Last Updated : 28 Dec, 2017 10:04 AM

 

Published : 28 Dec 2017 10:04 AM
Last Updated : 28 Dec 2017 10:04 AM

மார்ட்டின் லூதர் எனும் மதச் சீர்திருத்தவாதி!

க்டோபர் 31, 2017 காலை ஜெர்மனியின் தேவாலயத்தில் வழக்கத்துக்கு மாறாக கத்தோலிக்கப் பாதிரிமார்களும், ப்ராடஸ்டெண்ட் லூத்ரன் தேவாலயப் போதகர்களும் ஒன்றாகக் கூடிப் பிரார்த்தனை நடத்தினர். “எமது தேவனே, 500 ஆண்டுகள் முன் கிறிஸ்துவத்தின் இரு வேறு மார்க்கத்தினர் இங்கு தொடங்கிய மதச் சீர்திருத்தத்துக்கான வன்முறைகளும், படுகொலைகளும் இன்று வரை தொடர்வதற்காக வருந்தி, உம்மிடம் மன்னிக்க மன்றாடுகிறோம். அன்பின் தூதுவரான இயேசுவின் உடலை நாங்கள் இத்தனை காலமும் காயப்படுத்தினோம். இனி முரண்பாடுகளை விட்டு, ஒன்றுபட்ட பிரார்த்தனையை மேற்கொண்டு உம் பெயருக்கு மகிமை சேர்ப்போம்'' என மன்றாடிப் பிரார்த்தித்தனர்.

ஒரே கடவுள் என்று கூறிய மதங்கள் ஒவ்வொன்றும் தம்முன் முரண்பட்டு மிக மோசமான வன்முறைகளில் ஈடுபட்டுவருவதை உலகெங்கும் காண்கிறோம். 1,500 ஆண்டு கள் முன் கிறிஸ்துவத்தின் ஒரே தலைமை பீடமாக வாடிகனும், எதிர்ப்பேதுமற்ற சர்வாதிகாரியாகப் போப்பும் இருந்தனர். கத்தோலிக்கக் கிறிஸ்துவம் பைபிளை லத்தீன் மொழியில்தான் ஓத வேண்டும். தேவாலயத்தில் மட்டுமே இருக்க வேண்டும். பாதிரியார்கள் மட்டுமே வாசிக்கலாம். மக்களின் மொழிகளில் மொழிபெயர்க்கக் கூடாது. தேவாலயம் மன்னர்களை விடவும் உயர்வானது. திருமணமாகாது பாதிரியார்களாகவும், கன்னியாஸ்திரீகளாகவும் வாழ்வது மட்டுமே உன்னதமான கிறிஸ்துவப் பாதை என்று மக்களை அடக்கியாண்ட காலம் அது. கேள்வி கேட்பவர்களை மத விரோதிகள் என முத்திரை குத்தி எரித்துக் கொன்றனர். போப், அரசர்களையும் அடக்கியாளும் சர்வாதிகாரியாக, முரட்டுத்தனமான போர் வெறியராகக் கோலோச்சிய காலம் அது.

‘95 குறிப்புகள்!’

இந்த சர்வாதிகாரப் போக்கை எதிர்த்து ஜெர்மனியின் விட்டன்பர்க் நகர தேவாலயத்தின் கதவில் 1517 அக்டோபர் 31 அன்று காலை, பிரார்த்தனைக்குக் கூடியிருந்த மக்களை விலக்கி ‘95 குறிப்புகள்’ என்ற சிறு பிரசுரத்தை ஆணியடித்து மாட்டினார் மார்ட்டின் லூதர். கத்தோலிக்க போப்பின் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்து வேதாகமச் சான்றுகளுடன் அவர் தயாரித்த பிரசுரம் அது.

அந்தப் புரட்சிகரச் சீர்திருத்தச் செயல்பாட்டின் 500-வது ஆண்டு நிறைவு உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. மார்ட்டின் லூதர் ஜெர்மனியில் ஈஸ்லெபன் எனும் நகரில் தெய்வ பக்தி மிக்க கிறிஸ்துவக் குடும்பத்தில் 1483-ல் பிறந்தார். சட்டம் பயின்றுவந்த அவர், தம் கண் முன் தனது நண்பர் மின்னல் தாக்கி இறந்ததைக் கண்டு விரக்தியுற்றுத் துறவியானார்.

அப்போது கத்தோலிக்கத் தலைவராக வாடிகனில் ஆண்டுகொண்டிருந்த போப் லியோ, மாபெரும் பளிங்கு தேவாலயம் ஒன்றைப் புனித பேதுருவுக்குக் கட்ட முடிவுசெய்தார். அதற்கான நிதியைத் திரட்ட ஐரோப்பா முழுவதும் பாவ மன்னிப்புச் சீட்டுகளை விற்க முடிவுசெய்தார். “நீங்கள் செய்த பாவங்கள், இனி செய்யப்போகும் பாவங்கள், மேலும் உங்கள் முன்னோர் செய்த பாவங்களையும்கூட மன்னித்து, பரலோகத்துக்குச் செல்வதற்கான கடவுச்சீட்டு இது” என விளம்பரம் செய்யப்பட்டது. மக்களின் அறியாமையைக் காசாக்க மன்னிப்புச் சீட்டு விற்க முகவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

இந்த மோசடியை எதிர்த்து ஆர்ச் பிஷப்புக்குக் கடிதம் எழுதினார் மார்ட்டின் லூதர். பலன் ஏதும் இல்லை. வேறு வழியின்றிதான் அந்தப் பிரசுரத்தை மக்கள் அறியும் வண்ணம் தேவாலயத்தில் வெளியிட்டார். பின் மார்ட்டின் லூதரின் மாணவர் ஒருவர், அதை ஜெர்மன் மொழியில் அச்சிட்டு மலிவு விலையில் நாடு முழுவதும் பரப்பினார். அது ஐரோப்பா முழுவதும் பரவியது.

எதிர்ப்பும் ஆதரவும்

‘மனம் திருந்துதல் என்பது மனதுக்குள் நடக்க வேண்டியது. இறைவனிடம் மன்றாடிப் பெற வேண்டியது. அதைப் பாவமன்னிப்புச் சீட்டு வாங்கிப் பெற முடியாது. காசு கொடுத்தோ புனித யாத்திரை மேற்கொண்டோ பெற முடியாது’ என்று பிரச்சாரம் செய்தார். இதனால் ஆத்திரமுற்ற பாதிரியார்கள் லூதரைக் கைதுசெய்ய வேண்டும், தண்டிக்க வேண்டும் எனக் கூச்சலிட்டனர்.

லூதர் மீது மரியாதை கொண்ட மன்னர் ப்ரெட்ரிக் நாடாளுமன்றத்தில் போப்பின் பிரதிநிதி கஜேட்டனுடன் விவாதம் நடத்தி முடிவுசெய்யலாம் எனக் கூறினார். விவாதத்தில் பங்கேற்ற கஜேட்டன், போப் லூதரை எரித்துக் கொல்ல உத்தரவிடுவாரென மிரட்டினார். எனவே, மன்னர் மார்ட்டின் லூதரை இரவோடு இரவாகத் தப்பச்செய்தார். தன் தலைமறைவு வாழ்க்கையிலும் தமது செயலின் நியாயத்தை விளக்கி ஒரு பிரசுரம் வெளியிட்டார் லூதர். அதில் சர்வாதிகாரியான போப் கிறிஸ்துவுக்கே எதிரானவர் என்றார்.

லீப்சிக் பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஒரு விவாதம் ஏற்பாடுசெய்யப்பட்டது. லூதரின் நியாயம் சார்ந்த வாதத்தால் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டனர். ஆத்திரமடைந்த போப்பின் ஆதரவாளர்கள் லூதரின் உருவ பொம்மையை எரித்தனர்.

மரண தண்டனை

லூதர் ‘ஜெர்மனியின் உயர் பண்பாளர்களுக்கு’ எனும் பிரசுரத்தை வெளியிட்டார். அதில் ‘போப்பின் செயல்பாடுகள் விவிலியத்துக்கே எதிரானது. அமைதிக்கான காலம் முடிந்துவிட்டது. உண்மையை உரக்கப் பேசுவோம். சத்தியத்தைக் காக்க மரணத்தையும் ஏற்போம்’ என்று எழுதினார்.

அவரது செயல்பாடுகள் காரணமாக, 1520-ல் மதத்திலிருந்தே வெளியேற்றப்பட்டார். மக்கள் போப்பின் உத்தரவைத் தீயிலிட்டுக் கொளுத்தினர். ஆனால் லூதரோ ‘இது எனக்குக் கிடைத்த விடுதலை’ என்று கூறி ‘எரித்தது ஏன்?’ எனும் பிரசுரத்தை எழுதி வெளியிட்டார்.

போப் விதித்த மரண தண்டனை குறித்து விசாரிக்க லூதரை ஜெர்மன் சக்ரவர்த்தி நாடாளுமன்றத்துக்கு அழைத்தார். லூதர் தமது தரப்பின் நியாயத்தை மூன்று மணி நேரம் விளக்கினார். “போப்புக்கு எதிராக எழுதப்பட்ட பிரசுரங்கள் யாவும் இயேசுவின் போதனைகளின் அடிப்படையிலேயே அமைந்தன. எனவே, அவற்றைச் சத்தியத்தின் வழியில் தொடர்ந்து பிரசுரிப்பேன்’’ என்று உறுதியுடன் கூறினார். போப் நான்காம் முறையும் லூதருக்கு மரண தண்டனை விதித்தார்.

இதையடுத்து, லூதரின் நூல்களைத் தடைசெய்து, அவரை உயிருடன் எரிக்க சக்ரவர்த்தி சார்லஸ் உத்தரவிட்டார். ஆனால், ஜெர்மனியின் ப்டெரிக் மன்னர் லூதரைத் தன் கோட்டையில் மறைத்து வைத்துக் காப்பாற்றினார். தலைமறைவு வாழ்க்கையின்போதும், ‘திருமணமற்ற துறவு தேவையற்றது. வேதாகமம் வலியுறுத்தாது. பழைய ஏற்பாட்டில் முன்னோர்கள் அனைவருமே திருமணமானவர்களே’ என்று எழுதினார்.

எளிய மக்களுக்காக…

1522-ல் புதிய ஏற்பாட்டையும், பின் 1523-ல் முழு பைபிளையும் தனது தாய்மொழியான ஜெர்மனியில் மொழி பெயர்த்து வெளியிட்டார். எளிமையான மொழியில், மலிவாகக் கிடைத்த விவிலியம், லத்தீன் எனும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, சாதாரண மக்களைச் சென்றடைந்தது. மொழியாதிக்கத்துக்கு எதிரான லூதரின் போராட்டம் என்றும் பொருந்தக் கூடியதே.

லூதர் தலைமறைவாக இருந்த காலத்தில், அவரது தொண்டர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு, தேவாலயங்களை இடித்தனர். பாதிரிமார்களை தாக்கிக் கொன்றனர். லூதர் தன் உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் வெளியே வந்து, ‘தேவனின் பாதைக்கு எதிரானது வன்முறை. அன்பு வழியே இயேசுவின் வழி’ என்று எட்டு நாட்கள் நாடு முழுவதும் பயணித்துப் பிரச்சாரம் செய்தார். ஜெர்மனி பெரும் ரத்த வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்டது. லட்சக்கணக்கான மக்களும், பாதிரிமார்களும், கன்னியாஸ்திரீகளும் மனம் மாறி, சீர்திருத்த மார்க்கத்தை ஏற்றனர். முதன்முதலாக ஜெர்மனியில் ஜெர்மன் மொழியில் பிரார்த்தனை நடத்தப்பட்டது.

போப் லியோ திடீரென மரணமடைந்தார். பின் வந்த போப் அதிரியானும் லூதர் கொல்லப்பட வேண்டுமென உத்தரவிட்டார். 1525-ல் நிலச்சுவான்தாரர்களுக்கு எதிரான விவசாயிகளின் புரட்சி எழுந்தது. வன்முறையால் நிரந்தரமான மாற்றம் நடக்காது என லூதர் எச்சரித்தார். எனினும் தேவாலயங்களும், மடங்களும் இடிக்கப்பட்டன. ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.

திருமணம்

1525 ஜூன் 12 அன்று, கேத்ரின் வோன் போரா எனும் கன்னியாஸ்திரீயை மணந்தார் லூதர். சத்தியத்துக்காக மரிக்கவும் தயங்க மாட்டேன் என்றார் கேத்ரின். போப் காலமென்ட் திடீரென ஜெர்மன் சக்ரவர்த்தி சார்லஸுக்கு எதிராகப் போர் தொடுத்தார். போரில் தோல்வியுற்ற போப் ஓடி ஒளிந்தார். வாடிகன் தாக்கப்பட்டது. பேதுருவின் கல்லறை, தேவாலயம், நூலகம், மாளிகைகள் அழிக்கப்பட்டன. மன்னர், மார்ட்டின் லூதருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்துசெய்தார்.

மார்ட்டின் லூதர் விவிலியத்தை சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் வினா விடையாக எழுதி வெளியிட்டார். தொழில்புரட்சியில் கண்டுபிடிக்கப்பட்ட அச்சு இயந்திரத்தால் தேவாலயத்தில் சிறைபட்டுக் கிடந்த விவிலியம், சிறுசிறு பிரசுரங்களாக அச்சிடப்பட்டு, சாதாரண மக்களையும் சென்றடைந்தது.

ப்ராடெஸ்டெண்ட் மார்க்கம்

மார்ட்டின் லூதரின் காலத்துக்கு முன்பே போப்பின் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் பலர் போராடினர். அவர்கள் மத விரோதிகள் எனக் கூறி எரித்துக் கொல்லப்பட்டனர். மார்ட்டின் லூதரின் புரட்சியின் காரணமாக லத்தீன் மொழி ஆதிக்கம், போப்பின் சர்வாதிகாரம், வாடிகனில் நிலவிய ஊழல், மூட நம்பிக்கைகள், அடக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், புரட்சிகரமான சீர்திருத்த மார்க்கமான ப்ராடெஸ்டெண்ட் மார்க்கம் கத்தோலிக்கத்துக்கு மாற்றாக உருவானது.

ப்ராடெஸ்டெண்ட் மார்க்கத்தின் உருவாக்கத்தின் பின்னும் 25 ஆண்டுகள் மார்ட்டின் லூதர் வாழ்ந்தார். விவிலியத்துக்கான பல விளக்க நூல்களை எழுதினார். சீர்திருத்த ப்ராடெஸ்டெண்ட் மார்க்கம் பரவி வளரப் பாடுபட்டார். சமய அரசியல் மேதை எனப் போற்றப்பட்ட அவர் 1546 பிப்ரவரி 17 அன்று மரணமடைந்தார். புரட்சிகர மதச் சீர்திருத்தக்காரரான லூதரைப் போல அவரது காலத்தில் வெறுக்கப்பட்டவர் எவருமில்லை.

ஆனால், கிறிஸ்துவத்தின் மிக உன்னதமான சீர்திருத்தவாதியென அவர் உலகத்தினரால் போற்றப்படுகிறார். கத்தோலிக்க மார்க்கத்துக்கும், வாடிகனுக்கும் எதிராகப் போராடிய மார்ட்டின் லூதர் போப்புக்கு எதிரான பிரசுரத்தைத் தேவாலயக் கதவில் மாட்டிய 500-வது ஆண்டின் நினைவைச் சிறப்பிக்கும் வகையில், வாடிகனில் ஒரு தபால் தலையை வெளியிட்டார் போப் பிரான்சிஸ். மேலும் “மார்ட்டின் லூதர் மேற்கொண்ட சீர்திருத்த நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றுவது கிறிஸ்துவர்களின் கடமை’’ என்று கூறிப் பெருமைப்படுத்தினார்.

புரட்சிகர சீர்திருத்தவாதி

மகான்கள் உன்னதமான கருத்துகளைப் போதிக்கின்றனர். ஆனால், பின்னர் அதுவே மதமாக மாற்றப்படும்போது அவை தன் ஆன்மாவை இழக்கும் அவலம் ஒவ்வொரு மதத்திலும் நடப்பதைக் காண்கிறோம். ஆனால், சீர்திருத்தவாதிகள் கேடுகளை எதிர்த்து மீண்டும் மீண்டும் போராடி அறத்தை நிலைநாட்ட முயல்வதும் தொடர்கிறது.

புத்தர் தொடங்கி இயேசு, நபிகள், ராமானுஜர், வள்ளலார், விவேகானந்தர், நாராயண குரு என்று தொடரும் சீர்திருத்த மரபின் சான்றான மார்ட்டின் லூதரின் புரட்சிகரச் செயல்பாட்டின் 500-வது ஆண்டின் நினைவு இன்றும் நமக்குப் புத்துணர்வூட்டுகிறது!

- வெ.ஜீவானந்தம், மருத்துவர்,

சூழலியலாளர், மொழிபெயர்ப்பாளர்

தொடர்புக்கு: greenjeeva@yahoo.com

கிறிஸ்துவ சீர்திருத்த இயக்கத்தின் 500-வது ஆண்டு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x