Last Updated : 21 Jan, 2018 10:50 AM

 

Published : 21 Jan 2018 10:50 AM
Last Updated : 21 Jan 2018 10:50 AM

அதிகார மையத்தின் டிஜிட்டல் அடியாட்கள்!சுவாதி சதுர்வேதி பேட்டி

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துகளுக்குத் தூற்றுதல், பாலியல் சீண்டல், பாலியல் அச்சுறுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட எதிர்வினைகளைப் பார்த்திருப்போம். இப்படிப்பட்ட அநாகரிக வார்த்தைகளைப் பயன்படுத்துபவர்கள் யாரோ சில தனிமனிதர்களே என நினைத்திருப்போம். ஆனால், இத்தகைய இணைய வம்புகளை (டிராலிங்) குறிப்பிட்ட முறையில், குறிவைத்துச் செயல்படுத்த ஆயிரக்கணக்கானோர் முழு நேர வேலையில் பணி அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இந்தப் போக்குக்குப் பின்னால் மிகப் பெரிய அரசியல் சதி உள்ளதைப் பெரிய அளவில் அம்பலப்படுத்தியவர், டெல்லியைச் சேர்ந்த மூத்த புலனாய்வுப் பத்திரிகையாளர் சுவாதி சதுர்வேதி.

தன் மீது தொடுக்கப்பட்ட மிக மோசமான இணைய வசவுகள் குறித்து போலீஸில் புகார் அளித்தும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாதபட்சத்தில், தானே அவற்றின் ஊற்றுக்கண்ணைப் புலனாய்வுசெய்யத் தொடங்கிய சுவாதி, இரண்டு ஆண்டுகளாகத் தான் கண்டறிந்த உண்மைகளைத் தொகுத்து, ‘ஐ ஆம் எ டிரால்’ என்கிற புத்தகமாக வெளியிட்டார். ‘தி இந்து’வின் ‘லிட் ஃபார் லைஃப்’ இலக்கிய விழாவுக்கு வந்திருந்த அவருடன் பேசினேன்:

இணைய வம்புகள் செய்யத் தனி டிஜிட்டல் பிரிவு நியமிக்கப்பட்டிருப்பதை எப்போது உணர்ந்தீர்கள்?

பாஜகவின் மதவாத அரசியலை விமர்சித்து எழுதியதை அடுத்து, நான் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேலாக ‘டிராலிங்’ செய்யப்பட்டேன். ‘நான் ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளர்’ எனச் சொல்லிக்கொள்வதில் பெருமிதம்கொள்ளும் என்னை, ‘சிக்கியூலர் பிரஸ்டிடியூட்’ என்று பாஜகவின் மத்திய அமைச்சரே தூற்றினார். என்னுடைய நடத்தையைப் பற்றி பல அவதூறுகள் பரப்பப்பட்டன. இதழாளராகச் சமூக வலைதளங்களைப் பின்தொடர வேண்டியது எனக்கு அத்தியாவசியம். அப்படித்தான் என்னைப் போலவே பாஜகவின் அரசியலை எதிர்த்தவர்களில் பலர் டிராலிங் செய்யப்படுவது கவனத்துக்குவந்தது.

கேள்வி கேட்பவர் ஆணாக இருக்கும்பட்சத்தில் ஊழல் பழி போடுவதும், பெண் என்றால் நடத்தை மீது பழிகூறுவதும் தொடர்ந்து நடக்கிறது. எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கை, வேலை என்றிருக்கும்போது, கோபத்தையும் வெறுப்பையும் எந்நேரமும் இணையத்தில் கக்க எப்படிச் சிலரால் மட்டும் முடிகிறது என்கிற கேள்வி எழுந்தது. அதற்கான விடை காணும் முயற்சியில் இறங்கினேன். எனக்குத் தெரிந்ததெல்லாம் புலன் விசாரணை மட்டும்தான். இப்படியாக அருவருப்பானவற்றைக் கிளறியது இறுதியாக, ‘ஐ ஆம் ஏ டிரால்’ புத்தகத்தில் முடிந்தது.

உங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் புது டெல்லி அசோகா சாலையில் உள்ள பாஜக சமூக ஊடகப் பிரிவுக்கு நேரடியாகச் சென்றீர்களா? அடையாளம் தெரியாத நபர்கள் இணையத்தில் செய்யும் அத்துமீறலை எப்படிக் கையும் களவுமாகப் பிடித்தீர்கள்?

பத்திரிகையாளர் என்கிறரீதியில் பாஜக தலைவர்களைச் சந்திக்கவும் பத்திரிகையாளர் சந்திப்புக்காகவும் பல தடவை பாஜக இணையப் பிரிவு அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறேன். அதன் மூலம் 30-க்கும் மேற்பட்ட பாஜக சமூக ஊடகத் தன்னார்வலர்களை நேரில் சந்தித்தேன். டிராலிங் செய்பவர்களில் சிலர் அதன் ரகசியத்தைச் சொன்னார்கள். குறிப்பாக, சாத்வி கோசலா என்கிற பெண் அர்ப்பணிப்போடு பாஜகவின் ஐ.டி. பிரிவில் இணைந்தவர்களில் ஒருவர். பின்னர், அங்கு நிகழ்த்தப்படும் டிஜிட்டல் அராஜகங்களால் மனமுடைந்து அதிலிருந்து விலகியவர். அவருடைய வாக்குமூலம்தான் டிரால்களுக்கும் பாஜகவுக்கும் இடையிலான தொடர்பை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது.

சாத்வி கோசலா எப்படித் தைரியமாகப் போட்டு உடைத்தார்?

தனக்கு ஏற்பட்ட குற்ற உணர்ச்சியினால்தான் உண்மையை வெளிப்படுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரரான சுரேந்தர்நாத் கோசலாவின் பேத்தி அவர். எம்.பி.ஏ. படித்த தொழில்முனைவர் கோசலா, மோடியின் ஊழலற்ற அரசியல் கொள்கை, வளர்ச்சித் திட்டம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டு பாஜகவின் டிஜிட்டல் பிரிவில் சம்பளம் வாங்காமல் தன்னார்வத்தோடு இணைந்தார்.

ஆனால், தான் அமெரிக்காவில் வசித்த காலத்திலிருந்து இ-மெயில் வழியாக காங்கிரஸ் குறித்த அவதூறு கருத்துகளை அனுப்பி, பாஜக தன்னை மூளைச்சலவை செய்ததை அறிந்தபோது அதிர்ச்சி அடைந்தார். அன்று தனக்கு அனுப்பப்பட்ட செய்திகளை இன்று தானே மற்றவர்களுக்கு அனுப்பும்படி நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதைக் கண்டு, பாஜக டிஜிட்டல் பிரிவிலிருந்து விலகினார்.

இப்படியான அதிர்ச்சியூட்டும் ரகசியங்களை வெளிக்கொணரும் அபாயம் நிறைந்த புலனாய்வுப் பத்திரிகைத் துறையை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்? பெண் என்பதால் கூடுதல் அபாயம் இல்லையா?

சிறு பிராயத்திலிருந்தே புலனாய்வுப் பத்திரிகையாளராகும் கனவோடுதான் வளர்ந்தேன். வேறெதுவாகவும் ஆக விரும்பவில்லை. ஆணோ, பெண்ணோ அதிகாரத்தில் இருக்கும் நபர்களை எதிர்த்தால் மிரட்டப்படுவீர்கள். அது பாலினம் கடந்த ஒன்று.

அப்படியானால், இணைய வம்பில் பாலியல்ரீதியாகச் சீண்டப்பட்டபோது நீங்கள் பயப்படவில்லையா?

அச்சம் என்பதைக் காட்டிலும் நான் இத்தனை ஆண்டுகளாக நேர்மையாகச் செயல்பட்டுச் சம்பாதித்த பெயரை இழிவுபடுத்துவதாகத்தான் எனக்குத் தோன்றியது. அவதூறுகளை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் போலீஸில் புகார் அளித்தேன். அதனால் எந்தப் பயனும் இல்லாததால் நானே புலனாய்வில் இறங்கினேன்.

அதிகாரத்துக்கு முன்னால் நிமிர்ந்து நின்று உண்மையை உரைப்பதுதான் இதழியல். உண்மையைப் பேசத் திராணி இல்லாதவர்கள் பத்திரிகையாளராக இருக்கக் கூடாது என்றே நினைக்கிறேன்.

நீங்கள் அம்பலப்படுத்திய சம்பவங்களில் முக்கியமானது எது என்று நினைக்கிறீர்கள்?

இருபது ஆண்டுகளுக்கு முன்னால், ‘தி ஸ்டேட்ஸ்மேன்’ நாளிதழில் நிருபராக இருந்தபோது, டெல்லியில் லஞ்சம் தந்தால் யார் வேண்டுமானாலும் போலி பிறப்புச் சான்றிதழ் வாங்கிவிடலாம் என்பதை, எனக்காக பிறப்புச் சான்றிதழ் விலை கொடுத்து வாங்கி நிரூபித்தேன். ‘Born again for Rs. 1,200’ என்று அதற்குத் தலைப்பிட்டேன். இப்படித்தான் தொடங்கியது வாழ்க்கை. அடுத்து, போலி என்கவுண்ட்டர் கொலைகள், தேசியப் பாதுகாப்பு தொடர்பான பல ரகசியங்களை அம்பலப்படுத்தியிருந்தாலும், இதுவே முக்கியமானது என்று நினைக்கிறேன்.

ஆனால், இதுவரை இல்லாத அளவுக்குக் கடந்த நான்கு ஆண்டுகளாகக் கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுவதை உணர்கிறேன். இன்றைய சூழலில், ஊடகவியலாளர்களின் செயல்பாட்டை அரசு சகித்துக்கொள்வதே இல்லை என்பது கவலைப்படுத்துகிறது.

உங்களுடைய புத்தகத்தின் இரண்டாம் அத்தியாயமான, ‘Blessed to be Followed by PM Modi’ துணிச்சலானது!

பிரதமர் மோடியை 2 கோடிக்கும் அதிகமானோர் டிவிட்டரில் பின்தொடர்கிறார்கள். மோடி 1,300-க்கும் மேற்பட்டோரைப் பின்தொடர்கிறார். இதில், இணையத்தில் மிரட்டல் விடுக்கும் வலதுசாரிகள் நூற்றுக்கணக்கானோரும் அடக்கம்.

டிராலிங் செய்வதாகப் பல குற்றச்சாட்டுகள் முன்வைத்தும் இதுவரை அவர்களில் ஒருவரையும் பிரதமர் மோடி ‘அன்ஃபாலோ’ செய்யவில்லை. அவ்வளவு ஏன், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தவர்களை, மிக அருவருப்பான வார்த்தைகளால் டிராலிங் செய்தவரைக்கூட இதுவரை மோடி அன்ஃபாலோ செய்யவில்லை. உலகின் எந்த தேசத்திலும் தன்னுடைய மக்களைத் துன்புறுத்துபவர்களை டிவிட்டரில் இவ்வளவு பகிரங்கமாக ஆதரிக்கும் பிரதமரை நான் கண்டதில்லை என்பேன்!

- ம.சுசித்ரா,

தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x