Published : 12 Dec 2017 09:51 AM
Last Updated : 12 Dec 2017 09:51 AM

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக்குவது அமைதியைச் சீர்குலைக்கும்!

ஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்திருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவு இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினையில் மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என்று மூன்று மதத்தினரின் புனிதத் தலங்களைக் கொண்ட ஜெருசலேமை இஸ்ரேலும் பாலஸ்தீனமும் சொந்தம் கொண்டாடுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்னரே மேற்கு ஜெருசலேமைத் தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்த இஸ்ரேல், 1967-ல் அரபு நாடுகளுடன் நடந்த போரின்போது கிழக்கு ஜெருசலேமைக் கைப்பற்றியது. மறுபுறம், எதிர்காலத்தில் அமையவிருக்கும் தங்கள் நாட்டின் தலைநகராக கிழக்கு ஜெருசலேம்தான் இருக்க வேண்டும் என்று பாலஸ்தீனர்கள் வலியுறுத்திவருகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் ட்ரம்பின் இந்த முடிவு அமெரிக்காவுக்குள்ளும் வெளியிலும் விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

டெல் அவிவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை, ஜெருசலேமுக்கு இடம் மாற்ற வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் இதற்கு முன்பே தீர்மானம் கொண்டுவரப்பட்டிருந்தாலும், சட்டரீதியிலும் தார்மிகரீதியிலும் அரசியல்ரீதியிலும் மோசமான விளைவுகள் ஏற்படுத்தும் என்பதால் அமெரிக்காவின் முந்தைய அதிபர்கள் அதைத் தவிர்த்தேவந்தனர். ஆனால், ட்ரம்ப் அதைச் சீர்குலைத்திருக்கிறார்.

இந்த முடிவு இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்துவதில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தும் என்பது மட்டுமல்லாமல், அந்தப் பிராந்தியம் தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகள் குறித்த கேள்வியையும் எழுப்பியிருக்கிறது. ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகராக இருக்கும் என்று 1980-ல் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாதது என்று ஐநா பாதுகாப்பு அவையின் 478-வது தீர்மானம் அறிவித்தது. ஜெருசலேமுடன் ராஜீய உறவுகள் வைத்துக்கொள்வதைத் திரும்பப் பெற வேண்டும் என்று அதன் உறுப்பு நாடுகளையும் கேட்டுக்கொண்டது. இந்நிலையில், அந்தத் தீர்மானத்துக்கு எதிராகச் செயல்படுகிறது அமெரிக்கா. இம்முடிவுக்கு அரபு நாடுகள் அதிருப்தி தெரிவித்திருந்தாலும் இதை எதிர்ப்பதாகத் தெரியவில்லை. அதேசமயம், லெபனான், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.

இவ்விவகாரம், இஸ்ரேலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகியிருக்கிறது. 2000-ல் இஸ்ரேலின் அப்போதைய பிரதமர் ஏரியல் ஷரோன் ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதிக்கு வருகை தந்ததை எதிர்த்து பாலஸ்தீனர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அது இரண்டாவது இண்டிஃபாடா என்றழைக்கப்படுகிறது (1987-ல் மேற்குக் கரையிலும் காஸாவிலும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்தபோது முதல் இண்டிஃபாடாவை பாலஸ்தீனர்கள் மேற்கொண்டனர்). தற்போது மூன்றாவது இண்டிஃபாடாவுக்கு ஹமாஸ் அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பாலஸ்தீனத்தைப் பிரிப்பது தொடர்பாக, 1947-ல் ஐநா கொண்டுவந்த தீர்மானத்தின்படி ஜெருசலேம் இஸ்ரேலின் பகுதியாக இருக்கவில்லை. ஜெருசலேம் சர்வதேச அறக்கட்டளையால் நிர்வகிப்படும் என்று முடிவெடுக்கப்பட்டிருந்த நிலையில், இஸ்ரேல் அந்நகரைக் கைப்பற்றியது. இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க ஐநா மறுத்தது அதனால்தான். இந்நிலையில், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்திருப்பது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அங்கீகரிப்பதாக அமைந்துவிட்டது. இதன் மூலம், இஸ்ரேல் – பாலஸ்தீனப் பேச்சுவார்த்தைகளில் நடுநிலையாளராகப் பணியாற்ற வேண்டிய அமெரிக்காவின் பொறுப்புக்குக் குந்தகம் விளைவித்துவிட்டார் ட்ரம்ப்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x