Published : 14 Nov 2017 10:35 AM
Last Updated : 14 Nov 2017 10:35 AM

குஜராத் தேர்தல் 2017: காங்கிரஸின் மூவர் கணக்கு குஜராத்தில் கைகொடுக்குமா?

கு

ஜராத் சட்ட மன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க ஹர்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்கோர் ஆகியோரின் கூட்டு மட்டும் காங்கிரஸுக்குப் போதாது; மாநில அரசுக்குத் தலைமை தாங்கவும் ஒருங்கிணைக்கவும் வலுவான ஒரு தலைவர் தேவை. ஒவ்வொரு இந்தியத் தேர்தலுக்கும் ஒரு நாயகனும் கதை-வசனமும் அவசியம்; குஜராத் முதல்வராக 2001-ல் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கினார் நரேந்திர மோடி. 2002, 2007, 2012 ஆகிய சட்டப் பேரவைத் தேர்தல்களில் அவரே கதாநாயகன், அவரே கதை-வசனகர்த்தா.

2017 சட்ட மன்றத் தேர்தலில் ஹர்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாக்கோர் என்ற மூன்று இளம் தலைவர்கள் காங்கிரஸின் ஆதரவுடன் அரசியல் வரலாற்றைத் திருத்தி எழுதக் களம் புகுந்துள்ளனர். தேர்தல் களத்தில் இடம் பெறுவது எளிதுதான். ஆனால், கதையை மாற்றி எழுதுவது கடினம்.

ஹர்திக் படேல் சார்ந்துள்ள படிதார்கள் சமூகம், மேவானியின் பட்டியல் இனத்தவர்கள், அல்பேஷ் தாக்கோரின் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் முழு ஆதரவும் வாக்குகளாக காங்கிரஸுக்குக் கிடைத்தால்தான் வரலாற்றை மாற்ற முடியும். இல்லையென்றால் ‘அவர்களும் தேர்தலில் தீவிரம் காட்டினார்கள்’ என்ற அடிக்குறிப்போடு எல்லாம் முடிந்துவிடும். இந்த மூன்று இளைஞர்கள் சார்ந்துள்ள சாதிகள், ஒன்றுக்கொன்று முரண்படும் சமூக கோரிக்கைகள் உள்ளவை; இத்தேர்தலில் அவர்களுடைய கோரிக்கைகள் என்ன என்பதை ஆராய்ந்தால்தான் தேர்தல் முடிவு எப்படி வரும் என்பதைக் கணிக்க முடியும்.

தொடர்பற்ற இணைப்பு

மூன்று இளம் தலைவர்களும் தங்களுடைய சாதிகளின் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுப்பவர்கள். கல்வி, வேலைவாய்ப்பில் படேல் சமூகத்தவர்க்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோருகிறார் ஹர்திக் படேல்; சமூக, பொருளாதார ரீதியாக படேல்கள் வலுவானவர்கள், முன்னேற்றம் அடைந்தவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.) ஒன்றுபட வேண்டும் – அவர்களுக்கான சமுதாயப் பலன்களை அதிகப்படுத்த வேண்டும் என்கிறார் அல்பேஷ் தாக்கோர்.

பட்டியல் இனத்தவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்கிறார் ஜிக்னேஷ். இவர்களில் அல்பேஷ் தாக்கோர் காங்கிரஸில் சேர்ந்தேவிட்டார். ஹர்திக்கும் ஜிக்னேஷும் பாஜகவுக்கு எதிராகத் திரண்டுள்ளனர். மோடியை எதிர்ப்பதற்காகத்தான் இவர்கள் காங்கிரஸை ஆதரிக்கின்றனர்; நிரந்தரத் தீர்வுக்காக அல்ல.

இரண்டு பெரிய கட்சிகள் பிரதானமாக மோதும் களத்தில் பிரதமர் போன்ற பெரிய தலைவர் ஒரு கட்சியின் பிரச்சாரத்தை வழிநடத்தும்போது, வெறும் பிரச்சினைகளை மட்டும் பேசுவதால் ஆதரவு பெருகிவிடாது. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய ஒரு தலைவரின் தலைமையில் அணி குவிய வேண்டும். வெறும் அதிருப்தியைத் தேர்தல் வெற்றியாக மாற்றிவிட முடியாது. அல்பேஷ் தாக்கோர் மத்திய குஜராத் மாவட்டங்களில் ஓ.பி.சி. தலைவராகத் தன்னை வளர்த்துக்கொண்டிருக்கிறார். ஓ.பி.சி.களிலும் ஒரு பிரிவினருக்குத்தான் அவர் பிரதிநிதி. அல்பேஷின் தந்தை ஏற்கெனவே அகமதாபாத் காங்கிரஸ் கமிட்டித் தலைவர்.

சாதி வியூகங்கள்

ஜிக்னேஷ் மேவானி பட்டியல் இனத்தவரின் பிரதிநிதி என்றாலும் இந்தச் சமுதாயத்தினரும் ஏற்கெனவே காங்கிரஸின் அங்கமாக இருப்பவர்கள்தான். புதிதாக வாக்கு வங்கியை அவர் கொண்டுவந்துவிடவில்லை. இவர்களுடைய மக்கள் தொகை வெறும் 7%. பழங்குடிகள் இடையே பாஜகவுக்கு செல்வாக்கு அதிகம்.

இப்போது குஜராத் காங்கிரஸ் தலைவராக இருக்கும் பரத்சிங் சோலங்கியின் தந்தை மாதவ்சிங் சோலங்கி, ‘காம்’ (KHAM) என்ற சமூக உத்தியைக் கடைப்பிடித்து காங்கிரஸை ஆட்சியில் அமர்த்தினார். சத்திரியர்கள், பட்டியல் இனத்தவர், ஆதிவாசி, முஸ்லிம்கள் என்ற சாதிகளின் ஆங்கில முதல் எழுத்தின் சுருக்கம்தான் ‘காம்’. காங்கிரஸ் கட்சியிடமிருந்து விலகிய படேல்களை எதிர்ப்பதற்காக உருவானது ‘காம்’. படேல்கள் முதலில் ஜனதாவுக்கும் பிறகு பாஜகவுக்கும் ஆதார பலமாக இருந்துவருகின்றனர்.

மோடி அரசியலுக்கு வருவதற்கு முன்னால் வரை குஜராத்தின் மத்தியிலும் வடக்கிலும் ‘காம்’ உத்திப்படி காங்கிரஸ் தனது ஆதரவைத் தக்க வைத்துக் கொண்டிருந்தது. படேல்கள் நிரம்பிய சௌராஷ்டிரத்தில் பாஜக வலுப்பெற்றது. படேல்களின் ஆதிக்கம் மிகுந்த பாஜகவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மோடி முதல்வரானதும் குஜராத்தின் வடக்கிலும் மத்திய மாவட்டங்களிலும் காங்கிரஸின் கோட்டைகள் தகர்ந்தன. மாநில அமைச்சரவையில் படேல்கள் அதிக எண்ணிக்கையில், முக்கிய துறைகளின் அமைச்சர்களாக செல்வாக்குடன் இருக்கின்றனர். அப்படியும் இது படேல்களின் ஆதிக்கம் நிரம்பிய கட்சி என்ற கண்ணோட்டம் மாறிவிட்டது.

படேல்களின் எதிர்ப்பு

இதனால்தான் அல்பேஷ், ஜிக்னேஷால் காங்கிரஸுக்கு மக்களிடையே ஆதரவைப் பெருக்கிவிட முடியாது என்ற சந்தேகம் எழுகிறது. ஹர்திக் படேல், பாஜகவை ஆதரிக்கும் படேல்களில் ஒரு பிரிவினரை மட்டும்தான் பிரித்தெடுக்க முடியும். பாஜகவுக்கு எதிராக படேல்கள் அதிருப்தியடைவதும் எதிர்த்து வாக்களிப்பதும் இது முதல் முறையல்ல.

2002 தேர்தலில் மோடி வெற்றி பெற்ற பிறகு படேல்கள் கட்சிக்கு எதிராகத் திரண்டனர். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 26 தொகுதிகளில் 12-ல் காங்கிரஸ் வென்று மோடியை அதிர்ச்சியில் ஆழ்த்த முடிந்தது. மோடியை அப்போது எதிர்த்தவர் கேஷுபாய் படேல். சௌராஷ்டிரா, கட்ச் பகுதியைச் சேர்ந்த பல பாஜக தலைவர்கள் கேஷுபாய்க்கு ஆதரவு தெரிவித்தனர். 2001-ல் உள்கட்சிப் பூசல் காரணமாகத்தான் வெளியில் இருந்த மோடியை குஜராத் முதல்வராக்கினார்கள்.

அவர் முதல்வராவதற்கு முன்னால் வரை பாஜக முதல்வர்கள் நியமிக்கப்படுவதும் எதிர்ப்பால் கவிழ்க்கப்படுவதும் நடந்தன. 2007 தேர்தலின்போது கோவர்தன் ஜடாபியா என்ற முன்னாள் அமைச்சர் தலைமையில் படேல்கள் அணி திரண்டு பாஜகவுக்கு சவால் விட்டனர். காங்கிரஸ் காரர்கள் அவர்களுடைய கூட்டங்களுக்கு அதிக எண்ணிக்கையில் சென்று ஆதரவு காட்டினர். அதனால் 2002 பேரவைத் தேர்தலில் 127 தொகுதிகளில் வென்ற பாஜக 2007-ல் 117 தொகுதிகளில் மட்டும் வெல்ல முடிந்தது.

2012-ல் கேஷுபாய் படேல் பாஜகவை விட்டு வெளியேறி, ‘குஜராத் பரிவர்த்தன் கட்சி’யைத் தொடங்கினார். அப்போதும் படேல்கள் பாஜகவுக்கு எதிராகத் திரண்டனர். கேஷுபாய் கட்சிக்கு வெறும் 4% வாக்குகள் மட்டுமே கிடைத்தன, மோடி மீண்டும் முதல்வரானார். மோடியின் பொருளாதாரக் கொள்கை மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படுவதும் படேல்கள் பாஜகவுக்கு எதிராக அணி சேர்வதும் குஜராத்துக்குப் புதிதல்ல என்பதற்காகவே இந்தச் சம்பவங்கள் நினைவுகூரப்படுகின்றன. படேல்கள் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு அதிகத் தொகுதிகளையும் பசையுள்ள துறைகளையும் கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள். 2017-லும் அப்படி நடக்காது என்பதற்கு எந்த அறிகுறியும் இதுவரை தெரியவில்லை!

தமிழில்: சாரி,
©: தி இந்து ஆங்கிலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x