Published : 29 Oct 2017 11:00 AM
Last Updated : 29 Oct 2017 11:00 AM

கொசுத் தொல்லைக்காக வீட்டைக் கொளுத்துவது போன்றதே பணமதிப்பு நீக்கமும்! - ப.சிதம்பரம் நேர்காணல்

ணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட ஓராண்டு காலம் நிறைவடையப்போகிறது. இந்த நடவடிக்கையை ஆரம்பம் முதலே எதிர்த்துவந்தவர் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நிச்சயமாகப் பொருளாதார சரிவு ஏற்படும் என்று அப்போது கூறினார். பொருளாதாரச் சரிவு தற்போது வெளிப்படையாகவே தெரியத் தொடங்கிவிட்டது. இந்தச் சூழலில் ஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கம், பொருளாதார சரிவு குறித்து ஒரு மாலைப் பொழுதில் அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடியதிலிருந்து…

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் சிறிய அளவில் கூடவா பலன் இல்லை?

முற்றிலும் தோல்வியடைந்துவிட்ட நடவடிக்கை அது. பணமதிப்பு நீக்கத்தின் மூலம் கறுப்புப் பணம் ஒழியும் என்றார்கள். ஒழிந்துவிட்டதா? கள்ள நோட்டுகள் ஒழியும் என்றார்கள். புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியான ஒரு வாரத்துக்குள்ளேயே கள்ள நோட்டுகள் பிடிபட்டன. பயங்கர வாதச் செயல்கள் நின்றுவிடும் என்று கூறினார்கள். ஆனால் கடந்த 12 மாதங்களில்தான் காஷ்மீரிலே பயங்கரவாதிகளுடைய ஊடுருவலும் பயங்கரவாதத் தாக்குதலும் அதிகரித்துள்ளன. ஆக, அரசு முன்வைத்த எந்த நோக்கமும் நிறைவேறவில்லை.

மூன்று மாத காலத்துக்கு பாதிப்பு இருந்தது என்பது உண்மைதான். ஆனால், நாளடைவில் நிலைமை சீரடைந்திருக்கிறது அல்லவா?

இல்லை. நிலைமை சீரடைந்திருந்தால் கடந்த ஆறு காலாண்டுகளிலே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்திருக்காது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன் உள்ள பொருளாதார வளர்ச்சி விகிதம் என்ன? தற்போது 2017-ம் நிதியாண்டின் முதல் (ஏப்ரல்- ஜூன்) காலாண்டில் வளர்ச்சி விகிதம் என்ன என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 2% வரை வளர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது. பணமதிப்பு நீக்கத்தால் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய நான்கு மாதங்களில் மட்டும் 15 லட்சம் முறையான வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பணமதிப்பு நீக்கத்தின் விளைவுகள் இன்னமும் இந்தியப் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதித்துவருகின்றன!

பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு வங்கிக்கு திரும்பிய 1,000 ரூபாய் நோட்டுகளில் 0.007% கள்ளநோட்டுகள் எனவும், 500 ரூபாய் நோட்டுகளில் 0.002% கள்ளநோட்டுகள் எனவும் கண்டறியப்பட்டிருக்கிறது அல்லவா!

மொத்தமாகப் புழக்கத்தில் உள்ள 15 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகளில் ரூ.400 கோடி மட்டுமே கள்ள நோட்டுகள் என்று மத்திய புள்ளியியல் ஆய்வு நிறுவனம் கூறுகிறது. தற்போது ரூ.100 கோடி குறைவாகத்தான் கள்ளநோட்டுகள் இருக்கின்றன என்பதாக அரசும் ஒப்புக்கொள்கிறது. அதற்கு ஏன் இத்தனை பாதிப்புகள் நிறைந்த நடவடிக்கை எடுத்தார்கள்? வீட்டில் கொசுத் தொல்லை இருப்பதற்காக வீட்டையே கொளுத்துவதை என்னவென்று சொல்வது?

வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகப்படுத்துவதற்காக பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று மத்திய அரசு கூறுவதை எப்படி பார்க்கிறீர்கள்?

வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்குப் பல்வேறு வழிகள் இருக்கின்றன. 2004-ல் வரி செலுத்தியோரின் எண்ணிக்கையையும் 2014- ல் வரி செலுத்தியோரின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. பத்தாண்டுகளில் இரட்டிப்பாகியிருக்கிறது என்றால் அதைப் போல ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்திருக்க வேண்டும். அதைத் தவிர்த்துவிட்டு, புழக்கத்தில் உள்ள பெருவாரியான பணத்தைச் செல்லாது என்று அறிவிப்பது தெளிவான முடிவா?

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்திருக்கிறது என்கிறார்களே?

டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரிக்கவில்லை என்றுதான் ஆய்வுகள் கூறுகின்றன. எல்லாவிதமான டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். கிரெடிட் கார்டு, பேடிஎம், என்இஎப்டி, மொபைல் பரிவர்த்தனை, ஆர்டிஜிஎஸ், டெபிட் கார்டு ஆகிய அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் சேர்த்துப் பார்த்தால் 2016 நவம்பரில் இருந்த அளவுதான் இன்றும் இருக்கிறது. ஒரு டிஜிட்டல் பரிவர்த்தனையிலிருந்து மற்றொரு டிஜிட்டல் பரிவர்த்தனையாக மாறியிருக்கிறதே தவிர, ரொக்கப் பரிவர்த்தனை சரிந்து மளமளவென டிஜிட்டல் பரிவர்த்தனை உயர்ந்ததாகப் புள்ளிவிவரங்கள் சொல்லவில்லையே!

கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியாது என்று கூறுகிறீர்கள். அதாவது கல்லூரி நன்கொடை , ரியல் எஸ்டேட், சினிமா, அரசியல் நன்கொடை என நான்கு வழிகளில் கறுப்புப் பணம் சுழற்சியில் இருக்கும் என்றும் சொல்கிறீர்கள். அதை ஒழிப்பதற்கு என்னதான் வழி?

கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியாது என்று நான் சொல்லவில்லை. அதற்குப் பணமதிப்பு நீக்க நடவடிக்கை சரியான வழியல்ல என்றுதான் கூறுகிறேன். கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டுமென்றால் கல்லூரி நன் கொடையை ஒழிக்க வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு பணம் தருவதை கட்டுப்படுத்த வேண்டும். தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்த வேண்டும். இதையெல்லாம் ஒழுங்குபடுத்தாமல் கறுப்புப் பணத்தை ஒழிப்பேன் என்று கூறினால் எப்படி? பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னர் எந்தக் கல்லூரியிலும் நன்கொடை வாங்கவில்லையா? அப்படி வாங்கியவர்கள் காசோலை மூலமாக வாங்கினார்களா? அல்லது கிரெடிட் கார்டு மூலமாக வாங்கினார்களா? என்பதை பார்க்க வேண்டும். சொத்து விற்பது வாங்குவது எல்லாம் முழுமையாக முறையான பரிவர்த்தனையிலா நடைபெறுகிறது?

பணமதிப்பு நீக்கத்துக்கு முன் பினாமி பரிவர்த்தனை சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதன்பிறகு, தாமாக முன்வந்து வருமானத்தைத் தெரிவிக்கும் திட்டத்தையும் கொண்டுவந்தது. இந்த மாதிரி நடவடிக்கைகள் மூலம் முறையற்ற பரிவர்த்தனை கட்டுப்படுத்தப்படுகிறதுதானே?

சட்டத்தில் குறை இல்லை. சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலமாகவே இதுபோன்ற பொருளாதார இழிவுகள் எல்லாம் ஒழிக்கப்பட்டுவிடும் என்று நினைப்பதுதான் தவறு. அதற்கெல்லாம் அரசிடம் நிர்வாகத் திறமை வேண்டும். எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த வேண்டும். பொருளாதார விஷயங்களில் பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெறுவதே இல்லை. அப்புறம் பலன்கள் எப்படிக் கிடைக்கும்?

பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எடுக்கவில்லையென்றால் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டிருக்காதா?

தனியார் முதலீடு குறைந்திருப்பது; ஏற்றுமதி குறைந்திருப்பது; நுகர்வு குறைந்திருப்பது என்று பொருளாதாரச் சரிவுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், பணமதிப்பு நீக்கமும், ஜிஎஸ்டி சட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியதும்தான் மிக முக்கியக் காரணங்கள்!

ஆனால், ஜிஎஸ்டி என்பது நீங்கள் கொண்டுவர நினைத்ததுதானே? ஒருவேளை வரி விகிதம் குறைக்கப்பட்டால் ஜிஎஸ்டியை முழுவதும் ஏற்றுக்கொள்வீர்களா?

ஜிஎஸ்டி என்பது நல்ல சட்டக்கருத்து. அந்தக் கருத்தைச் சட்ட வடிவமாக்கிய விதம்தான் முற்றிலும் தவறானது. இதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் பேசினேன். அரசு ஏற்கவில்லை. ஜிஎஸ்டி என்பது ஒரு நாடு ஒரு வரி. எல்லாப் பொருட்களுக்கும் எல்லா சேவைகளுக்கும் ஒரே வரி இருந்தால்தான் ஜிஎஸ்டி. அரசினுடைய தலைமைப் பொருளாதார ஆலோசகர்கூட ஒரு வரிதான் இருக்க வேண்டும், இடைப்பட்ட காலத்தில் ஒரு வரி கூடுதல் (+) ஒரு வரி குறைவு (-) என மூன்று விகிதங்கள் இருக்கலாம். மூன்று விகிதங்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்று அறிக்கை தந்துள்ளார். அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சுட்டிக் காட்டினோம். ஆனால் மத்திய அரசு 0,3,5,8,12,18,28,40 என பல்வேறு விகிதங்களிலும் அதற்கு மேல் செஸ் என்ற கூடுதல் வரியையும் தான்தோன்றித்தனமாக வரி விகிதங்களை அமைத்துள்ளார்கள். இது தவறு. இது மற்ற நாடுகள் ஏற்றுக்கொண்ட ஜிஎஸ்டி அல்ல. இதற்கு ஜிஎஸ்டி என்று பெயர் வைப்பதே தவறு. இது பாஜகவின் வரிமுறை!

ஜிஎஸ்டியில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. அவை கொஞ்சகொஞ்சமாகச் சரிசெய்யப்பட்டுவருகின்றன என்று சொல்கிறார்களே?

அப்படி யார் சொல்வது? வர்த்தகர்கள் சொல்கிறார்களா? உற்பத்தியாளர்கள் சொல்கிறார்களா? நுகர்வோர் சொல்கிறார்களா? கடைகளுக்குப் போய்ப் பாருங்கள். யாரும் ரசீது தருவதில்லை. தீபாவளி சமயத்தில் என்ன நடந்தது? ஒரு துண்டு காகிதத்தில் தொகையைக் குறித்துக்கொண்டு ரொக்கமாகப் பணத்தை வாங்கிக்கொள்கிறார்கள். ஜிஎஸ்டி பில் எல்லாம் எங்களால் தயாரிக்க முடியாது என்று வர்த்தகர்கள் சொல்கிறார்கள். இதுதான் நிலவரம்!

பாஜக அரசின் இந்த நடவடிக்கைகள் நீண்ட கால அடிப்படையில் பயன்களைத் தரும் என்று கூறப்படுகிறது. ஒரு காலாண்டில் வளர்ச்சி குறைந்ததை வைத்து இந்திய பொருளாதாரம் சரிவில் இருக்கிறது என்று முடிவு செய்துவிட முடியுமா?

ஒரு காலாண்டில் வளர்ச்சி குறையவில்லை. 2016 ஜனவரி மாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஆறு காலாண்டுகளைப் பார்த்தால் 9.1%-லிருந்து 5.7%-ஆக வளர்ச்சி விகிதம் சரிந்திருக்கிறது.

பொருளாதாரச் சரிவு ஏற்பட்டதற்கு வாராக் கடன் பிரச்சினை மிகப் பெரிய காரணமாகக் கூறப்படுகிறது. 2007 முதல் 2013 வரை பெரிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களே தற்போது வாராக் கடன்களாக இருக்கிறது என்று ஆட்சியில் இருப்பவர்கள் குற்றம்சாட்டுகிறார்களே?

எந்த அரசும் பொறுப்பேற்கும்போதும் வாராக் கடன் இருக்கத்தான் செய்யும். வாராக் கடன் பிரச்சினையை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை மத்திய அரசும் வங்கிகளும் முடிவு செய்ய வேண்டும். வாராக் கடனை வசூலிக்க முடியவில்லையென்றால் எதற்கு ஆட்சியில் இருக்கிறீர்கள்? நீங்கள் 41 மாதமாக ஆட்சியில் அமர்ந்துகொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பதவி விலகும்போது ஐந்து ஆண்டு காலம் முடியும்போது வாராக் கடனே இருக்காதா?. அதுமட்டுமல்ல 2014-க்கு முன் கொடுத்த கடன்களில் எவ்வளவு வாராக்கடன் இருக்கிறதோ அதே அளவுக்கு 2014-க்குப் பின் கொடுத்த கடன்களிலும் வாராக் கடன் இருக்கிறது என புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன. அதை அரசும் மறுக்கவில்லை. ரிசர்வ் வங்கியும் மறுக்கவில்லையே!

வாராக் கடன் பிரச்சினைக்கு உங்களுடைய தீர்வு என்ன?

வங்கிகளும் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும்தான் தீர்வு சொல்ல வேண்டும். அவர்களிடம்தான் முழு விவரங்கள் இருக்கும். அவர்கள் தீர்வு சொல்ல வேண்டும். அந்த தீர்வு பொருத்தமாக இருக்கிறதா, இல்லையா என்று விமர்சிப்பதுதான் எங்கள் கடமையே தவிர தீர்வு சொல்வதல்ல!

பொருளாதாரம் சரிவில் இருக்கிறது என்பதை பிரதமர் மோடி ஒப்புக்கொள்கிறார். மக்களிடம் அவநம்பிக்கையை விதைக்காதீர்கள் என்று எதிர்க்கட்சியினரை அவர் கேட்டுக்கொள்கிறாரே?

பொருளாதாரம் சரிவில் இருக்கிறது என்பதையே இப்போதுதான் அரைமனதுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். மக்களிடம் அவநம்பிக்கையை நாங்கள் விதைக்கவில்லை. அவர்களின் அவநம்பிக்கையைத்தான் நாங்கள் பிரதிபலிக்கிறோம். இந்த அரசின் செயல்பாடுகள் காரணமாக, எல்லாத் தரப்பு மக்களிடமும் ஒரு விதமான மனக்குறை இருக்கிறது.

பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து சமூகப் பதற்றம் அதிகரித்திருக்கிறது. மாட்டிறைச்சி பிரச்சினை, ரோஹித் வெமுலா மரணம், கருத்துச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் இவை போன்ற சம்பவங்களைப் பொருளாதாரச் சரிவோடு பொருத்திப் பார்க்க முடியுமா?

பொருளாதாரச் சரிவுக்கு நேரடியான காரணம் என்று இந்தச் சம்பங்களைச் சொல்ல முடியாது. எனினும், இந்தச் சம்பவங்கள் காரணமாக இரண்டு விளைவுகள் ஏற்படுகின்றன. ஒன்று, அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் கவனம் சிதறுகிறது. பொருளாதார விஷயங்களில் அக்கறை செலுத்தாமல் இந்த விஷயங்களில் மிக அதிக அக்கறை செலுத்த வேண்டிவருகிறது. இரண்டு, இதுபோன்ற நிகழ்வுகள் காரணமாக பாதிப்படக்கூடிய மக்கள் உதாரணமாக தலித், சிறுபான்மையினர், மலைவாழ் மக்கள், பெண்கள், இளைஞர்கள் மத்தியில் ஒரு குழப்பமும் எதிர்காலத்தைப் பற்றிய அவநம்பிக்கையும் ஏற்படுகின்றன. ஆக அவர்கள் முழு மனதுடன் பொருளாதார மேம்பாட்டில் முழு கவனத்துடன் செலுத்த முடியாது. இந்த இரண்டும் சேரும்போது நிச்சயமாகப் பொருளாதாரத்தில் பாதிப்பு இருக்கத்தான் செய்யும்!

பொருளாதாரம் சரிவிலிருந்து மீள்வதற்கான அறிகுறிகள் ஏதேனும் தெரிகின்றனவா?

இதுவரை தெரியவில்லை. பொருளாதாரச் சரிவு ஏற்பட்டிருக்கிறது என்பதையே அரசு இப்போதுதான் ஒப்புக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. நான் 15 மாதங்களாக எழுதிவருகிறேன். இதேபோல் பலரும் பேசிவருகிறார்கள்; எழுதிவருகிறார்கள். இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான் சரிவிலிருந்து பொருளாதாரம் மீளுமா மீளாதா என்பதைச் சொல்ல முடியும்!

- தேவராஜ் பெரியதம்பி, தொடர்புக்கு: devaraj.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x