Last Updated : 27 Nov, 2017 09:54 AM

 

Published : 27 Nov 2017 09:54 AM
Last Updated : 27 Nov 2017 09:54 AM

மக்களும் கைகோத்தால், உயர் நீதிமன்றத்தில் தமிழ் ஒலிக்கும்!- வழக்கறிஞர் பகத் சிங்

மிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைக்காக சமீபத்தில் மதுரையில் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற்றன. ‘உயர் நீதிமன்றத் தில் தமிழ்’ போராட்டக் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் பகத் சிங்கிடம் எடுத்த பேட்டி:

ஏனிந்த போராட்டம்?

சட்டம் பற்றிய அறியாமை மன்னிக்கக் கூடியது அல்ல என்கிறது சட்ட மூதுரை. எனக்கு இப்படியொரு சட்டம் இருப்பதே தெரியாது என்று பாமரர்கூட நீதிமன்றத்தில் முறையிட முடியாது. ஆனால், சட்டமோ மக்களின் மொழியில் இல்லை. நாம் சொன்ன விஷயங்களைத்தான் வழக்கறிஞர் மனுவில் கூறியிருக்கிறாரா, நமது பிரச்சினையை அவர் சரியாக நீதிமன்றத்தில் எடுத்துரைத்தாரா, நீதிபதி அதை எப்படி அணுகினார் என்பதைச் சாமானியரும் புரிந்துகொள்ள தாய்மொழி வழக்காடு மொழியாக வேண்டும்.

சாமானியர்களுக்குச் சரி, வழக்கறிஞர்களுக்கு என்ன பயன்?

இந்தியாவிலேயே மிகச் சிறந்த முன்னுதாரணமான தீர்ப்புகள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில்தான் வருகின்றன என்று புகழும் சட்ட நிபுணர்கள், நமது உயர் நீதிமன்றங்களில், ஒரு பிரச்சினையை சட்ட விதியோடு பொருத்திப் பார்த்து முழுமையாக முன்வைக்கிற வாதமோ, தீர்ப்போ இல்லை என்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வாதமும், தீர்ப்பும் அவர்களது தாய்மொழியான இந்தியில் நடைபெறுவதுதான்.

மாநில உரிமைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் இந்தியையோ அந்த மாநில அலுவல் மொழியையோ உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்கலாம் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தின் கூறு 348(2) தெரிவிக்கிறது. இச்சட்டம் நடைமுறைக்கு வரும் முன்பே (1949) ஓர் அவசரச் சட்டம் மூலம் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற மொழியாக ராஜஸ்தானியை ஆக்கிவிட்டார்கள். அச்சட்டம் அமலுக்கு வந்த 18-வது நாளிலேயே (1950, பிப்14) ராஜஸ்தான் ஆளுநரின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் அனுமதி வழங்கியதால், அங்கும் இந்தி வழக்காடு மொழியாகிவிட்டது. இதேபாணியில் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களிலும் அடுத்தடுத்து இந்தி வழக்காடு மொழியாகிவிட்டது. ஆனால், இந்தியைக் கேட்காமல் தமிழைக் கேட்ட தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை (2006) குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பாமல் உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியது மத்திய அரசு. உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இது ஆளுக்கொரு நியாயம் என்பதும் மாநில உரிமைகள் மீதான தாக்குதல் என்பதும்தானே?

இதற்கு யார் காரணம்?

மத்திய ஆட்சியாளர்கள்தான் முக்கியமான காரணம். தமிழகம் மட்டுமல்ல, மேற்கு வங்கம், குஜராத், கர்நாடகமும்கூட இப்படியான கோரிக்கையை எழுப்பின. குஜராத்தி வேண்டும் என்று அன்று கேட்ட மோடிதான் இன்று பிரதமர். ஆனால், அவரும் இன்று டெல்லிக்காரர் ஆகிவிட்டார் என்பதுதான் சிக்கல்!

உங்கள் போராட்டம் வெல்லும் என்று நம்புகிறீர்களா?

இம்முறை தீர்வை எட்டாமல் பின்வாங்குவதாக இல்லை. இது வெறுமனே வழக்கறிஞர்கள் பிரச்சினையல்ல, மக்களுக்கான போராட்டம் என்பதையும் உணர்த்துவோம். பொதுமக்களும் கை கோத்தால், உயர் நீதிமன்றத்தில் சீக்கிரமே தமிழ் ஒலிக்கும்!

- கே.கே.மகேஷ்,

தொடர்புக்கு: magesh.kk@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x