Published : 29 Dec 2017 10:06 AM
Last Updated : 29 Dec 2017 10:06 AM

குஜராத் தேர்தலும் வாக்காளர் மனநிலையும்!

‘தே

ர்தல் காலம்’ என்கிற சடங்கு, சாத்தியமான எல்லா உண்மைகளையும் வெளிக்காட்டுகிறது. போட்டி, போராட்டம், மோதல், விவாதங்கள் ஆகியவை, எவையெல்லாம் சாத்தியம் என்று மட்டுமே காட்டுகின்றன. திடீரென ராகுல் வெவ்வேறு கோணங்களில் பார்க்கப்படுகிறார். காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தோற்றத்தைக் கொடுக்க புதிய ஆற்றல் ஊட்டப்பட்ட தலைவராக அல்ல; ஒரு புது வரவாக, 20 ஆண்டுகள் தொடர்ந்து தூங்கி வெகு தாமதமாக விழித்துக்கொண்ட ரிப் வேன் விங்கிள் (அமெரிக்க எழுத்தாளர் வாஷிங்டன் இர்வின் உருவாக்கிய பாத்திரம்) போலப் பார்க்கப்படுகிறார். உத்தி வகுப்பதில் வயதுக்கு மீறிய முதிர்ச்சியுள்ளவர் என்று பலர் கருதினாலும், அமித் ஷாவும் ஆர்எஸ்எஸ்ஸும் வியூகங்களை வகுப்பதில் தேர்ச்சியுள்ளவர்கள். ராகுல் பகுதி நேர அரசியல் தலைவர், மோடி முழு நேர அரசியல் தலைவர் என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

ஒரு அம்சத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். விமர்சனங்களும் பாராட்டுகளும் எப்படியிருந்தாலும், தேர்தலை அணுகியதில் ராகுல் தரப்பில் பலவீனங்கள் காணப்பட்டன. கட்சியின் தேர்தல் நிபுணர்களிடம் தோழமை இல்லை. தேர்தலை வெல்லும் மாயம் என்ன என்று விளக்கக்கூட யாரும் முயற்சிக்கவில்லை. மக்களிடம் கூறிய விளக்கங்கள் சாரமற்று இருந்தன. விளக்கியவர்கள் அதைவிட அசுவாரசியமாக இருந்தனர். அரசியல் விமர்சகர்கள் அனைவரும் தேர்தல் முடிவு தெளிவானதும் மோடியைப் புகழத் தொடங்கிவிட்டனர்.

மும்மூர்த்திகள்

படேல், அல்பேஷ், மேவானி ஆகியோரே விமர்சகர்களை ஈர்த்தனர். ‘வளர்ச்சி’ என்ற பிரச்சாரத்துக்கு எதிரான ‘அதிருப்தி’யை வெளிக்கொண்டு வந்ததால் ஊடகங்கள் ஹர்திக்கை மெச்சின. இரண்டு விஷயங் கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. முதலாவது, அந்த மூவரும் கவனத்தைத் தங்கள் பக்கம் ஈர்ப்பவர்களே தவிர, வாக்குகளைச் சேகரிப்பவர்கள் அல்ல. மக்களிடையே ஒரு கருத்தை ஏற்படுத்த முடிந்தவர்கள், ஆனால் அதை நல்ல முடிவாக மாற்றத் தெரியாதவர்கள் என்று. இரண்டாவதாக, அவர்கள் களத்துக்கு வந்த நேரம் வெற்றி கனிவதற்கு உகந்ததாக இல்லை. தேர்தல் தொடங்குவதற்குச் சில மாதங்களுக்கு முன்னால் மட்டும் மக்களிடம் பேசத் தொடங்கி நல்ல பலனை எதிர்பார்க்க முடியாது. தேர்தல் பிரச்சாரத்துக்கு மும்மூர்த்திகள் எடுத்துக்கொண்ட நேரம் அவர்களுக்கு நிறைந்த பலனைக் கொடுக்கவில்லை.

வளர்ச்சி’ என்ற வார்த்தை நகர்ப்புற வாக்காளர்களின் மனங்களில் ஆழப் பதிந்துவிட்டது. நகரங்களிலும், அரை நகரங்களிலும் பாஜக அளித்த வாக்குறுதிகள் வாக்குகளை ஈர்த்தன. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதாரமே நாசமான சூரத்தில்கூட பாஜக கிட்டத்தட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வென்றது. நகர்ப்புறம் என்பவை பாஜகவுக்குக் கோட்டைகள்போல. பழங்குடி, விவசாயிகள், இளைஞர்களை ஆதரவாளர்களாகக் கொண்ட காங்கிரஸ், தனக்கிருக்கும் ஆதரவாளர்களோடு திருப்தியடைய வேண்டியதுதான். பழங்குடிப் பகுதிகளிலும் ஆர்எஸ்எஸ் நீண்டகாலமாக அளித்து வரும் சேவை, அந்த வாக்காளர்களையும் காங்கிரஸிடமிருந்து பறித்துவிடும். ஒருகட்டத்தில், வானவில் கூட்டணியைப் போலக் காட்சிதந்த காங்கிரஸ், முன்பைவிட வலுவற்றதைப் போலக் காட்சியளிக்கிறது.

மக்களுடைய நினைவாற்றலும் தேர்தலில் முக்கிய மான அம்சம். ஆட்சியில் இருக்கும் கட்சி மீதான அதிருப்தியும் அசுவாரசியமும் முக்கியமல்ல. பெரும்பாலான மக்களுக்கு காங்கிரஸ் எப்போது கடைசியாக குஜராத்தை ஆண்டது என்பதே மறந்திருக்கலாம். ராகுலும் காங்கிரஸும் படேல் சமூகத்தவரின் நலன்களைக் காப்போம் என்று உறுதியளிக்கலாம். ஆனால், காங்கிரஸ் அப்படித் தங்களுக்காகச் சாதித்தது எதுவும் படேல்களுக்கே நினைவுக்கு வராமலிருக்கலாம். அதே வேளையில், பாஜக மூலம் சாதித்துக் கொண்டவை நினைவில் நிற்கலாம்.

மக்களிடையே நிலவும் வறுமையைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் வாக்கு கேட்டது. பாஜக ஆட்சியில் வறுமை குறைந்திருக்கிறது; சமூகவியல்ரீதியாகக் கூறுவதானால், வருமானரீதியாக மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் உண்டு, ஆனால் ஏழ்மை குறைந்துள்ளது. இது நகர்ப்புற வாக்காளர்கள் அனுபவத்தில் தெரிந்துகொண்டது. எனவே ‘அச்சே தின்’ என்பதை நகர வாக்காளர்கள் விரும்பினர். பழங்குடிகளும் கிராமப்புற விவசாயிகளும் பராதீனமாக விடப்பட்டதாகவே கருதினர். எனவேதான் அவர்களிடையே காங்கிரஸின் பிரச்சாரம் நன்கு எடுபட்டது. நகர்ப்புற நடுத்தர வர்க்க வாக்காளர்களின் ஆதரவைப் பெற, காங்கிரஸ் கட்சி தன்னுடைய உத்தியை மாற்றிக்கொள்ள வேண்டும்.

காங்கிரஸும் ஆர்எஸ்எஸ்ஸும்

காங்கிரஸ் கட்சியும் அதன் பிரச்சாரமும் நன்கு வரவேற்கப்பட்டதாகவே கருதப்பட்டது. சில தனிநபர்கள் மீதும், குறுகிய கால நிகழ்வுகள் மீதும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுப் பேசப்பட்டது. அவ்வாறு தனி நபர்களுக்கு முக்கியத்துவம் தந்த காங்கிரஸ், தன்னுடைய இயக்கம்.. அமைப்பு ஆகியவற்றைச் சிறிது நேரத்துக்கு மறந்துவிட்டது. தேனீக்களைப் போல ஆர்எஸ்எஸ் அமைப்பு தேர்தல் அரசியலில் அனேக ஆண்டுகளாக இடைவிடாமல் உழைப்பதற்கு ஈடாக காங்கிரஸால் ஏதும் செய்ய முடியவில்லை. ஆர்எஸ்எஸ்ஸின் ஷாகாவே ஒரு சமூகத்தைத் தனக்குள் பல ஆண்டுகளாகப் பொதிந்து வைத்துக்கொள்கிறது. தன்னுடைய முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கும்வரை அது காத்திருக்கும். தீவிரமாக உழைத்துவிட்டுச் சில ஆண்டுகளுக்குப் பிறகு பலனைப் பார்க்கலாம் என்ற பொறுமை காங்கிரஸ் கட்சிக்குக் கிடையாது. காங்கிரஸுக்குத் தெரிந்ததெல்லாம் ‘பரம்பரை’ அம்சம்தான். ஓர் அமைப்பைக் கட்டமைப்பதிலும் வரலாறு படைப்பதிலும் பரம்பரையால் அதிகம் சாதித்துவிட முடியாது.

இவ்வளவு இருந்தாலும் 182 தொகுதிகளில் 150-ஐப் பிடித்துவிட வேண்டும் என்ற பாஜகவின் இலக்கு நிறைவேறாததாகிவிட்டது. அமித் ஷாவைப் பொறுத்தவரை 150 என்பது, எண் கொண்ட இலக்கு அல்ல. கட்சித் தொண்டர்கள் அயராமல் உழைக்க வேண்டும் என்பதற்காக முன்வைக்கப்பட்ட இலக்கு. அது நிறைவேறாத நிலையிலும் ஆட்சியைப் பிடித்துவிட்டதால், ‘சாதிக்க முடியாததைச் சாதித்துவிட்டோம்’ என்று கூறிக்கொள்வர். அப்படியே எப்போதாவது அந்த இலக்கையும் அடைந்துவிடும்போது, ‘பாஜகவை வெல்லவே முடியாது’ என்ற பிரமை உண்மையென்றே மற்றவர்களால் நம்பப்படுகிறது.

கண்ணுக்குத் தெரியாத உண்மை

நடுத்தர வர்க்கத்தின் நலன், வளர்ச்சி, இந்துத்துவம் தொடர்பான பேச்சு என்ற கலவை பாஜகவின் வெற்றிக்கு உறுதியாகக் கை கொடுக்கிறது. சமூகவியல் அமைப்பை பாஜக நன்றாக ஊன்றிப் படித்திருக்கிறது. நகர்ப்புறங்களின் புதிய வாக்காளர்கள்தான் பாஜகவுக்கு செல்லப் பிள்ளைகள். பாஜகவின் உளவியல் புரிதலும் அற்புதமானது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்றவற்றால் ஏற்படும் அதிருப்தி என்பது தற்காலிகமானது, எளிதில் மறக்கப்படக் கூடியது. அப்படிப்பட்ட அதிருப்தியைப் போக்க சற்றே முயற்சி எடுத்துப் பேசினால் போதும், வாக்குகளைப் பெற்றுவிடலாம். எந்த ஒரு நிகழ்வுக்கும் இந்திய வாக்காளர் உடனே கொந்தளித்துவிடுவார். ஆனால், வாக்களிக்கும் வழக்கத்தை மாற்றுவதில் மிகவும் மெதுவாகத்தான் செயல்படுவார் என்பதை பாஜக நன்கு அறிந்திருக்கிறது.

அந்தந்த மாநிலங்களில் வாக்காளர்களின் விருப்பம் என்ன, மனநிலை என்ன என்பதையெல்லாம் பாஜக புரிந்துவைத்திருக்கிறது. இவையெல்லாம் ஊடகங்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. ஆனால், இதுதான் தேர்தல் அரசியலின் முக்கியமான அம்சம்.இவ்வளவு இருந்தும் பாஜக மெத்தனமாக இருந்துவிட முடியாது. தேர்தல் காலங்களில் அதன் பெரிய தேர் அசைந்தாடியும் ஆங்காங்கே குலுங்கியும் நகர்கிறது. சமூகம் மாறிக்கொண்டே இருக்கிறது என்பதை அது நன்கு உணர்ந்திருக்கிறது. புதிய கூட்டுகளும் ஆசைகளும் களத்தில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. சமுதாயங்களின் புதிய தேவைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. நிகழ்காலம் அதன் கையில் பத்திரமாக இருக்கிறது. ஆனால், எதிர்காலம் அதனால் ஏமாற்றப்பட முடியாததாக மாறக்கூடும்.

தமிழில்: சாரி,

© ‘தி இந்து’ ஆங்கிலம்

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x