Published : 27 Nov 2017 09:56 AM
Last Updated : 27 Nov 2017 09:56 AM

புதிய பாடம்.. புதிய பாதை?- ஆசிரியருக்கும் பயிற்சி அவசியம்

ந்தாண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டங்கள் மாற்றப்படுவது வழக்கம். சமீப காலங்களில் ஆட்சி மாறும்போதெல்லாம் பாடத்திட்டங்களும் மாறுகின்றன. 1929-யில் உருவாக்கப்பட்ட பாடத்திட்டம் 1948 வரை எவ்வித மாற்றமுமின்றி நீடித்தது. அப்போது, பாடநூல்கள் தனியாரால் வெளியிடப்பட்டு அரசு பாடநூல் குழுவினரின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அங்கீகாரம் ஐந்து ஆண்டுகளுக்கே தரப்பட்டதால் ஐந்தாண்டுக்கு ஒருமுறை பாட நூல்கள் மாறும். பொதுத் தேர்வு வினாத்தாள்கள் பாடத்திட்டத்தையொட்டியே இருக்கும். எந்த ஒரு பாட நூலிலிருந்தும் வினாத்தாள் அமைந்திருக்காது. அதனால் பள்ளியில் ஒரு பாடநூல் இருந்தாலும் ஆசிரியர்கள் பிற பாடநூல்களையும் பார்த்துப் பாடத்திட்டத்தின் பல பரிமாணங்களையும் அறிந்திருக்க வேண்டும். ஒரே பாடத்திட்டம் - பல நூல்கள் என்ற முறையில் கற்பித்தல் ஆழமாக இருக்கும்.

விடுதலைக்குப் பின் 1948-யில் செயல்படுத்தப்பட்ட புதிய கலைத் திட்டம் தேசியக் கல்வி யின் சிறப்பு அம்சங்களைக் கொண்டது. அதன் பிறகு, அந்நிய மொழி ஆங்கிலம் முதல் மொழி என்ற சிறப்பை இழந்தது. தாய்மொழி அல்லது வட்டார மொழியே முதல் மொழியானது. இங்கிலாந்து மற்றும் இந்திய வரலாறும், புவியியலும் என்ற பாடம் சமூகப் பாடமாக மாறியது. அரசர்களும் ஆண்டுகளும் வரலாறு அல்ல, மனிதனின் வாழ்வும் வளர்ச்சியுமே வரலாறு என்று மண் ணுக்கும் மாந்தர்க்கும் உள்ள உறவினை அறியும் வகையில் பாடத்திட்டம் அமைய வேண்டுமென்று குறிக்கோள் வைக்கப் பட் டது. ஆனாலும் சமூகப் பாடம் என்ற பெயரில் வரலாறு, புவியியல் தனித்தனிப் பாடங்களாகவே இன்று வரை தொடர்கின்றன.

நாட்டுப் பற்றை மையமாகக் கொண்ட குடிமைப் பயிற்சி என்ற செயல் திட்டமும் இடம்பெற்றது. ஒவ்வொரு ஆசிரியரும் 7 அல்லது 10 நாட்கள் குடிமைப் பயிற்சி முகாமுக்குச் செல்ல வேண்டுமென்ற விதி ஆசிரியர்களின் ஒட்டு மொத்த எதிர்ப்பையும் எதிர்கொண்டது. அதே போல ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு தொழில் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதையும் ஏற்க மறுத்தார்கள்.

பள்ளி நிர்வாகத்தில் மாணவர்க்குப் பங்களிக்கப்பட்டது. இதுபோல பல சிறப்பு அம்சங்களைக் கொண்டிருந்தும் அப்பாடத்திட்டம் கைவிடப்பட்டது. 1971 வரை பல பாடத்திட்டங்கள் வந்தாலும் அவை வெறும் பூச்சு வேலையாகவே இருந்தன.

தமிழகத்தின் புதுமுயற்சி

சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் செயற்கைக்கோளை ஏவியது அமெரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குடியரசுத் தலைவர் அமைத்த உயர்மட்டக் குழு சோவியத் மாணவர்களது கணிதம், அறிவியல் திறன்களே காரணமென்று அமெரிக்க மாணவரது எளிய பள்ளிக் கல்விமுறையைக் கடுமையாக்கப் பரிந்துரைத்தது. புதிய பாடநூல்கள் உருவாக்கப்பட்டன.

அவற்றின் இந்தியப் பதிப்புகளை வெளியிட என்.சி.ஈ.ஆர்.டி.க்கு அனுமதி அளிக்கப்பட்டதுடன் அதன் பேராசிரியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது. இங்கிலாந்தில் நஃபீல்ட் நிறுவனம் மிகச் சிறந்த அறிவியல் நூல்களை வெளியிட்டது. அது போலவே கணித பாடங்களுக்கும் மாணவர் பங்கேற்பு அமையும் வகையில் நூல்கள் வெளிவந்தன.

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கமொன்று, அரசு முன்வராவிட்டால் தாமே புதிய பாடத்திட்டங்களை வெளியிடுவோம் என்று அறிவித்தது. அன்றைய கல்வி அமைச்சர் நாவலர் அரசே செய்யுமென்று புதிய பாடத்திட்டக் குழுக்களை அமைத்தார்.

புதிய கணிதம், புதிய அறிவியல் இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டு தொடக்கப் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரையிலான அனைத்து ஆசிரியர்களுக்கும் 10 நாட்கள் மறு பயிற்சி வகுப்புகள் நடத்தப் பெற்றன. இது பாடத்திட்ட மாற்றத்தில் புதுமையான முயற்சியாகும். இதற்கு அடுத்து மேனிலைக் கல்வி வந்ததிலிருந்து கவனம் முழுமையும் மேனிலைப் பாடத்திற்கே செலுத்தப்பட்டது. பாடத்திட்ட மாற்றங்கள் வகுப்பறைக் கற்பித்தலை மேம்படுத்தியதாகத் தெரியவில்லை.

பாடநூல்களே வேதம்?

‘நீட்’ பிரச்சினை பாடத்திட்டங்கள் பற்றிய கவலையை உருவாக்கியது. தமிழ்நாடு பாடத்திட்டம் தரமற்றது என்று விமர்சிக்கப்பட்டு புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது விடுதலைக்குப் பின் 15-வது பாடத்திட்டமாற்றம். பாடத்திட்டங்களில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இன்று பெரும்பான்மையான ஆசிரியர்கள் பாடத்திட்டங்களைப் பார்ப்பதே இல்லை என்பதுதான் உண்மை. பாடநூல்களே அவர்களுக்கு வேதம். எனவே, பாடத்திட்ட நோக்கங்களை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் பாடநூல்கள் அமைதல் வேண்டும். 30-க்கும் மேற்பட்ட பாடநூல்கள் இருந்த காலம் போய் ஒரே ஒரு பாடநூல் என்ற நிலையில் பாடநூல் தயாரிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

வகுப்பறைக் கற்பித்தல் என்பது தேர்வை மையமாகக் கொண்டிருப்பதால், தேர்வு சீர்திருத்தமின்றி எவ்வித மாற்றமும் பயனளிக்காது. பாடத்திட்டத்தில் மறுபயிற்சி அளிப்பதை விட ஆசிரியர்களுக்கு வினா அமைப்பு முறைகளில் சீரிய பயிற்சி அளிப்பதே அவசியம்.

- ச.சீ.இராஜகோபாலன், கல்வியாளர்,

தொடர்புக்கு: rajagopalan31@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x