

நவம்பர் 2017 இறுதியில் இலங்கை அருகே உருக்கொண்டு வடக்கு நோக்கி நகர்ந்துவந்து, கன்னியாகுமரி மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளைத் தாக்கிப் பெரும் பொருள் சேதத்தையும் உயிர்ச் சேதத்தையும் ஒக்கி புயல் ஏற்படுத்தியது. அன்றைய முதலமைச்சர் உடனடியாகக் களத்துக்கு வந்து தங்களைச் சந்திக்கவில்லை என மக்கள் புகார் கூறினர். ஒக்கிப் புயல் சேதங்களைப் பற்றி திவ்யபாரதி எடுத்து வெளியிட்ட ஆவணப் படத்தின் பெயர் - ‘ஒருத்தரும் வரலே’.
மகாத்மாவின் அக்கறை: இயற்கைச் சீற்றங்களாலோ கலவரங்களாலோ மக்களுக்குப் பாதிப்புகள் ஏற்படும்போது நாட்டின் அமைச்சர்கள், முதலமைச்சர்கள், பிரதமர் என ஆட்சியாளர்கள் நேரில் வந்து ஆறுதல் சொல்ல வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பது இயல்பானது.
ஆனால், நம் தலைவர்கள் அப்படியெல்லாம் உடனுக்குடன் பதற்றத்துடன் வந்து, அக்கறையுடன் மக்களைச் சந்திப்பது இல்லை. அப்படி வந்து சந்தித்து மக்களின் துயரில் பங்குபெறும் தலைவர்கள் வரலாற்றில் இடம்பெறுவார்கள்.
தேச விடுதலைப் போருக்குத் தலைமை ஏற்றிருந்த மகாத்மா காந்தி, இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில்... புதிய அரசு பதவி ஏற்கும் நேரத்தில் தலைநகரில் இருக்கவில்லை. மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட நவகாளியில்தான் இருந்தார். கொல்கத்தாவில் மக்களோடு நடந்தார்.
பகைப்புயலுக்கு நடுவில் நின்று சமாதானக் கொடியை வீசிக்கொண்டிருந்தார். வரலாறு அவரது தியாகத்தை இடையறாது பேசிக்கொண்டிருக்கிறது.
நேருவின் கண்ணீர்: இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரங்களில் எண்ணற்றோர் கொல்லப்பட்டனர். ஏராளமான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாயினர். அப்போது இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு உடனடியாகக் களத்தில் நின்றார். அவர் இறங்கியதால் அரசு இயந்திரமும் இறங்கியது. அழிவின் பரிமாணம் குறைக்கப்பட்டது.
பஞ்சாபில் தோஹா கல்சா என்கிற இடத்தில் எதிரிகள் தாக்க வருகிறார்கள் என்கிற தவறான செய்தியைக் கேள்விப்பட்டுத் தாங்கள் மானபங்கம் செய்யப்பட்டுவிடக் கூடாதே என்று அஞ்சி, ஒரு வீட்டில் கூடி ஒளிந்திருந்த பெண்கள் 90 பேர் அவ்வீட்டுக் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டனர். தகவல் அறிந்து அங்கே சென்று, அந்தக் கிணற்றுக்குள் எட்டிப்பார்த்து நேரு கதறி அழுத செய்தி வரலாற்றில் கண்ணீருடன் பதிவாகியிருக்கிறது.
கலவரக் களத்தில்... 1957இல் முதுகுளத்தூரில் ஏற்பட்ட சாதிக் கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமுற்றனர். ஊர்கள் சூறையாடப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டமே பற்றி எரிந்துகொண்டிருந்தது. இன்றுவரை தென் மாவட்டங்களில் சாதிய மோதல்களை முன்னெடுப்போருக்கு ஒரு தூண்டும் சக்தியாக அக்கொடிய நிகழ்வு இருந்துகொண்டிருக்கிறது.
‘முதுகுளத்தூர் படுகொலை’ என்கிற தன் ஆய்வு நூலில் அக்காலத்தைப் பதிவுசெய்திருக்கிறார் வரலாற்றாய்வாளர் கா.அ.மணிக்குமார். அத்தகைய கலவர நேரத்தில் அன்றைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அப்பகுதிக்குச் செல்லவில்லை. ‘நீங்கள் ஏன் போகவில்லை?’ எனச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னும் அவர் போகவில்லை. சி.சுப்பிரமணியம் போன்ற அமைச்சர்களை அனுப்பி வைத்தார்.
2018 இல் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு இயக்கத்தின் நூறாவது நாளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க கமல் ஹாசன் போனார். ரஜினிகாந்த்கூட போனார். மற்ற தலைவர்களெல்லாம் போனார்கள். ஆனால், அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போகவில்லை. 2018 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போதுதான் முதலமைச்சர் தூத்துக்குடிக்குச் சென்றார்.
2002 பிப்ரவரி கடைசியில் தொடங்கி மார்ச் முதல் வாரம் முழுமையும் கோர நர்த்தனம் ஆடிய குஜராத் வன்முறைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 1946 கொல்கத்தா வன்முறைகளுக்கு அடுத்த பெரிய வன்முறை நிகழ்வாக இது கருதப்படுகிறது. இந்தப் படுகொலைகளுக்குப் பின் 2003 ஏப்ரல் 4 ஆம் நாள், அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் குஜராத்துக்கு நேரில் சென்றார். மக்களின் வேதனைக் குரல்களுக்குச் செவிமடுத்தார். ‘இது ஒரு தேசிய அவமானம். உலகத்தின் முன்னால் நாம் தலைகுனிந்து நிற்கிறோம்’ என்று பத்திரிகையாளர்களிடம் பேசினார். வரலாறு அதை இன்னும் சொல்லிக்கொண்டிருக்கிறது.
களம் சென்ற தலைவர்கள்: 2004இல் கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 93 பச்சிளங்குழந்தைகள் பலியானார்கள். அந்த துர்நிகழ்வு நாட்டையே உலுக்கியெடுத்தது. குழந்தைகளை இழந்த பெற்றோர்களின் கதறல் இரவெல்லாம் நம்மைத் தூங்கவிடாமல் துரத்தியது. அன்றைய முதல்வர் ஜெயலலிதா கும்பகோணத்துக்கு நேரில் சென்று பெற்றோருக்கு ஆறுதல் சொன்னார்.
கேரளத்தின் 2018 மழை, நிலச்சரிவுகள் நிகழ்ந்த காலத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு இடிபாடுகளுக்கு நடுவே நின்று பணியாற்றியதைப் பார்த்தோம். சென்னையில் மழை வெள்ளம் வரும் சமயங்களில் நம்முடைய முதல்வர்கள் மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின் போன்றோர் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டோ மழைக் காலணிகளை அணிந்துகொண்டோ மக்களோடு நிற்பதைப் பார்த்திருக்கிறோம். ஒடிஷா ரயில் விபத்து நடந்த இடத்துக்குப் பிரதமர் மோடி சென்று பார்வையிட்டார்.
அரசியல் தலைமைகள் நேரில் செல்வதன் மூலம் மக்களுக்கு, ‘நாம் தனித்து விடப்படவில்லை; நமக்கு ஆதரவாக இந்த நாடும் அரசும் நிற்கின்றன’ என்கிற நம்பிக்கை ஏற்படும். கைவிடப்பட்ட உணர்விலிருந்து மீள இதுபோன்ற நேரடி விஜயங்கள் நிச்சயமாக ஒரு பற்றுக்கோடாக இருக்கும். பிரதமரோ முதலமைச்சரோ நேரில் செல்கையில், மந்தமான நிர்வாக நடவடிக்கைகளும்கூடச் சில நாள்களுக்காவது வேகம் பெறும்.
கைவிடப்பட்ட மணிப்பூர்: இத்தகைய பின்னணியில்தான் சமீப காலமாக நம்மை வேதனைக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கும் மணிப்பூர் இனக் கலவரங்களைப் பார்க்க முடியும். வெளிநாடுகளுக்கெல்லாம் பறக்கும் நம் பிரதமர், இன்றுவரை மணிப்பூருக்கு நேரில் செல்லாதது ஏன் என்கிற கேள்வி வலுவாக எழுகிறது. குறைந்தபட்சம் அதைப் பற்றிப் பொதுவெளியில் அவர் பேசக்கூட இல்லை. பத்திரிகையாளர்களைச் சந்திக்க விரும்பாதவர் எனப் பெயரெடுத்த நம் பிரதமர், மணிப்பூர் செல்லவும் மறுத்துவருகிறார் என நாம் கருதிக்கொள்ள முடியுமா?
இன்று உடனடியாக மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் ஆறுதலும் வேண்டும். பகை விதைத்து ஆதாயம் தேடும் வகுப்புவாத அரசியல் ஆட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாகப் பிரதமர் மணிப்பூர் செல்ல மனது வைக்க வேண்டும்.
- தொடர்புக்கு: tamizh53@gmail.com