Last Updated : 22 Jan, 2018 10:39 AM

 

Published : 22 Jan 2018 10:39 AM
Last Updated : 22 Jan 2018 10:39 AM

சிந்திக்கவைக்கும் சித்திரக் கதைகள்

சித்திரக் கதைகள் பார்க்கவும் படிக்கவும் மட்டுமல்ல, சிந்தனைக்கும் ஏற்றவை. வரலாற்றையும் தத்துவங்களையும் எளிமையாகப் புரிந்துகொள்வதற்கு சித்திரக் கதைகள் உதவுகின்றன. இந்த ஆண்டு சென்னைப் புத்தகக் காட்சியில், வாங்க வேண்டிய சித்திரக்கதைப் புத்தகங்களாகப் பின்வருவனவற்றைச் சொல்லலாம்.

1. இயந்திரத் தலை மனிதர்கள் - முல்லை தங்கராசன் - முத்து காமிக்ஸ்

. தமிழ் காமிக்ஸ் உலகின் தலைமகன் முல்லை தங்கராசனின் கை வண்ணத்தில், மூத்த பத்திரிகையாளர் காமராஜின் மொழிபெயர்ப்பில், சௌந்தரபாண்டியன் உருவாக்கிய முத்து காமிக்ஸ் இதழின் மறுபதிப்பு இது. இரும்புக் கை மாயாவியின் சாகசங்கள் மறுபதிப்பு செய்யும்போது, கொஞ்சம் கிளாசிக் தன்மையை இழந்திருந்தாலும் பழைய வாசகர்களின் பாலைவனச் சொர்க்கம் அதுதான்.

 

2. ஜென் வெளிச்சம் - பூ சுன் ஜியாங் - கண்ணதாசன் பதிப்பகம்

அன்றாட வாழ்க்கையில் பயன்படும் பல ஜென் தத்துவங்களை, எளிமையாகப் புரியும்படி காமிக்ஸ் வடிவில், தெளிவான மொழிநடையில், சரியாக மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட புத்தகம் இது. தத்துவங்கள் என்றில்லாமல், கதையாகப் படித்தாலும், ஒரு அழகான சிறுகதைத் தொகுப்பாக இருக்கும். அனைத்துக் கதைகளுமே ஓரிரண்டு பக்கங்களில் இருப்பதால், வாசிக்க எளிமையாக இருக்கிறது.

3. அமெரிக்கப் பேரரசின் மக்கள் வரலாறு - பயணி பதிப்பகம்

அமெரிக்க அரசாங்கத்தின் இரட்டை வேடத்தையும், அரசாங்கத்துக்கான எதிர்ப்பு, எப்படி நாட்டுக்குள்ளிருந்தும், வெளியிலிருந்தும் கிளம்புகிறது என்பதைத் துல்லியமான அரசியல் பார்வையோடு சொன்ன கிராஃபிக் நாவல் இது. ‘வூண்டட் நீ’ சம்பவம் என்ற செவ்விந்தியப் பழங்குடியினரை அமெரிக்க ராணுவம் அழித்ததை விவரிக்கும் காட்சிகள் இதன் சிறப்பு. போருக்கு எதிரான ஒரு கிராபிஃக் நாவல்.

 

 

 

4. ஈரான் (குழந்தைப் பருவத்தின் கதை & திரும்பும் காலம்) 2 புத்தகங்கள் - விடியல் பதிப்பகம்

உலகப் புகழ்பெற்ற படைப்பாளி யான மர்ஜானே சத்ரபியின் கிராஃபிக் நாவல்களான இந்த இரண்டுமே திரைப்படங்களாகவும் வந்துள்ளன. மொழிபெயர்ப்பில் ஓரிரு இடர்கள் இருந்தாலும், ஒட்டுமொத்தமான கலைப் படைப்பு என்ற பார்வையில், தமிழில் நீங்கா இடம்பிடிக்கும் புத்தகங்கள் இவை.

5. புலி வளர்த்த பிள்ளை - வாண்டுமாமா - கங்கை புத்தக நிலையம்

தமிழ் சிறுவர் இலக்கியத்தின் ‘சூப்பர் ஸ்டா’ரான வாண்டுமாமாவின் அமரத்துவம் வாய்ந்த படைப்பு இது. முதலிரண்டு பாகங்கள் சிறுவர் இலக்கியப் பாணியிலும் மூன்றாம் பாகம் ஓவியச் சக்ரவர்த்தி செல்லத்தின் அட்டகாசமான ஓவியங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, ராஜா காலத்துக் கதையையும், தற்காலத்தையும் ஒரு மந்திரப் புள்ளியில் இணைக்கும் அற்புதமான படைப்பு இது.

 

6. கிமுவில் சோமு - சிம்புதேவன் - நர்மதா புத்தக நிலையம்

இம்சை அரசன் படத்தை இயக்குவதற்கு முன்பாக, சிம்புதேவன் ஒரு கைதேர்ந்த ஓவியராக, படைப்பாளி யாக இருந்தபோது உருவாக்கிய ஒரு காமிக்ஸ் தொடர் இது. அறிவியல், சாகசம், வேடிக்கை, விளையாட்டு என்று ஒரு அற்புதமான படைப்பாக அமைந்தது. கதை சொல்ல விரும்புபவர்களுக்கு ஏற்ற துணைவன்.

 

7. திரும்பி வரவில்லை - தமிழ்வாணன் - மணிமேகலைப் பிரசுரம்

ஒரிஜினலாக முதன்முதலில் வந்த காமிக்ஸ் கதையின் மூலம் எதுவும் கிடைக்காமல் போக, மறுபடியும் ஓவியர் ராமுவால் வரையப்பட்ட காமிக்ஸ் கதை இது. தமிழ்வாணனின் அட்டகாசமான கதை நகர்த்தலுக்கு மிகச்சிறந்த உதாரணமாக இதைச் சொல்லலாம். ஒரு குறுநாவலை அழகாக சித்திரங்களால் நிரப்பியிருக்கிறார் ஓவியர் ராமு.

 

8. சே வாழ்க்கை வரலாறு - படக்கதை வடிவில் - பயணி பதிப்பகம்

‘அண்டர்கிரவுண்ட் காமிக்ஸ்’ படைப்பாளிகளில் ஒருவரான ஸ்பெய்ன் ராட்ரீகஸின் கிராஃபிக் நாவல் இது. ஆஸ்துமாவால் அவதிப்படும் மருத்துவ மாணவராக இருந்து, உலகமே வியக்கும் ஒரு போராளி யாக மாறிய சே குவேராவின் அந்தப் பயணத்தை மிகவும் தீர்க்கமாகச் சொல்லும் படைப்பு இது.

9. மர்ம மாளிகையில் பலே பாலு - வாண்டுமாமா - திருவரசு புத்தக நிலையம்

தமிழ் சிறுவர் இலக்கியத்தின் மாமேதையான வாண்டுமாமாவின் அதியற்புத திரட்டு இது. அவரது ஆரம்ப காலப் படைப்பு (1957) முதல் அவரது படைப்புலகப் பயணத்தின் இறுதிக் கட்டம் வரையிலான 10 சிறந்த படைப்புகளைக் கொண்ட இந்தப் புத்தகத்தில் 7 படக்கதைகள் இருக்கின்றன. தமிழ் காமிக்ஸ் உலகின் ஓவியச் சக்ரவர்த்தி செல்லம் வரைந்த காமிக்ஸ் கதைகளும் இதில் உண்டு.

10. கன்ஃபூஷியஸின் கருத்துப் பெட்டகம் - கண்ணதாசன் பதிப்பகம்

கன்ஃபூஷியஸின் தத்துவங்களை எளிமையாக, மிகச்சிறப்பான படங்களுடன் இந்த காமிக்ஸை, அழகுத் தமிழில் வழங்கியிருக்கிறார் காந்தி கண்ணதாசன். தத்துவ போதனை கள் என்பதைக் கடந்து, ரசிக்கும் வகையிலான ஒரு தொகுப்பாகவும் இருப்பது பாமர ரசிகர்களுக்கும் பிடிக்கும்.

கிங் விஸ்வா, காமிக்ஸ் ஆர்வலர்,

தொடர்புக்கு: prince.viswa@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x