Last Updated : 15 Nov, 2017 09:26 AM

 

Published : 15 Nov 2017 09:26 AM
Last Updated : 15 Nov 2017 09:26 AM

குடிநீர் வழங்கலும் கழிவுநீர் அகற்றலும்: சுகாதாரத்தின் இரு கண்கள்!

மிழகத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்படுத்திய பாதிப்பு, கொசு ஒழிப்பு எவ்வளவு முக்கியமானது எனும் பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது. நன்னீர்க் கொசுக்கள் டெங்குவுக்குக் காரணம் என்றால், சாக்கடைக் கொசுக்கள் பல்வேறு நோய்களுக்குக் காரணமாக இருக்கின்றன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளில் பாதிப் பேர், கழிவுநீர் மற்றும் கொசுப் பிரச்சினையால் நோய்த் தாக்குதலுக்கு உள்ளானவர் கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு தனிமனிதன் பயன்படுத்துகிற தண்ணீரில் 80% கழிவுநீராக வெளியேற்றப்படுகிறது. மாநகராட்சிப் பகுதியில் வாழும் மக்களுக்கு நாளொன்றுக்கு ஒரு நபருக்குத் தலா 135 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும் என்று மத்தியப் பொதுச் சுகாதார பொறியியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு வலியுறுத்துகிறது. இதேபோல நகராட்சியில் நபருக்கு 90 லிட்டர், பேரூராட்சிகளில் 70 லிட்டர், கிராமங்களில் தலா 40 லிட்டர் என்ற வீதத்தில் தண்ணீர் வழங்கும் வகையில் தமிழகத்தில் திட்டமிட்டு குடிநீர்த் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. குடிநீர்ப் பயன்பாட்டில் 80% கழிவாகிறது என்ற கணக்குப்படி பார்த்தால், தமிழகத்தில் ஒருநாளைக்கு 3,000 மில்லி யன் லிட்டர் கழிவுநீர் உருவாகிறது. இவை முறையாக அகற்றப்படாததுதான், சுகாதாரக் கேட்டுக்கும் கொசுவால் பரவும் நோய்களுக்கும் அடிப்படை.

லூர்து அம்மாள் சைமன் குழு

தமிழகத்தைப் பொறுத்தவரையில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்தான் முதன்முறையாகக் குடிநீர்த் திட்டங்களும், பாதாள சாக்கடைத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. சுதந்திரத்துக்குப் பிறகு ஏராளமான குடிநீர்த் திட்டங்கள் தொடங்கப்பட்டன என்றாலும், கழிவுநீரை அகற்ற உரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. 1952 கணக்குப்படி, 29 நகராட்சி, 8 ஊராட்சிகளில் மட்டுமே குடிநீர்த் திட்டங்கள் இருந்தன. கழிவுநீர் வாய்க்காலைப் பொறுத்தவரையில் அதை விடக் குறைவாக எட்டு நகராட்சிகளிலும் ஒரே ஒரு ஊராட்சி யில் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. இதனால், கொள்ளை நோய்கள் பரவியதுடன், ஆண்டுதோறும் சுகாதாரத்துக்கான செலவுகளும் அதிகரித்தன.

இதைக் கருத்தில் கொண்டு கடந்த 1960-ல் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் லூர்து அம்மாள் சைமன் தலைமையில், மத்திய அரசு ஒரு குழு அமைத்தது. இந்தக் குழு இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரட்டிய தகவல்களின் அடிப்படையில், ஒரு அறிக்கை தந்தது. ‘குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்தும்போது, அதனால் உருவாகும் கழிவுநீரை அகற்ற வேண்டியது அரசின் கடமை. எனவே, குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றம் இரண்டு பணிகளும் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையென்றால், கொசு ஒழிப்பு, நோய்க் கட்டுப்பாடு என்று தேவையற்ற வகையில் அரசுக்குச் செலவினம் ஏற்படும்’ என்று எச்சரித்தது அந்த அறிக்கை.

அக்கறையின்மை

இந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்தான், ஒவ்வொரு மாநிலத்திலும் குடிநீர் மற்றும் வடிகால் வாரியங்கள் தொடங்கப்பட்டன. அதற்கு மத்திய - மாநில அரசுகள் மானியங்களும் வழங்கிவருகின்றன. குடிநீர் வடிகால் வாரியத்தை நாட்டிலேயே முதன்முறையாகத் தொடங்கிய மாநிலம் என்ற பெருமை தமிழகத்துக்கு உண்டு. ஆனால், திட்டங்களை ஏனோதானோவென்று செய்வது வாரியத்தின் பின்னடைவுக்குக் காரணமாகிவிட்டது. குடிநீர் விநியோகத்தில் காட்டிய அக்கறை கழிவுநீர் அகற்றலில் காட்டப்படவில்லை.

தமிழ்நாட்டில் பல பாதாள சாக்கடைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், பல இடங்களில் அவை முழுமை யாக நிறைவேறவில்லை. பெரும்பாலான நகரங்களில் இத்திட்டம் வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகிறது. சாலைகளும் உருக்குலைந்துவிட்டன. இந்தக் குளறுபடிகளை எல்லாம் அனுபவித்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், 2000 முதல் 2010 வரை தமிழகத்தில் பாதாள சாக்கடைத் திட்டங்களைச் செயல்படுத்தியதில் கிடைத்த படிப்பினைகளைப் பட்டியலிட்டது. பின்னர், அதை அதிகாரபூர்வ ஆவணமாகவே (வாரிய ஆணை எண் 6/நாள் 9.02.2011) வெளியிட்டது.

‘தமிழகத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் மாவட்டத் தலைநகரங்களில் தமிழக அரசு எடுத்துக்கொண்ட பாதாள சாக்கடைத் திட்டங்கள் மொத்தம் 30. ஆனால் அதில், வெறும் 7 திட்டங்கள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளன. உள்ளாட்சி நிறுவனங்களின் நிதி ஆதாரத்தைக் கவனத்தில் கொள்ளாமல், திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்ட மேலும் 25 திட்டங்கள் ரத்துசெய்யப்பட்டன. பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளின்போது சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கவே ரூ.3,000 கோடி நிதி தேவைப்பட்டது. ஒரு திட்டத்தை நிறைவேற்ற 6 ஆண்டுகளும், சாலையைச் சீரமைக்க 12 ஆண்டுகளும் ஆகிவிடுகின்றன’ என்று குறிப்பிட்டது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்.

மேலும், ‘திட்டத்தை மேற்பார்வையிட போதிய பணியாளர்கள் இல்லாததால், கண்காணிப்பில் குறையிருக்கிறது. எனவே, அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் புதிய பாதாள சாக்கடைத் திட்டங்கள் எதனையும் மேற்கொள்ளப்போவதில்லை என்று தனக்குத்தானே கட்டுப்பாடு விதித்துக்கொள்ள வேண்டும்’ என்று பிப்ரவரி 2011-ல் தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தது வாரியம்.

வேதாளமும் முருங்கை மரமும்

காரணம் சிவகங்கை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகை, தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற ஊர்களில் சுத்திகரிப்பு நிலையத்துக்கு இடம் தேர்வுசெய்யாதது, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெறாதது போன்ற காரணங்களால் திட்டப் பணிகள் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் கிடக்கின்றன. அதுமட்டுமின்றி, பணி தாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு கழிவுநீரைச் சேகரிப்பது, சுத்திகரிப்பது போன்ற பணிகளை ஒருங்கிணைத்து ஏலம் விட வேண்டும். பேருந்து வழித்தடம், மார்க்கெட், மருத்துவமனை, பள்ளிகள் உள்ளிட்ட முக்கியமான சாலைகளில் 60 மீட்டர் வரை தோண்டி பணிகளை முடித்துவிட்டுத் தான் அடுத்த இடத்தில் தோண்டவேண்டும் என்று பரிந்துரைத்தது. பாதாள சாக்கடைத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கும்போதே, சாலைக்கும் சேர்த்து மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டும் என்றும் சொன்னது. ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இத்தடையை நீடிப்பது குறித்து ஆய்வுசெய்யலாம் என்றும் அது கேட்டுக்கொண்டது.

2011-ல் ஆட்சி மாறியதும் 30.6.11 அன்று திடீரென புதிதாக 638 பாதாள சாக்கடைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. 27.7.2011-ல் அது 662ஆக அதிகரிக்கப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளுக்குப் புதிய திட்டமே அறிவிக்கக் கூடாது என்று சொன்னதை மறந்துவிட்டு, 662 திட்டங்களை அறிவித்துவிட்டார்கள். ஏற்கெனவே தடையிருப்பதை மீறி இப்படியொரு அறிவிப்பு வெளியிடலாமா என்று சர்ச்சை உருவான பிறகு, அவசர அவசரமாக அந்தத் தடை நீக்கப்பட்டது. 638 ஊர்களில் பாதாள சாக்கடைத் திட்டங்களை நிறைவேற்ற மொத்தம் ரூ.15,000 கோடி தேவை. இவ்வளவு நிதி உள்ளாட்சிகளிடமும் இல்லை, அவற்றுக்கு உதவும் அளவுக்குத் தமிழக அரசிடமும் நிதியில்லை. ஆக, எல்லாத் திட்டங்களும் கிடப்பில் கிடக்கின்றன. கழிவுநீர் பிரச்சினைகளை ஓரளவுக்கேனும் தீர்க்க வேண்டும் என்றால், குடிநீர் வடிகால் வாரியத்தையும் இந்த மிகப்பெரிய சிக்கலிலிருந்து மீட்க வேண்டும்.

வேலையைத் தொடங்கிய பின்னர், திட்ட மதிப்பு உயர்வதைத் தடுக்கும் பொருட்டு, நிதி ஆதாரத்தை உறுதிசெய்த பின்னரே குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டங்களை அறிவிக்க வேண்டும். பாதாள சாக்கடைத் திட்டங்களை நிறைவேற்றுவதில் குடிநீர் வாரியம் பெற்ற படிப்பினைகளையும், பரிந்துரைகளையும் பரிசீலித்து தகுந்த ஆணை பிறப்பிக்க வேண்டும். அதை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். முன்கூட்டியே மக்கள் கருத்தறியும் கூட்டம் நடத்தி, இடத்தை முடிவுசெய்த பின்னரே திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதாள சாக்கடைத் திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்படும் நிதிச் சுமை யைக் குறைத்திட தமிழக அரசு உள்ளாட்சி நிறுவனங்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.

- கே.கே.என்.ராஜன்,

தமிழ்நாடு குடிநீர் வடிகால்

வாரிய ஓய்வுபெற்ற அலுவலர். ஏஐடியுசி

தொழிற்சங்கத்தின் கௌரவத் தலைவர்.

தொடர்புக்கு: kknrajanaituc5@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x