Last Updated : 01 Jul, 2014 08:00 AM

 

Published : 01 Jul 2014 08:00 AM
Last Updated : 01 Jul 2014 08:00 AM

இந்திய வீரனின் இதயத்திலிருந்து...

‘நம் ஆட்கள் அணிந்திருக்கும் உடைகளில் எக்கச்சக்க பேன்கள். அவை கடிக்கும் கடிக்கு துப்பாக்கி ரவை தேவலாம் போலிருக்கிறது. எனினும், கொசு, பூச்சிகள் போன்ற மனிதனை இம்சிக்கும் ஜீவராசிகள் இங்கு இல்லை. பாம்பு, தேள்கூடக் கிடையாது’ என்று தொடரும் இந்தக் கடிதம், 1915-ல் முதல் உலகப் போரில் பிரிட்டிஷ் படையில் இடம்பெற்றிருந்த இந்திய வீரர் ஒருவர், பிரான்ஸிலிருந்து தனது சொந்த ஊரில் இருந்த தனது நண்பருக்கு எழுதியது. பிரிட்டன் ராணுவத் தணிக்கைத் துறையால் சேகரிக்கப்பட்ட கடிதங்களில் ஒன்று இது. பிரிட்டிஷ் நூலகம் மற்றும் ‘யூரோப்பியானா 1914-1918' என்ற அமைப்பு ஆகியவை இணைந்து இந்தக் கடிதங்களை மின்னணு வடிவில் சேகரித்து வைத்துள்ளன.

முதல் உலகப் போரில் இந்தியாவிலிருந்து 10.27 லட்சம் பேர் பங்கேற்றனர். பெரும்பாலும் வட இந்தியா மற்றும் வட மேற்கு இந்தியாவின் ஏழை, நடுத்தர விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள் பிரிட்டிஷ் படையில் இடம்பெற்றனர். பிரான்ஸில் இருந்த இந்திய வீரர்களில் பலர் பஞ்சாபைச் சேர்ந்த முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள். பஞ்சாப் சீக்கியக் குடும்பத்தைச் சேர்ந்த எனது தாய்வழித் தாத்தா 1930-களில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர். எனது முன்னோர்கள், முதல் உலகப் போரில் கலந்துகொண்டனரா என்பது பற்றி எனக்குத் தெரியாது. என்றாலும், இந்தக் கடிதங்கள் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் படைகளில் இடம்பெற்ற எனது முன்னோர்கள்பற்றிய நினைவுகளைக் கிளறுகின்றன.

இந்திய வீரர்கள், தங்கள் கடிதங்களில் போர் முனையில் பிரிட்டிஷ் அரசால் வழங்கப்பட்ட உணவு மற்றும் உடைகுறித்து நன்றியுடன் குறிப்பிட்டுள்ளனர். இந்திய வீரர்களுக்கான செளகரிய நிதி (ஐ.சி.எஸ்.) என்ற பெயரில்,

1914-ல் ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட ஒரு அறக்கட்டளை, அவர்களுக்குத் தேவையான பொருட்களை வழங்குவதில் பேருதவி செய்தது. “என்னைப் பற்றிய கவலையே வேண்டாம். நான் சொர்க்கத்தில் இருக்கிறேன்” என்று ஒரு இந்திய வீரர் எழுதியிருக்கிறார். “கடந்த வாரம் பிரிட்டிஷ் மன்னர் இங்கு வந்திருந்தார், இந்தியர்களுடன் கைகுலுக்கி, நலம் விசாரித்தார். காயமடைந்த வீரர்களுக்கு ஆறுதல் கூறினார்” என்று நீள்கிறது அந்தக் கடிதம்.

இந்தியாவின் கிராமப்புறங்களிலிருந்து சென்றிருந்த வீரர்களுக்கு, லண்டன், பாரீஸ் போன்ற ஐரோப்பிய நகரங்கள் மிகுந்த ஆச்சரியமளித்தன. “எத்தனை அழகான நகரங்கள், சுகந்தமான தோட்டங்கள், ஆறுகள், ஓடைகள் என்று எல்லாமே நம் நாட்டைவிட வித்தியாசமானவை. எத்தனை ஒழுங்கு, எத்தனை கட்டுப்பாடு!” என்று வியக்கிறார்கள். பாரீஸிலிருந்து ஒரு இந்திய வீரர் எழுதுகிறார், “என்னய்யா பாரீஸ் இது… சொர்க்கம்!” புகார்களும் இல்லாமல் இல்லை. “பிரெட்டை யார்தான் சுடுகிறாரோ தெரியவில்லை. வெளியில் தீய்ந்துபோயிருக்கும் பிரெட், உள்ளே அப்படியே வேகாமல் இருக்கிறது.” வெவ்வேறு பின்னணி கொண்டவர்கள் என்றாலும், இந்திய வீரர்கள் அனைவரும் இணைந்து போரிட்டு, அருகருகே அமர்ந்து உணவருந்தினர்.

பலர் கல்வியறிவு இல்லாதவர்கள் என்பதால், படித்த இந்திய வீரர்களின் உதவியுடன்தான் தங்கள் உறவினர்களுக்குக் கடிதம் எழுதினர். கடிதங்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளின் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. பிரிட்டிஷ் அதிகாரிகளின் முன்னிலையில், அந்தந்த மொழி தெரிந்த, நம்பிக்கைக்குரிய இந்திய உயரதிகாரிகளுக்கு அந்தக் கடிதங்கள் உரக்க வாசித்துக் காண்பிக்கப்பட்டன.

போரில் அவர்கள் அடைந்த பாதிப்புகளும் கடிதங்களில் இடம்பெறுகின்றன. போரின் அழிவு பற்றி ஒரு கடிதம் விளக்குகிறது. “விஷ வாயு, வெடிகுண்டுகள், ஒரு நிமிடத்தில் 700 ரவைகளைத் துப்பும் இயந்திரத் துப்பாக்கிகள், குண்டுகளை வீசும் சிறிதும் பெரிதுமான பறக்கும் இயந்திரங்கள்”-அழிவு சாதனங்களின் பட்டியல் இவ்வாறு நீள்கிறது. “இந்தப் போர் இரண்டு ஆண்டுகளில் முடிவுறுமா? மூன்றாண்டுகள் ஆகுமா? எதுவுமே தெரியாது. ஒரு மணி நேரத்தில் 10,000 பேர் உயிரிழக்கின்றனர். இதற்குமேல் நான் என்ன சொல்வது?” என்று ஒருவர் போரின் கொடூரத்தை எழுதுகிறார்.

தீமைக்கு எதிராகப் போரிடும் எண்ணத்துடன் போரில் ஈடுபட்ட இந்தியர்கள், போர்க்களக் காட்சிகளை, புராணக் கதைகளின் காட்சிகளுடன் ஒப்பிட்டும் எழுதியுள்ளனர். “இந்தப் போரைப் பார்க்கும்போது ஒன்று தெளிவாகிறது. ராமாயணம், மகாபாரதத்தில் சொல்லப்பட்டவை அனைத்தும் உண்மைதான்” என்று இந்தியர்கள் எழுதியிருக்கின்றனர். ஜெர்மானியப் போர் விமானங்களை, ராமாயணத்தில் வரும் கருடனுடன் ஒப்பிட்டு இந்தியர்கள் கடிதம் எழுதியுள்ளனர். எதிரி நாட்டு வீரர்களை அரக்கர்களுடன் ஒப்பிட்டனர். போர் வீரனாகத் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி, தங்கள் இனம், கிராமம் ஆகியவற்றுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று விரும்பினர்.

அந்த அசாதாரண வீரர்களின் கடிதங்களில் உறைந்திருக்கும் அனுபவங்களும் அசாதாரணமானவைதான். தன் மனைவிக்கு ஒருவர் எழுதுகிறார், “நான் ஒரு நீர்க்குமிழி போன்றவன். வாழ்க்கைபற்றிய நம்பிக்கை எனக்கு இல்லை. உன்னைப் பிரிந்து வந்து எத்தனை நாட்களாகிவிட்டன என் அன்பே! எனினும் ஒன்றை நீ நிச்சயம் உணர வேண்டும். இது மாவீரர்களுக்கான தருணம்!”

- தி கார்டியன்,தமிழில்: வெ. சந்திரமோகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x