Published : 01 Jul 2014 07:00 AM
Last Updated : 01 Jul 2014 07:00 AM

தப்பிக்க முடியாத கேள்வி

ஆந்திரத்தின் கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் நடந்த கெயில் எரிவாயுக் குழாய் வெடிப்பு விபத்தில் 19 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். விசாகப்பட்டினத்தில், இந்துஸ்தான் பெட்ரோலியக் கழகத்துக்குச் சொந்தமான சுத்திகரிப்பு நிலையத்தில், ஆகஸ்ட் 2013-ல் ஏற்பட்ட விபத்தில் 28 பேர் உயிரிழந்த சம்பவம் நினைவை விட்டு நீங்காத நிலையில், அதே ஆந்திரத்தில் மறுபடியும் இப்படி ஒரு சம்பவம்.

கெயில் நிறுவனத்துக்குச் சொந்தமான இடத்திலிருந்து தனியார் துறைக்குச் சொந்தமான மின்னுற்பத்தி நிலையத்துக்கு எரிவாயுவைக் கொண்டுசெல்லும் குழாய் பல்வேறு கிராமங்கள் வழியாகச் செல்கிறது. அந்தக் குழாய் வெடித்துதான் இப்படிப்பட்ட கொடிய விபத்து ஏற்பட்டிருக்கிறது. குழாயைச் சுற்றிலும் 500 மீட்டர் சுற்றளவுக்குத் தாண்டவமாடிய தீயானது குடிசைகள், மரங்கள் என சகலத்தையும் எரித்தழிக்கிறது. கெயில் நிறுவனத்தின் 30 ஆண்டு கால வரலாற்றில் மோசமான விபத்து இது.

எளிதில் தீப்பற்றக்கூடிய வாயுவை இப்படிக் குழாய்கள்மூலம் கொண்டுசெல்லும் வழியில் ஒவ்வொரு அங்குலமும் ஆபத்து நிறைந்ததுதான். வழியில் குடியிருப்புகள் இருப்பது எரிமலையின் வாயில் அமர்ந்திருப்பதற்குச் சமம். இதையெல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இந்தியாவின் இயற்கை வாயுத் துறை அதிவேக மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது. எரிவாயு என்பது எரிசக்தித் துறையில் மிகவும் முக்கியமான பங்குவகிக்கிறது. எனினும், குழாய்களின் மூலம் எரிவாயுவைப் பாதுகாப்பாகக் கொண்டுசெல்வது எப்படி என்பதுதான் பெரும் பிரச்சினை. குழாய் வழியாக எண்ணெய் கொண்டுசெல்வதில் இந்தியாவுக்கு நீண்ட வரலாறு இருக்கிறது. அதிலேயே ஏகப்பட்ட பிரச்சினைகள், கோளாறுகள்! இந்நிலையில், இந்தியாவுக்குப் புதியதான குழாய்வழி எரிவாயு கொண்டுசெல்லும் திட்டம் பெரும் சவாலுக்குரியதே. புதிய தொழில்நுட்பங்கள் மூலம் இடைவிடாத பராமரிப்பைக் கோருபவை இந்த அமைப்புகள். ஆனால், அப்படிப்பட்ட பராமரிப்பு மேற்கொள்ளப்படவில்லை என்பதையே இந்த விபத்து நமக்கு உணர்த்துகிறது. விபத்துக்கு முதல் நாள் எரிவாயு கசிந்ததாக கிராமத்தார் புகார் தெரிவித்திருப்பதை கெயில் உறுதிப்படுத்துகிறது. உடனேயே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் விபத்து நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்கும். கெயில் நிறுவனத்தின் அலட்சியம்தான் இந்த விபத்துக்குக் காரணம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

பொதுவாக, இப்படியான திட்டங்களுக்கு எதிராக மக்கள் திரளும்போதெல்லாம் ‘வளர்ச்சிக்கு எதிரானவர்கள்' என்று அரசுத் தரப்பு, முத்திரை குத்தி அவர்களை ஒடுக்கிவிடும். ஆனால், இப்படிப் பாதிக்கப்பட்டு அவர்கள் நிற்கும்போது, அரசுத் தரப்பு என்ன பதில் வைத்திருக்கிறது?

தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்கள் வழியாகச் செல்லும் கொச்சி-பெங்களூரு-மங்களூர் எரிவாயுக் குழாய்த் திட்டமும், தமிழ்நாட்டில் அதற்கு எழுந்த எதிர்ப்பும் இப்போது நம் நினைவுக்கு வருவது தவிர்க்கவியலாதது. இந்தக் குழாயை விவசாய நிலங்கள் வழியாகப் பதித்தால் 5,500-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் என்று போராட்டங்கள் எழுந்தன. இந்தப் போராட்டங்களை வழக்கமான அலட்சியத்துடன் அரசு அணுகியது. ஆனால், ஆந்திர விபத்தின் பின்னணியில் மக்களின் கேள்வி நம் மனசாட்சி முன் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. எவர் ஒருவரும் அந்தக் கேள்வியிலிருந்து தப்பிவிட முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x