Published : 20 Dec 2017 09:44 AM
Last Updated : 20 Dec 2017 09:44 AM

நேபாளத்தில் ஜனநாயகம் நிலைக்க புதிய வாய்ப்பு!

மா

வோயிஸ்ட் மோதல்கள் தொடங்கிய 1996 முதல் கடந்த 20 ஆண்டுகளாக நேபாளம் பல்வேறு துயரங்களில் ஆழ்ந்தது. மன்னரின் யதேச்சாதிகார ஆட்சி, அரண்மனைப் படுகொலைகள், நிலநடுக்கம், வெளிநாடுகளின் தலையீடு, மதரீதியான அணி திரளல் என்பவை சில. இரண்டாவது முயற்சியாக இயற்றப்பட்ட புதிய அரசியல் சட்டம், அரசியல் சட்டப் பேரவையால் 2015 செப்டம்பரில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதை அமல்செய்வதில் இருந்த கடைசி தடையும் உள்ளாட்சி, மாநில, தேசியத் தேர்தல்களை இந்த ஆண்டின் கோடைப் பருவம் தொடங்கி குளிர்காலம் வரை நடத்தியதால் தகர்க்கப்பட்டுவிட்டது.

அரசியல் நிரல்களை நேபாளி காங்கிரஸ் கட்சிதான் தீர்மானிப்பது என்ற அரசியல் பாரம்பரியத்தை, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-யுஎம்எல்), மாவோயிஸ்ட் கட்சி இணைந்து இடதுசாரிக் கூட்டணி அமைத்து அறுதிப் பெரும்பான்மைக்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்றுள்ளன. ஏழு மாநிலங்களில் ஒன்றைத் தவிர, இதர ஆறு மாநிலங்களிலும் ஆட்சியமைத்துள்ளன. (தேசி யக் கட்சிகளுக்குக் கிடைத்துள்ள நாடாளுமன்றத் தொகுதிகள்: ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்-80, மாவோயிஸ்ட்-36, நேபாளி காங்கிரஸ்-23, ராஷ்ட்ரீய ஜனதா-11, ஃபெடரல் சோஷலிஸ்ட் ஃபோரம்-10).

தன்னம்பிக்கை தரும் அரசியல் சட்டம்

எதிர்க்கட்சிகளுக்கு மிகக் குறைந்த இடங்களே கிடைத்திருப்பது கவலையை அளித்தாலும் நிலையான ஆட்சிக்கு வழி ஏற்பட்டிருக்கிறது. குடியரசுத்துவம், கூட்டாட்சித்துவம், மதச்சார்பின்மை ஆகிய லட்சியங்களைப் பின்பற்றக்கூடிய அரசு உள்ளாட்சி, மாநிலம், நாடாளுமன்றம் ஆகிய மூன்று நிலைகளிலும் ஏற்பட்டிருக்கிறது. அரசியல் சட்ட அறிவிப்பு தொடர்பாக இந்திய அரசு வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்திருந்தாலும், நேபாள மக்கள் அதை ஏற்றுக்கொண்டுவிட்டதால் அதிருப்திக்கு இடமில்லாமல் போய்விட்டது.

புதிய அரசியல் சட்டம் தெற்காசியாவிலேயே புதிதான பல அம்சங்களைக் கொண்டிருக்கிறது. நிதி ஒதுக்கீடு, சட்டமியற்றல், நிர்வாகம் ஆகியவை தொடர்பான அதிகாரங்கள் (மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி மன்றங்கள்) மூன்று அடுக்குகளுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. தேசிய நாடாளுமன்றத்தைத் தவிர ஏழு மாநிலங்கள், 17 நகரங்கள், 276 சிறு நகரங்கள், 460 கிராம ஊராட்சிகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதிகாரங்கள் மையப்படுத்தப்பட்ட காத்மாண்டு நிர்வாக முறை, இப்போது எல்லா நிலைகளிலும் அதிகாரம் பரவலாக்கப்பட்ட ஜனநாயக அமைப்பாக மாறியிருக்கிறது.

தேவ்பாவின் படுதோல்வி

இடைக்கால அரசின் பிரதமராக இருந்த ஷேர் பகதூர் தேவ்பா, வெவ்வேறு கட்டத் தேர்தல்களைச் சுமுகமாக நடத்த உதவினார். ஆனால், தேர்தல் பிரச்சாரத்தை அசுவாரசியமாக நடத்தி, நாட்டின் முன்னணி ஜனநாயகக் கட்சியான நேபாளி காங்கிரஸை முடமாக்கிவிட்டார்.

தசரா விடுமுறையின்போது ஐக்கிய மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சியானது, மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் புஷ்ப கமல் தாஹலை (பிரசண்டா) நேபாளி காங்கிரஸின் கூட்டிலிருந்து பிரித்துவிட்டது. மூன்று கட்ட அரசு நிர்வாகத்திலும் 40% முதல் 60% வரையில் இடங்களைத் தருவதாக வாக்குறுதி தரப்பட்டது. மக்களிடம் செல்வாக்கை இழந்துகொண்டிருந்த மாவோயிஸ்ட் கட்சிக்கு இது நல்ல வாய்ப்பாகிவிட்டது. மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியின் கடக பிரசாத் ஒளியின் பேச்சாற்றலுக்கு முன்னால் தேவ்பாவின் சுவாரசியமற்ற பேச்சுகள் எடுபடவில்லை.

ஒளியின் தருணம்

இப்போது எல்லோருடைய கண்களும் ஒளியின் மீது; புதிய விதிகளின்படி, புதிய அரசின் மீது முதல் இரண்டு ஆண்டுகளுக்கு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முடியாது. இதற்கு முன்னால் எந்தப் பிரதமருக்கும் இப்படியொரு வாய்ப்பு ஏற்படவில்லை. புதிய பிரதமரின் உண்மையான வெற்றி எதில் என்றால், மாவோயிஸ்ட் கட்சியைச் சமரசப்படுத்துவதுதான். மாவோயிஸ்ட்டுகள் மட்டுமல்ல, நேபாளி காங்கிரஸ் கட்சியுடனும் சமவெளிப்பகுதி மக்களுடைய கட்சிகளுடனும் அவர் சமரசம் கண்டாக வேண்டும். ஜனநாயகரீதியாக ஒரு நாடு அமைதியடைந்தால், அதன் ஆற்றல் முழுவதையும் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியும். இளைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்புகள் பெருக வேண்டும். மேற்காசிய நாடுகள், மலேசியா, இந்தியா சென்றுள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்ட நேபாளிகள் நாடு திரும்பக்கூடும். அடித்தளக் கட்டமைப்புத் திட்டங்கள், வேளாண்-வனம், சுற்றுலா, சேவைத் துறைகள், தராய் சமவெளியில் பாசன வசதிகள் ஆகியவற்றுக்கு அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இந்திய அரசுடன் நட்புறவை வளர்க்க வேண்டும். சீன ரயில்பாதை வலையமைப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு வடக்குப் பகுதியுடன் போக்குவரத்துத் தொடர்பை அதிகப்படுத்த வேண்டும். இந்தப் பிராந்தியத்தில் சீனத்தின் புவி-அரசியல் வியூகம் என்ன என்பதை நேபாள அரசு இன்னமும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. சீனத்துக்குக் குற்றேவல் செய்யும் உறவைவிட, கண்ணியமான உறவுக்கு ஒளி பாடுபட வேண்டும்.

தயக்கம் களையப்பட வேண்டும்

யதேச்சாதிகாரம், மோதல், ஆட்சிநிலை மாற்றங்கள் காரணமாக சர்வதேச அரங்கில் நேபாளத்துக்கு முக்கிய இடம் இல்லாமல் போய்விட்டது. 1950-களில் பி.பி. கொய்ராலா காலத்தில் இருந்த மரியாதை மீண்டும் ஏற்பட ஒளி பாடுபட வேண்டும்.

ஜனநாயக நிலைத்தன்மையுள்ள அரசுக்கான பாதை, மேடு-பள்ளங்களுடன்தான் இருக்கும். அரசியல் சட்டத்தை அமல்படுத்துவது சவாலான வேலை. பொதுப் பட்டியலில் மத்திய - மாநில அரசுகள் மட்டுமல்ல, உள்ளாட்சி மன்றங்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதால் ஏற்படும் மோதல்களும் சிக்கல்களும் கவனமாகக் கையாளப்பட வேண்டும். அரசியல் சட்டம் இயற்றப்பட்டுவிட்டாலும் உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிகாரத்தை மாற்றுவதில் ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கம் இடையே தயக்கம் காணப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் புதிய அரசியல் சட்ட அமர்வு இதை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

சமூக அதிருப்தியைத் தூண்டிவிட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாகக் கருத்தொற்றுமை அடிப்படையில் நடந்த அரசுகள் கஜானாவைத் துடைத்துவிட்டன. மாநில, உள்ளாட்சி மன்ற நிர்வாகத்துக்கு இனி அதிக நிதி தேவைப்படும். நிலநடுக்கத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய வீடமைப்புகள், அடித்தளக் கட்டமைப்புகள், பாரம்பரியக் கட்டிடங்களின் கட்டுமானம் போன்றவை இனிதான் மேற்கொள்ளப்பட வேண்டும். நிதிநிலைமையில் ஏழு மாநிலங்களுக்கு இடையே சமநிலை கிடையாது. இதைச் சமன்படுத்த வேண்டும்.

மாநில அரசுகளுக்கும் உள்ளாட்சி மன்றங்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால் பொருளாதாரக் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல், மாற்றாந்தாய் மனப்பாங்கு போன்றவற்றுக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே, ஏழு மாநிலங்களிலும் மனித உரிமை அமைப்புகள் கவனமாக இருக்க வேண்டும். நேபாளம் இப்போது பொருளாதார, அரசியல், புவி -அரசியல்சார் சவால்களை எதிர்நோக்கியிருக்கிறது. அரசியல் சட்டம் கூறும் ஜனநாயகபூர்வ, அனைவர் நலனையும் உள்ளடக்கிய, சமூக நீதி சார்ந்த லட்சியங்களை அடைய அரசு உழைக்க வேண்டும்.

- கனகமணி தீட்சித், எழுத்தாளர், பத்திரிகையாளர்.

சுருக்கமாகத் தமிழில்: சாரி,

© ‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x