

நான் மாந்திரீகக் குடும்பப் பின்னணியில் வாழ்ந்து வருவதால் ஒன்றுக்கொன்று தொடர்புடைய அறுபடாத கண்ணிகள் இணைந்த ஒரு மாலை வடிவமாக மாந்திரீகம், வைத்தியம், வர்மம், அகக்குறி, முகக்குறி, நிறக்குறி, கைக்குறி இவை அனைத்தையும் கண்டும் கேட்டும் வளர்ந்து வந்துள்ளேன். இவை என்னுள் மனோதத்துவம், உடல்கூறு, மருத்துவம், அகம், புறம், எதிர் அழகியல், எதிர்க் கலாச்சாரம் சார்ந்தும் என்னுள் இயங்கிக் கொண்டிருந்தன என்பதைப் பிற்காலத்தில் உணரத் தொடங்கினேன். இந்த ரசமாற்றம் என்னுடைய கவித்துவ இயங்குதலுக்கும் மொழி ஆளுமைக்கும் இயல்பாக வலுச் சேர்த்திருந்தன.
பால்ய கால நண்பர்களோடு ஐந்து மணிக்கு மேல் நாங்கள் படித்த பள்ளித் திண்ணையில் கூத்தடித்துக் கொண்டிருக்கையில், அவரவர் சினிமா பாடல்களின் வரிகளை மாற்றிப் பாடிக்கொண்டிருக்கையில்
‘கறுப்பு நெறம் புடிச்சா
வங்க மனம் சுத்தமுங்க
கறுப்புக்கு ஏழழகு
எங்க சாதிசனம் சொன்னதுங்க
எங்க பாட்டி பேரு கறுப்பிசைக்கி
எங்க மூப்பன் பேரு கருமலையான்’ என்று பாடினேன்.
‘கழுத்தில் சுருக்கிட்டு / அவர்கள் உன்னை / இழுத்துச் செல்லுகையில் / உனது உறுமியால் / அவனது / குதிரைமுகத்தை / அடித்து நொறுக்குவாய் / என நினைத்தேன் / எனது / பன்றியின் / அழகுடையவளே / ஓணான் அழகுடையது / அணில் அழகற்றது - அதுபோன்று. / ...எல்லாம் இங்கு சதைப் பிண்டமானதடா / காலில் குத்தியது ரோஜா கம்பு / கொம்பில் பூவில்லை / எடுத்து எறிய யோசித்தேன் / இதயத்தில் பூந்தோட்டம் / சொற்களால் / கூர்தீட்டப்பட்ட கவிதைகளை / எனது / அம்பறாத்தூளிக்குள்/ பதுக்கிவைத்திருக்கிறேன் / நேற்று வைத்த முள்ளும் தலையும் / மரச்சீனிக்கிழங்கும்/ பழங்கஞ்சியிலிட்டு / விரவி / வாரிக் குடித்து விட்டு / பீ அள்ளப்போகும் / எனது கவிதை /.
இப்படித் தொடர்ந்து மனிதர்களால் ஒதுக்கப்பட்டவர்களும் பறவை விலங்குகளும் புழு பூச்சிகளும் என்னுடைய கதாபாத்திரங்கள் ஆனார்கள். இவை எல்லாமே நான் 90களுக்கு முந்தைய காலகட்டத்தில் எழுதிப் பாடியவை. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தொடர்பு கிடைத்த முதல் மேடையிலேயே மிக நடுக்கத்துடனும் தயக்கத்துடனும் பாடலைப் பாடவும் கவிதைகளை வாசிக்கவும் செய்தேன்.
பயங்கரமான கரவொலி எழுந்தது. தத்துவவாதிகளும் விமர்சகர்களும் படைப்பாளிகளும் பேராசிரியர்களும் இயக்கவாதிகளும் கூர்மை யான வாசகர்களும் அந்த கவிதை வரிகள் வாசகர் மனதில் கடத்திவிடுகின்ற தன்மை குறித்தும் அவை ஏற்படுத்தும் வினைகள் குறித்தும் தத்துவப் பின்புலத்தில் நின்றுகொண்டு விரிவாகப் பேசினார்கள்.
வீட்டில் திட்டு வாங்கிக்கொண்டு ஊர் சுற்றிக்கொண்டிருந்த நான், இப்படி எல்லாம் எழுதியிருக்கிறேனா என்று
வியப்புடன் மிதந்தேன். படையல் வைக்காமலேயே மனம் சல்லடம் பூட்டி ஆடியது.
எனது கவிதைகள் அச்சேறியதைவிட இரட்டிப்பு மகிழ்ச்சியடைந் தேன். தொடர்ந்து ‘தாமரை’ இதழில் ஒரு கவிதை அச்சேறியது. ‘வனமாலிகை’யில் தொடர்ந்து கவிதை விமர்சனங்கள் எழுதினேன். எனது கவிதைகளுக்காகவும் அது சார்ந்த மதிப்புரைகளுக்காகவும் சேர்த்து ‘சுந்தர சுகன்’ எனக்கு இரண்டு பக்கத்தை ஒதுக்கித் தந்தது. இதில் பல பாடல்கள் சற்றுத் திருத்தப் பட்டு நேரடிக் கவிதைகளாகவும், சில பாடல் களாக்கப்பட்டும் மேடைகள் தோறும் பாடப்
பட்டன. ‘கறுப்பு நெறம்புடிச்சா’ பாடல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூலம் வெளியிடப்பட்ட ‘வயலோரப் பாடல்கள்’ என்கிற ஒலிப்பேழையாகத் தமிழகம் எங்கும் வலம் வந்தது. ஒரு இயக்குநர் என்னிடம் அந்தப் பாடலைத் திரைப்படத்தில் பயன்படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் அழைத்துச் சென்றார்.
அவர் அந்த வரிகளைக் கேட்டு முடித்ததும் ‘என்ன இது கறுப்பு கறுப்பு என்று பல்லவியே அபசகுனமாக இருக்கிறதே’ என்று சொன்னது, அந்த இயக்குநரைக் கோபமூட்டியது. இயக்குநர் என்னிடம் வருத்தம் தெரிவித்தார். ‘கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள்’ என்றேன்.
இந்தப் பாடல்களின் வழியாக நான் கவித்துவத்தைச் சென்றடைந்தேன். தொடக்க காலத்தில் நான் எழுதிய பல கவிதைகள் மேலும் மெருகேற்றப்பட்டு ‘தெறி’ என்கிற முதல் கவிதைத் தொகுப்பாகக் கலை இலக்கியப் பெருமன்ற ‘திணை’ வெளியீடாகத் தமிழ்ச் சூழலுக்கு அறிமுகமானது. இந்தத் தொகுப்பு தமிழில் வந்த முதல் தலித் கவிதைத் தொகுப்பு என்று பலரும் பதிவுசெய்தனர். நிலங்களும் உடல்களும் சுரண்டப்படுவதை இந்தத் தொகுப்பு பதிவுசெய்தது; ஒடுக்கப்பட்டவரின் எதிர்வினைகளையும் காதலையும் நட்பையும் பதிவுசெய்தது. கண்கட்டு வித்தைகளும் பேய்ப் பிசாசுகளும் நடுகல் தெய்வங்களும் தங்கள் இருப்பை இந்தத் தொகுப்புகள் வழி பேசிக்கொண்டன.
முதல் தொகுப்பு வெளிவந்த மாத்திரத் திலேயே அது அனைவராலும் கவனிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், புதுச்சேரி கண்ணன், அ.மார்க்ஸ், எழுத்தாளர் சுந்தர ராமசாமி, கவிஞர் அறிவுமதி என இன்னும் பல பரந்துபட்ட படைப்பாளிகளின் நட்பு வட்டம் உருவானது. தொகுப்பை வாசித்த தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறையில் இயக்குநராக இருந்த அருட்பணியாளர் ஜெயபதி, கல்லூரியில் என்னைப் பணிக்கு அமர்த்தினார். ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு படைப்பாளிக்குக் கல்லூரியில் வேலை வாங்கித் தந்திருக்கிறது என்று பலரும் பதிவுசெய்தனர்.
மேலும், செம்மணி கலைக் குழுவினர் திறந்தவெளி மேடையில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் இக்கவிதைகளை நாடகமாக நிகழ்த்தினர். அங்கு வந்த இயக்குநரும் நடிகருமான வேலு பிரபாகரன், நாடகத்தைப் பார்த்துவிட்டுத் தன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தார்.
வீடும் நண்பர் வட்டமும் என்னை வியந்து பார்த்தது. அதிலுள்ள கவிதைகள் கல்லூரிப் பாடத்திட்டங்களில் இணைக்கப்பட்டன. கல்லூரிக் கருத்தரங்குகளுக்குப் பேச அழைக்கப்பட்டேன். பொறுப்பற்று திரிந்துகொண்டிருந்த என்னை ஒழுங்குபடுத்தி, ஒரு தனித்த அடையாளத்தைத் தந்த முதல் கவிதைத் தொகுப்பு ‘தெறி’ - அந்த வெப்பம் தணியாமல் இன்னும் எழுதிக்கொண்டும் வாசித்துக்கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறேன்.
- கவிஞர்,
தொடர்புக்கு: ndrajkumar2666@gmail.com