Last Updated : 12 Dec, 2017 10:00 AM

 

Published : 12 Dec 2017 10:00 AM
Last Updated : 12 Dec 2017 10:00 AM

நடைப்பயிற்சிக்குத் தடை போடும் காற்று மாசு!

நீ

ங்கள் தினமும் நடைப்பயிற்சி செய்பவரா? நீங்கள் நடைப்பயிற்சி செய்யும் இடம் எது? எந்த நேரத்தில் நீங்கள் நடைப்பயிற்சி செய்கிறீர்கள்? இந்தக் கேள்விகளுக்கு பதில்களை வைத்துக்கொண்டு நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள் என அறிவுறுத்துகிறது உலக சுகாதார நிறுவனம். என்ன காரணம்? அண்மையில், உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், காற்றின் தரம் குறைந்த இடங்களில் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு, நன்மைகளைவிடத் தீமைகளே அதிகம் எனத் தெரியவந்துள்ளது.

நடைப்பயிற்சிக்குப் பெரும்பாலானோர் தேர்ந்தெடுக்கும் இடங்கள் அநேகமாக குடியிருப்புக்கு அருகில் இருக்கும் சாலைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் போன்றவையாகத்தான் இருக்கும். அவர்கள் அந்த இடங்களில் வீசும் காற்றின் தரத்தை அறிந்திருக்க வேண்டியது சுகாதாரத்தின் அடிப்படையில் அவசியமானது.

இதனால், அவர்களுக்கு ஏற்படும் சில உடல்நலக் குறைவுகளுக்கு, அவர்கள் சுவாசிக்கும் மாசுக் காற்றுதான் காரணம் எனத் தெரியாமலேயே இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்த நிலைமை தற்போது இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் தொழிற்புரட்சி கண்ட பல நாடுகளில் இருக்கிறது என்பதுதான் பிரச்சினையின் பூதாகரத்தை வெளியே கொண்டுவந்திருக்கிறது.

பிரிட்டனின் ஆராய்ச்சி

அண்மையில், பிரிட்டனில் சுற்றுப்புறம் சரியாக அமைந்துள்ள ஹைட் பூங்காவிலும் வாகன நெருக்கடி அதிகமாக உள்ள ஆக்ஸ்போர்டு தெருவிலும் வழக்கமாக நடைப்பயிற்சி செய்யும் 60 வயதுக்கு மேற்பட்ட 119 நபர்களிடம் லண்டன் இம்பீரியல் கல்லூரி சுவாசநலப் பேராசிரியர் ஃபேன் சங் ஓர் ஆய்வை மேற்கொண்டார். இரண்டு மணி நேர நடைப்பயிற்சிக்குப் பின்னர், இரு பிரிவினரையும் பரிசோதித்தபோது, ஹைட் பூங்காவில் நடைப்பயிற்சி செய்தவர்களுக்கு சுவாச அளவு, ரத்த ஓட்டம் போன்றவை உடனடியாக 7.5% அதிகரித்ததாகவும், அந்தப் பலன்கள் அடுத்த 36 மணி நேரத்துக்கு உடலில் நீடித்ததாகவும் தெரிய வந்தது.

மாறாக, ஆக்ஸ்போர்டு தெருவில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களுக்கு மேற்சொன்ன நன்மைகள் எதுவும் ஏற்படவில்லை; ரத்தக்குழாய் கடினப்படுவது அதிகரித்திருந்தது; அவர்கள் ரத்தத்தில் டீசல் புகையில் காணப்படுகின்ற கறுப்பு கார்பன் துகள்கள் அதிக அளவில் கலந்திருந்தன. இத்துகள்கள்தான் அவர்களுக்கு எதிரிகளாகி ரத்தக்குழாய்களைப் பாதித்துள்ளன. மாரடைப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஆபத்து நிறைந்தது இது என்று எச்சரிக்கிறார் ஃபேன் சங்.

“தசைகளில் சோம்பலுடன் சுருண்டு கிடக்கும் மெல்லிய ரத்தக் குழாய்கள், நடைப்பயிற்சியின்போது பல கி.மீ. அளவுக்கு விரிந்துகொடுக்கின்றன; புதிய ரத்தக்குழாய்கள் ஏராளமாகத் தோன்றுகின்றன. இதனால், தசைகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது இதயத்துக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. இந்த நன்மைகள் அனைத்தும் சுத்தமான காற்றுள்ள இடங்களில் நடைப்பயிற்சி செய்தால் மட்டுமே கிடைக்கும். மாசு மிகுந்த இடங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது, உடலில் விரியும் ரத்தக்குழாய்களிலும் நுரையீரல்களிலும் காற்றில் கலந்துள்ள மாசுக்கள் எளிதாகப் படிந்துவிடுவதால், ரத்த ஓட்டப் பிரச்சினைகளும், ஆஸ்துமா, அடுக்குத் தும்மல் போன்ற சுவாசப் பிரச்சினைகளும் புதிதாகத் தோன்றுகின்றன. அல்லது ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகள் கட்டுப்பட மறுக்கின்றன” என்கிறார் ஃபேன் சங்.

வாகன நெரிசல் இல்லாத சாலைகள், தொழிற்சாலை புகை கக்காத இடங்கள், மரங்கள் அடர்ந்த பகுதிகள் போன்ற காற்றின் தரம் மிகுந்துள்ள இடங்களில் நடைப்பயிற்சி செய்தால், நல்ல பலன்கள் கிட்டும் என்று அவர் யோசனை கூறுகிறார்.

ஆனால், இந்தியாவில் இது சாத்தியப்படுமா? டெல்லி, கோல்கத்தா, சென்னை, லக்னோ, பூனே, ஹைதராபாத், பெங்களூரு எனப் பெருநகரங்கள் எல்லாமே காற்று மாசு மிகுந்த நகரங்கள் பட்டியலில் இருக்கும்போது, நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நகரவாசிகளை இது ரொம்பவே யோசிக்கவைக்கும்.

காற்றின் தரம் என்பது என்ன?

காற்றில் மிதக்கும் துகள்களைக்கொண்டே (Particulate matter) காற்றின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. 2.5 முதல் 10 மைக்ரோ மீட்டர் விட்டம் கொண்ட துகள்கள் 10 பிஎம் என்று அழைக்கப்படுகின்றன. இந்த அளவில் உள்ள துகள்கள் உடலில் பல பிரச்சினைகள் ஏற்படுத்தக்கூடியவை. 2.5 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட துகள்கள் 2.5 பிஎம் என்று அழைக்கப்படுகின்றன.

இவைதான் மிகவும் ஆபத்தானவை. ஏனெனில், இவை சுவாசம் மூலம் உள்ளிழுக்கப்படும் வகையில் நுண்ணிய அளவுள்ளவை; சுவாசப் பாதைகளில் எளிதாக ஒட்டிக்கொள்ளக்கூடியவை. ரத்தக்குழாய்களில் பயணித்து இதயத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை; புற்றுநோயை ஊக்குவிக்கின்ற அளவுக்கு ஆபத்தானவை.

ஒரு கன மீட்டருக்கு 10 மைக்ரோ கிராம் துகள்கள் என்பது உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள சராசரி அளவு. என்றாலும், அதிகபட்சமாக இது ஒரு கன மீட்டருக்கு 40 மைக்ரோகிராம் வரை இருக்கலாம் என்று அந்நிறுவனம் கூறுகிறது. ஆனால், இந்திய அரசு அறிவித்துள்ள ‘தேசியக் காற்றுத் தரக் குறியீட்டு’ (AQI) எண்படி இந்தியாவில் இதைவிட பத்து மடங்கு அதிகமாகவே மாசுத் துகள்கள் காணப்படுவதாகத் தெரிகிறது. இதன் காரணமாக, நாட்டில் பல்லாயிரக்கணக்கான பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுகின்றனர்.

எடுத்துக்காட்டாக, பெங்களூருவில் 197 ஏக்கர் பரப்பளவு கொண்ட கப்பன் பார்க்கில் நடைப்பயிற்சி, மெல்லோட்டம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வருபவர்கள் குறைந்துள்ளனர் என்றும், அப்படியே வந்தாலும் பெரும்பாலானோர் முகத்திரை அணிந்து கொண்டுதான் வருகின்றனர் என்றும் அம்மாநிலத்தின் மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னை கடற்கரைச் சாலையிலும் இந்தக் காட்சிகளைக் காண முடிகிறது. மற்ற பெருநகரங்களிலும் இதே நிலைமைதான்.

ஆனால், முகத்திரை அணிந்துகொள்வதன் மூலம் காற்று மாசுக்கள் உடலுக்குள் புகுவதை முழுவதுமாகத் தடுத்துவிட முடியாது. மாறாக, காற்று மாசுபடுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கும் வாகன எண்ணிக்கையைக் குறைப்பது, டீசல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது, சாலையோரங்களில் விவசாயக் கழிவுகள் எரிப்பதை ஒழிப்பது, கட்டுமானப் பணிகள் வழியாக வரும் மாசுக்களைத் தவிர்ப்பது போன்றவற்றுக்குப் புதிய சட்டதிட்டங்களை வகுத்துத் துணிச்சலான நடவடிக்கைகள் மூலம் அவற்றைச் செயல்படுத்தினால் மட்டுமே லட்சக்கணக்கானோர் உடல் நலத்தைப் பாதுகாக்க முடியும். சுற்றுச்சூழல் சுகாதாரத்தைப் பொறுத்த அளவில் மத்திய, மாநில அரசுகள் அலட்சியமாகவே இருக்கின்றன.

மாற்று வழி என்ன?

பொதுவாக, காற்று மாசு நண்பகலில் அதிகரிக்க ஆரம்பித்து, இரவு முழுவதும் அந்த நிலைமை நீடிக்கும்; பனி படர்கின்ற இளங்காலை நேரத்தில் மிக அதிகமாக இருக்கும். எனவே, காற்று மாசுள்ள இடங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது; மாலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வதைத் தவிர்ப்பது இன்னும் நல்லது; காலையில் 6 மணிக்கு மேல் 8 மணிக்குள் நடைப்பயிற்சி செய்வது மிகவும் நல்லது என்று கூறுகின்றனர், சுவாசநல நிபுணர்கள். பதிலாக, உள்ளரங்க விளையாட்டுகளில் ஈடுபடுவது, யோகா, பிரணாயாமம், நீச்சல் பயிற்சி, ஜிம் போன்றவற்றை மேற்கொள்வது எனத் தங்கள் உடற்பயிற்சிமுறைகளை மாற்றிக்கொண்டால் மாசுக் காற்றுப் பிரச்சினையிலிருந்து தப்பிக்கலாம் என்றும் பரிந்துரைக்கின்றனர்.

மக்களுக்கு மாசில்லா காற்றுக்கு உறுதி இல்லை என்பது மக்களாட்சி நடைபெறும் நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத கொடுமை. உறங்கும் அரசுகள் விழித்துக்கொள்வது எப்போது?

- கு. கணேசன், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x