Last Updated : 13 Nov, 2017 09:23 AM

 

Published : 13 Nov 2017 09:23 AM
Last Updated : 13 Nov 2017 09:23 AM

கேடலோனியா: சுதந்திரமா, பின்னடைவா?

ஸ்

பெயினின் கேடலோனியா மாகாணத்தவர் தனிநாடு பிரகடனத்தை வெளியிட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் நிலையில், இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்று புரியாமல் திகைத்து நிற்கிறது ஐரோப்பிய ஒன்றியம். கடந்த அக்டோபர் 27 அன்று கேடலோனியா நாடாளுமன்றம் தன்னுடைய பிரதேசம் தனி நாடாக ஆகிவிட்டதாகவும் தாங்கள் இனி கேடலோனியக் குடியரசு என்று அழைக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலம் ஸ்பெயினின் தளைகளை முறித்துக்கொண்டு சுதந்திரம் பெற்றுவிட்டதாக முழங்கியது.

தொழில் வளம் மிக்க தங்களுடைய பகுதியின் கனிம வளத்தையும் நிதி வளத்தையும் உறிஞ்சும் ஸ்பானிய அரசு தங்களுடைய மாகாணத்துக்குப் போதிய நிதியையும் செயல்பாட்டு அதிகாரத்தையும் அளிக்காததால், தங்களுடைய நாடாளுமன்ற (மாகாண சட்டமன்றம்) சட்டத்தில் உள்ளபடி பிரிந்து செல்வதற்கான கருத்தறியும் வாக்கெடுப்பில் கிடைத்த பெரும்பான்மை முடிவுக்கு ஏற்ப, சுதந்திரத் தைப் பிரகடனம் செய்வதாக உலகுக்கு அறிவித்தது.

முடக்கப்பட்ட சுதந்திரக் குரல்

இதனால் ஆத்திரமடைந்த ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் அரசியல் சட்டத்தின் 155-வது கூறு அளிக்கும் அதிகாரப்படி, கேடலோனிய நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டார். மாகாணத்தின் நிர்வாகத்தை நேரடியாக எடுத்துக் கொண்டார். அந்த அரசில் பதவியிலிருந்து அமைச்சர்களைக் கைதுசெய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். புதிய நாடாளுமன்றத் தேர்தல் வரும் டிசம்பர் 21-ல் நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறார். கேடலோனிய நாடாளுமன்றத்தின் சுதந்திரப் பிரகடனத்துக்கு ஆதரவாக அந்த மாகாணத்தில் மக்கள் வீதிகளில் திரண்டு ஊர்வலம் சென்று, ஸ்பெயின் அரசின் அடக்குமுறையை எதிர்த்து கோஷங்கள் எழுப்புகின்றனர். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டிலும் பிற மாகாணங்களிலும் ஸ்பெயின் துண்டாடப்படக் கூடாது என்று கருதும் தேச பக்தர்கள் கேடலோனியப் பிரிவினைவாதிகளைக் கண்டித் தும் சுதந்திரப் பிரகடனத்தை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்புகின்றனர்.

சுதந்திரப் பிரகடனம் வெளியான பிறகு, கேடலோனிய அரசில் அமைச்சர்களாக இருந்தவர்களில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மட்டுமின்றி பிரதமராகப் பதவி வகித்த கார்லஸ் பியுஜிடிமான்ட் மீதும் தேசத்துரோகம், ஸ்பெயின் அரசுக்கு எதிராக மக்களைக் கலகம் செய்யத் தூண்டியது, அரசின் பணத்தைப் பிரிவினை நடவடிக்கைகளுக்காகத் தவறாகப் பயன்படுத்தியது ஆகிய குற்றங்களைச் செய்ததாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே கார்லஸ் பியுஜிடிமான்ட் அண்டை நாடான பெல்ஜியத்தில் அரசியல் தஞ்சம் புகுந்துவிட்டார். ஆனால் அந்த நாட்டின் பிரதமர் சார்லஸ் மைக்கேல், “பியுஜிடிமான்ட் தானாகவே வந்தார், பிற ஐரோப்பியக் குடிமகன்களைப் போலவே இங்கு இருக்கிறார், பெல்ஜிய அரசு ஸ்பெயினின் உள் விவகாரங்களில் தலையிடவோ, பியுஜிடிமான்டுக்கு அரசியல் புகலிடம் அளிக்கவோ விரும்பவில்லை” என்று அறிவித்திருக்கிறார்.

தேசத்துரோகக் குற்றச்சாட்டின்படி மட்டும் பியூடிமான்டுக்கு அதிகபட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும். இதர குற்றச்சாட்டுகளுக்கும் இதே போல சிறைவாசம் உண்டு. இவற்றை சேர்த்தோ தனித்தனியாகவோ அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டால் பியுஜிடிமான்ட் தனது எஞ்சிய ஆயுள் முழுவதையும் சிறையிலேயே கழிக்க வேண்டும்.

கேடலோனியர்கள் அனைவருமே பிரிவினையை, அதாவது சுதந்திரத்தை ஆதரிக்கவில்லை. கடந்த மாதம் நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பில்கூட பங்கேற்றவர்களின் எண்ணிக்கைக் குறைவு; அதிலும் வாக்களித்தவர் எண்ணிக்கை மிகவும் குறைவு. காரணம், பாதி வாக்கெடுப்பின்போதே ஸ்பெயின் அரசின் மத்திய காவல் துறையினர் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்குப் பெட்டிகளைக் கவர்ந்து சென்றதுடன் வாக்காளர்களை விரட்டியடித்து, வாக்கெடுப்பை வலுக்கட்டாயமாக முடிவுக்குக் கொண்டு வந்தனர். ஆனால் ஸ்பெயின் அரசின் ஆவேசமான நடவடிக்கைகள் பிரிவினைக்கு எதிரானவர்களைக்கூட மனம் மாறச் செய்துவருகிறது. இவ்வளவு முரட்டுத்தனமாக நடக்க நாம் என்ன எதிரிகளா, இந்நாட்டின் மக்கள்தானே என்று அவர்கள் உரத்த சிந்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

டிசம்பர் 21-ல் நடைபெறவுள்ள கேடலோனிய நாடாளுமன்ற (மாகாண சட்டமன்ற) பொதுத் தேர்தலில், சுதந்திரம் கோரும் கட்சிகள் அனைத்தும் கூட்டாகப் போட்டியிட்டு மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவை வாக்குச் சீட்டுகளில் பதிவு செய்ய வேண்டும் என்று கார்லஸ் பியுஜிடிமான்ட் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது தொடர்பாக தன்னுடைய அரசில் இடம் பெற்றிருந்த தோழமைக் கட்சிகளையும் பிற கட்சிகளையும் தொடர்பு கொண்டு வருகிறார். பெல்ஜியத்தில் இருந்தாலும் தன்னால் அங்கிருந்தபடியே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியும் என்றும், பெல்ஜியத் தில் அரசியல் புகலிடம் தேடும் எண்ணம் தனக்கு இல்லையென்றும் அறிவித்திருக்கிறார்.

வலுக்கும் விமர்சனங்கள்

ஸ்பெயின் அரசு நினைப்பதைப்போல பிரிவினைவாதக் கட்சிகளுக்கு ஆதரவு கிடைக்காமல் அவை தோல்வியுற்றால்தான் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அறிவிப்புக் குப் பலன் இருக்கும். ஒருவேளை மக்கள் பெருவாரியாக பிரிவினை கோரும் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டால் ஸ்பெயின் பிரதமரால் அதற்குப் பிறகு மக்களுடைய விருப்பத்துக்கு மாறாக, எதையும் செய்ய முடியாது. ஸ்பெயின் பிரதமர் அவசரப்பட்டுவிட்டார் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதனிடையே பெல்ஜியத்தில் இருக்கும் பியுஜிடிமான்டைக் கைது செய்ய ஸ்பெயின் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி கார்மென் லாமெலா வாரண்ட் பிறப்பித்திருக்கிறார். இது ஸ்பெயின் நாட்டு வாரண்ட்; பெல்ஜியத்தில் இதற்கு என்ன செல்வாக்கு என்று தெரியவில்லை. ஐரோப்பிய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டால் என்ன ஆகும் என்ற விவாதமும் இப்போது நடந்து வருகிறது. பெல்ஜிய நாட்டுச் சட்டப்படி அந்நாட்டுக்கு வந்த ஐரோப்பியர்களைக் கைது செய்து கூட்டிச்செல்வது பிற ஐரோப்பிய நாடுகளுக்கு எளிதான காரியம் அல்ல. அவ்வளவு சட்ட நடைமுறைகள். எனவே அரசியல் புகலிடம் கோராமலேயே பியுஜிடிமான்ட் சில மாதங்களுக்கு அங்கேயே தங்கியிருக்க முடியும் என்று தெரிகிறது.

‘கைது செய்யப்பட்ட கேடலோனிய அரசின் முன்னாள் அமைச்சர்களை சிறையில் மோசமாக நடத்துகின்றனர், ஆடைகளை முழுதாகக் களையவைத்து சோதனையிட்டனர், மரியாதைக் குறைவாகப் பேசினர், கடுமையாக ஏசினர்’ என்றெல்லாம் கைதானவர்கள் வெளியில் இருப்பவர்களுக் குத் தகவல்களை அனுப்பியுள்ளனர். கேடலோனிய சுதந்திரப் பிரகடனத்தை ஏற்காத பிற ஐரோப்பியர்கள் கூட ஸ்பெயின் அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளைப் பார்த்து முகம் சுளிக்கின்றனர். பிரிவினை கோருகிறவர்களிடம் சுமுகமாகப் பேசித் தீர்ப்பதை விட்டுவிட்டு ஏன் இப்படி பிரச்சினையை வளர்த்துக் கொண்டே போகின்றனர் என்று அங்கலாய்க்கின்றனர். அதே சமயம், உலகின் எந்த நாட்டிலும் இப்படி உள் விவகாரம் நடந்தால் ‘பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்’ என்று உபதேசிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் இப்போது தனக்கே தலைவலி வந்த பிறகு ஏன் மூலையில் ஒடுங்கப் பார்க்கிறது என்று ராஜீய வட்டாரங்கள் கேலி பேசுகின்றன.

அடுத்தது அமெரிக்காவா?

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மார்டி அத்திசாரியும் இந்த நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்திருக்கிறார். “கேடலோனியாவுக்கு சுதந்திரம் என்பது முட்டாள்தனமான சூதாட்டம், இதனால் மற்றவர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன; அதே வேளை ஸ்பெயின் அரசு நிகழ்த்தியுள்ள எதிர்வினை முரட்டுத்தனமாக இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள உள்விவகாரம் இப்போது வேறு சில பிரிவினை எண்ணமுள்ள மாகாணங்களுக்கும் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்திலும் இப்போது பிரிவினையாளர்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர். அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிராகவும் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாகவும் பெரும்பாலானவர்கள் வாக்களித்த மாகாணம் கலிபோர்னியா. அமெரிக்காவிலும் மாநிலங்கள் விரும்பினால் பிரிந்து செல்ல அரசியல் சட்டம் வழிவகுத்துள்ளது. ஆனால் அதற்கு நாடாளுமன்றத்தில் திரட்ட வேண்டிய ஆதரவு வாக்குகளைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல.

கலிபோர்னியா மட்டும் வாக்களித்து பிரிந்து சென்றுவிட முடியாது. கேடலோனிய முடிவை வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறது பிரிட்டன். பிரிட்டனில் ஸ்காட்லாந்துக்காரர்கள் இப்போதே முண்டா தட்ட ஆரம்பித்துவிட்டனர். ஸ்பெயினிலேயே பிரிவினைகோரும் பாஸ்க் பகுதியினர், கேடலோனியர்களைப் போலச் செயல்படத் தவறிவிட்டோமே என்று வருத்தப்படுகின்றனர். மொத்தத்தில், கேடலோனியாவில் அடுத்து நிகழவிருக்கும் சம்பவங்கள் மேலும் சில நாடுகளில் எதிரொலிக்கும் என்றே எதிர் பார்க்கலாம்!

- வ.ரங்காசாரி,

தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x