எழுத்தாளர் ஆனேன்: என்.ஸ்ரீராம் | மண்ணும் மனிதர்களும்

எழுத்தாளர் ஆனேன்: என்.ஸ்ரீராம் | மண்ணும் மனிதர்களும்
Updated on
2 min read

கொங்குவெளியில் கோடைக்காற்று விசையுடன் வீசிய காற்றுக் காலம். தாராபுரம் பிஷப் தார்ப் கல்லூரி. இளங்கலை மூன்றாம் ஆண்டின் தொடக்க நாள். எங்கள் துறைத் தலைவர் சென்னியப்பன் வகுப்பறையில் அனைவரிடமும் “எதிர்காலத்தில் என்னவாகப் போகிறீர்கள்?” எனக் கேட்டார். மாணவ மாணவியர் அவரவர் லட்சியத்தைச் சொல்லி வந்தனர். என் முறை வந்தது. நான் எழுந்து நின்றேன். “எழுத்தாளனாகப் போகிறேன் சார்” என்றேன்.

சக மாணவ, மாணவியரின் பார்வை ஒருகணம் என் மீது திரும்பியது. துறைத் தலைவர் என்னைத் தீர்க்கமாகப் பார்த்தார். “உன்னால முடியுமா…?” என்று கேட்டார்.
“முடியும் சார்” என்றேன்.

துறைத் தலைவருக்கும் சக மாணவ, மாணவியருக்கும் என் மீது துளியும் நம்பிக்கை இல்லை என்பதை வகுப்பறையில் சூழ்ந்த மௌனமே உணர்த்தியது. எண்ணிப் பதினைந்து நாள்கள் கழிந்தபோது நான் எழுதிய சிறுகதை ஒரு வணிகப் பத்திரிகையில் முதல் பரிசுச் சிறுகதையாகப் பிரசுரமாகியிருந்தது. என் படத்தோடு என்னைப் பற்றிய விவரமும் அதில் இடம்பெற்றிருந்தது. இதனைக் கல்லூரி முதல்வர் பெருமிதத்தோடு தகவல் பலகையில் இடம்பெறச் செய்தார். கல்லூரியே என்னைக் கொண்டாடி மகிழ்ந்தது. என் ஊர் சனங்களும் உறவினர்களும் அவ்விதழை வாங்கி வாசித்து விட்டுப் பாராட்டினர். அடுத்த பருவமழைக் காலத்தில் அதே இதழில் மீண்டும் ஒரு முதல் பரிசுச் சிறுகதையை எழுதினேன். இன்னொரு பிரபல வார இதழ், நான் அனுப்பியதும் மறு வாரத்திலேயே எனது நெடுங்கதை ஒன்றைப் பிரசுரித்துவிட்டது. எனக்கு எழுத்து வசப்பட்டு விட்டதாக இறுமாப்புக் கொண்டு திரிந்தேன்.

பனிக் காலத்து அந்தியின் மஞ்சள் வெயில் எங்கள் தோட்டத்து மிளகாய்ச் செடிகளின் மீது படிந்து வசீகரித்த தருணம். கிணற்றுமேட்டை ஒட்டிய விரியமர உதிர்ச் சருகிலைகள் இறைந்த மிளகாய்ப் பாத்திக்கு நீர்ப் பாய்ச்சியபடி அன்று எழுதும் சிறுகதை குறித்து யோசிக்கத் தொடங்கினேன். அந்தக் கணம் நான் வாசிக்கும் படைப்புகளுக்கும் நான் எழுதும் படைப்புகளுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருப்பதை முதன்முதலாக உணர்ந்தேன். சட்டென எனக்குள் ஒருவித அதிர்வு. அன்றிரவு பெரிய மனப் போராட்டத்துக்குப் பின்பு புகழ் போதையிலிருந்து முற்றிலும் வெளிவர முடிவு செய்தேன். உடனே எழுதுவதை நிறுத்தினேன்.

மேலும், சில நாள்களில் தெளிவை நோக்கி நகர்ந்தேன். என் இளம்பிராயத்திலிருந்தே என் நிலத்து அச்சு அசலான மாந்தர்களையும் அவர்களின் குணநலன்களையும் வாழ்க்கை முறைகளையும் சடங்குச் சம்பிரதாயங்களையும் ஊன்றிக் கவனித்து வந்திருக்கிறேன். அவற்றை நான் எழுதும் கதைகளில் தனித்த அடையாளத்துடன் பதிவுசெய்ய வேண்டும் என்கிற தீர்மானத்துக்கு வந்தேன். என் நிலம் சார்ந்து ஏற்கெனவே எழுதுபவர்களின் எவ்விதச் சாயலும் அதில் இருக்கக் கூடாது எனவும் வரையறுத்துக் கொண்டேன். அப்படி எழுதுவது ஒன்றும் சுலபமான காரியமில்லை. எழுதி எழுதிப் பார்த்தேன். எனக்கான பிரத்தியேகமான மொழிநடையும் எனக்கான என் நிலத்து மாந்தர்களின் கதையும் கொஞ்சம்கூடக் கைகூடி வரவேயில்லை. எனக்குள் பெரும் போராட்டம். மீண்டும் எழுதுவதை நிறுத்தினேன். நிறைய வாசிக்க முடிவுசெய்தேன். நண்பன் ரமேஷ் உதவியுடன் தளவாய்ப்பட்டினம் நூலகத்தில் தொடர்ச்சியாகப் புத்தகங்கள் எடுத்து வந்து வாசித்துக்கொண்டேயிருந்தேன். என் நிலம் சார்ந்த விஷயங்களையும் நுட்பமாக அவதானிக்கத் தொடங்கினேன். ஏனோ எழுதும் எண்ணம் மட்டும் எழவேயில்லை. காலம் கூடி வரட்டும் எனக் காத்திருந்தேன்.

என் நிலத்தில் பருவகாலம் மாறிக்கொண்டே இருந்தது. மறுபடியும் ஒரு கொங்குவெளியின் காற்றுக் காலம். கோடைக்காற்று எங்கள் தோட்டத்துத் தென்னைகளின் உச்சியை அகோரமாக அசைத்துக்கொண்டிருந்த வைகறை விடியல் தருணம். நான் எழுதாமலேயே மூன்று வருடங்கள் கடந்தோடியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். மறுபடியும் முதல் சிறுகதையை எழுத ஆரம்பித்தேன்.

சொற்கள் பிரவாகமாக வெளிப்பட்டு ‘நெட்டுக்கட்டு வீடு’ முழுமையடைந்தது. நான் எந்த மாதிரி சிறுகதை எழுத வேண்டும் என நினைத்திருந்தேனோ, அது
போலவே கதை அமைந்திருந்தது. மொழிநடை, வடிவநேர்த்தி, கதைகூறும் உத்தி என எனக்குத் திருப்தி அளித்தது. 'கணையாழி'க்கு அனுப்பி வைத்தேன். மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. கதை பிரசுரிக்கப்படவில்லை. மனதைக் குழப்பமும் சோர்வும் ஆட்கொண்டன.

அன்று தளவாய்ப்பட்டினத்தில் காளியம்மன் கோயில் பொங்கல் சாட்டு. ரமேஷ் அழைத்திருந்தான். நான் பேருந்திலிருந்து இறங்கும்போதே தளவாய்ப்பட்டினம் வீதியில் காளியம்மன் உற்சவ ஊர்வலம் கொட்டு முழங்க, கொம்பூத வந்துகொண்டிருந்தது. ரமேஷ் வீட்டு வெளிவாசலில் செருப்பைக் கழற்றும்போதே ரமேஷ் 'கணையாழி'யுடன் திண்ணையிலிருந்து எழுந்தான்.

“இது நீ எழுதிய கதையா?”

‘கணையாழி'யில் ‘நெட்டுக்கட்டு வீடு’ பிரசுரமாகி இருந்தது. 

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in