Last Updated : 09 Jan, 2018 09:02 AM

 

Published : 09 Jan 2018 09:02 AM
Last Updated : 09 Jan 2018 09:02 AM

இந்தியா – சீனா இடையே இப்போது போர் வராது!- பெர்டில் லின்ட்னர் பேட்டி

சுவீடனைச் சேர்ந்த பத்திரிகையாளரும், ராணுவ உத்தி ஆய்வாளருமான பெர்டில் லின்ட்னர் தனது பணிக்காலத்தின் பெரும் பகுதியை ஆசிய நாடுகளில் செலவழித்தவர். இந்தியா-சீனா இடையிலான எல்லைத் தகராறுகள் குறித்து நிறைய எழுதியிருக்கிறார். ‘சீனாவின் இந்தியப் போர்: உலகின் கூரையில் மோதல் போக்கு’(China’s India War: Collission Course on the Roof of the World) என்ற அவருடைய புத்தகம் சமீபத்தில் வெளியானது. தெற்காசியப் பகுதியில் இந்தியாவுக்கு சீனாவிடமிருந்து வரவிருக்கும் போட்டிகள், 1962-வது ஆண்டு போர், பசிபிக் கடலோர நாடுகளுடன் இந்தியா வலுப்படுத்தி வரும் ராணுவக் கூட்டு ஆகியவை குறித்துப் பதில் அளிக்கிறார். இந்தியா-சீனா போர் மீண்டும் ஏற்படாது என்றும் விளக்குகிறார். சுஹாசினி ஹைதருக்கு அவர் அளித்த பேட்டியின்சுருக்கம்:

1962 போரை இந்தியாதான் தொடர்ந்தது என்ற கருத்தைத் தகர்க்கும் வகையில் புத்தகத் தலைப்பு இருக்கிறது; நெவில் மேக்ஸ்வெல் தனது புத்தகத்துக்கு ‘இந்தியாவின் சீனப் போர்’ என்று தலைப்பிட்டிருந்தாரே?

1962 போர் தொடர்பான புத்தகங்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவது, இந்திய ராணுவ அதிகாரிகளால், போர் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டவை. அவற்றில் புவி அரசியல் பின்னணி இருக்காது. இரண்டாவது வகை, எல்லைப் பிரச்சினை குறித்து அறிஞர்களால் எழுதப்பட்டவை. இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் கலாச்சாரத்தில் இருக்கும் வேறுபாட்டைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியா எதையும் சட்டபூர்வமாக அணுகும். சட்டங்களும் நீதிமன்றங்களும் முக்கியமானவை. சீனாவோ தனக்குப் பிடிக்காத சர்வதேச உடன்பாடுகளைக் கூட, முந்தைய அரசுகள் பலவீனமாக இருந்தபோது தன் மீது திணிக்கப்பட்ட ‘சமத்துவம் இல்லாத உடன்பாடுகள்’ என்று கண்டித்து நிராகரித்துவிடுகிறது. சீனம் வலுவாக இருக்கும் தற்சமயத்திலும் இந்த உடன்பாடுகளை வெறும் காகிதமாகத்தான் பார்க்கிறது.

சமீபத்தில் ஹாங்காங் தொடர்பாக பிரிட்டனுடன் செய்துகொண்ட உடன்பாடு இப்போது வரலாறாகிவிட்டது என்றது. பிலிப்பைன்ஸுக்குத் தென் சீனக் கடலில் உரிமை இருக்கிறது என்று சர்வதேச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நியாயமற்றது என்றது. எல்லை மீதான உரிமை தொடர்பாக இந்தியா வெள்ளை அறிக்கையையும், வரைபடங்களையும், ஆவணச் சான்றுகளையும் திரட்டிக் கொண்டிருந்தபோது, சீனம் போருக்கான ஆயத்தங்களைச் செய்தது.

1959-லேயே சீனா தயாரானதாக உங்களுடைய புத்தகத்தில் தெரிவித்துள்ளீர்கள்?

ஆமாம். மேக்ஸ்வெல் போன்றவர்கள், இந்தியா தனது எல்லை தொடர்பான கொள்கையைத் தயாரித்து சீண்டியது என்று கருதியிருக்கிறார்கள். காரணம், அந்தக் காலத்தில் சீனா ஒரு மர்ம தேசமாக இருந்தது. அரசின் ‘பெரும் பாய்ச்சல் கொள்கை’ காரணமாக பஞ்சம் ஏற்பட்டு, சீனத்தில் கோடிக்கணக்கில் மக்கள் இறந்தனர் என்பதுகூட வெளியுலகுக்குத் தெரியாது. கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அப்போது நெருக்கடி இருந்தது. 1949-ல் மாசேதுங்கின் செல்வாக்கு வெகுவாக மங்கியது. கட்சியையும் நாட்டையும் தனக்குப் பின்னால் அணிதிரள வைக்க வேண்டிய தேவை அவருக்கு இருந்தது. 1959-ல் தலாய் லாமாவுக்கு இந்தியா புகலிடம் கொடுத்ததால், தாக்குவதற்கு ஏற்ற எளிமையான இலக்காக இந்தியா அமைந்துவிட்டது.

மற்றொரு காரணம், ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் புதிதாக விடுதலை அடைந்த நாடுகளின் முக்கியக் குரலாக இந்தியாவின் குரல் ஒலித்தது. ‘அணி சாரா நாடுகள்’ இயக்கத்தை இந்தியா முன்னிலை வகித்துத் தொடங்கியது. ‘பஞ்ச சீலம்’ என்ற கொள்கையை உலகுக்கு அளித்தது. அப்போது மேற்கத்திய உலகு, ‘அமெரிக்கா தலைமையிலான மேற்குக் குழு’ - ‘சோவியத் யூனியன் தலைமையிலான கிழக்குக் குழு’ - ‘வளர்ச்சியடையாத (ஏழை) நாடுகளின் குழு’ என்று உலகை மூன்றாக வகைப்படுத்தின. சீனாவோ உலகைப் பெரும் வல்லரசு நாடுகள், சக்தி குறைந்த நாடுகள், ஏழை நாடுகள் என்று மூன்றாகப் பார்த்தது.

மூன்றாவது உலக நாடுகளின் புரட்சிகரக் குழுக்களுக்குத் தலைமை வகிக்க வேண்டும் என்று சீனா விரும்பியதால், அந்தத் தலைமைப் பதவியிலிருந்து இந்தியாவை அகற்ற விரும்பியது. 1962 போருக்குப் பிறகு உள்நாட்டில் ‘கலாச்சாரப் புரட்சி’யைத் தொடங்கும் அளவுக்கு மாவோ வலுவடைந்தார். மனம் உடைந்த நேரு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மரணத்தைத் தழுவினார். மூன்றாவது உலக நாடுகளுக்கும், ஆசிய நாடுகளுக்கும் பிரதிநிதியாகக் குரல் கொடுக்கும் வாய்ப்பை இந்தப் போரால் நேரு இழந்தார்.

1962 போரை முடிவுக்குக் கொண்டுவந்ததில் சோவியத் ஒன்றியம், அமெரிக்கா ஆகியவற்றின் பங்கைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள்; இந்தியா, சீனா இடையில் போர் மூளும் சூழல் ஏற்பட்டால், இவ்விரு நாடுகளும் இப்போது என்ன நிலையை எடுக்கும்?

முதலாவதாக, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் இப்போது போர் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. வர்த்தகம் முக்கியமானது. ஆசியாவில் இப்போது நாம் பார்ப்பது ‘புதிய பனிப் போர்’. டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா என்ன செய்யும் என்று ஊகிக்க முடியாது. ஆனால், பராக் ஒபாமா ஆட்சியின்போது சீனத்துக்கு மாற்றான மையமாக உருவாக அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. 15-வது நூற்றாண்டுக்குப் பிறகு முதல் முறையாக இந்துமகா சமுத்திரப் பகுதிக்கு சீனா வந்திருக்கிறது. சமீபகாலம் வரை அதனிடம் முறையான கடற்படைகூட இருக்கவில்லை. ‘ஒரே பாதை-ஒரே பிரதேசம்’ என்ற திட்டத்தின் கீழ், பழைய பாதைகளைப் பொருளாதார நடவடிக்கைகளுக்காகப் புதுப்பிப்பதாக அது கூறினாலும், அந்தப் பாதை மிகவும் பழமையானது அல்ல என்பதே உண்மை.

இந்துமகா சமுத்திரத்தை இந்தியா தனக்குச் சொந்தமான ஏரியைப் போலக் கருதுகிறது, அது உண்மையும்கூட. இந்துமகா சமுத்திரத்தில்தான் அமெரிக்காவின் மிக முக்கியமான தளமான டீகோ கார்சியா இருக்கிறது. இந்துமகா சமுத்திரத்தில் 25 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு இன்னமும் பிரெஞ்சு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவேதான் இந்தக் கூட்டணிகள் வளர்கின்றன.

டோக்லாமில் ஏற்பட்ட உரசல் இந்தியாவை அச்சுறுத்தும் திட்டமல்ல, இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தும் திட்டம் என்று எப்படிக் கூறுகிறீர்கள்?

பக்கத்தில் உள்ள நாடுகளில் தூதரக உறவு இல்லாத ஒரே நாடு பூடான் மட்டுமே. எல்லைப் பிரச்சினை தொடர்பான பேச்சுகள் மூலம்தான் 20 ஆண்டுகளாக அவற்றுக்கிடையே உறவு நிலவுகிறது. இந்தியாவின் செல்வாக்குக்குக் கட்டுப்பட்டிருந்த பூடான், இப்போது இறையாண்மை மிக்க நாடாகத் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்புகிறது.

டோக்லாமில் சீனத்துக்கு சாலை ஏன் அவசியம்? ‘ஹா’ பள்ளத்தாக்கிலிருந்து இந்தியத் துருப்புகளை வெளியேற்றவும், பூடானை இந்தப் பூசல் தொடர்பாக நேரடியாகச் சந்திக்கவுமான உத்தி. இது பூடானுக்கு பெருத்த தருமசங்கட நிலையை ஏற்படுத்தியிருக்கும். பூடான் மீது தனக்குள்ள கட்டுப்பாட்டைக் காட்டுவதற்காக இந்தியா, தேவைக்கும் மேல் பரபரப்படைந்துவிட்டதாகக்கூட பூடானியர்களில் பலர் கருத்து தெரிவித்தனர். சீனமோ இப்போது பூடானை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் சில வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறது. சர்க்கஸ் சாகச வீரர்கள், அந்தர் பல்டியடிக்கும் கலைஞர்கள், கால்பந்து அணியினர், சுற்றுலாப் பயணிகள் ஆகியோரை அனுப்புவதுடன் பூடான் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையையும் அறிவித்துள்ளது. பூடான் உட்பட எல்லா பக்கத்து நாடுகள் மீதும் தனக்கு செல்வாக்கு இருக்க வேண்டும் என்று சீனா செயல்படுகிறது.

இந்த விவகாரம் இந்திய-சீன உறவில் எதிர்காலத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும், என்ன மாதிரியான எல்லைப் பிரச்சினைகள் உருவெடுக்கும்?

வெகு விரைவிலேயே இந்துமகா சமுத்திரப் பகுதியில் அதிகாரப் போட்டிகள் தொடங்கிவிடும். இமயமலைப் பகுதியில் இன்னொரு போரை சீனா விரும்பாது. அருணாசல பிரதேசம், தெற்கு திபெத் ஆகியவற்றுக்கு ஈடாக ‘அக்சாய் சின்’ பகுதியைப் பரிமாறிக்கொள்ளலாம் என்று இந்தியாவிடம் சீனா ஏற்கெனவே கூறியிருந்தது. ஏட்டளவில் இது நல்ல பரிமாற்றமாகவே தெரிகிறது. ஆனால், சீனாவுக்கு இதில் உண்மையிலேயே எவ்வளவு அக்கறை என்று நமக்குத் தெரியாது. இப்போதிருக்கும் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டையே நிரந்தர எல்லையாக சீனா ஒப்புக்கொண்டாலும், அந்நாட்டில் பெரிய எதிர்ப்பு ஏற்பட்டுவிடப் போவதில்லை.

ஜனநாயக நாடான இந்தியாவில் அது சாத்தியமில்லை. அரசியல் தற்கொலையாகக்கூட முடிந்துவிடும். எனவே, சீனத்தின் யோசனை பரிசீலனைக்குக்கூட வராது. எல்லைப் பிரச்சினை தீராமலேயே நீடித்தாலும் சீனாவுக்குக் கவலையில்லை. ராணுவரீதியிலான அனுகூல நிலையைத்தான் அது விரும்புகிறது. இந்துமகா சமுத்திரத்தில் யாருக்குச் செல்வாக்கு என்ற போட்டி தொடங்கியிருக்கிறது. ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடனான கூட்டு கடற்படை ஒத்திகை இந்தியாவுக்கு அவசியம். போர்ட் பிளேருக்கு அமெரிக்கக் கடற்படைக் கப்பல் வருகிறது என்று சமீபத்தில் நான் அந்தமான் சென்றபோது கூறினார்கள். கிரிக்கெட் விளையாடவும் உடைந்த கப்பலில் இருப்பவர்களை மீட்பதற்கான ஒத்திகை விளையாட்டுக்காகவும் அவர்கள் அங்கு வரவில்லை.

இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா நான்கும் ராணுவக் கூட்டாக உருவாகும் வாய்ப்பு இருக்கிறதா?

அப்படித்தான் நினைக்கிறேன். இது தவிர்க்க முடியாதது. யாரும் இப்போது அது குறித்துப் பேசத் தயாரில்லை. ஆனால் அது வந்தே தீரும். சீனத்தின் வளர்ச்சியைப் பொருத்தது அது. பொருளாதார சக்தியுடன் அரசியல் சக்தியும் ராணுவ சக்தியும் ஏற்படும் என்பதால் அவரவர் நலனைப் பாதுகாத்தாக வேண்டும்.

உங்களுடைய முந்தைய புத்தகத்தில் இந்தியத் துணைக் கண்டத்தில் மியான்மர் தொடங்கி மாலத்தீவுகள் வரையில் சீனா எப்படித் தனது ஆதிக்கத்தை வளர்த்துவருகிறது என்று எழுதியிருந்தீர்கள். மாலத்தீவு சீனத்துடன் தடையில்லா வர்த்தக உடன்படிக்கை செய்துகொண்டுள்ளது, எல்லா துறைகளிலும் அத்துடன் நெருங்குகிறது. சீனத்தின் பணபலத்தால் கிடைக்கும் செல்வாக்கை இந்தியாவால் எப்படி எதிர்கொள்ள முடியும்?

இதுவரையில் இந்தியா எல்லாவற்றையும் பார்வையாளரைப் போலத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறது. செஷல்ஸிலும் அதேதான் நடக்கிறது. ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட அந்நாட்டின் மீது, சீனா அதிக அக்கறை எடுத்துக் கொண்டுள்ளது. மியான்மருடன் உள்ள கிழக்கு எல்லை இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது.

ஆனால், இந்தியாவின் கவனம் முழுக்க பாகிஸ்தானுடனான எல்லையைப் பற்றியே இருக்கிறது. மியான்மர்தான் சீனத்துக்கு இந்துமகா சமுத்திரத்தை அடையும் தாழ்வாரமாக இருக்கிறது. இதை முறியடிக்க மியான்மர் உறவுக்கு இந்தியா முக்கியத்துவம் தர வேண்டும்.

ஒரே பாதை-ஒரே பிரதேசத்துக்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவிப்பது பலன் தருமா அல்லது வீணாகுமா?

இந்தியா தன்னுடைய எதிர்ப்பை இன்னும் முன்னதாக, விளக்கமாகக் கூறியிருக்க வேண்டும். பெரும்பாலான உலக நாடுகளுக்கு இந்தியாவின் எதிர்ப்பு ஏன் என்று புரியவில்லை.

சீனா-பாகிஸ்தான் பொருளாதார பிரதேசத்தால் (சி.பி.இ.சி.) இந்தப் பிராந்தியத்தின் அரசியல் மாறுமா?

இதுவரை அது வெற்றிகரமாக அமைந்துவிடவில்லை. பாகிஸ்தான் அரசியல்ரீதியாக நிலையான நாடு அல்ல. சீனா மேலும் மேலும் அதன் உள்விவகாரங்களுக்கேற்பச் செயல்பட வேண்டியிருக்கும். சீனப் பொருளாதார மையங்களுக்கு அப்பாலிருக்கும் ஜின்ஜியாங்குடன் சிபிஇசிக்கு தொடர்பு இருக்கிறது.

சீனத்தின் கிழக்குப் பகுதி துறைமுகங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுடன் மியான்மர் இணைக்கப்பட்டிருப்பதைப் போல. மியான்மரின் ரக்கைன் மாகாணத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பிரச்சினை இருப்பதால், மலாக்கா நீரிணையைத் தவிர்க்க மூன்றாவது வழியாக இந்துமகா சமுத்திரத்தை அடைய வழி தேடுகிறது சீனம். கிரா வாய்க்காலைக்கூடப் பயன்படுத்த சீனா உத்தேசிக்கிறது. (கிரா வாய்க்கால் என்பது தாய்லாந்து வளைகுடாவில் தொடங்கி அந்தமான் கடலில் முடிகிறது) சீனாவைப் பொறுத்தவரை லட்சியத்தை அடைவதுதான் முக்கியமே தவிர, அடைவதற்கான வழி முக்கியமல்ல.

மியான்மரை சீனா தனது கட்டுக்குள் கொண்டுவருவது தவிர்க்க முடியாதது என்று தோன்றுகிறது; இதில் இந்தியா செய்வதற்கு ஏதும் இருக்கிறதா?

சீனத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவுக்கு மியான்மருடன் மூன்று எல்லைப் பிரச்சினைகள் இருக்கின்றன. முதலாவது, அடித்தளக் கட்டமைப்பு. மியான்மருக்கு வடக்கு எல்லையில், சீனா உயர்தர நெடுஞ்சாலைகளையும் எல்லைக்கு வெகு அருகிலேயே விமான நிலையத்தையும் கொண்டிருக்கிறது. குன்மிங் மிகப் பெரிய சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தியத் தரப்பில் சாலை உள்ளிட்ட அடித்தள வசதிகள் பெரிய பிரச்சினையாகவே தொடர்கின்றன. பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததைவிடப் பரவாயில்லை.

மற்றொரு பிரச்சினை, அதிகார வர்க்கத்தின் சிவப்பு நாடா தடை. இந்திய முதலாளிகளை விட, சீன கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவத்தைக் கையாள்வதில் தேர்ச்சி உள்ளது. ஜனநாயக நாடாக இருந்தாலும், இந்தியப் பகுதிகளில் பல வர்த்தகத் தடைகள், பல சோதனைச் சாவடிகள். தனித்தனிச் சாவடிகளாக இல்லாமல் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை இப்போது திட்டமிடுவது உதவிகரமாக இருக்கும்.

மூன்றாவது பிரச்சினை, இந்திய எல்லைக்குள்ளிருந்து செயல்படும் தீவிரவாதிகளால் ஏற்படுவது. நினைத்த நேரத்தில் வெளிப்பட்டுத் தாக்கிப் பணம் பறிக்கின்றனர். அவர்களை அடக்க வேண்டும். இந்தியாவுடன் வியாபாரம் செய்யத்தான் மியான்மருக்கு விருப்பம். சீனத்தையே நம்பியிருப்பது நல்லதல்ல என்ற கவலை அந்நாட்டு ராணுவத்துக்கும் இருக்கிறது!

தமிழில்: சாரி,

© ‘தி இந்து’ ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x