நீட் தேர்வால் ‘பயிற்சி மைய மாஃபியா’ வளர்ந்திருக்கிறது! - மருத்துவர் எழிலன் பேட்டி

நீட் தேர்வால் ‘பயிற்சி மைய மாஃபியா’ வளர்ந்திருக்கிறது! - மருத்துவர் எழிலன் பேட்டி
Updated on
3 min read

நீட் தேர்வைத் தடை செய்யக்கோரும் தொடர் போராட்டத்தின் அடுத்தகட்டமாக உண்ணாவிரதப் போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளது திமுக அரசு. திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்காலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்தச் சூழலில், ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் திமுகவின் மருத்துவர் அணிச் செயலாளருமான மருத்துவர் நா.எழிலனிடம் பேசியதிலிருந்து:

நீட் தேர்வுக்கு எதிராக தீவிரமான போராட்டத்தை திமுக கையில் எடுத்திருப்பது ஏன்? - சாமானிய மக்களுக்கு மருத்துவம் சென்றடைய வேண்டும் எனில், சாமானிய மக்களையே மருத்துவர்களாக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் கொள்கை. அதன்படி, தந்தை பெரியாரின் வழிநின்று முன்னாள் முதல்வர் கருணாநிதி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதி மக்களுக்கு இடஒதுக்கீட்டையும் மதச் சிறுபான்மையினருக்கு உள் இடஒதுக்கீட்டையும் மருத்துவச் சேர்க்கையில் அமல்படுத்தினார்; கிராமப்புற மாணவர்களுக்கென மருத்துவப் படிப்பில் 15% ஒதுக்கீடு வழங்க ஆணை பிறப்பித்தார்.

+2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நேரடியாக நடைபெற்றதன் மூலம் தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பு பரவலாக்கப்பட்டது. ஆனால், இதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும், ‘தரம்’ என்ற சொல்லைத் தூக்கிப்பிடித்தும் நீட் நுழைவுத்தேர்வைப் புகுத்தினர்.

இவ்வளவு காலம் இடஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள், அது ‘கிரீமி லேய’ருக்கு மட்டும்தான் பலனளிக்கிறது என்று குற்றம்சாட்டினார்கள். அத்தகைய ‘கிரீமி லேயர்’ மட்டும்தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்பதுதான் இன்றைய நிதர்சனம்.

ஏனெனில், பட்டியல் சாதி, பழங்குடியின மாணவர்களாக இருந்தாலும் அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே நீட் பயிற்சி மையத்தில் சேர முடிகிறது. மருத்துவராகி சமூகப் பொறுப்புடன் மக்களுக்கு மருத்துவம் பார்க்கத் துடிப்பவர்களை இன்றைக்கு நீட் தேர்வு துரத்தி அடித்துக்கொண்டிருக்கிறது.

நீட் தேர்வு கடினம் என்பதால்தான், அதை நமது மாணவர்களால் வெல்ல முடியவில்லை என்கிறார்களே? - நீட் தேர்வு கடினம் என்பதால் திமுக அதனை எதிர்க்கவில்லை. இது ஒரு தகுதித் தேர்வு முறை. ஒருவர் 720 மதிப்பெண்களுக்கு 90-லிருந்து 120 மதிப்பெண் பெற்றாலே போதும், மருத்துவராகத் தகுதி வாய்ந்தவர் என்கிறது இந்தத் தேர்வு. ஆனால், 550-க்கு மேல் வாங்கக்கூடிய மாணவர்கள் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரியில் சேர முடிகிறது.

அதற்குச் சற்றே குறைவாக எடுத்தவர்கள்கூடத் தனியார் கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ.20 லட்சமும் ஐந்தாண்டுக்கு ரூ.1 கோடியும் செலுத்தக் கூடியவர்களாக இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. மறுபுறம் ஆண்டுக்கு வெறும் ரூ.13 ஆயிரத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் படிப்பை வழங்குகின்றன.

இவ்வளவு குறைந்த தொகையில் மருத்துவப் படிப்பை அரசாங்கம் வழங்கக் காரணம், பின்னாளில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து மக்களுக்கும் நாட்டுக்கும் அவர்கள் சேவைபுரிவார்கள் என்கிற தொலைநோக்குப் பார்வைதான். இந்த இலக்குடன்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி 24 அரசு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினார்.

மாநிலப் பாடத்திட்டத்தின் தரம் குறைவாக இருப்பதும் ஒரு காரணம் என குற்றம்சாட்டப்படுகிறதே? - மாநிலப் பாடத்திட்டம் என்பது ஒவ்வொரு மாநிலத்தின் பண்பாட்டுக் கூறுகளுக்கு ஏற்ப வகுக்கப்பட்டதாகும். அதில் தர வேறுபாடு பேசுவது அபத்தம். நீட் தேர்வால் மத்தியப் பாடத்திட்டம் எனும் ஒற்றைப் பாடத்திட்டம் நாடு முழுவதும் திணிக்கப்பட்டது. இதனால், மாநிலப் பாடத்திட்டத்தைப் படித்த மாணவர்கள் ஆரம்பத்தில் திணறினர்.

அதையும் மீறி மாணவர்கள் நீட்டில் வெல்கிறார்கள் என்றவுடன், பயிற்சி மையத்தில் லட்சங்கள் செலவழிக்கக் கட்டாயப்படுத்தும் விதமாக நீட் தேர்வுக்குரிய பாடத்திட்டத்தை மாற்றிவிட்டார்கள். நீட் பயிற்சி மையங்களில் ரூ.9 லட்சத்துக்கு மேல் கொட்டிக்கொடுக்கக் கட்டாயப்படுத்தும் ‘கோச்சிங் கிளாஸ் மாஃபியா’ இது.

நீட் திணிப்புக்கு முன்புவரை, தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் சேர 85% இடங்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. 15% பிற மாநில மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டு மாணவர்கள் +2 மதிப்பெண் வழியாகச் சேர்க்கப்பட்டனர்.

ஆனால், இப்போது மாநிலப் பாடத்திட்டம், மத்திய பாடத்திட்டம் என எதைப் படித்துவிட்டு வந்தாலும், நீட் மட்டும்தான் நுழைவாயில் என மாற்றப்பட்டுவிட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் டியூஷன் கட்டணத்தை ரூ.20 லட்சமாக உயர்த்திய பிறகும், இதைத் தட்டிக்கேட்க ஆளில்லை.

இதனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் இடஒதுக்கீட்டின்கீழ் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களிடமும் கட்டணக் கொள்ளை நடந்தேறிவந்தது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் இடஒதுக்கீட்டை மருத்துவப் படிப்பில் அறிமுகப்படுத்தியது அதிமுக என்றாலும், அதில் தனியார் மருத்துவக் கல்லூரிகளால் சுரண்டப்பட்ட மாணவர்களைக் காப்பாற்றி அரசே கட்டணத்தைச் செலுத்தும் என்று சட்டம் பிறப்பித்தது திமுக அரசுதான்.

இங்கு உச்ச நீதிமன்றமே நீட் கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளதே? அது மட்டுமின்றி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதானே பொது நுழைவுத் தேர்வு என்பதே அறிமுகமானது? - 2006லேயே நுழைவுத்தேர்வு ரத்து சட்டத்தை கருணாநிதி கொண்டுவந்தார். அனந்த கிருஷ்ணன் கமிட்டியின் மூலம் நுழைவுத் தேர்வு முறை கிராமப்புற மாணவர்களை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பது பற்றிய விரிவான ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்து, அதில் வெற்றி கண்டு, அன்றைய குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்த பிறகு 2008இல்தான் நுழைவுத்தேர்வு ரத்து சட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்தது.

பிறகு, பொது நுழைவுத் தேர்வை மாநிலங்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஏற்கலாம் என்று 2010இல் காங்கிரஸ் மாற்றம் கொண்டுவந்தபோதும் அதை எதிர்த்து கருணாநிதி, சோனியா காந்திக்கும் அன்றைய மனிதவளத் துறை அமைச்சர் கபில் சிபலுக்கும் கடிதம் எழுதி தமிழ்நாட்டுக்கு விலக்குபெற்றார்.

2014இல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பொது நுழைவுத் தேர்வுக்கு நீட் என பெயரிட்டு மருத்துவ கவுன்சில் விதிமுறையில் திருத்தம் கொண்டுவந்ததன் மூலம் கட்டாயப்படுத்த முயன்றது. அப்போது தமிழ்நாடு பல்கலைக்கழகச் சட்டத்தின் அதிகாரத்தைக் கொண்டு ஜெயலலிதா அதை விரட்டியடித்தார்.

அவரது மறைவுக்குப் பிறகு நீட் திணிப்பை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் இருவர் நீட் வேண்டாம் என்று தீர்ப்பளித்தனர். அதிலும் மேனாள் நீதிபதி அல்டமாஸ் கபீர், நீட் எவ்வளவு ஆபத்தானது, சமத்துவத்துக்கு எதிரானது என்றே விரிவாக எடுத்துரைத்துத் தீர்ப்பளித்தார்.

அவர் ஓய்வுபெற்றதை அடுத்து உச்ச நீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பை மாற்றி எழுதி நீட் செல்லும் என உத்தரவு பிறப்பித்தது. இதையொட்டி பாஜக அரசு நீட் கட்டாயம் என்கிற சட்டத்தை நாடாளுமன்றத்தில் விரைந்து நிறைவேற்றியது.

இதற்கு பாஜகவை மட்டும் பொறுப்பாக்குவது சரியா? - அரசமைப்பின்படி பொதுப் பட்டியலில் உள்ள ஒரு பிரச்சினை நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் முரண்பட்ட விவாதத்தில் இருந்தால், அங்கு நாடாளுமன்றச் சட்டம்தான் நிறைவேறும். இந்நிலையில், கல்வி பொதுப்பட்டியலில் உள்ளதால் அதன்பின் நீட் தேர்வைத் தடுத்து நிறுத்துவது தமிழ்நாடு சட்டமன்றத்தில் சாத்தியமில்லாமல் போனது.

இதனை அடுத்து ஏ.கே.ராஜன் கமிட்டி அளித்த பரிந்துரையின்படி, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமெனில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் ரத்து மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர்.என்.ரவிக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, தற்போது நீட் ரத்து மசோதா குடியரசுத் தலைவரைச் சென்றடைந்துள்ளது.

ஆனால், இப்போது மத்திய உள்துறை அமைச்சகம், ‘நீட் தேர்வை ரத்து செய்யக்கோருவது இந்திய இறையாண்மைக்கு எதிரானது’ என்று பதில் கடிதம் எழுதியுள்ளது. அப்படியானால் நீட் திணிப்பு என்பது பாஜகவின் குறிக்கோள்தானே!

கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட்டால்தானே தீர்வு கிடைக்கும்? - இங்கு மூன்று வழிகள் உள்ளன. ஒன்று, நீட் ரத்து மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க ஜனநாயகரீதியாக அழுத்தம் கொடுப்பது. இரண்டாவது, கல்வியும் சுகாதாரமும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படுவது என்கிற நீண்டகால யுத்தம். மூன்றாவது, 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு, காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்குவந்தால் தமிழ்நாடு நீட் விலக்கை நிறைவேற்றும்.

- தொடர்புக்கு: susithra.m@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in