Published : 28 Nov 2017 10:16 am

Updated : 28 Nov 2017 10:17 am

 

Published : 28 Nov 2017 10:16 AM
Last Updated : 28 Nov 2017 10:17 AM

பல்கலைக்கழகங்கள் கருத்துச் சுதந்திரத்துக்கான பீடங்கள்! - கிருஷ்ண குமார் நேர்காணல்

தே

சியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் (என்.சி.இ.ஆர்.டி.) இயக்குநராக 2005 முதல் 2010-ம் ஆண்டு வரை பணியாற்றியவர் கிருஷ்ண குமார். நாட்டில் இன்றைக்குக் கல்வி மற்றும் அது சார்ந்த கொள்கைகள் குறித்து, ஆழமாகப் பேசியும் எழுதியும்வரும் சிந்தனையாளர். தற்சமயம், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கெளரவப் பேராசிரியராக இருக்கிறார். ‘இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்’ தொடர்பாக, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் உரையாற்ற வந்தவரிடம் உரையாடியதிலிருந்து…

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், உண்மையிலேயே கல்வியை இலவசமாகவோ அல்லது கட்டாயமாகவோ மாற்றியுள்ளதா?

இந்தச் சட்டம் 2009-ல்தான் நடைமுறைக்கு வந்தது. எட்டு ஆண்டுகள் என்பது மிகவும் குறைவான காலம். எனவே, இந்தக் கேள்விக்கு, இப்போதைக்குப் பதில் சொல்ல இயலாது. ஆனால், ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இதுவரையில் நாட்டில் இயற்றப்பட்ட எந்த ஒரு சமூகச் சட்டத்தை விடவும், இந்தச் சட்டம் மிகவும் துணிச்சலான சட்டம்.

இந்தச் சட்டத்துக்காகக் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு நாம் காத்திருக்க வேண்டியிருந்தது. 1911-ம் ஆண்டு, கோபால கிருஷ்ண கோகலே, ஆண் குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று ஒரு மசோதாவை ஆங்கிலேயரிடம் சமர்ப்பித்தார். ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதற்கு ஆங்கிலேயர்கள் காரணம் அல்ல. இந்தியர்கள் தான் காரணம். அன்றைய தர்பங்கா மாகாண மகாராஜா, ‘பையன்கள் எல்லாம் பள்ளிக்கூடத்துக்குப் போய்விட்டால், எங்களின் விவசாய நிலங்களை எல்லாம் யார் கவனிப்பது?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பிறகு 1948-ம் ஆண்டு நமது அரசியலமைப்புச் சட்டம், இலவச, கட்டாயக் கல்வி உரிமையை நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி வழங்கவில்லை. பிறகு 80 மற்றும் 90-களில், நீதித் துறையின் தலையீட்டால், இப்படி ஒரு சட்டம் கொண்டு வர முயற்சிகள் நடைபெற்றன.

இவ்வாறு, ஒரு சட்டத்துக்காகவே நாம் 100 ஆண்டு கள் காத்திருந்தோம் என்கிறபோது, அந்தச் சட்டத்தால் வரும் பலனை அடைவதற்கு இன்னும் கொஞ்ச காலம் ஆகும். எனவே, பொறுமையாக இருப்போம்.

சரி, எட்டு ஆண்டுகளில், இந்தச் சட்டம் எவ்வளவு தூரம் பின்பற்றப்பட்டிருக்கிறது?

அது ஊக்கம் தருவதாக இல்லை. கல்வித் துறையில் நாடாளுமன்றத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட ஒரே சட்டம் இது மட்டும்தான். ஒரு பள்ளியில், இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு இடம் அளிக்கவில்லை என்றால், சாமானியர்கள் நீதிமன்றத்தை நாட முடியும். காரணம், கல்வி இப்போது அடிப்படை உரிமை. தனியார் பள்ளிகளில் இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு இருக்கவே செய்கிறது. அதை எப்படி அணுக வேண்டும் என்று நாம் சிந்திக்க வேண்டுமே தவிர, சட்டத்தைப் பின்வாங்கச் செய்ய முடியாது.

பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை எந்த ஒரு மாணவரையும் ஃபெயிலாக்கக் கூடாது எனும் ‘நோ டிடென்ஷன்’ கொள்கையை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் பற்றி…

மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆர்.டி.இ. சட்டத்தின் கீழ் அவ்வாறு எந்த ஒரு மாணவரையும் ஃபெயிலாக்க முடியாது. ஆனால், அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன.

இந்தச் சட்டத்தில் உள்ள சிறப்பே, ஒரு மாணவரை ஆண்டு முழுவதும் கல்வியுடன் மட்டுமல்லாமல், இதர செயல்பாடுகள் மூலமாகவும் மதிப்பீடு செய்ய வேண்டும். இதை ஆங்கிலத்தில் ‘கண்டினியுஸ் அண்டு காம்ப்ரஹென்ஸிவ் எவால்யுவேஷன்’ என்போம். ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள் ஆண்டு இறுதியில் நடக்கும் தேர்வு, பாஸ், ஃபெயில் என்றே பழகிவிட்டார்கள். அந்தச் சுலபமான நடைமுறையில் இருந்து அவர்கள் வெளியே வர விரும்புவதில்லை. எனினும், நான் முன்பே சொன்னதுபோல இப்போதுதானே இந்தச் சட்டம் வந்திருக்கிறது. இதற்குப் பழக, ஆசிரியர்களுக்கு இன்னும் சில காலம் தேவைப்படும்.

உங்களின் அனுபவத்தில் கிராமம், நகரம் ஆகியவற்றில் எங்கு இந்தச் சட்டம் சிறந்த முறையில் பின்பற்றப்படுகிறது?

நிச்சயமாக கிராமங்களில்தான். தமிழகத்தில், கிராமப்புறங்களில் இந்தச் சட்டம் சிறந்த முறையில் பின்பற்றப்படுவதாக அறிகிறேன். தமிழகம் போன்ற தென் மாநிலங்களிலும் இதே நிலைதான். ஆனால் வடக்கில், கிராமப்புறங்கள் நிராகரிக்கப்படுகின்றன.

ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் (ஐ.சி.டி.எஸ்), கிராமப்புறங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குக் குடியிருப்பு வசதி போன்றவற்றை மேற்கொண்டால், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை இன்னும் வலுவாக்க முடியும்.

சமீபத்தில், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் கொண்டுவரப்படுவதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. நாடு முழுவதும் ஒருபடித்தான கல்வி முறையைக் கொண்டுவருவதற் கான அரசின் முயற்சியாக இதைப் பார்க்கலாமா?

நாடு முழுவதும் இன்றைக்குச் சுமார் 400 முதல் 600 வரையிலான நவோதயா பள்ளிகள் மட்டுமே உள்ளன. அவற்றின் வருகையை ஏன் எதிர்க்க வேண்டும்? மாறாக, ஏன் இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் நவோதயா பள்ளிகள் உள்ளன என்று கேள்வி எழுப்ப வேண்டும். நான் இப்படிச் சொல்வதற்குக் காரணம், அதனுடைய கற்பித்தல் முறை. 1986-ம் ஆண்டு, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் முயற்சியால் இந்தப் பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு உறைவிடப் பள்ளி தொடங்கப்பட்டன. ஆறாம் வகுப்பிலிருந்து ஒரு மாணவர், வேற்று மாநில மொழி ஒன்றைக் கற்க வேண்டும். ஒன்பதாம் வகுப்பில், எந்த மொழியைக் கற்றாரோ, அந்த மாநிலத்தில் உள்ள நவோதயா பள்ளிக்கு அனுப்பப்படுவார். இதன் மூலம், அந்த மாணவரின் அறிவு விசாலமடையும். இது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை. இதர பள்ளிகளைக் காட்டிலும், இங்கு ஒரு மாணவருக்கு 8 முதல் 10 மடங்கு அதிகமாக, அரசால் முதலீடு செய்யப்படுகிறது. அதைவிட முக்கியமானது, இங்கு 80 சதவீத இடங்கள், கிராமப்புற மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. எனவே, இந்தப் பள்ளிகளின் வருகையை நாம் வரவேற்க வேண்டும்.

தற்போதைய மத்திய அரசு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, பொறுப்பேற்றபோது, உங்கள் கட்டுரை ஒன்றில், ‘நம் நாட்டுக் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் அழிவிலிருந்து மீட்கப்பட வேண்டும்’ என்று எழுதியிருந்தீர்கள். இப்போது நிலைமை எப்படி?

ரொம்ப மோசம். இந்த ஆட்சி வந்த பிறகுதான், கல்வித் துறையில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது என்று சொல்ல முடியாது. இந்த நிலை 70-களிலிருந்தே உள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் கடைசி நியமனம் என்பது 80-களில் நடந்தது. டெல்லி பல்கலைக்கழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக எந்தப் புதிய நியமனமும் இல்லை. நிரந்தர ஆசிரியர் என்று யாரும் இல்லை. டெல்லி பல்கலையில் மட்டும் சுமார் 4 ஆயிரம் ஒப்பந்த ஆசிரியர்கள் உள்ளனர். இப்படி ஒரு நிலைக்கு, கல்வி தனியார்மயமாகிவிட்டதும் ஒரு காரணம். நிதிப் பற்றாக்குறையால், போதிய ஆசிரியர்களை நியமிக்க முடியவில்லை. போதிய ஆசிரியர்கள் இல்லாமல் எப்படிப் பாடங்கள் நடத்த முடியும்? நிலைமை இப்படி இருக்கும்போது, உலகத் தர வரிசையில் நமது பல்கலைக்கழகங்கள் இடம்பிடிக்கும் என்று எப்படி நம்மால் எதிர்பார்க்க முடியும்?

சமீபகாலமாக பல்கலைக்கழக வளாகங்களில் ஒடுக்கு முறைகள் அதிகரித்துவருகின்றனவே?

இது ஒரு புதிய பிரச்சினை. நிதிப் பற்றாக்குறைப் பிரச்சினை என்பது காங்கிரஸ் காலத்திலும் இருந்தது. ஆனால், இந்தப் புதிய பிரச்சினை, இந்த ஆட்சியில் தான் தோன்றியிருக்கிறது. பல்கலைக்கழகங்களில் தான் கருத்துச் சுதந்திரத்தைப் பின்பற்ற முடியும். அங்கேயே உங்களால் பின்பற்ற முடியவில்லை என்றால், வேறு எங்கும் பின்பற்ற முடியாது. பல்கலைக்கழகங்கள் கருத்துச் சுதந்திரத்துக்கான பீடங்கள் என்பதை இந்த அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

- ந.வினோத் குமார்,

தொடர்புக்கு:

vinothkumar.n@thehindutamil.co.in

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author