Published : 10 Nov 2017 10:17 AM
Last Updated : 10 Nov 2017 10:17 AM

திப்பு சுல்தான்: மதச்சார்பின்மையின் மகத்தான முன்னோடி!

ர்நாடகத்தில் மூன்றாவது ஆண்டாக திப்பு சுல்தானின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படு கிறது. இவ்விழாவுக்கு இந்துத்துவ அமைப்புகளிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. திப்பு சுல்தான் இந்து மதத்தினரைத் துன்புறுத்தியவர் என்று ஆங்கிலேயர்கள் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள புனைந்த கதைகளை இப்போது இந்துத்துவவாதிகள் கையிலெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

திப்பு சுல்தானின் ஆட்சி எல்லையைத் தற்போதைய மாநில எல்லைகளின்படி கர்நாடகத்துக்குள்ளேயே அடக்கிவிட முடியாது. கேரளமும் ஆந்திரத்தின் சில பகுதிகளும் தமிழ்நாட்டின் கொங்குப் பகுதியும் அவரது ஆளுகைக்கு உட்பட்டு இருந்திருக்கின்றன. திப்பு சுல்தான், குடகுப் பகுதியை இணைத்துக்கொண்ட போது 80,000 பேரை இஸ்லாமிய சமயத்துக்கு மதம் மாற்றியதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால், அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளில் குடகில் 10,000 சொச்சம் பேரே இஸ்லாமியர்களாக இருந்தார்கள் என்று தெரிகிறது. உண்மையில், தனது ஆட்சிக் காலத்தில் திப்புவின் சமய அணுகுமுறை இந்துக்களுக்கு எதிராகவும் இல்லை, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் இல்லை. மதச்சார்பற்ற ஆட்சியையே அவர் நடத்தியிருக்கிறார்.

சுல்தானின் பெருமை

சிறீரங்கப்பட்டணத்தின் புகழ்பெற்ற ரெங்கநாதர் கோயிலிலிருந்து கூப்பிடு தொலைவில்தான் திப்பு சுல்தானின் அரண்மனை இருந்தது. திப்பு மதவெறியராக இருந்ததில்லை என்பதற்கு அந்தக் கோயிலே முதன்மைச் சான்று. இன்றும் நஞ்சன்கூடு கோயிலில் அவர் அளித்த மரகத லிங்கமும் மேல்கோட்டை நரசிம்மர் கோயிலில் அவர் வழங்கிய முரசும் பார்வைக்கு இருக்கின்றன. மேலும், அவரது அரசாங்கத்தால் சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கொடைகளில் 90% இந்து சமய நிறுவனங்களுக்கே அளிக்கப்பட்டன. அதனால்தான் நரசிம்மர் கோயிலில் புராண நிகழ்ச்சிகளை விவரிக்கும் ஓவியங்களுக்கு இடையே திப்பு சுல்தானின் படத்தையும் வரைந்து பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

மராட்டியர்கள் சிருங்கேரி மடத்தைக் கொள்ளையிட்டு, அங்கிருந்த பிராமணர்களைக் கொன்று, சாரதாதேவி யின் பொற்சிலையைக் கொண்டுசென்றபோது, அம்மடத்தின் பணிகள் மீண்டும் தொடர்வதற்குக் கொடைகளை அளித்ததுடன் சிருங்கேரி சங்கராச்சாரியாருக்குப் பாதுகாப்பாக சையத் முகமது என்ற தளபதியையும் ஒரு படையையும் அனுப்பிவைத்தவர் திப்பு சுல்தான்.

திப்பு சுல்தான் கேரளத்தின் மலபார் பகுதியை நோக்கிப் படையெடுத்துச் சென்றபோது, குருவாயூர் கோயிலில் இருந்த பிராமணர்கள் அங்கிருந்த சிலையை மறைத்து வைத்தனர். அவர்களது அச்சத்தை அறிந்த திப்பு சுல்தான், சிலை இருந்த இடத்தில் மீண்டும் அதை நிறுவச் செய்து அக்கோயிலுக்குக் கொடையளித்துத் திரும்பினார். மலபார் பகுதியில் பெண்கள் மேலாடை இல்லாமல் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த திப்பு சுல்தான், அவ்வழக்கத்துக்குக் காரணம் எதுவென்றாலும் அது உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.

இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே சச்சரவுகள் எழுந்தபோதும் திப்பு சுல்தான் சமயச் சார்புக்கு ஆளாகிவிடவில்லை. சிறீரங்கப்பட்டணத்தில் நடந்த ஒரு இந்து மத ஊர்வலத்தின்போது இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டனர். இஸ்லாமிய சமய அறிஞரான பீர்லதா அரசரிடம் புகார் செய்தார். விசாரித்த திப்பு சுல்தான், அந்த ஊர்வலத்தில் சிக்கல் உருவாவதற்கு இஸ்லாமியர்களே காரணம் என்று அறிந்து அவர்களைத் தண்டித்தார். இஸ்லாமியர்களுக்கு ஆதரவு அளிக்கப்படாவிட்டால் நாட்டை விட்டே தான் வெளியேறப் போவதாகப் பயமுறுத்தினார் பீர்லதா. ‘தங்களது விருப்பம் அதுவானால் அப்படியே நடக்கட்டும்!’ என்று பதிலளித்தவர் திப்பு சுல்தான்.

திரிக்கப்பட்ட வரலாறு

1787-ல் திப்பு சுல்தான் வெளியிட்ட பிரகடனம், பிற மதங்களிடம் சகிப்புத்தன்மையே புனித குர்ஆனின் கோட்பாடு என்று தொடங்கி சாதி, மதம், இனம் இவற்றின் பெயரால் மைசூர் அரசின் ஆளுகையில் உள்ள எவரையும் வேறுபடுத்திப் பார்ப்பதும் ஒதுக்குவதும் சட்டவிரோதமானது என்று முடிகிறது.

இப்படியெல்லாம் நடந்திருந்தும் திப்பு சுல்தானின் மீது மதவெறியர் என்று பழிசொல்ல நேர்ந்தது எப்படி? திப்பு வரலாற்றை எழுதிய ஆங்கிலேயர்கள் பெரும்பாலும் முதல், இரண்டாம் மைசூர் போர்களில் அவரால் சிறைபிடிக்கப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டவர்கள். திப்புவின் வரலாற்றை எழுதிய இஸ்லாமியர்களோ ஆங்கிலேய அரசிடம் ஓய்வூதியம் பெற்றவர்கள். இரண்டு வகையிலும் திப்புவின் வரலாறு திரித்து எழுதப்பட்டிருக்கிறது.

திப்பு சுல்தானுக்கு இந்திய விடுதலைப் போராட்டத் தில் தவிர்க்கவே முடியாத இடம் உண்டு. ஆங்கிலேயர் களுக்கு எதிராக துருக்கி, ஆப்கானிஸ்தான், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஆதரவை அவர் பெற முயற்சித்தார். சூழல் கைகூடவில்லை. மராட்டியர்களும் சரி, நிஜாமும் சரி நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லை என்பதால், அவர்களுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்க்கவும் வாய்ப்பில்லாமல் போனது. தோல்வி உறுதி என்றபோதும் ஓடி ஒளியாமல், சரணடையாமல் போரிட்டு மடிந்தது திப்பு சுல்தானின் வீரத்தை எடுத்துச் சொல்லும்.

மைசூரை ஆண்ட இந்து அரசர்களான உடையார் களிடமிருந்து ஹைதர் ஆட்சியைக் கைப்பற்றினார். எனவே, அவரும் அவரது மகன் திப்புவும் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்ற பார்வையும் இருக்கிறது. ஔரங்கசீப்புக்கும் அதன் பிறகு மராட்டியர்களுக்கும் கப்பம் கட்டும் சிற்றரசாகத்தான் மைசூர் இருந்தது. உடையார்கள் வலிமை இழந்துபோய் அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோதுதான் அதன் ஆட்சிப்பொறுப்பை ஹைதர் ஏற்றுக்கொண்டார். அதனால், மராட்டியர்கள் கப்பம் பெறும் வாய்ப்பை இழந்தனர்.

விவசாயிகளின் நண்பர்

திப்பு சுல்தான் தொலைநோக்கு கொண்ட நிர்வாகத் திறமையாளரும்கூட. 17 ஆண்டுகால ஆட்சியில் அவர் மேற்கொண்ட திட்டங்கள் இன்றைக்கும் வியந்துநோக்கும் வகையிலேயே அமைந்திருக்கின்றன. இந்தியாவிலேயே முதன்முறையாகத் தொழில் மற்றும் வணிகக் கொள்கையை வகுத்த மன்னர் அவர். விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்து, அவற்றை நியாயவிலைக் கடைகள் மூலமாக விற்கும் முறையை அறிமுகப்படுத்தியவர். விவசாயம் செய்யப்படாத நிலங்களைக் கண்டறிந்து, அவற்றை நிலமில்லாதவர்களுக்கு அளித்தார்.

நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவியவர், ‘‘குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வி அளிக்காத தந்தை கடமையை மறந்தவன்’’ என்று அறிவித்தார். பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்திய திப்பு சுல்தான், அதனால் அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பைப் பற்றி கவலைப்படவே இல்லை. திப்பு சுல்தானின் இச்செயலுக்காக அவரை உன்னதமான மன்னர் என்று வியந்து பாராட்டி எழுதியிருக்கிறார் காந்தி. காவிரிக் கரையோரத்தில் இருந்த ஆயுதத் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கந்தகக் கழிவால் நதிநீர் மாசுபட்டு, நீர்வாழ் உயிரினங்கள் அழியுமென்று அத்தொழிற்சாலையை வேறிடத்துக்கு மாற்றியவர் திப்பு சுல்தான். இன்றைய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் அவர் முன்னோடி.

விடுதலை வீரர், சிறந்த நிர்வாகி என்ற காரணங்களுக்காக திப்பு சுல்தான் என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டியவர். குறிப்பாக, மதச்சார்பற்ற ஆட்சிமுறைக்காக அவரைப் போற்றுவது இன்றைய சூழலில் மிகவும் பொருத்தம்.

- செல்வ புவியரசன்,

தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

இன்று திப்பு சுல்தான் பிறந்த தினம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x