Last Updated : 09 Nov, 2017 09:34 AM

 

Published : 09 Nov 2017 09:34 AM
Last Updated : 09 Nov 2017 09:34 AM

மா. நன்னன்: தனிநபர் தமிழியக்கம்!

மூ

த்த தமிழறிஞர், முதிர்ந்த சிந்தனையாளர், அன்பு கனிந்த உள்ளமும் அறச் சீற்றமும் கொண்டவரான மா.நன்னனின் மறைவு தமிழருக்கும், தமிழ் மொழிக்கும் ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு. வழக்கமாகச் சொல்லுகின்ற வார்த்தையல்ல இது. உண்மை.

ஸ்ரீமுஷ்ணம் அருகில் காவனூர் எனும் சிற்றூரில் 1924 ஜூலை 30-ல் பிறந்தவர் நன்னன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் ஆகி, பின் ஆய்வுகள் பல செய்து சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தொடக்கப் பள்ளி ஆசிரியராகக் பணி தொடங்கி, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி ஆசிரியராக, பயிற்சிக் கல்லூரிப் பேராசிரியராக, கலைக் கல்லூரிகளில் பேராசிரியராக, நிறைவாக மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். எனினும், இறுதிவரை அவரது தமிழ்ப் பணி ஓயவில்லை.

எண்ணும் எழுத்தும்

தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின் இயக்குநராகவும் மூன்று ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். அப்போது அந்த அலுவலகம் பாரிமுனைப் பகுதியில் குறளகம் கட்டிடத்தில் இயங்கிவந்தது. நான் திருவாரூரில் பணியாற்றியபோது அலுவலகத்தில் இருமுறை சந்தித்து உரையாடியது மறக்கவே முடியாதது. வாழ்நாள் முழுவதும் தமிழ்ப் பணியாற்றியிருப்பினும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் (இன்றைய ‘பொதிகை’) ‘எண்ணும் எழுத்தும்’ என்ற கல்வி ஒளிபரப்பு மிக முக்கியமானது. 17 ஆண்டுகள் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி மூலம் நேயர்களுக்குத் தமிழைச் சிறப்பாகக் கற்றுக்கொடுத்தார்.

வகுப்பில் மாணவரோடு பேசி, பாடம் நடத்து தல்போல் நடித்து எளிமையாக அந்தப் பெரும் பணியைச் செய்தார். அந்த நிகழ்ச்சி வாயிலாகப் பெரும் புகழ் பெற்றார். பொதிகையில் நானும் ‘தவறின்றித் தமிழ் பேசுவோம்’ எனும் தொடர் நிகழ்ச்சி யில் மூன்றாண்டுகள் தமிழைக் கற்பித்தேன். ஏழு ஆண்டுகள் ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றதற்கு அவர் ஏற்படுத்திய தாக்கம் முக்கியமான காரணம்.

அறச் சீற்ற நூல்கள்

மிகச் சிறந்த ஆசிரியராகவும், ‘நல்ல உரைநடை எழுத வேண்டுமா?’, ‘தவறின்றித் தமிழ் எழுதுவோம்’, திருக்குறள் தொல்காப்பியம் உரை விளக்கங்கள், பெரியாரியல் நூல்கள் என 60-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய எழுத்தாளராகவும், சிறந்த மேடைப் பேச்சாளராகவும் நன்னன் விளங்கினார். பெரியாரின் கருத்துகளைக் கால வரிசையிலும்,பொருள் வரிசையிலும் திரட்டி, அவர் எழுதிய ‘பெரியார் கணினி’ நூல் மிகவும் முக்கியமானது. அழுத்தமான கடவுள் மறுப்புக் கொள்கையராக, தந்தை பெரியார் வழியில் நின்றார். நாட்டு விடுதலைக்கு முன் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்திலும், தமிழிசைக்கான கிளர்ச்சிப் போராட்டங்களிலும், இந்தி எதிர்ப்புப் போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். ‘தமிழ்ச் செம்மல்’ விருது, தமிழக அரசின் பெரியார் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது பெற்றுள்ளார்.

மக்கள் தொலைக்காட்சியில் ‘தமிழ்ப் பண்ணை’, ‘அறிவோம் அன்னை மொழி’ தொடர் நிகழ்ச்சிகள் வாயிலாக நல்ல தமிழை வளர்த்தார். அவையெலாம் தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாயின. மக்கள் தொலைக்காட்சியில் ‘தமிழ் பேசு தங்கக் காசு’, ‘தமிழ்முற்றம்’ நிகழ்ச்சிகளை நான் செய்ததற்கு முன்னோடி நன்னன்தான்! அவருடைய ‘எழுதுகோலா? கன்னக்கோலா?’, ‘செந்தமிழா? கொடுந்தமிழா?’ போன்ற நூல்கள் அறச் சீற்றம் கொண்டவை.

மறக்க முடியாத சம்பவம்

பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம் இன்றும் மறக்க முடியாதது. மன்னார்குடியில் ஒரு திருமண விழாவில் அவர் கலந்துகொண்டு பேசிய போது நானும் அதில் கலந்துகொண்டேன். நான் அடிப்படையில் மூடபக்தியில்லாத பக்தியாளர். அவரோ முழுக்க முழுக்கக் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர். இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இளமைத் துடுக்கால் சற்றே சினம் காட்டிப் பேசிவிட்டேன். மிகப் பொறுமை யாக எனக்குப் பதில் தந்து தன் கருத்தை நிலைநாட்டினார். அதேசமயம், அவருக்குச் சினம் வந்த காட்சியையும் கண்டிருக்கிறேன்.

ஒரு நாளிதழில், ‘தினம் ஒரு சொல்’ என்று தமிழில் ஓர் அருஞ்சொல்லுக்கு பத்து வரியளவில் விளக்கம் எழுதத் தொடங்கி, ஏதோ காரணங்களால் ஆறு நாட்களில் அதை விட்டுவிட்டார் நன்னன். இதழாசிரியர் வேண்டியதால் தொடர்ந்து நன்னன் வழியைப் பின்பற்றி 365 நாட்களும், நாளொரு சொல் என எழுதி நிறைவுசெய்தோம்.

நூலிழையும் தவறாத நன்னன்

நன்னன் தனது பணியில் நூலிழையும் தவற மாட்டார். அவருடைய திருக்குறள் உரைநூல் ஒரு நாளிதழின் மதிப்புரைக்காக என்னிடம் வந்தது. அந்த உரையைப் படித்து வியந்து நின்றேன். ‘கடவுள் வாழ்த்து’ அதிகாரப் பெயரை அவர் மாற்றவில்லை, தனது கொள்கைகளைத் திணித்து எழுதவில்லை. திருவள்ளுவர் என்ன சொன்னாரோ அதனைத் திரிக்காமல் அப்படியே அருமையாக எழுதியிருந்தார். அதனை விளக்கிப் பாராட்டி எழுதியிருந்தேன்.

நன்னனுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். அண்ணல் என்ற பெயர்கொண்ட அவரது மகன் இளம் பருவத்தில் இறந்துபோனார். அண்ணல் உயிர்நீத்த நாளில் ஆண்டுதோறும் விழா எடுத்து நூல் வெளியீடு, ஏழை மாணவர்களுக்கு நிதியுதவி செய்தல் என நிகழ்வுகளை நடத்திவந்தார் நன்னன். அவரது மகள்களும் மருமகன்களும் அந்த விழாவை முன்னெடுத்துச் செயலாற்றுகிறார்கள்.

பொதிகை, மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பாடம் கற்பித்து தனி முத்திரை பதித்தவர் நன்னன். அவர் வழியில் நானும் ‘10 நாள் வகுப்பறைப் பாடம்’, ‘நல்ல தமிழறிவோம்’ தலைப்பில் கற்பித்திருக்கிறேன். சிறந்த தமிழ்ப் பெருமகனார் இன்று நம்மை விட்டுச் சென்றாலும் அவர் ஆற்றிய பணிகள் என்றென்றும் நின்று அவர் புகழை நிலை நிறுத்தும். தன்னேரிலாத நன்னன் புகழ் வாழ்க!

- ஞானச்செல்வன்,
பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம் மற்றும் அறிவோம் அன்னை மொழி போன்ற நூல்களின் ஆசிரியர், தமிழறிஞர்
தொடர்புக்கு: kavikkognanachelvan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x