Last Updated : 06 Nov, 2017 09:51 AM

 

Published : 06 Nov 2017 09:51 AM
Last Updated : 06 Nov 2017 09:51 AM

ஒரு முஸ்லிமாகவே சிந்தித்தவர் கருணாநிதி!- காதர் மொகிதீன் பேட்டி

திமுகவின் நெருக்கமான கூட்டாளி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பதைத் தாண்டி, கருணாநிதியின் அணுக்கமான நண்பர் அக்கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன். முஸ்லிம்கள், லீக்குடனான திராவிட இயக்கத்தின்

உறவை நாடு சுதந்திரம் அடைந்த காலகட்டம் தொடங்கிப் பகிர்ந்துகொண்டார்.

இந்த உறவு எங்கே தொடங்கியது?

இது மிக இயல்பான உறவு என்றே சொல்ல வேண்டும். திராவிட இயக்கத்துக்கு முன்பே இங்கே திராவிடக் கலாச்சாரம் என்று ஒன்று இருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், தமிழர் கலாச்சாரம். முஸ்லிம்களும் இந்துக்களும் மாமன் மச்சான்களாகப் பழகும் கலாச்சாரம். அந்தக் கலாச்சாரத்தை திராவிட இயக்கம் வளர்த்தெடுத் தது. நாடு சுதந்திரம் அடையும் சூழலில் நடந்த இந்திய - பாகிஸ்தான் பிரிவினை ஏற்படுத்திய கசப்பின் நிழல் தமிழகத்திலும் படர்ந்தது. காங்கிரஸாரே தன்னுடைய கட்சியில் அல்லாது ஏனைய கட்சிகளில் இருக்கும் முஸ்லிம்களை அந்நியர்களைப் போல நடத்தியபோது, பொதுச் சமூகத்திலும் அந்த வெறுப்பு படர்ந்தது. தமிழகத் தில் அந்த வெறுப்பிலிருந்து முஸ்லிம்களை மீட்டெடுத்தது திராவிட இயக்கம்.

கொஞ்சம் விளக்க முடியுமா?

அப்போது தங்கள் கட்சியில் இருப்பவர்களை மட்டும் ‘தேசிய முஸ்லிம்கள்’ என்று அழைத்தது காங்கிரஸ். இந்தியாவில் முஸ்லிம்களின் பெரும் பிரதிநிதியாக அந்நாட்களில் விளங்கிய முஸ்லிம் லீக் கட்சி பிரிவினை யின்போது இரண்டாகப் பிளந்தது. ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக் பாகிஸ்தானை ஆளும் கட்சியானது. இந்தியாவே எங்கள் தாயகம் என்று இங்கேயே இருந்துவிட்ட முஸ்லிம்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைத் தொடங்கினார்கள். காயிதே மில்லத் அதன் தலைவரானார். ஆனால், இந்திய முஸ்லிம்கள் மீதும் பிரிவினைவாதிகள் பட்டத்தைச் சுமத்துவதில் வடக்கே இந்துத்துவர்கள் வெற்றி அடைந்திருந்தார்கள். காங்கிரஸிலும் அது பிரதிபலித்தது. விளைவாக, தங்கள் கட்சியில் இருந்த முஸ்லிம்களை மட்டும் ‘தேசிய முஸ்லிம்கள்’ என்றது காங்கிரஸ். பொதுச் சமூகத்திலும் இது பிரதிபலித்தது. முஸ்லிம்களையும் பிரிவினைவாதிகளாக, தீண்டத்தகாதவர்களாக வெறுத்து ஒதுக்கத் தொடங்கினார்கள். எனக்கே கசப்பான அனுபவங் கள் பல உண்டு. அப்போது ஏழு வயதுப் பையன் நான். சும்மா தெருவில் விளையாடச் செல்லும்போது, “டேய் இங்க வாடா” என்று கூப்பிட்டுத் தலையில் ‘ணங்’கென்று கொட்டி அனுப்புவார்கள். ஊர் ஒதுக்கம் உண்டு. இஸ்லாமியர்கள் தங்கள் கடைகள், உணவகங்களின் பெயர்களை இந்துப் பெயரில் மாற்றி, வெங்கடாஜலபதி போன்ற சாமி படங்களையெல்லாம் கடைகளில் மாட்டிக்கொண்டு, தங்களை யும் இந்துக்களாகக் காட்டிக்கொண்டு தொழில் நடத்த வேண்டிய சூழல் இருந்திருக்கிறது. தமிழ்நாட்டிலேயே சூழல் இப்படியென்றால், வட நாட்டில் எப்படி இருந்திருக்கும்? முஸ்லிம் லீக் பெயரில் இருந்த அனைத்து அமைப்புகளும் கலைக்கப்பட்டன. அரசியலில் நீடிக்க விரும்பியவர்களுக்கு காங்கிரஸே ஒரே வழி. ஆனால், தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் எல்லாவற்றையும் தாண்டி முஸ்லிம் லீக் தாக்குப் பிடித்தது. அதற்குக் காரணம் இங்கே திராவிட இயக்கம்... அங்கே கம்யூனிஸ்ட் இயக்கம்.

திமுகவின் நெருக்கமான கூட்டாளி காயிதே மில்லத்.. இல்லையா?

ஆமாம். முன்பே இருந்த உறவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றவர் அவர். திராவிட இயக்கத்தின் தாயான நீதிக் கட்சி சென்னை மாகாணத்தை ஆண்டபோதே, இஸ்லாமியர் ஒருவரை அமைச்சராக்கியது. இஸ்லாமியர் களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கியது. திமுகவைத் தொடங்கிய அண்ணா கடவுள் மறுப்பிலிருந்து மாறுபட்டு, ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்றபோது முஸ்லிம்கள் மேலும் நெருக்கமானார்கள். மாநில சுயாட்சி, சமூக நீதி, இந்தி எதிர்ப்பு, சுயமரியாதை, இடஒதுக்கீடு என்று திமுகவின் கொள்கைக்கும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கொள்கைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆனால், ‘திராவிட நாடு’ கோரிக்கையை காயிதே மில்லத் ஆதரிக்கவில்லை. ஏற்கெனவே பாகிஸ்தான் பிரிவினை காரணமாகப் பிரிவினைவாதிகள் பழி சுமந்துகொண்டிருந்த முஸ்லிம்களை இது மேலும் மோசமாகப் பாதிக்கும் என்று அவர் எண்ணினார். சீனப் போரின்போது, திராவிட நாடு முழக்கத்தைக் கைவிடுவதாக அறிவித்தார் அண்ணா. இதன் தொடர்ச்சியாக 1967-ல் முதல் முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்தது இந்திய யூனியன் முஸ்லிம் லீக். மூன்று உறுப்பினர்கள் தான் சட்ட சபைக்குள் போனார்கள். ஆனால், வெளியே ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் மைய நீரோட்டத்தில் இணைய வழிவகுத்திருந்தது திமுகவுடனான உறவு. அந்த உறவு இன்றும் நீடிக்கிறது.

முஸ்லிம்களுடனான கருணாநிதியின் உறவு எப்படி இருந்தது?

தமிழ்நாட்டில் முஸ்லிம்களுடனான உறவில் அவருக்கு நிகரான ஒரு அரசியல் தலைவரை ஒப்பிடவே முடியாது. ஒரு முஸ்லிமின் உணர்வை அப்படியே பிரதிபலிப்பவர் கருணாநிதி. இன்று எல்லோரும் போற்றும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்கூட முஸ்லிம்களை போலீஸ் வேலையில் எடுக்க யோசிக்கும் நிலை இருந்தது என்பது பலருக்கு ஆச்சரியம் தரலாம். அதுதான் உண்மை. இந்த நிலைமையெல்லாம் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர்தான் மாறியது. இதற்கெல்லாம் முக்கியமான காரணம் கருணாநிதி. முஸ்லிம்களைப் புரிந்துகொள்வதில் ஒரு முஸ்லிம் மனதுடன் இருப்பவர் அவர் என்றே சொல்வேன். எனக்கு இன்றைக்கும் ஞாபகம் இருக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட தகவல் கிடைத்த அடுத்த நிமிடம், என்னைத் தொடர்புகொண்டு பேசினார். அவரது குரலில் அவ்வளவு பதற்றம்! எங்களுக்கு அவருடன் ஏற்பட்ட ஒரே விரிசல், வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணியில் திமுக இடம்பெற்ற போது ஏற்பட்டது. அப்போது நாங்கள் எதிரணியில் இருந்தோம் என்றாலும், அப்போதும்கூட மாதம் ஒரு முறை எங்களை அழைத்துப் பேசுவார். தன்னாலானதை முழு மனதோடு செய்வார்.

முஸ்லிம்களுக்கு கருணாநிதியின் பெரிய பங்களிப்பு என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?

மிலாது நபி விழாவுக்கு அரசு விடுமுறை அளித்தது, உருது பேசும் முஸ்லிம்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது, பிறகு முஸ்லிம்களுக்கென தனியாக 3.5% இடஒதுக்கீடு அளித்தது, காயிதே மில்லத், உமறுப்புல வருக்கு மணி மண்டபம் கட்டியது, முஸ்லிம்களின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காகச் சிறுபான்மை யினர் நல இயக்குநரகம் தொடங்கியது; உருது அகாடமி, முஸ்லிம் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, அரசு விடுதிகள், ஆதரவற்ற, கணவனால் கைவிடப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு மகளிர் உதவும் சங்கம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சி, உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம், உலமா ஓய்வூதியம் அதிகரிப்பு, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்துக் குச் சட்டப்படியான அங்கீகாரம், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் தொடங்கி, சிறு வணிகர்களுக்கான கடன் ஏற்பாடு என்று எவ்வளவோ செய்திருக்கிறார். இவை தவிர, எங்கள் கூட்டங்களில் நிறைவேற்றுகிற தீர்மானங்கள், கோரிக்கைகள் பலவற்றை உடனுக்குடன் நிறைவேற்றியிருக்கிறார். இவை எல்லாவற்றையும் தாண்டி, நான் முக்கியமாக நினைப்பது, ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முஸ்லிம்களின் பாதுகாவலராக இருந்தது. முஸ்லிம்கள் நலனுக்கு எதிரான எந்த நடவடிக்கை இந்நாட்டில் எடுக்கப்பட்டாலும், அதற்கு எதிராக ஒலிக்கும் முதல் குரல்களில் ஒன்றாக கருணாநிதியின் குரல் இருந்தது. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், நள்ளிரவிலும்கூட அவரை அழைக்க முடியும்!

முன்னதாக 1998 கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் தமிழக முஸ்லிம் அரசியலில் ஒரு பெரும் மாற்றத்தை உண்டாக்கியது அல்லவா?

என்னதான் இருந்தாலும் திமுக ஒரு மாநிலக் கட்சி. ஒரு மாநில அரசுக்கு என்று உள்ள அதிகாரங்கள் நம் நாட்டில் மிகக் குறைவு. தவிர, கடந்த 50 ஆண்டுகளில் 17 ஆண்டுகள் மட்டுமே திமுக இங்கே ஆட்சியில் இருந்திருக்கிறது. இந்திய அளவில் முஸ்லிம்களின் சமூக, பொருளாதாரப் பின்னடைவுகளுக்கான சூழலிலிருந்து தமிழகச் சூழலைப் பெரிய அளவில் மாற்றிவிடும் வாய்ப்பு அதற்கு இல்லை. அதேபோல முஸ்லிம் லீக்கும் நாடு முழுக்க முஸ்லிம்களின் ஆதரவைப் பிரதிபலிக்கும் கட்சியாக இல்லை. இதையெல்லாம் உணராத சிலர் தொடர்ந்து இந்த இரு இயக்கங்கள் மீதும் கசப்பைப் பரப்பிவந்தார்கள். உச்சமாக, பாபர் மசூதி இடிப்பு நிகழ்வையொட்டிய சம்பவங்கள் நடந்தன. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, திருச்சியில் 10,000 பேர் திரண்டுவிட்டார்கள். கண்டன ஊர்வலம் செல்லப்போவதாகச் சொன்னார்கள். அப்படிப் போனால் வழியில் உள்ள இந்து, கோயில்கள், வணிக நிறுவனங்கள் தாக்கப்படக் கூடும் என்று போலீஸார் எதிர்த்தனர். உடனே போலீஸாருக்கு எதிராகக் கற்களை எடுத்தார்கள் சில இளைஞர்கள். நான் சமரசப் பேச்சு நடத்திக்கொண்டிருந்தபோதே, எஸ்பியின் மீது ஒரு கல் வந்து விழுந்தது. லத்தி சார்ஜுக்கு அவர் உத்தரவிடத் தயாரானபோது, மைக்கை வாங்கிக்கொண்டு போலீஸ் லாரியின் மீது நான் ஏறினேன். ‘குர்ஆன் அமைதியையே போதிக்கிறது. நீதிமன்றத்தில் தீர்வு காண வேண்டிய பிரச்சினைக்கு ரோட்டில் தீர்வு காண முடியாது. மதரீதியாக இளைஞர்களைத் தூண்டிவிடுவது எளிது. பிறகு அவர்களை அடக்குவது கடினம்’ என்றேன். என் பேச்சுக்குக் கட்டுப்பட்டு அமைதியானார்கள். அழுதுகொண்டும் புலம்பிக்கொண்டும் வீட்டுக்குத் திரும்பினார்கள். அப்படித் திரும்பியவர்களை வேறு பக்கம் நோக்கித் திருப்பியதன் விளைவுகளில் ஒன்றே கோவை கலவரம். கோவையில் நடந்த போலீஸ்காரர் செல்வராஜ் கொலை, குண்டுவெடிப்புகள் மற்றும் காவல் துறையினரின் வெறியாட்டம் எல்லாமே சகிப்பின்மையின் உச்சம். ஆனால், முஸ்லிம் லீக்கிடம் வேகம் இல்லை என்று சொன்னவர்கள் புதிது புதிதாக அமைப்புகளைத் தொடங்கினார்கள். இந்தப் பிளவுகள் முஸ்லிம் லீக்கையும் கூடவே திமுகவையும் கொஞ்சம் பாதித்தன என்றாலும், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையுமே முழுவதுமாகப் பாதித்தது என்பதே பெரிய உண்மை. அதுவரை ஒன்றுபட்டு இருந்தபோது சட்ட சபையில் ஆறு உறுப்பினர்கள் முஸ்லிம் லீக் சார்பில் சென்றுவந்தார்கள். இன்றைக்குப் பிளவின் காரணமாக, ஓட்டுகள் பிரிந்து ஒட்டுமொத்தமாக மூன்று பேரைக்கூட முஸ்லிம் கட்சிகளால் சட்ட சபைக்கு அனுப்ப முடியாத நிலை உருவாகிவிட்டதே; இது வளர்ச்சியா? கருணாநிதி ஒருமுறை பேசியதுதான் ஞாபகத்துக்கு வருகிறது, ‘பிறையை விட்டு சூரியனோ, சூரியனை விட்டுப் பிறையோ அகலாது. அகலக் கூடாது!’ என்று. திமுகதான் முஸ்லிம் களுக்கு இயல்பான தோழன். முஸ்லிம் அமைப்புகள் ஒன்றுபட வேண்டும். முஸ்லிம் லீக் பக்கம் தவறே இல்லை என்று சொல்லவில்லை. கூடிப் பேசலாம். குறைகளைக் களையலாம்.

கருணாநிதியின் பண்புகளில் எதை திமுக என்றும் பின்பற்ற வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

எதிர்ப்பாளர்கள் உட்பட எல்லோரையும் அரவணைக் கும் பண்பு. ‘காயிதே மில்லத்’ ஆவணப் படத்தில் கருணா நிதியைப் பேசவைக்க வேண்டும் என்று அணுகினார் விசிகவைச் சேர்ந்த ஷா நவாஸ். நான் பேசியவுடன் கருணா நிதி ஒப்புக்கொண்டார். படப்பிடிப்புக்கு முந்தைய நாள் சந்திக்கையில் கருணாநிதியிடம் தான் எழுதிய ஒரு புத்தகத்தைக் கொடுத்திருக்கிறார் ஷா நவாஸ். அன்று மாலை கொடுத்த புத்தகத்தை இரவே படித்துவிட்டார் கருணாநிதி.

மறுநாள் படப்பிடிப்பின்போது நானும் ஷா நவாஸுடன் சென்றிருந்தேன். புத்தகத்தில் தன்னைப் பற்றிக் கடுமை யாக விமர்சித்து எழுதப்பட்ட வரிகளை எல்லாம் அடிக் கோடிட்டு வைத்திருந்த கருணாநிதி என்னிடம் காட்டினார். அவருக்கு வருத்தம் இருந்தது. ஆனால், எதையும் அந்த இளைஞரிடம் காட்டவில்லை. படப்பிடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அன்போடு அவரை வழியனுப்பி வைத்தார். ‘பின்னாளில் ஒருநாள் என்னை அவர் புரிந்துகொள்வார்’ என்றார். இந்தப் பண்பைத்தான் திமுக என்றும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்!

-கே.கே.மகேஷ்

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x