Published : 30 Dec 2017 10:38 AM
Last Updated : 30 Dec 2017 10:38 AM

தருணங்கள் 2017

2017-ன் முக்கியத் தருணங்கள் இவை. போர்கள், இன அழிப்பு, வன்முறைச் சம்பவங்கள் தொடங்கி சர்ச்சைகள் வரை உலகம் எதிர்கொண்ட விஷயங்களை உங்கள் பார்வைக்குத் தந்திருக்கிறோம். அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபர் கிங் ஜோங் உன் தொடங்கி உலகத் தலைவர்களின் அதிரடிப் போக்குகள், ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருந்த மியான்மர் அரசின் கள்ள மெளனம் வரை பல கொடுமைகளைப் பார்த்த ஆண்டு இது. நம்பிக்கை தரும் விஷயங்களும் நடந்தன. 2017-ல் நாம் செய்ய வேண்டிய காரியங்களின் பட்டியல் பெரியது. நம்பிக்கையுடன் வரவேற்போம் இந்தப் புத்தாண்டை!

அதிர்ச்சிகளின் தலைவர்!

2017 ஜனவரி 20 அன்று அமெரிக்காவின் 45-வது அதிபராகப் பதவியேற்றார் டொனால்டு டிரம்ப். சிரியா, ஈரான், இராக் உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்தது தொடங்கி, இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தது வரை டிரம்பின் அறிவிப்புகள் உலகம் பயந்தபடியே, அமெரிக்காவிலும் வெளியிலும் அதிர்வுகளாகப் பரவுகின்றன.

பிரியும் தருணம்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முறைப்படி பிரிட்டன் விலக மார்ச் 16 அன்று ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, பிரிட்டனின் வெளியேற்றம் உறுதியானது. அதேசமயம், பிரெக்ஸிட்டுக்கு எதிரான குரல்கள் பிரிட்டனில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. ‘ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்துக்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இறுதி ஒப்புதல் வேண்டும்’ என்று ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி கொண்டுவந்த தீர்மானத்துக்கு 309 ஆதரவு ஓட்டுகள் கிடைத்திருப்பது புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

மெய்நிகர் துட்டு!

உலகமே மெய்நிகர் சமூகமாக மாறிவரும் நிலையில், கரன்ஸியும் அப்படி மாறுவதில் என்ன ஆச்சரியம்! 2009-ல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பிட்காயின்’ 2017-ல் மேல் நோக்கி நகர்ந்தது. ஒருவர் இணையம் மூலம் பிட்காயினைப் பயன்படுத்தி, இன்னொருவரிடமிருந்து பொருட்களை வாங்க முடியும். தன்னிடம் உள்ள தொகையை பிட்காயின் மூலம் இன்னொருவருக்குக் கொடுக்கவும் முடியும். கடவுச்சொல் மூலம் இந்தப் பரிவர்த்தனை பாதுகாப்பாக நடக்கும் என்று சொல்கிறார்கள். கட்டுப் படுத்த மைய வங்கிகள் இல்லை. ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள் இதை அங்கீகரித்திருக்கின்றன என்றாலும், இதன் மூலம் நிறைய முறைகேடுகள் நடப்பதாக சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் எச்சரித்திருக்கின்றன. என்றாலும், பிட்காயின் பயன்பாடு இந்தியாவில் அதிகரித்திருக்கிறது.

செல்வக் கோமகன்!

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 23 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்துவந்த ‘மைக்ரோசாஃப்ட்’ நிறுவனத் தின் அதிபர் பில் கேட்ஸை இரண்டாம் இடத்துக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்தார் ‘அமேசான் டாட் காம்’ நிறுவன அதிபர் ஜெஃப் பிஸோஸ். ஜூலை 27-ல் அமேசான் நிறுவனத்தின் பங்கு விற்பனை மதிப்பு உயர்ந்ததால், அவரது சொத்து மதிப்பு 90.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்து இந்த இடத்துக்கு அவரை உயர்த்தின!

வணக்கம் சோபியா!

உலகிலேயே முதல் முறையாக ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கியது சவுதி அரேபியா. அக்டோபர் 25 அன்று நடிகை அவுட்ரி ஹெப்பர்ன் உருவ அமைப்பில், ரோபோ நிபுணர் டேவிட் ஹன்சன் உருவாக்கிய இந்த ரோபோவின் பெயர் சோபியா. மனிதர்களின் முக பாவனைகளைப் புரிந்துகொண்டு, தகுந்தபடி பதில் சொல்ல வல்லது இது. பேசவும், சிரிக்கவும், அரட்டை அடிக்கவும் சோபியாவால் முடியும்!

அதிநாயகி!

பொதுவாகவே, சூப்பர் ஹீரோ பாத்திரங்கள் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், பேட்மேன் என்று ‘மேன்’கள் வகையறாவாகவே இருக்கும். முதல் முறையாக அதீத சக்திகள் கொண்ட ஒரு பெண் பாத்திரத்தை முதன்மையாக வைத்து உருவாக்கப்பட்ட படம் ‘வொண்டர் வுமன்’. புகழ்பெற்ற ‘டி.சி. காமிக்ஸ்’ நிறுவனம் 1940-களில் உருவாக்கிய இந்தப் பாத்திரத்தை அதிரடி சாகச நாயகியாகத் திரைக்குக் கொண்டுவந்தார் பெண் இயக்குநரான பேட்டி ஜெக்கின்ஸ். ஜூன் 2 அன்று வெளியான படம், நாயகி கால் கேடட்டையும் பெரும் நட்சத்திரம் ஆக்கியது!

கத்தாரின் மூச்சுத்திணறல்!

பயங்கரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி, கத்தார் நாட்டுடனான உறவை சவுதி அரேபியா, ஐக்கிய அரேபிய நாடுகள், எகிப்து, பஹ்ரைன் ஆகிய அண்டை நாடுகள் ஜூன் மாதம் துண்டித்துக்கொண்டன. ‘அல் ஜசீரா’ செய்தி நிறுவனத்தை மூட வேண்டும் என்பதும் கத்தாருக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடிகளில் ஒன்று என்பது இங்கு குறிப்பிட வேண்டியது. உணவுக்குக்கூட இறக்குமதியை நம்பியிருக்கும் கத்தார் பெரும் அவதிக்கு உள்ளானது. ஈரான் உதவியால் அதன் மூச்சுத்திணறல் இப்போது நின்றிருக்கிறது. அண்டை நாடுகளின் பொருளாதாரத் தடையை எதிர்கொள்ள இப்போது 80 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதாக அறிவித்திருக்கிறது கத்தார்.

விபரீத ஆட்டக்காரர்!

ஆண்டின் பல்வேறு தருணங்களிலும் உலகைத் திடுக்கிட வைத்தார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன். ஜூலை 28, நவம்பர் 29-ல் அடுத்தடுத்து கொரியா நடத்திய ஏவுகணைச் சோதனைகள், இதுவரை வட கொரியா காட்டிவந்த ‘அணுகுண்டுப் பூச்சாண்டி’யை இனி அப்படி அணுக முடியாது என்பதை உலகுக்கு உணர்த்திவிட்டது. யதேச்சதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் அதிபர் கிம் எதைச் செய்வார், எப்போது செய்வார் என்ற பதற்றத்தில் இதுவரை தென் கொரியா மட்டுமே இருந்தது போக, இப்போது ஜப்பானையும் சேர்த்துத் தள்ளியது அதன் கடல் எல்லையை அடைந்த ஒரு ஏவுகணை. அமெரிக்காவில் டிரம்ப் அதிபராக இருக்கும் காலகட்டத்தில் கிம் நடத்திக்கொண்டிருக்கும் விபரீத விளையாட்டு எங்கு போய் முடியுமோ என்று பதைபதைப்போடு பார்த்துக்கொண்டிருக்கிறது உலகம்.

மீட்கப்பட்ட மனிதம்

ஐஎஸ் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து இராக்கின் மோசுல் நகரம் மீட்கப்பட்டது 2017-ன் ஆறுதல் சம்பவங்களில் ஒன்று. இராக்கின் வலுவிழந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்ட ஐஎஸ் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி, மோசுல் நகரைக் கைப்பற்றினார். பல கொடுமைகள் நடந்தன. 2016-ல் அமெரிக்க ராணுவத்தின் வழிகாட்டலில் அரேபியர்கள், குர்துகள், யாஜிதிக்கள் என்று அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து களமிறங்கினர். பல உயிரிழப்புகளுக்கு இடையில் ஜூலை இறுதியில் மீட்கப்பட்டது மோசுல்.

நாடற்றவர்கள்!

ரோஹிங்கியா மொழி பேசும் முஸ்லிம்களை நாடற்றவர்களாக உருமாற்றிக்கொண்டிருக்கிறது மியான்மர். ராணுவம் மற்றும் காவல் துறை ஒத்துழைப்பினூடாகவே ரோஹிங்கியாக்கள் இன அழிப்பைத் திட்டமிட்டு நிகழ்த்துகிறது புத்த பேரினவாதம். இளைஞர்கள் கொலை, நடுத்தர வயதினர் கைது, பெண்கள் மீதான பாலியல் வன்முறை, வீடுகள் தீக்கிரை என்று வன்முறைகளை எதிர்கொள்ள முடியாமல் அண்டை நாடுகளை நோக்கித் தப்பி ஓடினர். அமைதிக்கான நோபல் விருது வாங்கியவரும் மியான்மர் அரசை வழிநடத்துபவருமான ஆங் சான் சூச்சி இதைக் கண்டுகொள்ளாமல் கள்ள மெளனம் சாதித்தது அதிர்ச்சியளித்தது. ஆதரவின்றித் தவிக்கும் மானுடத்தின் ஓலக் குரல் தண்ணீரில் மூழ்குகிறது.

வரலாம், வரலாம் வா!

உலகிலேயே பெண்களை கார் ஓட்ட அனுமதிக்காத ஒரே நாடு சவுதி அரேபியா. 25 ஆண்டுகளுக்கும் மேலாக கார் ஓட்டும் அனுமதிக்காகக் குரல்கொடுத்துவந்த பெண்களுக்கு, செப்டம்பர் 26 அன்று பச்சைக் கொடி காட்டியது அந்நாட்டு அரசு. 2018 ஜூனிலிருந்து பெண்களும் இனி அங்கு கார் ஓட்டலாம். அதேபோல, விளையாட்டு மைதானங்களிலும் இனி பார்வையாளர்களாகப் பெண்கள் பங்கேற்கலாம். ஆம், இதற்காகவும்கூட அவர்கள் நீண்ட குரல் கொடுக்க வேண்டியிருந்தது இதுநாள் வரை!

முடக்கப்பட்ட சுதந்திர முழக்கம்

ஸ்பெயினின் சுயாட்சிப் பகுதியான கேடலோனியா தனிநாடு கோரிக்கை முழக்கத்துடன் அதிர்ந்தது. தங்கள் பகுதி செல்வ வளத்தைச் சுரண்டிக் கொழுக்கும் ஸ்பெயின் அரசு, தங்களுக்கு எதுவும் செய்வதில்லை என்று குமுறிய கேடலோனியர்கள், பல எதிர்ப்புகளை மீறி அக்டோபர் 1-ல் நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பில் சுதந்திரம் பெறுவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். உடனே, கேடலோனிய அரசைக் கலைத்தது ஸ்பெயின். சுதந்திர முழக்கம் முடக்கப்பட்டது. எனினும், வெவ்வேறு நாடுகளில் சுதந்திரம் கோருபவர்களின் பார்வை கேடலோனியாவில் ஆழப் பதிந்திருக்கிறது!

சீனத்தின் ஒற்றைப் பெருஞ்சுவர்!

சீன வரலாற்றில் மாசே துங், டெங் ஷியாபிங்குக்குஇணையான, கட்டற்ற அதிகாரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார் அதிபர் ஜின்பிங். அவரது, ‘புதிய சகாப்தத்துக்கான சீன சோஷலிஸம்’ சித்தாந்தத்தைக் கட்சி துளி எதிர்ப்பின்றி ஏற்றது. சீன கம்யூனிஸ்ட் கட்சி, சீன ராணுவமான மக்கள் விடுதலை சேனை, சீர்திருத்தங்களை அமலாக்குவதற்கான மத்திய முன்னணிக் குழு என்று பல அமைப்புகளுக்கு அவரே தலைவர். அக்.18 அன்று கூடிய கட்சி மாநாட்டில் தனது பதவிக்காலத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துக்கொண்டதோடு, இதற்கேற்ப கட்சியின் அரசியல் சாசனத்திலும் திருத்தங்களைக் கொண்டுவந்திருக்கிறார்.

முடிவுக்கு வந்த சகாப்தம்!

ஜிம்பாப்வே விடுதலைப் போராட்டத்தில் முன்னின்று நடத்தி, அந்நாட்டின் அதிபராகி 37 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவந்த ராபர்ட் முகாபே, நவம்பர் 14-ல் நடந்த ராணுவக் கலகத்தின் விளைவாக ஆட்சி இழந்தார். அடுத்து அதிபராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட துணை அதிபர் எமர்சன் நங்காக்வாவைப் பதவியிலிருந்து நீக்கி, தன் மனைவி கிரேஸை அதிபராக்கத் திட்டமிட்டிருந்தார் முகாபே. ஆனால், அவரை வீட்டுச் சிறையில் வைத்து ராஜினாமா செய்யவைத்தது ராணுவம். புதிய அதிபரானார் நங்காக்வா!

புனித நகர் அரசியல்

ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்கா டிசம்பர் 6-ல் அங்கீகரித்ததைத் தொடர்ந்து பெரும் பதற்றம் உருவானது. ஐ.நா. சபை இதை நிராகரித்துவிட்டதாலும், உலகின் பெரும்பான்மை நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்ததாலும் இஸ்ரேலின் ஓங்கிய கை தணிந்துவிட்டாலும் பாலஸ்தீன் கொந்தளித்துப்போனது. வரலாற்றில் 23 முறை முற்றுகைக்குள்ளாகி, 52 முறை தாக்கப்பட்டு, 44 முறை கைப்பற்றப்பட்டு எப்போதும் அலைக்கழிப்பிலேயே உள்ள புனித நகரமான ஜெருசலேம், இப்போது இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்குமான நகரமாக இருந்துவருகிறது. எப்போதும் அது தொடருமா என்பது கேள்விக்குறியாகியிருக்கிறது.

தொகுப்பு: சாரி, சிவசு, வெ.சந்திரமோகன், புவி,

வடிவமைப்பு: எஸ்.சண்முகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x