Last Updated : 08 Jul, 2014 09:00 AM

 

Published : 08 Jul 2014 09:00 AM
Last Updated : 08 Jul 2014 09:00 AM

நீராலானது உலகு!

கன்னியாகுமரியில் என்னவோ இருக்கிறது. முக்கடல் சங்கமத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சுற்றிலும் சுற்றுலாப் பயணிகள். ஒரே ஆரவாரமும் கொண்டாட்டமும். அலைகள் பாறைகளில் மோதுவதும் பாறைகளைத் தழுவுவதும் பாறைகளைத் தாண்டுவதுமாக இருக்கின்றன. பார்வை நீள்கிறது. தூரத்தில் இரு படகுகள். தவிர, நீலம், நீலம், எங்கும் நீலம்.

இன்னும் கொஞ்ச நேரத்தில் வண்டி வந்துவிடும் என்றார் நண்பர். நீரோடிக்குப் போக வேண்டும். தமிழகக் கடற்கரையின் எல்லை நீரோடி. கன்னியாகுமரி, அடுத்து மணக்குடி, சொத்த விளை, பள்ளம், புத்தன்துறை, பொழிக்கரை, பெரியகாடு, முட்டம், கடியபட்டினம், மண்டைக்காடுபுதூார், குளச்சல், குறும் பனை, இணையம், தேங்காய்ப்பட்டினம், இறையுமண் துறை, பூத்துறை, தூத்தூர் தாண்டினால் நீரோடி. கடலையே பார்த்துக் கொண்டிருந்தேன். கடல் பார்த்தல் பெரும் சுகம். அநேகமாக, பார்த்தலின் பேரின்பம்!

முதன்முதலில் கடலைப் பார்த்த ஞாபகம் உங்களுக்கு இருக் கிறதா? அந்த நாளை இன்றைக்கு நினைவுகூர முடியுமா?

எனக்கு ஞாபகம் இருக்கிறது. வேளாங்கண்ணியில் பார்த்தேன். வேளாங்கண்ணி கோயிலுக்குப் போய்விட்டு, முல்லையம் மாள் ஆத்தா மடியில் உட்கார்ந்து வேண்டுதல் மொட்டை போட்டுக்கொண்டு, சந்தனத் தலையோடு, ஒரு கையில் ஆத்தா கை விரலையும் இன்னொரு கையில் வாளியுமாகக் கடற்கரையில் இரு பக்கக் கடைகளையும் பராக்குப் பார்த்துக்கொண்டே போய்க்கொண்டிருந்தவன், திடீரென கண் முன்னே விரிந்த அந்தப் பெரும் பிரம்மாண்டத்தைப் பார்த்து ஓவென அழுதது ஞாபகத்தில் இருக்கிறது. ஆத்தாவின் பிடியைப் பிய்த்துக் கொண்டு ஓட முயற்சிக்க, ஆத்தா இரும்புப் பிடியாகப் பிடித்துக் கடலில் குளிப்பாட்டியது ஞாபகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு அலை வரும்போதும் ஆத்தா காலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கண்ணை மூடிக் கத்தியது ஞாபகத்தில் இருக்கிறது. குளிப்பாட்டி முடித்து, தூக்கிக்கொண்டு கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்ததும், ஆத்தா தோளைக் கட்டிக்கொண்டு தயங்கித் தயங்கி, கடலைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கண்களை இறுக மூடிக்கொண்டது ஞாபகத்தில் இருக்கிறது.

அதன் பின்னே கொஞ்சம் கொஞ்சமாய் அலைகளை நோக்கி அடி எடுத்துவைத்தபோதும், அலைகளைத் துரத்தி விளை யாடியபோதும், மணல் கோயில்கள் கட்டி, சேகரித்த சிப்பிகளை அவற்றில் சேமித்து வைத்தபோதும் கடல் ஒரு நல்ல நண்பன் என்றே நினைத்திருந்தேன். வெகு நாட்களுக்குப் பின்னர் - புலவர் கதிரேசன் திருக்குறள் வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தபோதுதான் புரிந்தது கடல்தான் நம் தாய் மடி என்று.

நீரின்றி அமையாது உலகு. எத்தனை சத்தியமான வார்த்தைகள்!

இந்தப் புவிப் பரப்பின் மொத்தப் பகுதியில் 71% தண்ணீர். அதில் 97.2% கடல். அதாவது புவிப் பரப்பில் 70% கடல். உலக நாடுகளின் மொத்தக் கடற்கரையோரத்தின் நீளத்தைக் கூட்டினால் மொத்தம் 3,12,000 மைல்கள். உலகின் பெரிய கடலான பசிபிக் பெருங்கடலை எடுத்துக்கொண்டால், உலகின் மொத்தப் பரப்பில் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டது (16.92 கோடி சதுர கி.மீ.). பசிபிக் கடலில் உள்ள தீவுகளின் எண்ணிக்கை மட்டும் 25,000. உலகிலேயே சின்னப் பெருங்கடலான ஆர்க்டிக் பெருங்கடலை எடுத்துக்கொண்டால், புவியின் கடல் நீரில் வெறும் 1% மட்டுமே அதில் இருக்கிறது. ஆனாலும், உலகில் உள்ள ஆறுகள், நன்னீர் ஏரிகள் அனைத்திலும் உள்ள நீரின் அளவைவிட 25 மடங்கு அதிகம்.

தாவரங்களுக்கு அப்பாற்பட்டு, மனித இனத்துக்கு உணவை யும் புரதத்தையும் வாரித்தருவது கடல்தான். ஒவ்வோர் ஆண்டும் 750 லட்சம் டன்கள் வரையிலான மீன்களை, மனித இனத்துக்குக் கடல் தருகிறது. உலகம் முழுக்க வளர்க்கப்படும் ஆடு, மாடு, பன்றி, கோழி, வாத்து என அத்தனையையும் கூட்டினாலும் மீனளத்தின் பக்கத்தில்கூட அதன் கூட்டுத்தொகை வராது.

“நெலத்துல இருக்குற உலகம்தான் மனுசன் கண்ணுக்குத் தெரியுது. நெலத்துல உள்ள உலகத்தைப் போலப் பல உலகம் கடலுக்குள்ள இருக்கு” என்கிறார் பயணத்தில் கைகோத்திருந்த மீனவ நண்பர். உண்மைதான். கடலில் இருக்கும் பெருமலைகளின் நீளத்தைக் கூட்டினாலே நாற்பதினாயிரம் மைல்களைத் தாண்டும். ஹவாயில் உள்ள மௌனா கீ மலையைக் கடல் மட்டத்தில் நின்று பார்த்தால், 13,680 அடி உயரத்துக்குத் தெரியும். கடலடித் தரையிலிருந்து அதன் உயரமோ 33,474 அடி. உலகில் உள்ள எரிமலைகளின் வெடிப்புகளில் 90% கடல்களில்தான் நடக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். தெற்கு பசிபிக்கில் மட்டும் சுமார் 1,133 எரிமலைகள் நெருக்கமாக உயிர்ப்புடன் இருக்கின்றன.

கடலுக்குள் ஒவ்வொரு கணமும் எண்ணற்ற மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. ஒருபுறம் பசிபிக் கடல் சுருங்கிக்கொண்டிருக்கிறது; மறுபுறம் அட்லாண்டிக் கடல் விரிந்துகொண்டிருக்கிறது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடல் நீர்மட்டம் இப்போது இருக்கும் நீர்மட்டத்தைவிட 330 அடி கீழே இருந்ததாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். கடந்த 100 ஆண்டுகளில் மட்டும் கடல் நீர்மட்டம் 10 முதல் 25 செ.மீ. வரை உயர்ந்திருக்கிறது; இது மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள். உலகின் இரு துருவங்கள் உட்பட எல்லாப் பகுதிகளிலும் பனி உருகினால் கடல் பொங்கி, நீர்மட்டம் இப்போதிருப்பதைவிட மேலும் 200 அடி உயரும் என்கிறார்கள். விஞ்ஞானிகளின் கண்கள் விரிந்துகொண்டேயிருக்கின்றன. வண்டி வந்துவிட்டது. நீரோடியை நோக்கிப் புறப்பட்டோம்!

(அலை பரவும்)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x