நடத்தும் சகோதரி முருகேஸ்வரியை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது. பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் சடலங்களை எரியூட்டும் புண்ணிய காரியத்தைச் செய்கிறார் அவர். அவரது பணி பெண்களின் தைரியமான வாழ்க்கைப் போராட்டத்துக்கு ஒரு வழிகாட்டியாய் திகழ்கிறது.

- ஆர்.முருகேசன், அந்தியூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x