Published : 11 Jul 2014 11:26 AM
Last Updated : 11 Jul 2014 11:26 AM

பார்சலில் வந்த விமானம்!

பாம்புப் பேய்கள்?

நைஜீரியாவில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளைக் கடத்தி, உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய போகோ ஹராம் பயங்கரவாதிகள் தற்போது பயங்கரபீதியில் உள்ளனர். மறைவிடங்களிலிருந்து திடீரென்று தோன்றும் பாம்புகளும் தேனீக்களும் கடித்துத் தங்களில் பலர் இறந்ததாக அவர்கள் நடுக்கத்துடன் கூறுகின்றனர். தங்களால் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள்தான் பாம்புகள் வடிவில் வந்து தங்களைப் பழிவாங்குவதாக அவர்கள் நம்புகின்றனர். பலர் மறைவிடங்களிலிருந்து வெளியேறி, பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துவருவதாக நைஜீரிய ராணுவத்தினர் கூறுகின்றனர். பாம்பென்றால் பயங்கரவாதிகளும் நடுங்கித்தானே ஆக வேண்டும்!

பார்சலில் வந்த விமானம்!

ஆளில்லா விமானங்கள் பொதுவாக ராணுவம், மீட்புப் பணி போன்ற பணிகளுக்காகப் பயன்படக்கூடியவை. அமெரிக்காவில் ரூ. 2 கோடி மதிப்புள்ள ஆளில்லா விமானம் ஒன்று தவறுதலாக ஒரு மாணவருக்கு பார்சல் அனுப்பப்பட்டுவிட்டது. மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் சென்ற அந்த மாணவர், அந்த விமானத்தைப் பயன்படுத்திப் படங்களை எடுத்ததுடன் சமூக வலைத்தளத்திலும் பதிவேற்றி மகிழ்ந்தார். மாசசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள கடல்வாழ் உயிரிகள் சரணாலயத்துக்கு அனுப்பப்பட்ட அந்த விமானம், பின்னர் மாணவரிடமிருந்து திரும்பப் பெறப்பட்டுவிட்டது. மாணவர் சரி, பயங்கரவாதிகள் கையில் இதுபோன்ற பொருட்கள் கிடைத்திருந்தால்?

சிறைவைக்கப்பட்ட வீரமங்கை

திபெத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் செரிங் வோஸரும் அவரது கணவரும் சீன அரசால் இரண்டு நாட்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். திபெத் விடுதலைக்காகக் குரல்கொடுத்துவரும் செரிங்குக்கு 'சர்வதேச வீரமங்கை' விருதைக் கடந்த ஆண்டு அமெரிக்கா வழங்கியது. தற்போது, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி சீனாவுக்குச் சுற்றுப்பயணம் சென்றிருக்கும் சமயத்தில், செரிங் சிறைவைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெய்ஜிங் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஏற்பாடுசெய்யப்பட்ட விருந்தில் கலந்துகொள்ளத் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதே சீன அரசின் கோபத்துக்குக் காரணம் என்கிறார் செரிங். அரசியலில் எதுவும் சாதாரணமில்லை!

ஜெர்மனியின் செந்தேன் மனம்!

உலகக் கோப்பைக் கால்பந்து அரையிறுதிப் போட்டியில் பிரேசிலை 7-1 என்ற கோல் கணக்கில் வென்ற ஜெர்மனி அணியை உலகமே மிரண்டுபோய்ப் பார்த்துக்கொண்டிருக்கிறது. எனினும், 5 கோல்கள் அடித்த பின்னர், இதற்கு மேலும் பிரேசிலை அவமானப்படுத்த வேண்டாம் என்று ஜெர்மனி அணி முடிவுசெய்ததாக அந்த அணியின் தடுப்பாட்டக்காரர் மேட்ஸ் ஹம்மல்ஸ் கூறியிருக்கிறார். “எதிரணிதான் என்றாலும் எல்லை மீறி அவர்களைக் காயப்படுத்திவிடக் கூடாது. அவர்களை மதிக்க வேண்டும்” என்று புன்னகைக்கிறார் ஹம்மல்ஸ். உங்கள் பெருந்தன்மைதான் சார் பிரேசிலை மேலும் காயப்படுத்துகிறது!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x