Published : 28 Nov 2017 10:20 AM
Last Updated : 28 Nov 2017 10:20 AM

இப்படிக்கு இவர்கள்: நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத அரசு!

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கான அலங்கார வளைவுகளில் மோதி விழுந்ததில், ரகு என்கிற பொறியாளர் மீது லாரி ஏறி மரணமடைந்த செய்தியை எளிதில் கடந்து போக முடியவில்லை. அரசின் பொறுப்பற்ற தனத்தாலும், மெத்தனத்தாலும் ஏற்பட்ட உயிர்ப் பலி இது. விபத்துக்குப் பிறகு வளைவை மட்டும் நீக்குவது எப்படித் தீர்வாகும்? தஞ்சையில் சரபோஜி கல்லூரி விளையாட்டு மைதானம், முக்கிய சாலைகள் என அனைத்தும் கொத்திக் குதறி சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.

கட்-அவுட், ஃப்ளக்ஸ் பேனர், அலங்கார வளைவு என நகரச் சாலைகள் அனைத்தும் குறுகியுள்ளது. கட்-அவுட் குறித்து நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் ஒரு அரசே இப்படி நடந்துகொள்வதை என்னவென்பது? இவ்வளவு ஆடம்பர விழா, அதுவும் அரசு செலவில். இந்தச் செலவில் சத்துணவில் முட்டை வழங்குவதை உறுதிப்படுத்த முடியுமே!

- சே.செல்வராஜ், தஞ்சாவூர்.

குடிமகனின் விருப்பம்

இரட்டை இலை சின்னமும், அதிமுக என்ற கட்சிப் பெயரும் ஆட்சியில் இருக்கும் பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிக்கே என்ற தேர்தல் ஆணையத் தின் உத்தரவு எதிர்பார்த்ததே. சமீபத்தில் பிஹார் மாநிலத்தில் ஆளும் முதலமைச்சர் நிதீஷ் குமார் அணிக்கு ‘அம்பு’ சின்னம் ஒதுக்கிய உத்தரவு இதற்கு முன்னோடி. ஒன்பது மாதங்களாக அரசியல் களத்திலும், ஆளும்கட்சிக்குள்ளும் நீடித்துவந்த குழப்பம் முடிவுக்கு வந்திருக்கிறது. இனியாவது, தமிழகத்தில் நிலவிவரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆட்சியாளர்கள் தீர்வு காண வேண்டும் என்பதே சாதாரணக் குடிமகனின் விருப்பம்.

- ச.நல்லசிவன், திருநெல்வேலி.

வியக்க வைக்கும் வரலாறு

கே.பாரதி எழுதிய ‘பெண் உரிமையின் முதல் குரல்’ கட்டுரை (நவ.23)படித்தேன். 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இந்திய மாதர் சங்கம் தொடங்கப்பட்ட வரலாறும் அதன் செயல்பாடுகளும் மிகவும் வியப்பாகவும் பெருமையாகவும் இருந்தது. இத்தகைய செய்திகள் இன்றைய தலைமுறை ஆண்களும் பெண்களும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியது. இவ்விஷயத்தில் ‘ தி இந்து’ நாளிதழின் பங்கு மகத்தானது!

- பா.லலிதா, உய்யக்கொண்டான் திருமலை.

வன்முறையை ஆதரிக்கிறதா பாஜக?

த்மாவதியின் கதை, நடந்த வரலாறோ அல்லது கற்பனைக் காவியமோ, அது அல்ல பிரச்சினை. இப்படத்தைத் தயாரித்து இயக்கியவர், கதாநாயகி யாக நடித்தவர் ஆகியோரின் தலைகளைக் கொய்பவருக்குத் தலா ரூ. 5 கோடியும், அந்நடிகையை தீயிலிட்டு எரிப்பவருக்கு ரூ.1 கோடியும் வழங்கப்படும் எனப் பகிரங்க மாக வெளியிட்டுள்ள வன்முறை அறிவிப்பை ஆளும் பாஜக மாநில அரசுகள் ஆதரிக்கின்றனவா? நமது முன்னோர் கட்டிக் காப்பாற்றிவந்த நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் நமது ஜனநாயக அமைப்பே கேள்விக்குறியாகி உள்ளதே! இச்செயல்கள் பல்வேறு மொழிகளை, மதங்களைக் கொண்ட நம் நாட்டுக்கு நல்லதல்லவே. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய பிரதமர் மோடி மௌனம் சாதிப்பது சரியா?

- கே.வி.ராஜ்குமார், மின்னஞ்சல் வழியாக.

சின்னம் மட்டும் போதுமா?

நவ.27-ல் வெளியான ‘சின்னத்தை வெல்லுதல் முழு வெற்றி அல்ல!’ என்ற தலையங்கம் படித்தேன். பழனிசாமி - பன்னீர்செல்வம் அணிக்கு இதைவிட மிகப்பெரிய பணியிருப்பதை நினைவூட்டியது நன்று. இப்போது நடக்கும் ஆட்சி ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது அவரால் அவருக்காக மக்கள் அளித்த வெற்றி. இந்த அணி இதைப் புரிந்து செயல்பட வேண்டும்.

- எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x