Published : 24 Oct 2017 09:11 AM
Last Updated : 24 Oct 2017 09:11 AM

நீதிபதிகள் நியமனம்:நெடுந்தூரப் பயணத்தின் முதல் படி!

ச்ச நீதிமன்றம் சமீபத்தில் தனது ‘நீதிபதிகள் நியமனக் குழு’வின் முடிவுகளைக் காரணங்களோடு தனது இணையதளத்தில் வெளியிட முடிவுசெய்துள்ளது. நமது நாட்டின் அரசியல் கட்டமைப்பில் மிகவும் முக்கியமான பங்காற்றிவரும் நீதித் துறையின் அடிப்படைச் செயல்பாட்டினைத் தீர்மானிக்கும் இந்தத் தீர்மானம் மீதான ஒரு விவாதம் முக்கியத்துவம் வாய்ந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், நீதிபதிகள் நியமன முறையில் மாற்றம் கொண்டுவந்த சட்டத் திருத்தத்தை அரசியல் சட்டத்தின்படி செல்லாததாக அறிவித்த உச்ச நீதிமன்றம், அதே சமயத்தில் இதுவரையில் பின்பற்றும் நியமன முறையின் வெளிப்படைத்தன்மை இல்லாத செயல்பாட்டையும் வேறு பல குறைகளையும் தானே ஒப்புக்கொண்டது. நீதிபதிகள் நியமனக் குழுவின் இதுபோன்ற குறைகளைக் களையத் தேவையான சீர்திருத்தங்களைப் பொதுமக்களிடமிருந்தே உச்ச நீதிமன்றம் கோரியது. நியமனக் குழுவின் சீரான செயல்பாட்டுக்கு, பலதரப்பிலிருந்தும் செய்யப்பட்ட பரிந்துரைகளில் முக்கியமானது அதன் செயல்பாட்டின் அனைத்து அம்சங்களிலும் வெளிப்படைத் தன்மையை முன்னிறுத்துவது ஆகும்.

விவாதத்தை எழுப்பிய ராஜிநாமா

இந்தப் பரிந்துரைகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட பிறகும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இக்குழுவின் செயல்பாட்டில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. சமீபத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதி படேல் தனது பதவியில் இருந்து ராஜிநாமா செய்த பிறகே மீண்டும் அது விவாதத்துக்கு வந்தது. அவர் ராஜிநாமா செய்தார் என்பதைவிட, அதற்கான காரணங்கள் முக்கியமானவை. அவை நீதிபதிகள் நியமனக் குழுவின் முடிவுகளின் மீதும், அக்குழு முடிவுகளை மேற்கொள்ளச் செயல்படும் முறையின் மீதும் பல முக்கிய கேள்விகளை எழுப்பியது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக இருந்த நீதிபதி படேலை உச்ச நீதிமன்றத் தின் நீதிபதிகள் நியமனக் குழு அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்தததன் மூலம் அங்கே அவர் மூன்றாவதாகப் பணி மூப்பில் பின்தள்ளப்பட்டுள்ளார்.ஒரு காரணமும் வெளியிடாமல் எடுத்த தன்னிச்சையான இந்த முடிவில் நியமனக் குழு மீதான அதிருப்தியைப் பலர் பதிவுசெய்தனர்.

நீதிபதிகள் நியமனக் குழுவின் உறுப்பினராக உள்ள நீதிபதி செல்லமேஸ்வர், இக்குழுவில் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு விவாதமும் ஆவணப்படுத்தாததைக் கண்டித்துத் தனது எதிர்ப்பைப் பதிவுசெய்தார். அதன் பின்னரே, இக்குழுவின் ஐந்து உறுப்பினர்களும் குழுவின் முடிவுகளின் மீதான தத்தமது கருத்துகளைப் பதிவுசெய்வது அவசியமாக்கப்பட்டது.

இதன் பின்னரும் நீதிபதி பதவிக்குப் பரிசீலிக்கப்படும் ஒருவர், எதனால் நியமிக்கப்படுகிறார்.. எதனால் நிராகரிக்கப்படுகிறார் என்பது போன்ற தகவல்கள்கூட வெளியிடாமலேயே செயல்பட்டுவந்தது. இதன் மீதான எதிர்வினைகளில் ஏற்பட்ட ஒரு சமூக அழுத்தத்தின் விளைவே இந்த முக்கியத்துவம் வாய்ந்த முடிவு.

எது ரகசியம்?

இது வரையில் ஊடகங்கள்கூட இக்குழுவின் செயல்பாடு மற்றும் இது எடுக்கும் நீதிபதிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் மீதான முடிவுகள் பற்றிய எந்தச் செய்தியாக இருந்தாலும், நேரடி ஆதாரம் ஏதும் இல்லாமல்தான் வெளியிட்டுவந்துள்ளன. இவ்வாறான சூழலில் எடுக்கப்பட்ட இந்த முடிவு முழுமையாக அதன் மீதான குறைகளை நிவர்த்திசெய்கிறதா என்று பார்ப்பது மிகவும் முக்கியம். கடந்த ஆறாம் தேதி, இந்த முடிவையும் சேர்த்து நான்கு தீர்மானங்கள், இந்த நியமனக் குழுவால் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் செய்திகளை வெளியிட முடிவுசெய்யும் தீர்மானம் ‘நியமனக் குழு முறையில் வெளிப்படைத்தன்மையையும் அதே சமயத்தில் ரகசியத் தன்மை யைப் பேண’ எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டு இருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. எந்தெந்தச் செய்திகள் வெளியிடப்படும், எதன் மீது ரகசியம் காக்கப்படும் என்பதற்கான எந்த விளக்கமும் இல்லை. மேலும், இந்த முடிவோடு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் கேரள உயர் நீதிமன்றத்துக்கான நீதிபதிகள் நியமனத்துக்குப் பரிசீலிக்கப்பட்டு வந்த நபர்களின் மீதான தீர்மானங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதில் கேரள நீதிமன்றத்துக்கு மூவரையும், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ஆறு பேரையும் நீதிபதிகளாக நியமிக் கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் நியமிக்கப்பட்டோர் மட்டும் அல்லாமல், வேறு சிலரின் பரிந்துரைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, இதில் கொடுக்கப்பட்டுள்ள காரணங்கள் பெயரளவில்தான் கூறப்பட்டுள்ளதே ஒழிய, அந்தத் தீர்மானம் நிறை வேறுவதற்கு நியமனக் குழுவினை இணங்கச்செய்த காரணங்களைப் பற்றிய ஒரு அடிப்படைப் புரிதலைக் கூட நம்மால் உணர முடியவில்லை.

உதாரணத்துக்கு, பரிசீலிக்கப்பட்ட பெயர்களில் கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றுபவர்களின் பணித் திறனைக் கணக்கில்கொள்ள இதற்கென உள்ள தீர்மானக் குழுவின் தர அளவீடுகள் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், இந்தக் குழு எதன் அடிப்படையில் தனது முடிவுகளை அடைகிறது என்பது போன்ற கேள்விகளுக்கு வெளியிடப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தில் எந்த விடையும் இல்லை.

வரவேற்கப்பட வேண்டிய மாற்றம்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துணிவான இந்த முடிவு வரவேற்கப்பட வேண்டியது என்றாலும், வெளிப்படைத் தன்மையை முழுமையாக இது கிரகிக்கவில்லை. இதுபோன்ற செய்திகள் உயர் நீதிமன்ற நியமனக் குழுவின் பரிந்துரை உச்ச நீதிமன்ற நியமன குழுவுக்குச் செல்லும் அளவிலேயே வெளியிட வேண்டும். மக்களாட்சியின் முக்கிய இந்த அங்கமானது வெளிப்படைத் தன்மையின் தத்துவங்களை அடிப்படையிலேயே தன்னுள் செயல்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இது சமூகத் தணிக்கை யின் ஒரு தொடக்கப் புள்ளி.

அதீதமான வெளிப்படைத் தன்மை நீதித் துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும் என்ற தவறான கண்ணோட்டத்தின் நேரடி விளைவே வெளிப்படைத்தன்மைக்கு எதிரான நீதித் துறையின் தற்போதைய மனோபாவம்.

உண்மையில் இதன் நேர்மாறாக, போதிய வெளிப்படைத் தன்மையானது நீதித் துறையை, நீதிபதிகள் நியமனத்தில் அதன் முடிவுகள் மீதான, தேவையில்லாத விமர்சனங்களிலிருந்து பாதுகாப்பதோடு மட்டுமில்லாமல், அது எதிர்பார்க்கும் ஸ்திரத்தையும் கொடுக்கும். சமீபத்தில், நீதிபதி படேல் ராஜினாமா மற்றும் அதன் மீதான விமர்சனங்களை நீதித் துறை இதுபோன்ற சமயத்துக்கேற்ற செய்தி வெளியீடுகளின் மூலம் தவிர்க்கவும் நினைத்திருக்கலாம். ஏன், நியமனக் குழுவின் முடிவுகளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டுவர தொடுக்கப்பட்ட வழக்கில் தானாகவே முன்வந்து வெளியிட்டிருக்கலாமே. ஆனால், அதன் மீதான மேல்முறையீடு நகைமுரணாக உச்ச நீதிமன்றத்திலேயே இன்னும் விசாரணைக்குத் தேவையான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு கிடைக்காமல் நிலுவையில்தான் உள்ளது.

இப்போதும்கூட இதுபோன்ற கடந்த கால நியமன மற்றும் இடமாற்றங்கள் மீதான முடிவுகளை அதற்கான காரணங்களுடன் விமர்சனத்துக்குத் தயங்காமல் வெளியிடுவது நீதித் துறையின் மீதான மரியாதையை மக்களின் மத்தியில் பலமடங்கு உயர்த்தும். நீதித் துறையின் சுதந்திரத்துக்குப் பங்கம் விளைவிக்கும் அரசாங்கத்தின் பல செயல்களைக் கடந்த காலத்தில் நீதித் துறையே கடும் விமர்சனங்களுடன் அரசியல் சட்டத்துக்குப் புறம்பானதாக அறிவித்துள்ளது. அதைப் போலவே இதுபோன்ற சுய நிர்வாகங்களில் நீதித் துறை சுய பரிசோதனை செய்துகொள்வதும் மிகவும் அவசியம். இந்தத் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாக இருந்தாலும், ஒரு நெடுந்தூரப் பயணத்தின் முதல் படியே!

- எஸ்.எம்.விவேக் ஆனந்த்,

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்.

தொடர்புக்கு: smvivekanandh@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x