Last Updated : 24 Nov, 2017 10:40 AM

 

Published : 24 Nov 2017 10:40 AM
Last Updated : 24 Nov 2017 10:40 AM

ரத்த அழுத்தம்: புதிய கோட்பாடுகளும் சிக்கல்களும்!

செ

ன்ற வாரம் வரை ‘உயர் ரத்த அழுத்தம்’ எனும் நோய் உங்களுக்கு இல்லாமல் இருந்திருக்கலாம். இந்த வாரம் நீங்கள் மருத்துவரிடம் சென்றால், உங்களுக்கு அந்த நோய் உள்ளதாகச் சொன்னால் அதிர்ச்சி அடையாதீர்கள். இன்னொரு மருத்துவரிடம் ‘செகண்ட் ஒப்பீனியன்’ கேட்பதற்கு மற்றொரு மருத்துவமனைப் படி ஏறாதீர்கள். ஏனெனில், உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளதாக அவர் சொல்லவில்லை; அப்படிச் சொல்லச் சொல்கிறது அமெரிக்க இதயநல மருத்துவர்கள் சங்கம் (American Heart Association).

மருத்துவ விஷயங்களைப் பொறுத்தவரை நோய்களைத் தீர்மானிப்பதிலும், சிகிச்சை நெறிமுறைகளை வழிகாட்டுவதிலும் உலக அளவில் கோலோச்சிக்கொண்டிருப்பது அமெரிக்காதான். அங்கு பலதரப்பட்ட நோய்கள் தொடர்பாகவும் புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு குறித்தும் அரசும் தனியார் மருந்து நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதால், அடிக்கடி அங்கு ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ நிகழ்வது வழக்கம். அந்த வழியில் சென்ற வாரம் ஒரு புதிய தகவல் வந்திருக்கிறது. இதுவரை 140/90 மிமீ. பாதரச அளவு என்று இருந்த உயர் ரத்த அழுத்தத்துக்கான உச்சவரம்பை 130/80 மிமீ. பாதரச அளவு என்று குறைத்துவிட்டது அமெரிக்கா. இதன் விளைவாக, நீங்கள் மட்டுமல்ல, உலகில் பல கோடிப் பேர் திடீரென்று ஒரே நாளில் ரத்த அழுத்த நோயாளிகளாகிவிட்டனர்.

ரத்த அழுத்தம் என்றால் என்ன?

ஆற்றில் தண்ணீர் ஓடுவதுபோல நம் ரத்தக் குழாய்களில் ஓடிக்கொண்டிருக்கிறது ரத்தம். அப்படி ஓடுவதற்கு ஓர் அழுத்தம் தேவை. அந்த அழுத்தத்துக்குப் பெயர்தான் ரத்த அழுத்தம் (Blood pressure).

பொதுவாக, ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ. பாதரச அளவு என்று இருந்தால், அது வழக்கமானது. இதில் 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம் (Systolic pressure). அதாவது, இதயம் சுருங்கி ரத்தத்தை உடலுக்குத் தள்ளும்போது ஏற்படுகின்ற அழுத்தம் இது. 80 என்பது டயஸ்டாலிக் அழுத்தம் (Diastolic pressure). அதாவது, இதயம் தன்னிடம் இருந்த ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, தன் அளவில் விரிந்து உடலில் இருந்து வருகின்ற ரத்தத்தைப் பெற்றுக்கொள்கிறது. அப்போது ஏற்படுகின்ற அழுத்தம் இது.

ஆனால், ரத்த அழுத்தம் எல்லோருக்குமே சொல்லிவைத்ததுபோல் 120/80 என்று இருக்காது. உடல், எடை, உயரம் போன்றவை வித்தியாசப்படுவதுபோல, சிஸ்டாலிக் அழுத்தமும் டயஸ்டாலிக் அழுத்தமும் வித்தியாசப்படலாம். ஆகவேதான், உலக சுகாதார நிறுவனம் ( WHO ) ஒரு நபருக்கு 100/70 மி.மீ முதல் 140/90 மி.மீ. வரை உள்ள ரத்த அழுத்தத்தை வழக்கமானது என்றும், இது 140/90 மி.மீ.க்கு மேல் அதிகரித்தால் அதை ‘உயர் ரத்த அழுத்தம்’ (High blood pressure); 100/70 மி.மீட்டரைவிடக் குறைந்தால் அதை ‘குறை ரத்த அழுத்தம்’ (Low blood pressure) என்றும் வரையறுத்தது.

சமீபத்தில், அமெரிக்க இதயநல மருத்துவர்கள் சங்கம், அந்நாட்டின் இதயநோய் ஆராய்ச்சிக் கல்லூரி (American College of Cardiology) மற்றும் தனியார் ஆராய்ச்சி மையங்கள் இணைந்து ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டன. அதாவது, தொற்றாநோய்கள் என அழைக்கப்படும் நீரிழிவு, பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரக நோய்கள் போன்றவற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ அறிக்கைகளைக் கூர்ந்து கவனித்தபோது, 130/80 மிமீ. பாதரச அளவுக்கு அழுத்தம் கொண்டவர்களுக்கும் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகப் பாதிப்பு ஆகிய பிரச்சினைகள் தோன்றுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இந்த நிலைமையைத் தடுக்க உயர் ரத்த அழுத்தத்தின் உச்சவரம்பை 140/90 மி.மீ.லிருந்து 130/80 மி.மீ.க்குக் குறைத்துவிட்டனர். இதன்படி, அமெரிக்காவில் மட்டும் 32% ஆக இருந்த ரத்த அழுத்த நோயாளிகளின் எண்ணிக்கை 46% ஆக அதிகரித்துவிட்டது.

இந்தியாவில் என்ன பிரச்சினை?

உயர் ரத்த அழுத்தத்தின் பழைய உச்சவரம்பின்படியும், இந்தியாவில் 2014-ல் எடுத்த புள்ளிவிவரப்படியும் 33 கோடிப் பேர் ரத்த அழுத்த நோயாளிகளாக இருந்துவந்தனர். இப்போதைய புதிய அறிவிப்பின்படி இந்த எண்ணிக்கையில் புதிதாக 7 கோடிப் பேர் சேர்ந்துள்ளனர். இவர்களும் இப்போது உயர் ரத்த அழுத்தத்துக்கான மாத்திரைகள் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர். ஒருமுறை இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டால், வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து எடுக்க வேண்டும். அப்படி மருந்து எடுக்க ஆரம்பிப்பதற்கு முன்பு அமெரிக்க நிபுணர்களின் இந்தப் பரிந்துரை இந்தியச் சூழலுக்கு சரிவருமா என்று யோசிக்க வேண்டியது இருக்கிறது.

தனி மனிதரின் ரத்த அழுத்தம் நாட்டின் தட்பவெப் பம், வாழும் இடம், வயது, வாழ்க்கைமுறை, உணவு முறை,, உளவியல் சிக்கல்கள், பரம்பரைத் தன்மை, உடலில் காணப்படும் பிற நோய்கள் என பல்வேறு அடிப்படைக் கூறுகள் உள்ளன. இவை நாட்டுக்கு நாடு மாறுபடும். இந்தியர்களின் உயர் ரத்த அழுத்தத்தின் உச்சவரம்பை இந்திய மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும்தான் தீர்மானிக்க வேண்டும். அதுதான் பொருத்தமாக இருக்கும்.

அடுத்து, உயர் ரத்த அழுத்தத்தில் ‘வெள்ளைக்கோட்டு நோயியம்’ (White coat syndrome) என்று ஒன்று உண்டு. அதாவது, சில பயனாளிகள் மருத்துவ ரிடம் வரும்போது பரிசோதித்தால் ரத்த அழுத்தம் 130/90 எனச் சிறிது கூடுதலாக இருக்கும். இது அச்சத்தின் விளைவாக ஏற்படுவது. வீட்டுக்குச் சென்றதும் இது 120/80 என்று இயல்பாகிவிடும். இவர்களுக்கு சிகிச்சை தேவையில்லை. இனி, இந்த மாதிரியானவர்களையும் ரத்த அழுத்த நோயாளிகளாக அறிவித்து, மாத்திரைகளைப் பரிந்துரைக்க இந்தப் புதிய அறிவிப்பு வசதிசெய்து தருகிறது.

அரசின் கவனம் தேவை

வெளிநாடுகளில் மக்களின் மருத்துவச் செலவை மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வ தால் பணப் பிரச்னை இல்லை. ஆனால், இந்தியாவில் அப்படியில்லை. ரத்த அழுத்த நோய் அடித்தட்டு மக்களுக்கும் உள்ளது. ஏற்கெனவே, இந்தியச் சாமானியர் கள் மருத்துவத்துக்காகப் பெரும் தொகையைக் கடன் வாங்கியே செலவிட நேர்கிறது. இதனால், இது வாழ்வாதாரப் பிரச்சினையும் ஆகிறது. இந்தச் சூழலில், வாழ்நாள் முழுவதும் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சையாக உயர் ரத்த அழுத்த நோய் உள்ளதால், அவர்களை நோயாளிகளாக அறிவிப்பதற்கு முன்னால் இதன் பின்புலத்தில் வணிக நோக்கம் உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

முன்பு நீரிழிவு நோய்க்கான ரத்த சர்க்கரை சராசரி அளவைக் குறைத்தார்கள். அதனால் நீரிழிவு நோயாளி கள் இந்தியாவில் அதிகரித்தனர். கொழுப்பின் அளவைக் குறைத்தார்கள். அதனால், ரத்தக் கொழுப்பு அதிகமுள்ளவர்கள் அதிகரித்தனர். இந்த நோய்களுக்கான மாத்திரைகளின் வணிகம் உச்சத்துக்குச் சென்றது. இப்போது ரத்த அழுத்த அளவைக் குறைத்திருக்கின்றனர். இனி, இந்தியாவில் ரத்த அழுத்த நோயாளிகளும் அதிகரித்திருப்பதாக அறிவித்து அதற்கான மாத்திரை, மருந்து வணிகத்தைக் கூட்டுவார்கள். இது அயல்நாட்டு மருந்து நிறுவனங்களின் வாயில் சர்க்கரை போட்டதுபோல் ஆகிவிடும்.

எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிடுவது அவசியம். தேவையான நிதியை ஒதுக்கி ஆராய்ந்து, இந்திய மருத்துவர்களுக்குச் சரியான பாதையைக் காட்ட வேண்டும். மக்களும் மருத்துவர்களும் எதிர்பார்ப்பது இதைத்தான்!

- கு.கணேசன், பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x